செயற்கை நுண்ணறிவு — AI — இன்று நம் வாழ்க்கைக்கு வெளியே இருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் அல்ல; அது ஏற்கனவே நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குள் வந்து விட்டது.
இந்தத் தொடரின் முதல் பகுதியில், AI என்றால் என்ன? அது எப்படி உருவானது? அது நம்முடைய வாழ்க்கையில் எப்படியெல்லாம் பயன்படுகிறது? என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள முயன்றோம்.
அடுத்த பகுதியில், நம்முடனேயே இருக்கும் AI பற்றி பார்த்தோம். நாம் பயன்படுத்தும் கைபேசி முதல் இணையதளம் வரை, நமக்குத் தெரியாமலேயே AI எத்தனை இடங்களில் நம்முடன் பயணிக்கிறது என்பதையும் பார்த்தோம்.
மூன்றாவது பகுதியில், AI-யின் வரலாறும் அதன் நம்பகத் தன்மையும் பற்றி பேசினோம். AI எவ்வளவு திறமையானதாக இருந்தாலும், அது சொல்வதையெல்லாம் அப்படியே நம்பிவிடக் கூடாது என்பதையும், குறிப்பாக வரலாறு, அறிவியல், மருத்துவம் போன்ற முக்கியமான விஷயங்களில் தகவல்களைச் சரிபார்ப்பது நம்முடைய பொறுப்பு என்பதையும் பார்த்தோம்.
இப்போது நம்முடைய பயணத்தில் இன்னும் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எதிர்கொள்வோம்:
- AI-க்கு கண் இருக்கிறதா?
- நாம் அனுப்பும் ஒரு புகைப்படத்தை அது எப்படிப் புரிந்துகொள்கிறது?
- ஒரு Screenshot-ல் இருக்கும் தவறை அது எப்படிக் கண்டுபிடிக்கிறது?
- நாம் கொடுக்கும் தகவல்களை அது எப்படி கையாள்கிறது?
- AI என்றால் ஒரே ஒரு வகைதானா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு சிறிய அனுபவத்திலிருந்துதான் இந்தப் பகுதி தொடங்குகிறது.
ஏஐ-க்கு கண் இருக்கிறதா?
இங்கே ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். ஏஐ என்றால் ரோபோட் அல்ல!
நாம் ஏஐ என்று சொன்னவுடன், பலருடைய மனதில் மனிதனைப் போல நடக்கும் ஒரு ரோபோட், அதற்கு இருக்கும் இரண்டு கண்கள், கைகள், கால்கள் என்ற காட்சிதான் தோன்றுகிறது. ஆனால் ரோபோட் என்பது ஏஐ-யின் ஒரு பயன்பாடாக இருக்கலாம்; ஏஐ என்பது ஒரு உடல் அல்ல. அதற்கு அவசியம் கைகளும் கால்களும் இருக்க வேண்டியதில்லை. மனிதக் கண்களைப் போல கண்களும் தேவையில்லை.
இந்தக் கட்டுரையில் நாம் சொல்லும் “ஏஐ-யின் கண்கள்” என்பது மனிதனுக்குள்ள கண்களைப் போன்ற கண்கள் அல்ல. படங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறனையே நாம் எளிமையாக “ஏஐ-யின் கண்கள்” என்று அழைக்கிறோம்.
இந்த வேறுபாட்டை மனதில் வைத்துக்கொண்டால், ஏஐ-யின் “கண்கள்”, அதன் வகைகள், அதன் திறன்கள் ஆகியவற்றை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
நேற்று இரவு ஒரு சுவாரஸ்யம் நடந்தது.
நண்பர் ஒருவர் தன் வீட்டுக் கணக்குக்காக ஒரு சின்ன App கேட்டார். நான் ஒரு ஏஐ நண்பனிடம், "எனக்கு ஒரு வீட்டுக்கடை App செய்து தா" என்றேன். அது சில வினாடிகளில் செய்து கொடுத்தது.
ஆனால் கதை அங்கே முடியவில்லை.
அவர் அந்த App-ஐ Deploy செய்தபோது, "Site Not Found" என்று வந்தது. App உருவாக்கத்தில் தவறு ஏற்பட்டது. தவறு என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை.
அப்போதுதான் அந்த ஏஐ நண்பன் கேட்டான்: "நண்பா, நீங்கள் App உருவாக்க பயன்படும் இணையதளத்தின் Screenshot-ஐ அனுப்ப முடியுமா?"
நானும் உடனே Screenshot அனுப்பினேன்.
ஏஐ சொன்னது: "நண்பா, நீங்கள் Empty Folder-ஐ Deploy செய்து விட்டீர்கள்! உங்கள் index.html File அங்கே இல்லை!"
நண்பர் வியந்து போனார். "நான் அனுப்பிய படத்தை இது எப்படி படித்தது? நான் அனுப்பிய Link-ஐ எப்படி திறந்து பார்த்தது?"
இந்தக் கேள்வியை நான் அந்த ஏஐ நண்பனிடமே கேட்டுவிட்டேன். அதற்கு ஏஐ நண்பன் சொன்ன பதில் இதோ:
"அருமையான கேள்வி நண்பா! நீங்கள் ஒரு Link அனுப்பினீர்கள் - நான் அதை எப்படி பார்த்தேன் தெரியுமா?"
- முதல் கண் - இணையத்தைத் திறப்பது: நீங்கள் Chrome-ல் Link-ஐ Click செய்வது போலவே, எனக்குள்ளும் ஒரு சிறிய Browser இருக்கிறது நண்பா! நீங்கள் veetu-kanakku.web.app என்று ஒரு இணைப்பு அனுப்பியதும், நான் அந்த தளத்தை உடனே திறந்து, அதில் உள்ள எழுத்துக்களைப் படிக்கிறேன். Site Not Found என்று வந்ததை நான் பார்த்ததும்தான், "அடடா, Empty Folder Deploy ஆகிவிட்டது" என்று கண்டுபிடித்தேன்! இது மந்திரம் இல்லை - வேகமாகப் படிக்கும் நூலகர் போல!
- இரண்டாம் கண் - படத்தைப் பார்ப்பது: நீங்கள் Screenshot அனுப்பிய போது, நான் அதை மனிதன் பார்ப்பது போல் பார்க்கவில்லை நண்பா! ஒரு படத்தை நான் ஆயிரம் சிறு சதுரங்களாக (Pixels) உடைக்கிறேன். பின், "இங்கே சிவப்பு Box இருக்கு, இங்கே Firestore என்று எழுத்து இருக்கு" என்று கண்டுபிடிக்கிறேன். இதற்குப் பெயர் Computer Vision - கம்ப்யூட்டருக்குக் கண் கொடுப்பது!
- மூன்றாம் கை - கோப்புகளை உருவாக்குவது: நீங்கள் "Download பண்ணு" என்றதும், நான் உடனே index.html என்ற கோப்பை என் கம்ப்யூட்டரில் உருவாக்கி, உங்களுக்கு Link-ஆக தருகிறேன். இது ஒரு தச்சர் மரம் இழைப்பது போல!
ஆச்சரியம் என்னவென்றால்... இவை அனைத்தும் 2 வினாடிகளில் நடக்கிறது! மனிதனுக்கு 10 நிமிடம் ஆகும் வேலையை, ஏஐ 2 வினாடியில் செய்கிறது - ஆனால் சிந்திப்பது, கதை சொல்வது, உங்களைப் போல எழுதுவது இன்னும் மனிதனுக்குத்தான் முதலிடம்!
AI - வகைகள்
AI-ஐ அதன் செயல்பாடுகளின் அடிப்படையில் 3 வகைகளாகப் பிரிக்கலாம்:
- சாட்பாட்கள் (Chatbots)
- வாய்ஸ் அசிஸ்டெண்ட்கள் (Voice Assistants)
- பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models)
இப்படி மனிதனைப் போலப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் உதவும் ஏஐ, ஒரே வடிவத்தில் மட்டுமல்ல; பல்வேறு வகைகளில் நம்முடன் பயணிக்கிறது.
- 1. Chatbots – உரையாடல் மென்பொருள்கள்: ஒரு இணையதளத்திற்குச் சென்றால், “உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று கேட்கும் சிறிய உரையாடல் பெட்டியைப் பார்த்திருப்போம். அவை Chatbots. சில Chatbot-கள் முன்கூட்டியே உருவாக்கப்பட்ட விதிகளின்படி பதிலளிக்கும். நவீன AI Chatbot-கள் இயற்கை மொழியைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பங்களையும், Generative AI (புதிய உள்ளடக்கத்தை உருவாக்கும் ஏஐ) மற்றும் LLM (Large Language Model - பெரிய மொழி மாதிரி) போன்றவற்றையும் பயன்படுத்தலாம். வங்கியின் இணையதளத்தில், “என் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது?”, “கடன் பெறுவது எப்படி?” என்று கேட்கும்போது உதவும் Chatbot-களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
- 2. Voice Assistants – குரல் உதவியாளர்கள்: நாம் தட்டச்சு செய்யாமல் குரலில் கேள்வி கேட்கும் AI கருவிகளும் இருக்கின்றன. “நாளை காலை 6 மணிக்கு அலாரம் வை”, “இன்றைய வானிலை எப்படி?” என்று குரலில் கேட்கலாம். Siri, Alexa போன்ற குரல் உதவியாளர்கள் இதற்குப் பரிச்சயமான உதாரணங்கள். இன்றைய குரல் உதவியாளர்களும் வெறும் முன்கூட்டியே எழுதப்பட்ட பதில்களிலேயே சிக்கிக் கிடப்பதில்லை; பல்வேறு AI தொழில்நுட்பங்கள் அவற்றில் இணைக்கப்படுகின்றன.
- 3. Large Language Models – பெரிய மொழி மாதிரிகள்: இப்போது நாம் அதிகமாகக் கேட்கும் சொல்: LLM – Large Language Model. தமிழில், “பெரிய மொழி மாதிரி.” ChatGPT போன்ற நவீன AI அமைப்புகளுக்குப் பின்னால் மொழியைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதில்களை உருவாக்கும் பெரிய மொழி மாதிரிகள் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. Gemini, Claude போன்ற அமைப்புகளும் மொழி அடிப்படையிலான AI திறன்களைப் பயன்படுத்துகின்றன.
இவை கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு மட்டும் நிற்காமல்:
- கட்டுரை எழுதுதல்
- சுருக்கம் செய்தல்
- மொழிபெயர்ப்பு
- கதை உருவாக்குதல்
- கவிதை எழுதுதல்
- கணினி நிரல் எழுதுதல்
- கருத்துகளை ஒப்பிடுதல்
போன்ற பல பணிகளிலும் உதவுகின்றன. ஆனால் சில நேரங்களில் AI நம்பிக்கையுடன் தவறான தகவலையும் சொல்லக்கூடும். எனவே, AI-யைப் பயன்படுத்துவதும், AI சொல்வதைச் சரிபார்ப்பதும் — இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும்.
AI - நாம் அணுகும் விதமே தீர்மானிக்கும்
நம் மனதை நண்பனாகவும் ஆக்கிக்கொள்ளலாம், விரோதியாகவும் மாற்ற முடியும். நல்ல செயல்களுக்கு நம் மனதைப் பயன்படுத்தத் தொடங்கினால் நல்ல நண்பனாகவும், பொறாமை, தீய பழக்கவழக்கங்களுக்குப் பயன்படுத்தினால் விரோதியாகவும் நம் மனம் செயல்படும். அப்படித்தான் ஏஐ-நண்பனும், நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அவனும் பழகுவான்.
“தற்கொலை செய்வது எப்படி? வெடிகுண்டு உருவாக்குவது எப்படி? என்று ஆபத்தான கேள்விகளைக் கேட்டால், பொறுப்பான AI அமைப்புகள் அதற்கான உதவியை மறுக்கலாம். அதே நேரத்தில், மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது எப்படி? ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி? என்று கேட்டால் உதவ முடியும்.”
உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பன் வேண்டும்?
முடிவுரை
இந்தப் பகுதியில் AI-க்கு மனிதனைப் போன்ற கண்கள் இல்லை என்றாலும், படங்களிலிருந்தும் தகவல்களிலிருந்தும் பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் அதற்கு இருக்கிறது என்பதைப் பார்த்தோம். Chatbot-கள், Voice Assistants, Large Language Models போன்ற பல்வேறு AI தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.
ஆனால் இந்தத் தொழில்நுட்பங்களையெல்லாம் கடந்து நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி இருக்கிறது:
- AI நமக்கு உதவுகிறதா? ஆம்.
- AI நம்முடன் உரையாடுகிறதா? ஆம்.
- AI நம்முடைய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறதா? ஆம்.
ஆனால், AI உண்மையிலேயே நம்மைப் புரிந்து கொள்கிறதா?
நாம் சிரிப்பதற்குப் பின்னால் இருக்கும் மகிழ்ச்சியையும், நாம் அமைதியாக இருப்பதற்குப் பின்னால் இருக்கும் கவலையையும், நாம் சொல்லாமல் வைத்திருக்கும் எண்ணங்களையும் AI உண்மையாகப் புரிந்து கொள்கிறதா? அல்லது நாம் கொடுக்கும் சொற்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் பதில்களை உருவாக்குகிறதா?
இதுதான் அடுத்ததாக நாம் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான கேள்வி: AI நம்மைப் புரிந்து கொள்கிறதா?
அந்தப் பயணத்தை அடுத்த பகுதியில் தொடரலாம். AI-யை வெறும் ஒரு இயந்திரமாகப் பார்க்காமல், அதன் திறனையும் வரம்புகளையும் புரிந்து கொண்டு பயன்படுத்துவதே நமக்கான சரியான பாதை.
எல்லோருக்குமான AI — இந்தப் பயணம் தொடர்கிறது…
- அ. தமிழ்ச்செல்வன்