உலகில் மிக நீண்ட காலமாக குணப்படுத்த முடியாமல் மருத்துவத் துறைக்குச் சவால்விடும் சிக்கலான தொற்று நோயாக எயிட்ஸ் பரிணமித்துள்ளது. இதுவரை அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் தாக்கி சுமார் இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்களின் இறப்புக்குக் காரணமான கொடிய நோய்க்கிருமி எச்.ஐ.வி ஆகும்.

மூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி
 
எச்.ஐ.வி தொற்றுவீத அதிகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாதிருக்கும் எயிட்ஸ் நோயாளிகளின் தொகை அதிகரிப்பு போன்றன எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கைகளைப் பாரிய அளவிற் பலவீனப்படுத்துகின்றன. எனினும் முன்னெடுக்கப்படும் வைரஸ் எதிர்ச் சிகிச்சை மூலம் வளர்ச்சியடைந்த நாடுகளில் எச்.ஐ.வி.இன் தாக்கம் சிறப்பாகப் குறைக்கப்பட்டிருக்கிறது. வழமைபோல் வறுமையின் தாயகங்களாகிய மூன்றாம் உலக நாடுகளில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.

ஒருங்கிணைந்த எச்.ஐ.வி தடுப்பு சாத்தியமா?
 
உலகின் பெரிய நகரங்கள் தொட்டு மிகச் சிறியகிராமங்கள் வரை எச்.ஐ.வி தன் ஆளுகையினை வலுப்படுத்தியுள்ளது. ஆயினும் நாடுகளிடையே பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் காணப்படும் வேற்றுமைகளைக் கடந்து ஓர் ஒருங்கிணைந்த எச்.ஐ.வி தடுப்புச் செயற்திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது கடினமான பணியாக உள்ளது.

முன்னெப்போதுமில்லாத சந்தர்ப்பம்
 
எச்.ஐ.விக் கிருமித் தடுப்பு தொடர்பான அறிவியலின் வளர்ச்சி, அரசுகளின் அதிகரித்த செயற்பாடுகள், பெருமளவு பொதுமக்களின் பங்கெடுப்பு, பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுதல், புதிய ஆய்வு முயற்சிகள் என்பன முன்னெப்போதுமில்லாத வகையில் எச்.ஐ.விக்கு எதிராக முனைப்புடன் செயலாற்றுவதற்கான அடித்தளத்தினை உருவாக்கியுள்ளன.
இச் சந்தர்ப்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தின் எச்.ஐ.விக் கிருமித்தொற்றின் பரம்பலைப் பாரிய அளவிற் குறைத்து எதிர்நோக்கும் எயிட்ஸ் அபாயத்திலிருந்து சிறப்பான பாதுகாப்பினை பெறலாம். ஏனைய பாலியல் நோய்களின் பரம்பலைக் கட்டுப்படுத்தல், பால் நிலைச் சமத்துவத்தை நிலைநாட்டல், நோய்கள் தொடர்பான சிறப்பான விழிப்புணர்வினை உருவாக்கல் என்பன எச்.ஐ.விக்கான எதிர்வினையில் மேலதிகமாக விளையும் நன்மைகளாகும்.
எதிர்க்கிளம்பும் தடைகள்
 
பால் நிலைச் சமத்துவமின்மை, பாலியல் நோய்கள் தொடர்பான அறிவூட்டல் கலாச்சாரத்திற்கெதிரானதாக உணரப்படல் ஆகியன சமுக மட்டத்தில் காணப்படும் எச்.ஐ.வித் தடுப்புக்கெதிரான முக்கிய தடைகளாகும். பழக்கவழக்கங்களை மாற்றுவதில் உள்ள கடினத்தன்மை, தடுப்பு முறைகளைக் கைக்கொள்வதற்குரிய பொருளாதார வசதியின்மை போன்றவை தனிமனிதனொருவனின் எச்.ஐ.விக்கு எதிரான செயலாற்றுகையை வலுவற்றதாக்குகின்றன.
மேலும் எச்.ஐ.வித் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கும் போது மனித வள, நிபுணர் வளப் பற்றாக்குறை, சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிக்கல்கள், நிதி மற்றும் வளப்பற்றாக்குறை போன்றன நிகழ்ச்சித்திட்டங்களின் வினைத்திறனைக் குறைக்கின்றன.

எதிர்பார்க்கப்படும் கொள்கைசார் அடைவுகள்

 1. மனித உரிமைகள் மதிக்கப்படுவதைத் உறுதிசெய்தலும் நோயாளிகளைச் சமுக ஒதுக்குதலிலிருந்து பாதுகாத்தலும்.
 2. சமுகத்தின் சகல மட்டங்களிலும் நோய்த்தடுப்பினை வழிப்படுத்துவதற்கான தலைமைத்துவங்களை வளர்த்தெடுத்தல்.
 3. எயிட்ஸ் நோயாளிகளை நோய்த்தடுப்புச் செயன்முறையில் நேரடியாக ஈடுபடத்தூண்டுதல்.
 4. கலாச்சார மற்றும் சமுக கட்டமைப்புகளிற்கு இசைவாக நோய்த்தடுப்பினைத் திட்டமிடல்.
 5. பால்நிலைச் சமத்துவத்தினை ஏற்படுத்தல்.
 6. எச்.ஐ.வி தொடர்பான பரந்த அறிவு மற்றும் விழிப்புணர்வைக் கட்டியெழுப்புதல்
 7. இனப்பெருக்க சுகாதாரத்தினை பேணுதல்.
 8. ஒருங்கிணைந்த சமுக மேலசைவிற்கு உதவுதல்.
 9. பாதிக்கப்பட்ட சமுகப் பிரிவினரைச் அடையாளம் கண்டு தடுப்பு முறைகளை வினைத்திறனாகச் செயற்படுத்தல்.
 10. நோய்த்தடுப்பினை அமுல்ப்படுத்தத் தேவையான பொருண்மிய, மனித, மற்றும் நிபுணத்துவ வலுவினை உருவாக்குதல்.
 11. புதிய தடுப்பு முறைகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுதல்.
 12. நோய்த்தடுப்பினைச் வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கான சட்ட ஆதரவினை உருவாக்கல்.

எதிர்பார்க்கப்படும் செயற்பாடுசார் அடைவுகள்

 1. எச்.ஐ.வி கிருமியின் உடலுறவூடான கடத்தலைத் தடுத்தல்.
 2. நோய்வாய்ப்பட்ட தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகளை எச்.ஐ.வி கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்.
 3. ஊசி மூலமான தொற்றுகைக்கான வழிவகைகளைத் தடுத்தல்
 4. இரத்ததானத்தினூடு எச்.ஐ.வி கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்தல்.
 5. மருத்துவச் செய்ற்பாடுகளின் போது கிருமிப் பரவல் ஏற்படுவதைத் தடுத்தல்.
 6. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு உளவளத் துணையினை வளங்குதல்.
 7. நோய்த்தடுப்புச் செயற்பாடுகளோடு நோய்ச் சிகிச்சை முறைகளை ஒன்றிணைத்தல்.
 8. இள வயதினரிடையேயான நோய்த்தடுப்புச்  செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தல்.
 9. மக்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளக்கூடியவகையில் அறிவூட்டல்.
 10. எயிட்ஸ் நோயாளிகள் சமுகத்தில் ஒதுக்கப்படுதலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 11. புதிய தடுப்புமுறைகளின் பாவனையை மக்களிடையே ஊக்குவித்தல்.
Pin It