கி.மு.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய விஞ்ஞானியின் பெயர்தான் சரகன். இன்று உலகம் முழுவதும் ஆராயப்படும் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட மாமேதை இவர்.

சில குழந்தைகள் குண்டாகவும், சிலர் ஒல்லியாகவும் இருப்பார்கள். வேறுசிலர் பிறக்கும்போதே உடற்குறையுடன் பிறப்பார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்தான் காரணம் என்று முன்பெல்லாம் கருதி வந்தனர். ஆனால் சரகன் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் தாயின் சினை முட்டையும், தந்தையின் உயிரணுவுமே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்று உலகிற்கு அறிவித்தார்.

உடலுக்கு நோய்வந்தபின் ஓடித்திரிவதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்று ஆரோக்கிய வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர்தான் இந்த சரகர். ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்யும் முன்பாக அவருடைய சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு தெரிந்து வைத்தியம் செய்யவேண்டும் என்று கூறியவரும் இவர்தான்.

மனித உடலின் அமைப்பையும், உடல் உறுப்புகளின் தன்மையையும் ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்திலேயே உடலில் உள்ள எலும்புகள், பற்கள் பற்றிய எண்ணிக்கையைக் கண்டறிந்தவர் இவர். மனித இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் அது 13 இரத்தக்குழாய்களின் உதவியால் உடல் முழுவதும் தொடர்பு கொண்டுள்ளது என்றும், எண்ணற்ற இரத்தக்குழாய்கள் மனித உடலில் உள்ளன என்றும் ஆராய்ந்து அறிவித்தார்.

நம்முடைய உடலின் எடை, உருவ மாற்றம், உணவு செரித்தல் போன்றவை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துப்பொருட்களைப்பொறுத்தே மாறுபடுவதாகவும், இவற்றின் அடிப்படையிலேயே மருத்துவம் செய்யவேண்டும் என்றும் கூறியவர்தான் சரகர்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்துறையின் அடிப்படை நூலாக விளங்கிவரும் “சரச சம்ஹிதை” என்னும் நூலை “அக்னிவேசன்” என்னும் அறிஞர் எழுதினார். சரகன் முழுவதும் படித்து ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பின்னரே இந்த நூல் வெளியிடப்பட்டதாம்.

நன்றி: கலைக்கதிர்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It