பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாதாடியதில் பெருமையடைகிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் குறிப்பிட்டார்.

20.3.10 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆற்றிய உரையின் தொடர்ச்சி :

மனிதனை மிருக உலகத்திலிருந்து எது மாற்றி யது? சிந்தனை மொழி எல்லாம் உருவானது, பின்னாளில். மனிதனை மனிதனாக மாற்றியது உழைப்பும், கருவியும் என்ற அடிப்படையை மார்க்சியம்,டார்வினிசத்திற்குப் பின்பு எடுத்துக் கூறியது.

அன்றைக்கு கரடுமுரடான கல்லை வைத்துக் கொண்டிருந்தவன் - இன்றைக்கு கம்ப்யூட்டரை, அலைபேசியை வைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, கருவி, உழைப்பு இரண்டும் சேர்ந்துதான் சமூகத்தை இன்று மாற்றி அமைத்திருக்கிறது.

என் முன் இருக்கும் மேசை மரத்தில் அப்படியே காய்த்துத் தொங்கவில்லை. மரத்தை வெட்டி எடுத்து வந்து, இழைத்துப் பொருத்திய உழைப்பும், கருவியும் மேசையாக உருவாகியிருக்கிறது. நாம் போட் டிருக்கும் சட்டை, அது அப்படியே பருத்தியில் விளைவதில்லை. அந்தப் பருத்தியை விளைவித்தவன் ஒரு விவசாயி ஆக, ஒரு தாழ்த்தப்பட்டவனாக இருப்பவனால் பருத்தி விளைவிக்கப்பட்டு, அதை அறுவடை செய்து பஞ்சாக்கி, நூலாக்கி,துணியாக இருந்த அதை சட்டையாக மாற்றுவதற்கு பல பேருடைய உழைப்பு இந்த சட்டைக்குப் பின்னால் அடங்கியிருக்கிறது.

ஆகவே, பொருள் உற்பத்திதான் மனித சமூகத்தின் அடிப்படை என்றனர் மார்க்சும், ஏங்கல்சும். அந்தப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும்போது ஏற்படக் கூடிய உறவுகள்தான் இன்றைக்கு நம்மை நிர்ணயிக் கின்றன. மனிதனுக்கும் - மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவுகள், மனிதருக்கும் இயற்கைக்கும் உள்ள உறவுகள்தான் நம்மை இன்று நிர்ணயம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த விவரங்களையெல்லாம் மார்க்ஸ் அற்புதமாகச் சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால், அவற்றைப் பொருத்திப் பார்க்கிறபோது ஒரு சமூகத்துக்கு, ஒரு நாட்டுக்கு பொருத்திப் பார்க்கிறபோது அந்த மண்ணைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான்.

அப்படிப் பார்க்கிறபோதுதான், இன்றைக்கு சோவியத் யூனியன், 17நாடுகளில் சோவியத் யூனியனுக்குப் பிறகு சோசலிஸ்டுகள்,கம்யூனிஸ்டு களின் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், 2 ஆம் உலகப் போருக்குப்பின் வெற்றிப் பெற்ற சோவியத் யூனியனுக்குப் பின்90-களுக்குப் பின்னால் அவை எல்லாம் சடசடவென்று சரிந்து போயின. ஆட்சிப் பீடத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லை என்பதற்காக கம்யூனிசம் என்றைக்கும் தோற்காது என்பதை உலகம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இருக்கிற பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று சொன்னால்,அந்தத் தீர்வு ஒரு பொது வுடைமை அமைப்பாகத்தான் இருக்கிறது - காரணம், அமெரிக்கா. வல்லாதிக்க நாடு என்று சொல்லக்கூடிய அமெரிக்கா, திவாலாகிப் போயிருக் கும் காட்சியைப் பார்க்கிறோம். அங்கிருந்த நிறுவனங்களை வங்கிகள் அத்தனையும் திவாலாகிப் போன காட்சியைப் பார்க்கிறோம்.

ஆனால், உலகத்தில் எல்லா நாடுகளும் திவாலாகி இருக்கும்போது,இன்றைக்கு அமெரிக்காவுக்குப் பக்கத்தில் 80 கிலோ மீட்டர் பக்கத்தில் இருக்கும் கியூபா, ‘பிடல் காஸ்ட்ரோ’ அமைத்திருக்கும் கியூபா, அவர் உருவாக்கியிருக்கும் வடஅமெரிக்க நாடுகள், அதில் இன்றைக்கு ‘சாவோஸ்’ போன்றோரை எல்லாம் உருவாக்கி,அமெரிக்கா எதிர்ப்பாக மிகப் பெரிய சக்தியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவைகளிலிருந்து நாம் கற்றுக் கொண் டிருக்கிற பாடமே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! அந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பதிக்கிற போதுதான் ஒரு பொதுவுடைமை இயக்கம் என்பது மலர முடியும். அதில் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் பெரியார் என்ற ஒரு மாமனிதரை, அந்த இயலை நாம் உணர்ந்து கொண்டு,உள்வாங்கிக் கொண்டு, பொருத்திப் பார்க்காமல் மாற்றத்தைப் படைக்க முடியாது என்பதை நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் மார்க்சியத்தோடு இன்றைக்குப் பெரியாரியலையும்,அம்பேத்காரியலையும் சேர்த்து வைத்து நாம் சரியான திசையில் கொண்டு போனால் தான் இந்தியா என்ற மவுடீகம் கொண்டிருக்கிற நாட்டை நாம் மாற்ற முடியும்.

பகத்சிங் - மிகத் தெளிவாகச் சொன்னான் - முதலில் அவன் தன்னை மாற்றிக் கொண்டான். ஒரு சீக்கியனாக இல்லாமல் ஒரு சரியான போராளியாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அதற்கு அடிப்படைக் காரணம் சின்னஞ்சிறு வயதில் அவன் அய்ரோப் பாவின்“அனார்க்சிசத்தை”ப் படித்திருக்கிறான், கம்யூனி சத்தைப் படித்திருக்கிறான். அதை உள்வாங்கிக் கொண்டு முதலிலேயே சீக்கியனுக்குரிய முக விலாசத்தை மாற்றினான். தாடியையும்,தலைப்பாகை யையும் கழற்றினான். மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் உயர்ந்த தலைவர் “சுர்ஜித் சிங்”. அவர்கூட சாகிற வரையிலும் தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தார்.

பகத்சிங் சொன்னான் - “எங்களுடைய இலக்கு என்பது மிக முக்கியமானது. காந்தியத்தை மறுக்கிறேன். ஏன் மறுக்கிறேன் என்றால், காந்தியம் ஒரு சுரண்டல் கூட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு,இன்னொரு சுரண்டல் கூட்டத்தை கொண்டுவரப் பார்க்கிறது. எம்மைப் பொருத்த வரைக்கும் முழு விடுதலை வேண்டும்,. முழு விடுதலை என்று சொன்னால், இங்கு இருக்கும் மதம், மவுடீகம்,சட்டம், நீதி, தனிச் சொத்துரிமை - இவைகளைப் புறந்தள்ளிவிட்டு,ஒரு பொது உடைமை கொண்ட சம உரிமை கொண் டிருக்கிற அமைப்பு வேண்டும் என்று சொன்னான். அந்த அமைப்புக்கு அடிப்படையாக இன்றைக்கு இருக்கும் மதம், வகுப்புவாதம்,சாதியத்தை உடைப்பது தான் சரி” என்று சொன்னான்.

அந்த பகத்சிங்கின் வரிசுகளாக இன்று பெரியார் இயக்கம் இருக்கிறது என்பதைத்தான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் இன்றைக்கு அரசை எதிர்த்துப் போராடுகிற போது, இன்றைக்கு இருக்கிற மவுடீகத்தை எதிர்த்துப் போராடுகிறபோது, மதத்தையும்,சாதீயத்தையும் எதிர்த்து ஆணி வேரை ஒழிக்காமல் மாற்றமே செய்ய முடியாது. அதை அடிப்படையோடு சொல்லிக் கொண்டிருக்கிற பெரியார் இயக்கத்தின் முக்கியத் துவத்தை நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண் டிருக்கிறோம். எது ஒழிக்கப்பட வேண்டுமோ, அது ஒழிக்கப்படாத காரணத்தால் நாம் இழிநிலைகளைப் பார்க்கிறோம்.

பெரியாரின் அற்புதமான வாசகம், “ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து - பக்தி என்பது தனிச் சொத்து”. பக்தி இல்லாவிட்டால் மற்றவர்களுக்குக் கவலை இல்லை. ஆனால், ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. அரசியல்வாதிக்கு முதலில் சொல்லுக்கும்,செயலுக்கும் பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டும். ஆகவே,ஒழுக்கம்தான் பொதுமை யென்று சொன்னார்.

பக்தியின் பெயரால், நம்மில் பல பேர் ‘சாரு நிவேதிதா’ போன்ற எழுத்தாளர்கள்கூட அங்கே காலில் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கிறோம். நித்யானந்தா என்பவன் தியானத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறான். ஈசா யோகாவின் ஜக்கி வாசுதேவ்,மகரிஷி போன்றவர்கள் எல்லாம் தியானத் தைக் கற்றுக் கொண்டு கடவுள் என்ற மாயையைச் சேர்த்து நம்பிக்கையை உருவாக்கு கிறார்கள்.

டாக்டர் கோவூர் சவால் விட்டுச் சொனாhர், “சாயிபாபா, நீ கைக்கு அடங்கிய பொருள்களை வரவழைத்துக் காட்டுகிறாய். உனக்கு உண்மை யிலேயே சக்தி இருக்குமென்றால், கடவுள் என்ற ஒன்று இருந்தால், என் முன் இதைப்போல் இருக்கும் மேசையைக் கொண்டுவா” என்றார். இப்படி சவால் விட்டவுடன் சாயிபாபாவுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்குச் சென்று விட்டார். கடைசி வரை டாக்டர் கோவூரைச் சந்திக்கவேயில்லை.

ஆகவே, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, கடவுள் நம்பிக்கை ஒழிப்பு, என்ற கருத்தும் பரப் புரையும் இன்றைக்கும் மிக மிக அவசியமாகிறது. பெரியார் என்பது பெரியாரியல் என்பது - இன்றைக்குக் காலத்தின் கட்டாயம். அவசியம். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சி மேடையில் பேசி னாலும் சரி,பகுத்தறிவை, உண்மையை, மெய்த் தன்மையை கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் பெரியாரியல் போதிக்கிறது. “எதையும் பகுத்துப் பார் - எதையும் ஏன், எப்படி என்று கேள்வி கேள்” என்ற இயலைச் சொல்லக் கூடிய அந்தத் தத்துவத்தைச் சொல்லிக் கொண் டிருக்கக்கூடிய இந்த இயக்கத்தோடு இருந்து கொண்டு, இந்த வழக்கு நடத்திட்ட எங்கள் குழுவுக்குப் பாராட்டு என்பது மிக மிகப் புகழ்ச்சி யானது.

என்னையும் ஒரு இயக்கத்தோடு சேர்ந்தவனாக கருதி,கம்யூனிஸ்டுகள் என்றைக்கும் பெரியாரோடு இணைந்திருப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டு அந்த வாய்ப்பை பெரியார் திராவிடர் கழகம் நல்கியமைக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு, விடை பெறுகிறேன். இவ்வாறு இந்திய பொதுவுடைமைக் கட்சி வழக்குரைஞர் பவானி ப.பா. மோகன் ஏற்புரை யாற்றினார்.

தொகுப்பு : நேதா

.
.

-வழக்கறிஞர் ப.பா. மோகன்

Pin It