உங்கள் குலத்தைப் பற்றி சொல்லுங்கள்

நாங்கள் காடை குலம் எங்களுக்குப் எங்களது மாமன், மச்சான் குலங்கள் என்பது பட்டூகன் குலம், ஓதாலன் குலம் ஆகியவை ஆகும். அந்தக்குலத்தில் தான் பெண் கொடுத்து பெண் எடுப்போம். ஒரே குலத்தைச் சார்ந்தவர்களிடன் திருமண உறவுமுறையை வைக்க மாட்டோம். எங்கள் குலத்தைச் சார்ந்தவர்கள் 7, 8 தலைமுறைகளாக வீரமாத்தி அம்மனை வணங்கி வருகிறோம். சுமார் 1500 குடும்பங்கள் இந்தக் குலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம்.

உங்களுடைய குல தெய்வம் பற்றி சொல்லுங்கள்

எங்களுடைய குல தெய்வமான வீரமாத்தி அம்மன் பிறந்த இடம் பூளவாடி கிராமம். பட்டூகன் குலத்து ஆணுக்குக் காடை கூட்டத்தைச் சேர்ந்த பெண் வீரமாத்தியைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வது அந்தக் காலத்துப் பழக்க வழக்கமாக இருந்தது. வயதுக்கே வராத சிறு குழந்தையான வீரமாத்திக்குத் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

வீரமாத்தியைப் பெண்பார்த்துவிட்டுச் சென்ற ஆண், திருமணத்திற்கு சில நாட்களே இருந்த சமயத்தில் மாடு மேய்க்கப் போகிறார். போகும்போது காட்டில் பாம்பு கடித்து இறந்து விடுகிறார். அவரைக் கொண்டு போய் எரிக்கிறார்கள். வீரமாத்தி, தானாகவே வந்து எரிகின்ற தீயில் விழுந்து இறந்து போகிறாள். ஏன் இப்படி செய்கிறாள் என்றால்,  ஊரில் இருப்பவர்கள் இவளைப் பெண் பார்க்கச் சென்றுதான் அவனுக்கு இந்த நிலைமை என்று பேசுவார்கள். மேலும் இவள் ஒரு ராசி இல்லாதவள் என்றும் இவளை பெண் பார்க்கப் போனால் இப்படித்தான் உயிர்ப்பலி ஏற்படும் என்றும் ஊர் பேசும் என்ற பயத்தில் தீயில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். தீயில் விழுந்து எரிந்தவளை ஊரே தெய்வாக வணங்க ஆரம்பித்து விட்டது. எங்களது முன்னோர்களின் கனவில் வந்து, தான் தெய்வமாக மாறிவிட்டதாகவும் நானே காடை குலத்தைக் காக்கும் கடவுள் என்றும் அனைவரும் என்னை வணங்க வேண்டும் என்றும் கூறியதாகவும் அதிலிருந்து காடை குலத்தைச் சார்ந்தவர்கள் குல தெய்வமாக வணங்குகிறோம்.

ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் தவறா? அப்படி திருமணம் செய்பவர்களை நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்கள் அண்ணன் தங்கை உறவு முறையாக இருப்பார்கள். அப்படியும் கட்டுப்பாட்டை மீறித் திருமணம் செய்து கொண்டவர்களை எங்கள் குலத்திலிருந்து விலக்கி எங்களுடைய ஜாதியிலும் நாடோடிக் கூட்டங்களான தொம்பன் குலம் மற்றம் கத்தி முழுங்கும் குலம் அதாவது வீதிகளில் தெருக்களில் கத்தியை முழுங்கி வித்தை காட்டம் கூட்டத்தோடு அனுப்பிவிடுவோம்.

உங்கள் குலக் கட்டுப்பாட்டை உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?

எங்களுடைய முன்னோர்கள் கற்றக் கொடுத்தார்கள். அவர்களுக்கு முப்பாட்டன்களும் முப்பாட்டன்களுக்கு முணிவர்களும் குலக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

வீரமாத்தி அம்மன் உருவ வழிபாட்டைப் பற்றி கூறுங்கள்

எங்கள் முன்னோர்கள் நடுகல் வைத்துத்தான் வணங்கி வந்தனர். எங்கள் தலைமுறையில்தான் நடுகல்லைச் சிலையாக வடிவமைத்து வணங்குகிறோம். இந்தச் சிலையை இதே காடை குலத்தைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரின் கனவில் வந்து அம்மன் முக உருவத்தை செய்து வைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் உன்னுடைய மாடு, ஆடு எல்லாம் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதன் காரணமாக கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 1 ஙூ கிலோ மதிப்பில் வெள்ளியினாலான முக உருவத்தைச் செய்து கொடுத்தார்கள்.

கவுண்டர் சமூகத்தில் காடை குலத்தைச் சேர்ந்தவர்கள் உங்களுடைய தெய்வமான வீரமாத்தியை வழிபடுகிறார்களா?

இல்லை. அவர்கள் குலம் காடை குலமாக இருந்தாலும் அவர்களின் குல தெய்வம் வேறு. பொடாரப்பன், கண்ணியம்மை என்பது அவர்களின் குல தெய்வம். இந்த கோவில் காங்கேயம் அருகே காடையூரில் உள்ளது.

உங்கள் கோவிலை கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அதற்குன்டான செலவுகளை யார் ஏற்றுக் கொண்டார்கள்?

கோவில் கட்டி 13 வருடமாகிறது. கோவில் செலவுகள் எல்லாம் கோவிலைச் சார்ந்தவர்களின் குடும்பங்களுக்கு மாங்கல்ய வரியாக 2000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. அந்தப் பணத்தை வைத்துத்தான் கோவில் கட்டப்பட்டது. கோவில் கட்டுமானச் செலவு, கும்மாபிஷேக செலவு மற்றும் ஐயருக்கு கொடுக்கின்ற பணம் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நந்த தீபம் எரியும். அந்தக் காலகட்டத்தில் தினமும் பூஜை செய்வதற்கும் ஐயர் அல்லது பண்டாரம் வந்து பூஜை செய்வார். அனைத்துமே வசூல் பணத்தில்தான் நடக்கும்.

கோவில் பணி தொடங்குவதற்கு முன்பு யாரிடமாவது ஆலோசனை செய்தீர்களா? கும்பாபிஷேகம் ஐயரை வைத்து நடத்தினிர்களா? அல்லது உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கும்பாபிஷேகம் செய்தார்களா?

கோவில் பணி தொடங்குவதற்கு முன்பு ஐயரிடம் போய் நல்ல நாள் பார்த்து முடிவு செய்வோம். கட்டுமானப்பணி முடிந்தவுடன் ஐயரை வைத்து கும்பாபிஷேகம் செய்து கலச பூஜை செய்து அம்மனுக்கு கண்திறந்து விடுவார்கள். இதற்கு சுமார் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். 48 நாட்கள் பூஜை நடைபெறும். 48 நாட்கள் நந்த தீபம் எறியும். அனைத்து நாட்களும் ஐயருக்குப் பூஜைக்குப் பணம் கொடுக்க வேண்டும். 48 நாட்கள் முடிந்த பின்புதான் நமது குலத்தைச் சார்ந்தவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

இந்த கோவிலைச் சார்ந்தவர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்களா? வேறு மதங்களில் உள்ளார்களா?

வெளிநாடுகளில் இருக்கிறார்கள். வரி கொடுப்பார்கள். நன்கொடை கொடுப்பார்கள். வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வந்தால் கண்டிப்பாக குலதெய்வம் கோவிலுக்கு வருவார்கள்.

அதே போல் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கோவில் விசேஷத்தின் போது வரி கொடுப்பார்கள். நாங்கள் அவர்களை வற்புறுத்துவது இல்லை. விருப்பத்தின் பேரில் அவர்களாக கொடுக்கிறார்கள்.

Pin It