பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள காலம் இது. காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும் மிகச்சரியான நடவடிக்கை இது. மாண்ட்ரீயல் பல்கலைக்கழக பேராசிரியரின் அண்மைக்கால ஆய்வு முடிவுகள் புகைபிடிப்பவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் புகையிலை நச்சுப்புகையால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.

கியூபெக்கில் 29 பள்ளிக்கூடங்களில் இருந்து 1,800 பிள்ளைகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். 10 முதல் 12 வயதிற்குட்பட்ட இந்த குழந்தைகள் வாழ்க்கையின் அனைத்து பிரிவிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

புகைபிடிக்காதவர்களுக்கு நிக்கோட்டின் நஞ்சினால் பாதிப்பு இல்லை என்கிற கருத்து இதுவரை நிலவி வந்தது. ஆனால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 5 சதவீத குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் நிக்கோட்டின் நஞ்சினால் ஏற்படும் தீமைகளுக்கு ஆளாகியிருந்தனர். குழந்தைகள் செய்த தவறெல்லாம் புகைபிடிப்பவர்களின் அருகில் இருந்து சுவாசித்ததுதான். இது குழந்தைகளின் தவறா அல்லது பெற்றவர்களின் தவறா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுவோம்.

இந்தக்குழந்தைகளை இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்கள் என நாம் குறிப்பிடுவதில் தவறில்லை. மனச்சோர்வு, தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், கவலை, படபடப்பு, பசியின்மை ஆகிய கோளாறுகளால் இந்தக் குழந்தைகள் அவதிப்பட்டது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

வீடுகளிலும், கார்களிலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு புகைபிடிப்பதால் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பாதிப்புகள், இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்களுக்கும் கடத்தப்படுகிறது என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி.

- மு.குருமூர்த்தி

Pin It