நமது அன்றாட வாழ்வில் உணவுமுறை மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த உணவுமுறையை, ஆரியப் பார்ப்பனக் கருத்தியல்கள் அழுத்தமான கட்டுக்குள் வைத்துள்ளன. ‘சைவம்’ என்ற உணவுமுறை இந்தியாவில் மிகவும் உயர்வானதாகவும், உயர்ந்தவர்களின் உணவு முறையாகவும் பலநூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வேதங்களில் சைவம் கூறப்படவில்லை. வேத காலத்தில் பார்ப்பனர்களும் மாமிசம் உண்பதை தேவ காரியமாகக் கருதி, இறைச்சி உணவுமுறையிலேயே வாழ்ந்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில், புத்த, சமணங்களின் அழிவுக்குப் பிறகு, பார்ப்பனர்களின் மனுசாஸ்திரம் புலால் உணவைக் குற்றமாக அறிவிக்கிறது.

“விலங்குகளைக் கொல்ல உத்திரவு செய்கிறவன், அதைச் செயல்படுத்துபவன், மாமிசத்தை அறுத்து எடுப்பவன், அதை விற்கிறவன், அதைச் சமைக்கிறவன், பரிமாறுகிறவன், புசிக்கிறவன் இவர்களனைவரும் காதர்கள்” என்கிறது மனுசாஸ்திரம். (மனு 5 : 51)

அப்படி மாமிசம் உண்பவர்களுக்குத் தண்டனையையும் அறிவிக்கிறது. மனுவின் இதுபோன்ற கட்டளைகள் தான் இன்றுவரை - பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நம்மை ஆட்சிசெய்து வருகிறது.

ஆரியஉணவுமுறைக்கு எதிராக பேலியோ

பா.ஜ.க ஆட்சிசெய்யும் மாநிலங்களில் முதலில் மாட்டு இறைச்சி உண்ணத்தடை என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவர்கள்கூட அடித்துக் கொல்லப்படுகின்றனர். மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு சென்றவர்கள் பொது இடங்களில் கட்டிவைத்து அடிக்கப்படுகின்றனர். அடித்தே கொல்லப் படுகின்றனர். மாட்டின் தோலை உரித்தவர்களைக் கட்டிவைத்து அவர்களின் தோலை காவிக்கும்பல் உரித்து வெறியாட்டம் ஆடுகிறது.

இந்த 2016 ஆம் ஆண்டில், மும்பை மாநகராட்சியில் ஜெயின் சமூகத்தினரின் விழாக்கள் வருவதையொட்டி, நான்கு நாட்களுக்கு மும்பையின் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. விநாகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அனைத்து வகை இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் திருச்சி மாநகராட்சியில் அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டன. தொடக்கத்தில் பசுக்கறிக்கு வந்த தடை அப்படியே அனைத்துவகைக் கறிகளுக்கும் தொடர்கிறது. இன்னும் தொடர உள்ளது.

பார்ப்பனர்களின் தொடர் நடவடிக்கைகளால், சமுதாயத்திலும் சைவம் உயர்வாகவும், அதுவே ஆரோக்கியமானதாகவும் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. 40 வயதைக் கடந்துவிட்டால், உடல் நலனைக்காக இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வேண்டி நிர்பந்திக்கப்படுகிறோம். ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொதுப்புத்தியே நம்மை சைவம் நோக்கி விரட்டுகிறது. அதிலும் நீரிழிவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளவர்கள் இறைச்சியைக் கண்ணால்கூடப் பார்க்கக்கூடாது என்று மருத்துவர்களாலேயே அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்திய நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களில் சுமார் 80 சதவீதம் மக்களை மேற்கண்ட குறைபாடுகளில் ஏதேனும் ஒன்றில் அடக்கிவிடலாம். அது ஆங்கிலேய அலோபதி, தமிழ்நாட்டு சித்தமருத்துவம், இந்திய ஆயுர்வேதம், இயற்கை போன்ற அனைத்துவகை மருத்துவர்களாலும் மேற்கண்ட குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வைக்கப்படுகிறார்கள். அண்மைக்காலமாக சிறுதான்ய, நவதான்யக் காரர்களும் இந்தப் பார்ப்பனப் பொதுப்புத்தியை மேலும் கூர்மையாக்கவே பயன்பட்டார்கள். ‘நவதான்ய’ முதன்மைப்படுத்தலில், பார்ப்பன வந்தனா சிவாக்கள் பின்னணியில் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், பார்ப்பனர்களின் சைவ முறைக்கு எதிராக, நமது முன்னோர்களின் புலால் உணவுமுறைக்கு ஆதரவாக வந்ததுதான் பேலியோமுறை. இந்தியாவின் பெரும்பாலான மக்களை ஆட்டிப் படைக்கும் நோய்களுக்குத் தீர்வாக இறைச்சி உணவு - கொழுப்பு உணவு முறை பேலியோவாக அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, உரிய மருத்துவ ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், உணவுமுறை ஆய்வுகளைக் கடந்துதான் மீண்டும் நம்மை வந்தடைந்துள்ளது.

பெரியாரின் உணவுமுறையும் நியாண்டர் செல்வனும்

பேலியோ உணவுமுறை பல ஆண்டு காலமாக ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள முறை. அதைத் தமிழ்நாட்டில், தமிழில் அறிமுகப்படுத்தி, தோழர் பெரியாரின் உணவுப்புரட்சியை முன்னெடுப்பவர் தோழர் நியாண்டர் செல்வன். தமிழ்நாட்டில் இவருக்கு முன்பே சிலர் பேலியோ உணவுமுறை பற்றி சிறிய அளவில் பரப்புரைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்; கடைபிடித்தும் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை இந்தப் பேலியோ முறைக்கு மாற்றிய பெருமை நியாண்டர் செல்வனுக்கே உரியது.

நமது பச்சிலை வைத்தியர்கள், பாட்டி வைத்தியங்கள் போல அல்லாமல் அறிவியல்பூர்வமாகவும், மருத்துவரீதியாகவும் பேலியோ உணவுமுறையை அணுகி, அந்த முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டவும் செய்கிறார் நியாண்டர் செல்வன். சுமார் ஒரு இலட்சம் பேர் கொண்ட ஆரோக்கியம் - நல்வாழ்வு என்ற முகநூல் பக்கத்தின் வழியே பரப்புரையையும், வழிகாட்டலையும் நடத்தி வருகிறார். தினமணி, தினகரன், ஆனந்தவிகடன் போன்ற ஏடுகளில் இந்தப் பேலியோ முறை பற்றி விளக்கமான கட்டுரைகளை எழுதியுள்ளார். கிழக்குப் பதிப்பகம் சார்பில் இவரது கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. 2013 லிருந்தே இதற்கென ஒரு குழு உருவாகி செயல்பட்டு வருகிறார்.

தோழர் பெரியார் கூறுகிறார்.

“நம் மக்களுக்கு அரிசிச்சோறு தேவையற்றதும் பயனற்றதுமாகும்; பழக்கமற்றதுமாகும். நம் வயல்கள் எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் உண்டாக்கப் பட்டவைதான்.....நாம் மாமிசம் சாப்பிடுவதைவிட்டு, காய்கறிப் பண்டங்களை உண்பதும் நமக்குக் கேடான பழக்கமாகும். இவைகளும் அரிசிக்குப் பின் உண்டாக்கப்பட்டவைகளே.”

இந்தக் கருத்தைத்தான் பேலியோ நிபுணர்கள் இப்போது, பெரும் ஆராய்ச்சிகளைச் செய்து உறுதிப்படுத்தியுள்ளார்கள். பெரியாரின் உணவுக்கொள்கையைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தோழர் நியாண்டர் செல்வன் அவர்களுக்கும், ஆரோக்கியம் - நல்வாழ்வு குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பேலியோ பார்ப்பனர்கள்

உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற ஆதிமனிதன் உணவு முறை என்ற பேலியோ உணவுமுறை அனைத்து நாடுகளுக்கும் ஒரே விதமாக, அசைவமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சைவ பேலியோவாக அறிமுகப்படுத்தப்படுகிறது. காரணம் இங்கு தமிழ்நாட்டில் பேலியோ முறையை அறிமுகப்படுத்தும் குழு பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் சைவர்களாக இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மை மக்களுக்காக சைவ பேலியோவை நாங்கள்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்ற ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு குழு’ அறிவித்துள்ளது. மேலும் ஜெயின்பேலியோவையம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் The Registrar General of India (RGI) இந்த 2016 ஆம் ஆண்டு மக்களின் உணவுமுறை பற்றி ஆராய்ந்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில், 10 க்கு 7 பேர் அசைவம் உண்பவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரோக்கியம் - நல்வாழ்வு குழு இயங்கும் தமிழ்நாட்டில் 97. 65 சதவீதம் மக்கள் ஆடு, மாடு, கோழி, பன்றிகளைச் சாப்பிடுபவர்கள் என்றும், வெறும் 2.35 சதவீதத்தினர் மட்டுமே சைவத்தை உண்பவர்கள் என்றும் தெளிவாகக் கூறியுள்ளது. 1992 லிருந்து 2013 வரையுள்ள காலத்தில் அசைவ நுகர்வு 5.9 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளது. Times of India (9.6.16), Indian Express (10.6.16) ஆகிய ஏடுகள் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளன.

வெறும் 2. 35 சதவீதத்தினருக்காக சைவப் பேலியோவை அறிமுகப்படுத்துகிறார்கள் - அதை விடக் குறைவாக உள்ள ஜெயின் இன மக்களுக்காக ஜெயின் பேலியோவைக் கண்டுபிடிக்க உழைக்கிறார்கள். எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையாக உள்ளவர்களுக்காக உழைப்பது நல்லதுதான். ஆனால் இந்தியாவில் இந்தப் பார்ப்பன - மார்வாடி - சைவச் சிறுபான்மையினர்தான் ஒட்டு மொத்த அதிகாரங்களையும் அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆதிக்கச்சக்திகளாக இருக்கிறார்கள்.

அந்த ஆதிக்கவாதிகளின் பலநூற்றாண்டுகால உணவுமுறை சைவம். அவர்களை அனுசரிக்க சைவப் பேலியோ வந்துள்ளது. பார்ப்பானை அனுசரிக்கத் தொடங்கிய எவரும், எவையும் இன்றுவரை மீளவே இல்லை என்பதே இந்திய வரலாறு. லோகாயதக் காலத்திலிருந்து இந்தியாவில் இயங்கும் பொதுவுடைமை இயக்கங்களின் காலம் வரை ஊடுருவி அழிக்கும் கலையில் வல்லவர்கள் பார்ப்பனர்கள். அந்த வரலாற்றில் பேலியோமுறையும் இணைந்து விடும் நிலையில் உள்ளது.

மாட்டிறைச்சிப் புறக்கணிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள பேலியோ கேஃப் என்ற பேலியோ பன்னாட்டு உணவகம் ஒன்றின் லோகோவை அப்படியே பிரதி எடுத்து, அதில் ஒரு மாற்றத்தைச் செய்து, ஆரோக்கியம் - நல்வாழ்வு குழு மற்றும் தமிழ்ப்பேலியோ குழுவின் லோகோவாக அடையாளப் படுத்தியுள்ளார்கள். அவர்கள் செய்த மாற்றம் என்ன தெரியுமா? ஆஸ்திரேலிய பேலியோ லோகோவில் இருந்த மாட்டின் படத்தை நீக்கியிருக்கிறார்கள்.

paleo logo

உலகம் முழுவதும் பேலியோமுறை என்றால், இறைச்சித் தீண்டாமை எதுவும் இன்றி, ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், சில காய்கறிகள் என அனைத்தும் அடங்கியே உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் மாடு நீக்கப்படுகிறது. மறுபக்கம் பார்ப்பனப் பத்ரி ஷேசாத்திரி பேலியோ டயட் என்ற நியாண்டர் செல்வனின் கட்டுரைத் தொடரை நூலாக வெளியிடுகிறார். தினமணியும், ஆனந்தவிகடனும் தொடர் கட்டுரைகளை வெளியிடுகின்றன.

ஆரோக்கியம் - நல்வாழ்வு குழுவில் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் முறையே சங்கர்ஜி, செல்வன்ஜி, கண்ணன்ஜி என்றுதான் அழைத்துக்கொள்கிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அழைப்புமுறை. இந்த முறையை அந்தக்குழுவில் உள்ள தோழர்கள் மேட்டூர் முல்லைவேந்தன், திருச்சி சரவணன் போன்றோர் கேள்வி எழுப்பியும் எந்த மாற்றமும் இல்லை.

இந்தக்குழுவில் முக்கிய நிர்வாகியாக உள்ளவர்கள், தனிப்பட்ட முறையில், இந்துஅறநிலையத் துறையை எதிர்த்து, கோவில்களை இந்து சமயச் சான்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; அரசியல் தலையீடுகள் ஒழிய வேண்டும் என்ற இந்து அமைப்புகளின் முழக்கத்தை பரப்புகிறார்கள். இந்தக் கோரிக்கையைத் தமது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

பேலியோ உணவுமுறை பற்றியும், நியாண்டர் செல்வன் அவர்களைப் பற்றியும் நமக்கு பெரிய அளவில் முரண்பாடான கருத்துக்கள் கிடையாது. ஆனால் பேலியோ முறையை தமிழ்நாட்டில் பரப்பிவரும் ‘குழு’ பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கிறது. இதே குழுவில் பல பார்ப்பன எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் இந்த மாட்டிறைச்சிப் புறக்கணிப்பு, ‘ஜி’ விளித்தல்கள், ஆர்.எஸ்.எஸ் ‘ஜி’ க் களின் ஆதிக்கம் போன்றவற்றை மாற்ற இயலாத அதிகாரமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கம் பேலியோவின் நோக்கத்தை முற்றிலும் அழித்துவிடும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

திராவிடர் பேலியோ

இந்தியாவில் சைவப்பேலியோ அறிமுகமாகிறது. அரபுநாடுகளில் ஹலால் பேலியோ அறிமுகமாகிறது. எனவே, தமிழ்நாட்டில் திராவிடர் பேலியோ இருப்பதுதான் சரியானது. திராவிடர் பேலியோ என நாம் புதிதாக எதையும் அறிமுகப்படுத்தவில்லை. வழக்கமான பேலியோ உணவு முறையில் நமக்கு எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், பேலியோ உணவுகளை வீட்டில், அவரவர் சமையலறையில் மட்டுமே சமைத்து உண்ண வேண்டும் என்று இந்தத் தமிழ்நாட்டு பார்ப்பன - பணக்காரப் பேலியோ முறைக்காரர்கள் கூறும் சட்ட திட்டங்களிலிருந்தும் அவர்களது சில அணுகுமுறைகளிலிருந்தும் நாம் மாறுபடுகிறோம். அவர்களது விதிமுறைகள் எந்த வகையில் தவறானது என அறிய, புரோட்டாவைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது.

புரோட்டா என்ற உணவு உடலுக்கு மிகவும் கேடானது என்று எல்லா மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் கூறிவருகின்றனர். ஆனால், அந்தப் பரப்புரைகளையெல்லாம் மீறி புரோட்டா இன்று தமிழ்நாட்டின் தேசிய உணவு என்று கூறவேண்டிய அளவுக்குப் பரவியுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டில் சமையல் செய்யும் பெண்களில் 1 சதவீதத்தினருக்குக்கூட புரோட்டா தயார் செய்யத் தெரியாது. அதை வீட்டில் பெரும்பாலும் சமைப்பதில்லை. பீசா, பர்கருக்குக் கிடைக்கும் விளம்பரங்கள்கூட புரோட்டாhவுக்குக் கிடையாது. ஆனாலும் அது நுகர்வில் உயர்ந்துள்ளதற்குக் காரணம், புரோட்டாவை எங்கும் தயார் செய்யலாம். குறைந்த விலையில் தயார் செய்யலாம். எங்கும், எப்போதும் கிடைக்கும் என்ற நிலைதான் முக்கியமாக உள்ளது.

சிறுதானிய உணவுகள், இயற்கை உணவுகள் போன்றவை அண்மையில்தான் மறு உருவாக்கமாக., அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு, சிறு விற்பனை நிலையங்கள், சிறு, சிறு உணவகங்கள், ஆப்பிள் மில்லட் போன்ற பெரும் உணவகங்கள் என மக்கள் அவற்றை எங்கு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை கடந்த ஒரு சில ஆண்டுகளில்தான் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக சிறுதானிய உணவு நகர்வு அதிகரித்து வருகிறது.

திருப்பதி இலட்டும், பழனி பஞ்சாமிர்தமும் ஆன்லைனில் கிடைக்கிறது. திருநெல்வேலி அல்வாவும், திண்டுக்கல் பிரியாணியும் ஆன்லைனில் கிடைக்கிறது. பா.ஜ.க ஆட்சியில் அமேசானில், பசுமாட்டு மூத்திரமும், எருவாட்டியும் கிடைக்கிறது. இவை எங்கும், எப்போதும் கிடைக்கும் கிடைக்கின்றன.

மேற்கண்ட, புரோட்டா, சிறுதானிய, அரிசி, கோதுமை, பெருந்தானிய உணவுகளை எளிய மக்கள் அணுகும் முறையும், நுகரும் முறையும் மிக மிக எளிதாக்கப்பட்டுவிட்டது. அதற்காக எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அதுதான் எந்த உணவு முறைக்கும் அடிப்படை. ஆனால், இந்தப் பேலியோகுழுவினர் பேலியோமுறையை அவரவர் சமையலறைக்குள் அடைப்பது அதை வளர்த்தெடுக்காது. குறிப்பிட்ட சில பணக்காரர்களும், பார்ப்பனர்களும் நலமாக வாழ்வதற்கு மட்டுமே உதவும்.

பேலியோ முறை வளர்ந்துள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேலியோ உணவகங்கள் ஏராளமாக உள்ளன. அமெரிக்காவில் Paleo on the Go ஐரோப்பிய நாடுகளில்Cavemen Kitchen, Paleo Chef, Pre-Made Paleo, Mod Paleo போன்ற பல பெரும் உணவகங்கள் பேலியோ உணவுகளை டோர் டெலிவரியாகச் செய்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏன் வீட்டுச்சமையலறையில் மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சட்டம்? வெளிநாடுகளில் பன்னாட்டு உணவகங்கள் பேலியோ முறையைக் கைப்பற்றியுள்ளன. தமிழ்நாட்டில் பார்ப்பனச் சிந்தனைகள் கைப்பற்றியுள்ளன.

சமையலறை ஒழிப்பு

வீட்டு, வீட்டுக்குச் சமையலறையைக் கட்டி, வீட்டுக்கொரு பெண்ணை சமையல்காரியாக்கியுள்ள மனுசாஸ்திரங்களுக்கு மாற்றாக, பொதுச்சமையல் முறையை அறிவித்தவர் பெரியார். 1938 லேயே கூறுகிறார்,

“உதாரணமாக ரஷ்யர்களின் சாப்பாட்டு முறையைக் கவனியுங்கள். அங்கு சாப்பாடும் கூட்டுறவு முறைதான். அங்கு ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிடுமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்குமேல் அதிகமாய்த்தான் போட்டுச் சமைக்கிறார்கள். 4 - 5 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணை கண்டிப்பாகச் சமையலுக்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்ப சமையலுக்காக என்று ஒரு தனி அறையும், பாக்கி வசதிகளுக்கென்று ஏராளமான அறைகளும் இடமும் ஒதுக்கிவைத்துக்கொண்டு எவ்வளவு அக்கிரமமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்குக்கூட உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ரஷியாவிலுள்ள மேற்சொன்ன பொதுச்சமையல் சாலையில் 970 பேர்கள் தான் சமையல் வேலையிலீடு பட்டிருக்கிறார்கள் என்று நான் கணக்குக் கேட்டுத் தெரிந்தேன். நம்முடைய நாட்டிலோ 4 பேர்களுக்கு ஒரு பெண் வீதம் சமையலுக்கு ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற கணக்குப்படி 40,000 பேர்களுக்கும் எத்தனை பெண்களை ஒதுக்கித் தள்ளிக் கொடுமைகளாக்கி வருகிறோம் என்பதை யோசித்துப் பார்க்கும்படி கோருகிறேன். நம்முடைய சமயலைப்பற்றி ஏதாவது பந்தோபஸ்து உண்டா? சமையலறையையும் சாப்பாட்டுச் சாமான்களையும் சமைத்த பிறகும் அங்கு தினம் டாக்டர் சரியானபடி பரிசோதனை செய்கிறார். ஒரு பெரிய எம்.டி. டாக்டர் பரீட்சைக்கென்றே ஒவ்வொரு கூட்டுறவு சமையலுக்கும் உண்டு. இங்கு நாம் என்ன செய்கிறோம்? சல்லீசான சரக்குகளை வாங்கிப்போட்டு வெந்தும் வேகாமல் அவித்துத் தின்று, சாப்பாட்டின் காரணமாகவே பெரும்பாலும் நோய் அடைகின்றோம்.”

- தோழர் பெரியார், பகுத்தறிவு - சொற்பொழிவு - நவம்பர் 1938

“பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது. இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும்.”

-09.02.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 20.02.1968

உணவாயுதம் ஏந்துவோம்!

இவ்வாறு உணவு முறையில் மட்டுமல்ல; உணவு தயாரிக்கும் முறை, உணவு நுகரும் முறை, உணவு கிடைக்கும் முறை என அனைத்திலும் மிகவும் தொலைநோக்காக, பார்ப்பன தர்ம, நியாயங்களுக்கு எதிராக, அறிவியல் பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டவர் தோழர் பெரியார்.

எனவே, மாட்டிறைச்சித் தீண்டாமை தவிர்த்து - வீட்டுச்சமையலறைகளைத் தவிர்த்து - பெண் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற நிலையைத் தவிர்த்து - ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்ற சத்தான கொழுப்பு உணவுகள் எங்கும், எப்போதும், எளிய மக்கள் நுகரும் வகையில், குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் முறையைத்தான் திராவிடர் பேலியோ என்கிறோம்.

ஏராளமான கட்டுப்பாடுகளோடு, ஏராளமான சட்ட திட்டங்களைப் போட்டுக்கொண்டு, பார்ப்பனர்களும், பணக்காரர்களும், மார்வாடிகளும், படித்தவர்களும், உயர் மத்திய வகுப்பினரும் மட்டுமே தமக்குள் ஒருங்கிணைந்து பொறுப்பாளர்களாக இருந்துகொண்டு எந்த முறையையும் வளர்த்துவிட முடியாது. பேலியோ முறை வளர வேண்டும் என்றால், மக்கள் நோயின்றி, நலமுடன் வாழ வேண்டுமென்றால்,

தெருவோரங்களில் பேலியோ உணவகங்கள் வர வேண்டும். பேலியோ உணவுப் பொருட்களுக்கான கடைகள் ஊரெங்கும் உருவாக்கப்பட வேண்டும். பீசா, பர்கர்களைப் போல, பேலியோ உணவுகளுக்கும் டோர்டெலிவரிகள் தொடங்கப்படவேண்டும். டீக்கடைகள் போல - ஐயங்கார் பேக்கரிகள் போல பேலியோ சூப்புக்கடைகள் உருவாக வேண்டும். முதல்கட்டமாக ஐயங்கார் பேக்கரிகள் மற்றும் நமக்கு தெரிந்த டீக்கடைகளில் ஆட்டுக்கால், மாட்டுக்கால், மாட்டுவால் சூப்புகள், பட்டர் டீ க்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பஃப்ஸ், வடை, போண்டா, பஜ்ஜிகளைப் போல, ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி இறைச்சி வறுவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். டீக்கடைகளைப் போல ஆங்காங்கே ஆம்லேட் கடைகள், சுகாதாரமான இறைச்சி வறுவல் கடைகள் உருவாக வேண்டும். தோழர் பெரியார் கூறியதுபோல, இளைஞர்கள் ஏராளமான அளவில் இறைச்சி உற்பத்தியில் இறங்க வேண்டும். அப்போதுதான் மலிவான விலையில் மக்களுக்கு இறைச்சிஉணவுகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவோ - புதிதாக உருவாக உள்ள பேலியோ குழுக்களோ - ஆரியப் பார்ப்பனிய உணவுமுறை எதிர்ப்பாளர்களோ முயற்சி செய்ய வேண்டும்.

பெண்கள் சமையலுக்குப் பழக்கப்படுத்தப்படுவதைப்போல, ஆண்களுக்கும் அவசியமாகச் சமையல் பழக்கப்படுத்தப்படவேண்டும். பள்ளி - கல்லூரி - கிராமங்களில் இலவச பேலியோ முகாம்கள் நடத்தப்பட்டு, பேலியோ ரெசிப்பிக்களும், அதன் நன்மைகளும் விளக்கப்பட வேண்டும். முக்கியமாக ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ என்ற ஒரே ஒரு குழு மட்டும் இந்தப் பேலியோ முறையைக் கைப்பற்றி இருக்கும் நிலைக்கு மாற்றாக - ஏராளமான பேலியோ குழுக்கள் உருவாக வேண்டும். அதற்கு ஆரோக்கியம் - நல்வாழ்வு குழுவும், மருத்துவர்களும் வழிகாட்டவேண்டும்.

திராவிடர் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், தலித் அமைப்புகள், பொதுவுடைமை அமைப்புகள் போன்றவற்றில் ஈடுபாடுள்ள மருத்துவர்கள், உயிர்வேதியியல் வல்லுனர்கள், டயட்டீசியன்கள் ஆகியோர் இணைந்து இதுபோன்ற பேலியோ குழுக்களைத் தொடங்க வேண்டும். பேலியோ முறைக்கு மாறுபவர்களுக்கு மருத்துவரீதியாக வழிகாட்ட வேண்டும். பேலியோ முறை பார்ப்பனர்களின் ஆயுதமாக - ஆர்.எஸ்.எஸ் ஸின் மறைமுகத் திட்டமாக - மாறிவிட அனுமதிக் கக்கூடாது.

பேலியோ என்ற அறிவியல்ரீதியான உணவுமுறையில் நமக்கு எந்த மாறுபாடும் இல்லை. தமிழ்நாட்டில் இம்முறையை முன்னெடுப்பவர்களின் பார்ப்பன அணுகுமுறையில் மட்டுமே நாம் முரண்படவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒருவேளை எதிர்காலத்தில் அவர்கள் தமது நிலையை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டால், அதை வரவேற்போம். அவர்களைப் பாராட்டிப் பின்பற்றுவோம்.

அனைத்தையும் விட முக்கியமான நாம் கவனிக்க வேண்டிய செய்தி. பேலியோமுறை மற்றவர்களைவிட, நீரிழிவு, இரத்தஅழுத்தம், உடல்பருமன் ஆகிய குறைபாடும், நோயும் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான உணவுமுறை. ஆனால் இந்த மூன்று நோய்களுமே நம்மைத் தாக்குவதற்கு மிக முக்கியமான காரணம் நெருங்கிய உணவுக்குள் - சொந்த ஜாதிக்குள் நீண்ட நெடுங்காலமாக - தொடர்ந்து - பல நூற்றாண்டுகளாக - திருமணம் முடிக்கும் அகமணமுறையே ஆகும்.

நோயிலிருந்து விடுபட பேலியோ முறை உதவும். நோயே வராமல் தடுப்பதற்கு ஜாதி மறுப்புத் திருமண முறைய பயன்படும். ஜாதி எனும் மனநோயிலிருந்தும், நீரிழிவு, இரத்தஅழுத்தம், உடல்பருமன் போன்ற உடல் நோய்களிலிருந்தும் விடுதலை பெற ஜாதிமறுப்புத் திருமணங்களையே நடத்துவோம்.

- அதிஅசுரன் 

(காட்டாறு செப்டம்பர் 2016 இதழில் வெளியான கட்டுரை)

Pin It