தேர் எரிந்தது - ஏன்?

பாரதப் போர் பாண்டவர்க்கு வெற்றியாக முடிந்த பின்னர் தேரிலிருந்து இறங்குமாறு அர்ச்சுனனிடம் கூறுகிறான் கிருஷ்ணன். பகவானான கிருஷ்ணன்தான் முதலில் இறங்க வேண்டும் என்கிறான் அர்ச்சுனன். இதை ஏற்காத கிருஷ்ணன், அர்ச்சுனனைக் கீழே இறங்குமாறு அதட்டுகிறான். அவனும் கீழே இறங்கி நின்றான்.  அதன் பிறகு தேரில் இருந்து கிருஷ்ணன் இறங்குகிறான். அவன் இறங்கிய அடுத்த நொடியில் தேர் எரிந்து சாம்பலானது. அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன் கேட்டானாம், “யாரும் நெருப்பு வைக்காமல் தானாகவே தேர் எரிந்தது எப்படி?” என்று கேட்டானாம். அதற்கு கிருஷ்ணன் கூறிய பதில்தான் அவன் எப்பேர்ப்பட்ட கபடன்! அயோக்கியன் என்பதை எடுத்துக் காட்டும்.

“எவ்வளவோ முறைகேடுகளைக் கையாண்டுதான் இந்தப் போரில் உங்களை வெற்றி பெறச் செய்தேன், தெரியுமா? நியாயத்திற்குப் புறம்பான செயல்கள்தான் தேர் எரிந்ததற்குக் காரணம். நான் தேரில் அமர்ந்திருந்ததால் தான் தேர் எரியவில்லை; நான் இறங்கியதும் தேர் எரிந்து விட்டது” என்றானாம். அர்ச்சுனன் இறங்காமல், கிருஷ்ணன் முதலில் இறங்கியிருந்தால் தேரும் அர்ச்சுனனும் சேர்ந்தே எரிந்திருப்பர். நேர்மை - அறவழிகளில் நடத்தாத போர் என்று கிருஷ்ணனே ஒப்புதல் தருகிறான்; இது வாழ்க்கைக்கான தத்துவமா? கீதை -நீதி நூலா? வழிகாட்டும் நூலா?

பிறப்பிலேயே பேதம்

மனிதகுலம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்து அறியப்படுகின்றனர் என்று கீதை கூறுகிறது. அத்யாயம் 18 பாடல் 41இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம்

சூத்ராணாம் ச பரந்தப

கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப்

பிரனவர் குணை

செயல்களின் அடிப்படையிலும் இயற்கையில் அமைந்துள்ள குணங்களின் அடிப்படையிலும் இப்பிரிவினைகள் என்கிறது கீதை. 

நான்கு வர்ணங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துவிட்டு, அடுத்தவர்க்கான கடமைகளை ஏற்று அரைகுறையாக செய்வதைவிட அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே செய்வதுதான் சரி என்கிறது கீதை. 

வேறு வகையில் சொன்னால், அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிறது கீதை. 

பார்ப்பனர் வேதம் படித்து படிப்பிக்க வேண்டுமாம். இப்பொழுது என்ன நிலை? பார்ப்பனர் எல்லாத் தொழிலையும் செய்கிறார்கள். அதைப் போலவே சத்திரியரும். பாதுகாப்புப் பணியில் எல்லா ஜாதிக் காரர்களும் உள்ளனர். இதிலும்கூடத் தலைமையில் பார்ப்பனர்கள்! 

யார் நடக்கிறார்கள் கீதைப்படி? இந்துக்களுக்குக் கீதை எங்கே வழிகாட்டு கிறது? பொய் சாட்சி சொல்பவன்கூட கீதையில் கைவைத்துதான் வழக்கு மன்றத்தில் பொய் கூறுகிறான். அது எப்படி மதிக்கப்படுகிறது? 

இது எப்படி தத்துவ நூலாகும்?

குழப்பமும் முரண்பாடும்

கீதை மற்றொன்றையும் செய்கிறது என்று ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவித உரிமையும் அளிக்கப்படாமல் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு சமூகரீதியிலும் பொருளியல் ரீதியிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட மக்கள் எதையும் கேட்காமல், எந்தத் தேவைக்கும் குரல் எழுப்பாமல் ஆமைகளைப்போல் அடங்கிக் கிடப்பதற்கான மனப்பான்மையை இந்நூல் உருவாக்குகிறது. வளர்க்கிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்கின்ற மூடநம்பிக்கையை இவர்கள் மனத்தில் விதைத்து எவ்வித எழுச்சியும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளும் கேவலமானதையும் கீதை செய்கிறது.

அர்ச்சுனனின் அய்யங்களைத் தீர்க்கும் வகையில் கிருஷ்ணன் கூறியதாக எழுதப்பட்ட பாடல்கள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. போரிடுவது சத்திரிய ஜாதி தர்மம். ஆகவே போரிடு. அறைகூவலை ஏற்றுப் போரிடு. இல்லையேல் கோழை எனத் தூற்றப்படுவாய். போரிட்டு வென்றால் அரச உரிமை. ஆகவே போரிடு. போரில் மாண்டாலும் மேல் உலகப் பதவி கிடைக்கும். எனவே போரிடு.

என்றெல்லாம் போரிடத் தூண்டியவன் கிருஷ்ணன். அடுத்த நிமிடத்தில் “ஆசையைத் துறந்து, கருமத்தைச் செய்யாமல், பற்றற்ற நிலையில் இருப்பவன் அமைதி அடைகிறான்” என்று அறிவுரையையும் கூறுகிறான். இந்த முரண்பாடான கருத்துகளைக் குறிப்பிட்டு அர்ச்சுனன் கேள்வி கேட்டதும் குழப்புகிறான் கிருஷ்ணன்! ஞான யோகமும் கருமயோகமும் ஒன்றுதான் என மழுப்புகிறான். கரும வினை ஆற்றுவதே யாவற்றிலும் முக்கியமானது என்கிறான்.

ஒரு முறை ஞானமே கருமத்திலும் சிறந்தது என்கிறான். மறுமுறை கருமமே ஞானத்தைவிடச் சிறந்தது என்கிறான். ஆளைக் குழப்பாதே! இரண்டில் எது சிறந்தது என்பதைக் கூறு என்று கேட்கிறான். அர்ச்சுனன் கருமத்தைத் துறப்பதைவிடவும் கருமத்தை மேற்கொள்வதுதான் சிறந்தது எனக் கிருஷ்ணன் முடிவு கூறுகிறான். கருமத்தைத் துறத்தல் சாத்தியமாம். கருமத்தைச் செய்தல் யோகம் எனப்படுமாம். இரண்டையும் ஒன்றாகக் காண வேண்டும் என்கிறான். மீண்டும் கிருஷ்ணன் குழப்புகிறான் அல்லவா? அதுதான் கீதை!

Pin It