இடி மின்னல் பற்றி முன்பைவிட இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இடி மின்னல் என்றால் என்ன? வானில் உள்ள மேகங்களில் இடி மின்னல் உருவானாலும் எல்லா மேகங்களிலும் இடி மின்னல் இல்லை.

வானில் நாம் காணும் மேகங்கள் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 7 கி.மீ உயரத்தில் காணப்படுபவை உயர் மேகங்கள். 2 முதல் 7 கி.மீ வரை உள்ள உயரத்தில் காணப்படுபவை நடுத்தர உயர மேகங்கள். 2 கி.மீட்டருக்குள் இருக்கும் மேகங்கள் தாழ்நிலை மேகங்கள். சில மேகங்கள் தாழ்ந்த நிலையில் இருந்து உடனடியாக செங்குத்தாக உயர்ந்த நிலையை அடைகின்றன.thunder and lighteningஅதிக உயரத்தில் இருக்கும் மேகங்கள் மூன்று வகைப்படும். இதில் ஒன்று சிரஸ். நல்ல வெள்ளை நிறத்துடன் பறவையின் இறகுகள் போல இவை ஆங்காங்கே சிதறிக்கிடக்கும். எடை குறைந்த இவற்றில் பனித்துளிகள் மட்டுமே இருக்கும். இதனால் நீர்த்துளிகள் இல்லாத இவை மழையாக மாறுவதில்லை.

மற்றொரு வகை சிரோஸ் குமுலஸ். வானில் நல்ல உயரத்தில் வெண்மை நிறத்துடன் சிறிய சிறிய கூட்டங்களாக இவை காணப்படும். வெறும் பனித்துளிகள் மட்டுமே இவற்றில் இருக்கும். வானில் இதே மேகத்தில் பால் படலம் போல நல்ல வெள்ளை நிறத்துடன் பரந்து காணப்படுபவையே சிரோஸ் ஸ்டேட்டஸ். எடை குறைந்த இவற்றிலும் பனித்துளிகளால் ஆன கட்டிகள் மட்டுமே இருக்கின்றன. உயரத்தில் இருக்கும் மேகங்களில் இருந்து மழை பொழிவதில்லை.

நடுத்தர உயரத்தில் காணப்படும் மேகங்கள் அல்ட்ரோ குமுலஸ் மற்றும் அல்ட்ரோ ஸ்டேட்டஸ். பூமியிலிருந்து 2 முதல் 7 கி.மீ உயரத்தில் செம்மறியாட்டின் மேற்பகுதி போல அடுக்கடுக்காகக் காணப்படுபவை அல்ட்ரோ குமுலஸ். இம்மேகக்கூட்டத்தில் நல்ல வெள்ளை மற்றும் சாம்பல் நிற மேகங்கள் உருவாகும். இதே உயரத்தில் அல்ட்ரோ ஸ்டேட்டஸ் மேகங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறத்துடன் உருவாகின்றன. சூரிய, சந்திரனின் பிம்பங்கள் இம்மேகங்களுக்குள் பளபளக்கும் பிரகாசத்துடன் காணப்படுகின்றன. வலிமையற்ற லேசான மழை சில சமயங்களில் இவ்வகை மேகங்களில் இருந்து பூமிக்குக் கிடைக்கிறது.

வானில் 2 கி.மீ உயரத்திற்கும் குறைவான உயரத்தில் ஸ்டேட்டோ குமுலஸ், ஸ்டேட்டஸ் மற்றும் நிம்போ ஸ்டேட்டஸ் ஆகிய மூன்று முக்கிய வகை மேகங்கள் உள்ளன. வெள்ளையும் சாம்பல் நிறமும் கலந்த சிறிய உருளை அல்லது ரோலர் வடிவத்தில் ஸ்டேட்டோ குமுலஸ் வகை மேகங்கள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுசேர்ந்து பெரிய மேகமாக மாறும். அப்போது மிகக் குறுகிய காலத்திற்கு எடையுடைய மழைத்துளிகள் பூமிக்கு வந்து விழும். பூமியின் தரைப்பகுதியைத் தொடாத வகையில் 2 கி.மீ உயரத்தில் பனி போல் பரந்திருக்கும் மேகமே ஸ்டேட்டஸ். இந்த மேகம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கும்.

மழை தரும் மேகம்

இம்மேகத்தில் இருந்து சில சமயங்களில் சாரல் மழை பெய்யும். நிம்போ ஸ்டேட்டஸ் மேகங்களிலிருந்தே வலுவான நீண்ட நேர மழை கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட வடிவமற்ற இவை வானில் அடர்த்தியாகப் பரந்திருக்கும். அடர் சாம்பல் நிறத்துடன் இவை காணப்படுகின்றன. தென்மேற்குப் பருவமழைக்காலத்தில் கேரளாவின் கரையில் இம்மேகங்கள் அதிகம் உண்டாகின்றன.

மேகங்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதுவதால் இடி ஏற்படுவதில்லை. பட்டென்று செங்குத்தாக உருவாகும் மேகங்களில் குமுலஸ் மற்றும் குமுலோ நிம்பஸ் என இருவகைகள் உள்ளன. அடிப்பகுதி பரந்து பனிக்கட்டிகள் போல மேல்நோக்கி உயர்ந்து அடர்த்தியான, வெளுத்த அழகான மேகங்களான குமுலஸ் மேகங்கள் தனித்தனியாகப் பிரிந்து காணப்படும். காற்று வீசும் திசைக்கு ஏற்ப ஒன்றுடன் ஒன்று சேரும் அல்லது இல்லாமல் போகும். இவ்வகை மேகங்களில் இருந்து அரிதாகவே மழை பெய்யும். ஒன்றிரண்டு முதல் 2000 மீட்டர் வரை உயரமுடைய குமுலஸ் மேகங்கள் உருவாகும்.

இதைவிட உயரமாகக் காணப்படுபவையே குமுலோ நிம்பஸ். இதன் அடிப்பகுதியும் பரந்து காணப்படும். ஒரு சிகரம் போல பத்து கிலோமீட்டர் உயரம் வரை கூட இவை வளரும் இயல்புடையவை. சில சமயங்களில் இவற்றின் உயரம் 12 கி.மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். அப்போது இவற்றின் அடிப்பகுதி 10 கி.மீ இருக்கும். இவற்றிலிருந்தே நமக்கு வலுவான மழைப்பொழிவு கிடைக்கிறது. சில சமயங்களில் இவை ஆபத்தானவை. இம்மேகத்திலிருந்தே இடியும் மின்னலும் உண்டாகின்றன.

ஒரு இடத்தின் காற்று மண்டல வெப்பம் சமீபப்பகுதியில் இருக்கும் மண்டலத்தை விட அதிகமாக இருக்கும்போது இவ்வகை மேகங்கள் உருவாகின்றன. அப்போது பூமியின் மேற்பரப்பில் அதியளவிற்கு காற்று இல்லாமல் இருக்கும். அப்போது வெப்பமடைந்த வாயு வான்நோக்கி உயர்கிறது. அல்லது ஒரு பிரதேசத்தின் சூடான காற்று உள்ள பகுதிக்கு சமீபப்பகுதியில் இருந்து திடீரென்று கனமான எடையுள்ள வாயு நுழைந்தால் சூடான காற்று உடனே மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு மேல்நோக்கிச் செல்லும் வாயுவில் ஈரப்பதம் உண்டானால் அது குளிர்ந்து மேகமாக மாறுகிறது. சூடு அதிகமாகும்போது அதன் அடர்த்தி குறையும்; அது மேலும் மேல்நோக்கிச் செல்ல இது உதவுகிறது. வெப்பம் அதிகமாகும்போது பொருட்கள் விரிவடைவதால் இது நிகழ்கிறது.

மேல்நோக்கிச் செல்லும் இந்த வாயு மணிக்கு 100 கி.மீ வரை வேகத்தைப் பெறுகிறது. கீழே தரையில் இருந்து எழும்பிவரும் ஈரமுள்ள வாயு பட்டென்று மேல்நோக்கி உயர்ந்து அதில் இருக்கும் ஈரம் ஒன்றுதிரண்டு மிகப்பெரிய உயரமுள்ள பனிக்கட்டி போன்ற மேகமாக மாறுகிறது. இவற்றிலிருந்து இடியும் மின்னலும் உண்டாவதுடன் வலிமைக் காற்றோட்டம் மற்றும் மழை பூமியின் தரைப்பகுதியை வந்தடைகின்றன. பூமியின் மேற்பரப்பில் இருந்து வானை நோக்கிச் செல்லும் காற்றோட்டம் நிற்கும்போது மேகத்திலிருந்து கீழ்நோக்கிய காற்றோட்டம் மட்டுமே இருக்கும். அப்போது லேசான மழை பெய்யும். படிப்படியாக இம்மேகம் சிறிதாகும்; இல்லாமல் போகும்.

மின்னாற்றல் உருவாக்கம்

ஒரு குமுலோ நிம்பஸ் மேகம் வளர்ந்து பெரிதாகும்போது அதன் அடிப்பகுதியில் இருந்து மேகத்திற்குள்ளும், அதன் மேற்பகுதிக்கும் மிகச் சக்தி வாய்ந்த ஆற்றல் ஓட்டம் ஏற்படும். ஒவ்வொரு நீர்த்துளிக்குள்ளிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின் மூலம் சில நீர்த்துளிகளிலிருந்து நேர்மின்சுமையுடைய ஹைட்ரஜன் ($H$) அயனி பிரிந்து காற்றோட்டத்தின் மூலம் மேகத்தினுள் மேல்நோக்கிச் செல்லும்.

பெரும்பாலான நேரங்களில் எதிர்மின்சுமையுடைய ஹைட்ராக்சில் $OH^-$ அயனி மேகத்தின் அடிப்பகுதியில் காணப்படுகிறது. அபூர்வமாக இதில் சிறியதொரு பகுதி வலிமையுடைய காற்றோட்டத்தால் மேல்நோக்கிச் செல்லும். இதுபோலவே நேர்மின்சுமையுடைய ஹைட்ரஜன் அயனியும் மேலிருந்து கீழ்நோக்கி வரும். நல்ல மேகத்திற்குள் காற்று மேலும் கீழும் சென்றுகொண்டிருப்பதால் இவ்வாறு நிகழ்கிறது. எண்ணற்ற நேர்மின்சுமையுடைய ஹைட்ரஜன் அயனிகள் மேகத்தின் மேற்பகுதிக்கும், எதிர்மின்சுமையுடைய ஹைட்ராக்சில் அயனிகள் கீழ்ப்பகுதிக்கும் செல்லும்போது குமுலோ நிம்பஸ் மேகம் ஒரு மின்னாற்றல் மூலமாக மாறுகிறது. முழுவளர்ச்சியடைந்த ஒரு குமுலோ நிம்பஸ் மேகத்திற்குள் மின் திறன் 3000 முதல் 50,000 வோல்ட் வரை உயர்கிறது. நேர் மற்றும் எதிர்மின்சுமையுடைய அயணிகள் அவற்றின் அளவு மற்றும் அவை இருக்கும் தொலைவிற்கேற்ப ஒன்றினால் மற்றொன்று ஈர்க்கப்படுகிறது.

தீப்பொரியும் மின்னலும் இடியும்

இத்தகைய அளவற்ற ஆற்றலுடன் ஏற்படும் கவர்ச்சிவிசையால் உருவாவதே மின்னல். மேகத்திற்குள் மின்னல் உண்டாகும்போது அதன் பயணப்பாதையில் காற்றின் வெப்பம் திடீரென்று பல மடங்கு அதிகரிக்கிறது. இந்த வெப்பநிலை உயர்வு 20,000 முதல் 30,000 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த காற்று திடீரென்று விரிவடைந்து மேகத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் தள்ளப்படுகிறது. இது ஒலி அலைகளை உருவாக்குகிறது. இதையே இடியாக நாம் கேட்கிறோம்.

அயனிகள் ஈர்க்கப்படும்போது உண்டாகும் தீப்பொறி வில் (fire arc) மின்னலின் வெளிச்சமாகிறது. சிலவற்றில் இத்தீப்பொறி மின்னல் மேகத்திற்குள் காணப்படும். இதனால் இந்த மின்னலை நம்மால் பார்க்க முடியாது; குறைந்த ஒளி மட்டுமே தென்படும். இத்தகைய மின்னல் ஷீட் மின்னல் (sheet lightning) எனப்படுகிறது. தெளிவாகக் கண்ணிற்குப் புலப்படும் மின்னல் தீப்பொறி மின்னல் (spark lightning) எனப்படுகிறது.

இந்த மின்னல் மேகத்தினுள் அல்லது இரு மேகங்களுக்கு இடையில் அல்லது மேகத்திற்கும் பூமிக்கும் நடுவில் காணப்படும். இடி மின்னல் உள்ள ஒரு மேகத்திற்குள் ஏதேனும் அல்லது எவரேனும் அகப்பட்டால் மின்னதிர்ச்சி ஏற்பட்டு அது அழிந்து போய்விடும். அந்த அளவு வெப்பநிலை உயர்வும், மின்னாற்றலும் மின்னல் உருவாகும்போது ஏற்படுகிறது. விமானங்கள் இதுபோன்ற மின்னல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

குமுலோ நிம்பஸ் மேகத்தின் அடிப்பகுதியில் சேகரிக்கப்படும் எதிர்மின்சுமையுடைய அயனிகளை ஈர்க்கும் வகையில் பூமியின் மேற்பரப்பில் நேர்மின்சுமையுடைய அயனிகள் ஒன்றுசேர்கின்றன. ஒருநிலையில் தேவையான அளவிற்கு மின் ஈர்ப்புவிசை ஏற்பட்டால் மேகத்திற்குள் இருக்கும் எதிர்மின்சுமைத் துகள் பாயும் பகுதியில் எவரேனும் இருந்தால் அவருக்கு மின் அதிர்ச்சி ஏற்படும்; மரணமும் சம்பவிக்கலாம். மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் மேகத்திலிருந்து பூமியின் மேற்பரப்பிற்குள் மின்னாற்றல் மரங்கள் வழியே பாயும். பச்சை மரத்தின் வழியாகவும் மின்சாரம் பாயும். இதனால் மின்னல் ஏற்படும்போது மரத்திற்கு அடியில் நிற்கக்கூடாது. ஸ்பார்க் உண்டாகும்போது சுற்றிலும் இருக்கும் காற்று சூடாவதால் அப்பகுதியில் இருக்கும் உயிர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்படும்.

பாதுகாப்பு முறைகள்

வானில் மிக அதிக உயரத்தில் ஏற்படும் இடி மின்னலில் மின்னலையே நாம் முதலில் பார்க்கிறோம். ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஒளியின் வேகம் ஒரு மணிக்கு ஏறக்குறைய 108 கோடி கிலோமீட்டர். ஒலியின் வேகம் மணிக்கு 1200 கிலோமீட்டர் மட்டுமே. உருவாகும் இடம் நாம் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் இருந்தால் இடியையும் மின்னளையும் ஒரே நேரத்தில் நம்மால் உணர முடியும்.

இடியும் மின்னலும் உருவாகும்போது வெளியில் செல்லக்கூடாது. மின்னலின் மூலம் ஏற்படும் அளவற்ற மின்னாற்றல் எப்போது பூமியின் மேற்பரப்பை அடையும் என்பதை ஊகிப்பது கடினம். அளவற்ற ஆற்றலுள்ள மின்னலின் மின்னாற்றல் மின் கம்பிகள் வழியாகப் பாயக்கூடும் என்பதால் அது உண்டாகும்போது தொலைக்காட்சி போன்ற மின்னணுச் கருவிகளின் இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும். மின்சாரம் டி.வி ஏற்பி, கேபிள் ஏற்பி மூலம் பாய வாய்ப்புண்டு. அப்போது ஆண்டெனா தொடர்பைத் துண்டிப்பது நல்லதல்ல. தொலைபேசித் தொடர்பின் கேபிள் வழியாகவும் மின்னாற்றல் பாய வாய்ப்பு உண்டு என்பதால் மின்னல் ஏற்படும்போது தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.

இடிதாங்கி மற்றும் மின்னல் தடுப்புக் கருவி (lightning arrester) நல்ல மின்கடத்தியான செம்பினால் செய்யப்பட்டு மேற்பகுதி முனை கூர்மையாக இருக்கும். பட்டை அல்லது முட்கள் போன்ற அமைப்புடன் உருவாக்கப்படும் இதன் கீழ்ப்பகுதி பூமியின் தரையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக மின்னல் மூலம் உருவாகும் மின்னாற்றல் பாதுகாப்பாகப் பூமியின் தரைக்குக் கடத்தப்படும். இதனால் கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. செம்பு துருப்பிடித்து குறைந்த காலத்தில் கெட்டுப்போவதில்லை. ஆனால், இடிதாங்கியை சரியான விதத்தில் பொருத்த வேண்டும். உயரமான மரங்கள் சில சமயங்களில் இடி மின்னல் தாங்கியின் வேலையைச் செய்கின்றன.

காற்று மண்டலத்தில் உருவாகும் இடி மின்னல்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில மட்டுமே பூமியில் உயிரினங்களுக்கு ஆபத்தானவையாக மாறுகின்றன. மின்னலின் தீவிரத்தைப் பொறுத்து மரங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தி குறைவாக இருந்தால் அவை மின்னலால் பாதிக்கப்பட்டு காய்ந்துபோகும். கேரளா உட்பட பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழைக்கு முந்தைய காலத்தில் மின்னல்கள் அதிகம் தோன்றுகின்றன. திடீரென்று உண்டாகும் செங்குத்து மேகங்களால் இந்த மின்னல்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

இயற்கையின் பல அதிசயங்களில் இடி மின்னல் மகத்தானவை. மழைப்பொழிவின் தீவிரத்தைத் தீர்மானிப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இயற்கையை அறிய, இயற்கையுடன் இணைந்து வாழ இவை நமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.