இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் சில வித்தியாசமான சந்தேகங்கள்...

கேள்வி : என்வீட்டில் குழந்தைகள் (சில பெரியவர்கள் கூட ) பேப்பர் தின்பது, சாக்பீஸ், பென்சில் தின்பது போன்ற பழக்கங்கள் கொண்டிருப்பார்கள், இதற்கும் காமாலைக்கும் சம்பந்தம் உண்டா..?

பதில் : உண்டு. உடலில் இரும்புசத்து குறைந்து இரத்தசோகை ஏற்படும் போது, இதுபோன்ற வித்தியாசமான பழக்கங்கள் ஏற்படுவது உண்டு. இதை பைகா என்பார்கள். இதுபற்றி இன்னும்கூட ஆராய்ச்சி நடந்து வருகிறது. இவர்களுக்கு வைத்தியம் செய்த பின்பு, இரும்பு சத்து அதிகமாகி இரத்த சோகை நன்றாகிவிடும் வேளையில், இந்த பழக்கம் நின்றுவிடும். காமாலை என்பதை வழக்கில் கிராமங்களில் பல வியாதிகளுக்கு உபயோகிக்கிறார்கள். ‘ஊது காமாலை’ என்று இதை அழைப்பதுண்டு. ஆனால் உண்மையில் காமாலைக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை.

கேள்வி : நான் தினமும் ஒரு மல்டி வைட்டமின் சாப்பிடுகிறேன். இருந்தும் நாள் முழுவதும் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தினந்தோறும் செய்யும் வழக்கமான வேலைகளைக் கூட செய்ய முடிவதில்லை. என் Hb% அளவும் 12gm% உள்ளது. இரண்டு மாதங்களாக இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டும் பலனில்லை, ஏன்?

பெரும்பாலும் உடலில் இரத்த சோகை ஏற்படும்போது, இது போன்ற களைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் மாத்திரைகள், ஹீமோகுளோபினை அதிகப்படுத்தாது. மேலும், உடலில் இருக்க வேண்டிய தேக்க இரும்புச்சத்து குறையும்போது இரத்த சிகப்பணுக்கள் தயாரிக்க போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் போய், இரத்த சோகை ஏற்படலாம். எனவே, இரும்புச்சத்து அதிகரிக்க ஆயத்தங்கள் செய்து கொள்ளவேண்டும்

கேள்வி : என் குழந்தைக்கு 1 வருடம் ஆகிறது. குழந்தைக்கு இரத்தசோகை இருப்பதாக டாக்டர் கூறுகிறார். நாங்கள் குழந்தையை நன்றாகத் தான் கவனித்து வருகிறோம். இருந்தும் இரத்த சோகை ஏன்..?

பதில் : குழந்தை கருவில் இருக்கும்போது, கிடைக்கும் பிராணவாயு குறைவு என்பதால் இயற்கையாக குழந்தையின் Hb% அளவு 16gm% என்று அதிகமாக இருக்கும் RBC எண்ணிக்கையும் அதிகம் இருக்கும். பிறந்த பின்பு, எல்லோரையும் போல் Hb% அளவும் RBC அளவும் குறையச் செய்யும். இந்த பற்றாக்குறையை சமாளிக்க, மீண்டும் உடல் அதிக RBCIயும் Hb% சரிக்கட்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இந்த இரத்த சோகையை physiological anaemia என்பர். அதாவது நோயில்லாத இரத்த சோகை என்று கூறுவர். நாளடைவில் தானே சரியாகும். இதேபோல் பருவ வயதில் பெண்களுக்கு இது போன்று ஏற்படலாம். இதுவும் பல சமயங்களில் தானே சரியாகிவிடும்.

கேள்வி : என் வயது 30, நான் அடிக்கடி இரத்ததானம் செய்கிறேன். இது வரை 17 முறை இரத்ததானம் செய்துள்ளேன். எனக்கு இரத்த சோகை வர வாய்ப்புள்ளதா?

பதில் : டாக்டர் சுகுமார், ஈரோடு அவர்கள் இதுவரை 100 முறைக்கு மேல் இரத்தநானம் செய்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இரத்த தானம் செய்தாலும், ஒருசில மணி நேரங்களிலேயே உடல், புதிதாக இரத்த அணுக்களை உற்பத்தி செய்து அதை ஈடுகட்டிவிடும். அதனால் இரத்த தானம் செய்பவர்களுக்கு என்றும் இரத்த சோகை வருவதில்லை.

கேள்வி : எனக்கு தலைமுடி நிறைய உதிர்கிறது..? இதற்கும் இரத்த சோகைக்கும் சம்பந்தம் உண்டா?

பதில் : பொதுவாக இரத்த சோகை உள்ளவர்களுக்கு, புரதச் சத்தும் குறைவாக இருந்தால், இதுபோல உதிரலாம். இருப்பினும், தோல் சம்பந்தப்பட்ட, பொடுகு, fungus போன்ற இதர பிற வியாதிகள் இருக்கின்றனவா என்று தோல் மருத்துவரிடம் அறிந்து கொண்டு, இரத்த சோகை இருந்தால் அதையும் சேர்த்து சரிசெய்து கொள்ளவும்.

கேள்வி : என்விரல் நகங்கள் எல்லாம் தட்டையாக கோடு கோடாக உள்ளன. மருத்துவர் இரத்த சோகை என்கிறார். உண்மையா?

பதில் : இரத்த சோகை நாட்பட உள்ளவர்கள் விரல் நகங்கள் தட்டையாக ஆவது மட்டும் இல்லாமல் ஸ்பூன் மாதிரியும் குழி விழுவதுண்டு.

கேள்வி : திடீர் திடீரென்று வேலை செய்யும்போது கைகளில் ஷாக் அடிப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டு சோர்வு உண்டாகிறது. எனக்கு இரத்த சோகை இருக்குமா..?

பதில்: இது போன்ற அறிகுறிகள், கழுத்துப்பகுதி முதுகெழும்பு தேய்வதால் உண்டாகக்கூடும். வெறும் இரத்த சோகையால் உண்டாக வாய்ப்பில்லை. இருக்கிறதா என்பதை எலும்பு மருத்துவரிடம் காண்பிக்கவும்.


(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It