மனிதனின் உடல் உறுப்புகள் வெவ்வேறு விதமான கழிவுகளை உண்டாக்கினாலும், ஆபத்தான கழிவுப்பொருள் மலம் மட்டுமே. வியாதிகளின் தொடக்கம் மலச்சிக்கல் என்பதில் சந்தேகமே இல்லை. மலம் கெட்டிப்பட்டு உள்ளேயே தங்கிவிட்டால் மலம் நஞ்சாக மாறிவிடுகிறது.

சிக்கல் இல்லாதவருடைய மலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அவற்றை நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். ஓரிரு நிமிட வேலையாக அது முடிந்துவிட வேண்டும். பெரும் முயற்சி இருத்தல் கூடாது.

மலம் உடம்பில் இருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் சுழன்று வந்து விழவேண்டும். வெளித்தள்ளுவதற்கு அதிக அழுத்தமோ, முயற்சியோ இருத்தல் கூடாது. மலத்தின்மீது சளிபோன்ற ஒரு படலம் இருத்தல் வேண்டும். மாட்டுச்சாணத்தில் இதுபோன்ற சளிப்படலத்தை பார்க்கலாம்.

மலத்தில் துர்நாற்றம் இருத்தல் கூடாது. மலம் நீங்கும்போது உண்ட உணவிற்கு இருந்த மணம் உணரப்படுவது சிறந்தது. மூன்று வேளைகளும் பழங்களையே உண்டு வாழ்வோருக்கு இந்த அனுபவம் கிட்டும். எத்தனை வேளை உணவு உண்கிறோமோ, அத்தனை முறைகள் மலம் கழிய வேண்டும். மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வும், சோம்பல் நீங்கிய சுறுசுறுப்பும், வேலை செய்ய தகுதியான உடல்நிலையும் அனுபவப்படவேண்டும்.

மலம் கழித்த சிறிது நேரங்கழித்து மீண்டும் வரும்படியாக உள்ளே தங்கி இருத்தல் கூடாது. மலத்தின் நுனி கூராக வந்து முடிந்தால் இனி மலம் இல்லையென்று பொருள். கால் கழுவ வேண்டிய அவசியம் இல்லாமலும், பசைபோல் ஒட்டும் தன்மை இல்லாமலும் இருத்தல் வேண்டும். மலம் கழிக்கும்போதோ, முன்போ, பின்போ, வயிறு வலிக்கக்கூடாது. மலத்துவாரத்தில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடாது.

- மு.குருமூர்த்தி

Pin It