2017 டிசம்பரில், வெறுப்புப் பேச்சு பேசியதற்காக பாஜக அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் மோடி அமைச்சர்களின் விஷம் கக்கும் பேச்சுகளின் ஒரு தொகுப்பு.

மகேஷ் ஷர்மா

2015ஆம் ஆண்டில், இந்தியா டுடே தொலைக் காட்சியுடனான ஒரு நேர்காணலின் போது, மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிப் பேசும்போது, “முஸ்லிமாக இருந்தபோதும்” அவர் ஒரு “சிறந்த மனிதர்” என்றும், “தேசியவாதி” என்றும், “மனித நேயமுள்ளவர்” என்றும் சொன்னார்.

அப்பட்டமான இந்த இனவாதக் கருத்தைச் சொன்னபோதும் – அதுவும் இந்தியா மிகவும் நேசிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர்களில் ஒருவருக்கு எதிராகச் சொன்னபோதும் – பதவி நீக்கம் செய்யப் படுவது இருக்கட்டும், அரசில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர்களால் அவர் கண்டிக்கப்படக்கூட இல்லை.

அனந்த் குமார் ஹெக்டே

2016ஆம் ஆண்டில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான மத்திய அமைச்சர், அனந்த் குமார் ஹெக்டே, “உலகில் இஸ்லாம் இருக்கும் வரையில், தீவிரவாதம் இருக்கும். இஸ்லாம் மதத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தீவிரவாதத்தை அழிக்க முடியாது” என்று சொன்னார். மேலும், “இஸ்லாம், உலக அமைதிக்கு எதிரான வெடிகுண்டு” என்றும் சொன்னார்.

ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் இதைச் சொன்ன சில காலத்தில், கர்நாடக மாநிலத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சரவையில் கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகப் படுத்தும் முயற்சியில், மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஹெக்டேவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இதோடு நிற்கவில்லை. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் இந்தாண்டு நடைபெற்ற இந்து ஜக்ரானா வேதிக் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், “ஒரு இந்துப் பெண்ணைத் தொடும் கைகள் இருக்கக் கூடாது” என்று சொன்னார்.

2017ஆம் ஆண்டில், பாஜக அரசாங்கம் ஆட்சியில் இருப்பது “அரசியலமைப்பை மாற்றுவதற்காக” என்றும், அப்போதுதான் அதிலிருந்து ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்க முடியும் என்றும் சொன்ன போது, ஹெக்டே மீண்டும் ஒரு சர்ச்சைக்குள் சிக்கினார்.

சாத்வி நிரஞ்சன்

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை மத்திய அமைச்சர், சாத்வி நிரஞ்சன், டிசம்பர் 2014இல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தபோது, வாக்காளர்கள் தங்களுக்கு ‘ராம் சாதான்’ (ராமரின் வழித்தோன்றல்கள்) வேண்டுமா, ‘ஹராம் சாதான்’ (சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்) வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்.

மேற்கு டெல்லியின் ஷ்யாம் நகர் பகுதியில்தான் இந்தப் பேரணி நடந்தது. “ராமருக்குப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா, சட்ட விரோதமாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.

இந்தப் பேச்சுக்கு எதிராகப் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மோடி நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஆனாலும், அவருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிரிராஜ் சிங்

மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைகள் அமைச்சரான கிரிராஜ் சிங், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் மாவட்டத்தில், 2014, ஏப்ரல் 19 அன்று நடந்த தேர்தல் கூட்டத்தில், நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன தற்காக, உள்ளூர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. பிறகு, ஜாமீனில் வெளியில் வந்தார்.

2016ஆம் ஆண்டில், முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர் – வகுப்புவாத அரசியல்வாதி களின் வழக்கமான வாதம் இது – என்று குற்றம் சாட்டி, வெறுப்பை உருவாக்கும் வகையில் பேசினார்.

சாதனா சிங்

பாஜக அமைச்சர் சாதனா சிங், எதிர்க்கட்சித் தலைவரான மாயாவதியைப் பற்றி இந்த ஆண்டு பேசினார். அவர் (மாயாவதி) “பெண் இனத்திற்கே களங்கம்” என்றும், “திருநங்கைகளைவிட மோச மானவர்” என்றும் சொன்னார்.

அதன் பிறகு, தான் பேசியதற்கு மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.

அனுப்ரியா பட்டேல்

மோடியின் சபையில் இருக்கும் இளைய மந்திரிகளில் ஒருவரான, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் துறையின் அமைச்சர் அனுப்ரியா பட்டேல், தன்னுடைய ட்விட்டரில் சர்ச்சைக்குரிய, வெறுப்பை உருவாக்கும் வாக்குமூலங்களை வெளியிட்டதற்காகச் சர்ச்சையில் சிக்கினார்:

“நம்முடைய துரோகிகளே நம்மை நாசமாக்கி விட்டனர். இல்லையென்றால், 100 கோடிப் பேர் (இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை) 20 கோடி முல்லாக்களைக் (முஸ்லிம்களின் எண்ணிக்கை) கண்டு பயப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா”

அதற்காக அவர் விசாரிக்கப்பட்டபோது, அம் மாதிரியான ட்வீட்களை வெளியிடப் பயன்படுத்தப்பட்ட அவருடைய ட்விட்டர் கணக்கு போலியானது என்று ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார். ஆனால், அவர் அமைச்சராகப் பதவி ஏற்றபோது, அதே ட்விட்டர் கணக்கில் அவருக்கு பாஜக அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஷோபா கரண்ட்லஜே

2017 டிசம்பரில், வெறுப்புப் பேச்சு பேசியதற்காக பாஜக அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடைய ட்வீட் பதிவுகள், “ஆத்திரமூட்டும் வகையில்” இருந்ததாகவும், அதனால் “இரண்டு சமுதாய மக்கள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகக்கூடும் என்றும், அதனால் அப்பகுதியில் அமைதி பாதிக்கப்படக்கூடும்” என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர் ட்வீட்டில், அப்போதைய மாநில முதலமைச்சர் சித்தராமையாவை டேக் செய்து, பள்ளி மாணவியைத் துன்புறுத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற பிரச்சனையில், “ஜிகாதிக்களுக்கு” எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்மீது குற்றம் சாட்டினார். அப்பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் எல்லாம், அவளே ஏற்படுத்திக்கொண்டவை என்பது பிறகு தெரியவந்தது.

யோகி ஆதித்யநாத்

2015 நவம்பர் மாதத்தில், “ஷாருக் கான், ஹாஃபிஸ் சயீத் ஆகியோர் பேசும் மொழிக்கு இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை” என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொன்னார். பாலிவுட் உலகில் பல ஆண்டுகாலமாக நட்சத்திரமாக இருக்கும் ஷாருக் கான், நாட்டில் நிலவும் சகிப்புத் தன்மையின்மைக்கு எதிராகக் குரல் எழுப்பியபோது ஆதித்யநாத் இவ்வாறு பேசினார்.

“வெகுஜன மக்கள்” ஷாருக் கானைப் புறக்கணித்தால், அவரும் தெருக்களில் “சாதாரண முஸ்லிம்” போல நடந்துகொண்டிருப்பார் என்று ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சொன்னார். அந்த பாலிவுட் நடிகர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த முதலமைச்சர் வெறுப்புப் பேச்சுக்காக 2007ஆம் ஆண்டிலேயே குற்றம் சுமத்தப்பட்டார், ஆனால், அவராலேயே நடத்தப்படும் உத்தரப் பிரதேச அரசாங்கம், அவர் மீது வழக்குத் தொடுக்கக் காவல்துறை அளித்த அனுமதியை நிராகரித்துவிட்டது. அப்படிப் பேசியதாகக் குற்றம்சாட்டப்படுவதைப் பற்றித் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேட்கப் பட்டபோது தான் அப்படிப் பேசியதை ஆதித்யநாத் ஒப்புக்கொண்டார் என்றபோதிலும், அலஹாபாத் உயர் நீதிமன்றம் அவர் முடிவை அங்கீகரித்தது.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய வெறுப்புப் பேச்சு, கோரக்பூரில் பெரிய அளவிலான இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக, மனுதாரர்கள் வாதிட்டனர்.

டி. ராஜா சிங்

‘மதச்சார்பற்ற இந்துக்கள்’, ‘அகண்ட இந்து ராஜ்ஜிய’க் கனவிற்குத் தடையாக நிற்கிறார்கள் என்று தெலங்கானா சட்டமன்ற உறுப்பினரான பாஜக அமைச்சர் சொன்னார்.

கடந்த ஆண்டு நவம்பரில் ஓர் உரையில், மாட்டிறைச்சி சாப்பிட்டுத் தன் ‘உணர்வுகளை’ காயப்படுத்தும் முஸ்லிம்கள் தனக்குத் தேவையில்லை என்று தெரிவித்தார். மேலும், அக்பாருத்தின் ஒவைஸியை நோக்கி, அவருடைய தலை “ஐந்து நிமிடங்களில்” தன்னுடைய காலிற்குக் கீழ் இருக்கும் என்றும், அப்படி நடக்காவிட்டால், தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்வதாகவும் கூறினார். இதோடு, ஒவைஸி ஒரு “தேசத் துரோகி” என்றும், அவரை நாட்டை விட்டே விரட்டப் போவதாகவும் பேசினார்.

வினய் கத்தியார்

பஜ்ரங் தள் அமைப்பின் நிறுவனரும், உத்தரப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினருமான, வினய் கதிரார், “முஸ்லிம்களுக்கு (நிலத்தில்) அவர்கள் பங்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்”, என்று சொன்னார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் நாட்டைப் பிரித்ததற்காக, முஸ்லிம் சமுதாயத்தினரைக் குற்றம் சாட்டினார்.

ததகதா ராய்

பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் மேகாலயாவின் ஆளுநர், சமீபத்தில் காஷ்மீர் மக்களையும் காஷ்மீர் பொருட்களையும் மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

“இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு படைத் தலைவனின் வேண்டுகோளாக” இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்தார்.

விக்ரம் சிங் சைனி

பாஜகவின் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான விக்ரம்சிங் சைனி, 2013ஆம் ஆண்டின் கலவரத்தின் மையப் புள்ளியான, வகுப்புவாதப் பதற்றக் நிறைந்த முசாபர்நகரில் பேசும்போது- “சிந்திக்கத் தெரியாத மூளையுள்ள சில தலைவர்கள் தாடி வைத்தவர்களைத் தங்க அனுமதித்துவிட்டனர். அதனால்தான் இன்று நமக்குப் பிரச்சினை நிலவுகிறது… அவர்கள் மட்டும் வெளியேறியிருந்தால் இந்த பூமி முழுவதும் நம்முடையதாக இருந்திருக்கும்”, என்று சொன்னார்.

ஜனவரியின் முற்பகுதியில், “இந்தியாவில் பாதுகாப் பற்றும், அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கிறவர்கள் வெடிவைத்துக் கொல்லப்பட வேண்டும்”, என்று சொல்லி இருந்தார். மேலும், அமைச்சரவையில் இடம் கொடுத்தால், தானே அந்த குண்டுவைப்பு முயற்சியைத் தொடங்குவேன் என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், உயர் பதவியில் / பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் வெறுப்புப் பேச்சில் இறங்குவது 500% அதிகரித்துள்ளது என்று NDTV தரவுகள் சேகரிப்பு குழு தெரிவித்துள்ளது. 1300 கட்டுரைகளை அலசி ஆராய்ந்து, சமூக மதிப்புள்ள நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் 1000க்கும் அதிகமான சமீபத்திய ட்வீட்களைப் படித்து அது இந்த முடிவுக்கு வந்துள்ளது. 2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில், 21 அரசியல்வாதிகளிடமிருந்து 21 வெறுப்புப் பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன. 2014க்கும் 2018க்கும் இடையில், 44 அரசியல்வாதிகளால் 124 வெறுப்புப் பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் காலகட்டத்தில், பாஜக 86% வெறுப்புப் பேச்சிலும், காங்கிரஸ் 14% வெறுப்புப் பேச்சிலும் ஈடுபட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில், 124 பாஜகவின் வெறுப்புப் பேச்சுக்களில் பாஜகவின் பங்கு 90%.

‘தி வயர்’ இணைய இதழிலிருந்து (விஜய்குமார்)

Pin It