school booksதமிழ்நாடு பாடத்திட்டம்- கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த வேளையில், 2018 - 2019 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றி சுருக்கமாய் விவரிப்பது அவசியமான ஒன்றே!

புதிய கல்வி ஆண்டில், புதிய வடிவில், வண்ண மயமாய், கண்டவுடன் பக்கங்களைப் புரட்டத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நமது மாநிலப் பாடத்திட்டம் பற்றி, காலம் காலமாய் எதிர்க்கருத்துகள் வந்து கொண்டிருந்தபோது, வல்லுநர்குழு உண்மையான கவனத்துடனும், மிகுந்த சீர்மையுடனும், நன்கு திட்டமிடப்பட்டு பயன் பெறும் வகையில் வடிவமைத்திருக்கிறது. மொழிப் பாடங்கள், அறிவியல், கணிதம், சமூகஅறிவியல், கணினி அறிவியல் மற்றும் தொழிற்பாடப் பிரிவுகளில் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வரலாறு இன்னும் பிற பல பாடங்களும் புதிய வடிவம் பெற்று உள்ளன.

பாடப் புத்தகத்தின் சிறப்புகளில் முதலாவதாய்க் கூறவேண்டியது முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட கருத்துகள், கோட்பாடுகள், அளவீடுகள், எண்ணுருக்கள், படங்கள், வரைபடங்கள் என ஒரு பாடப் புத்தகத்தின் அனைத்துக் கூறுகளும் மேம்படுத்தப் பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் வெறும் கருப்பு, வெள்ளை யாய் எழுத்துக்கள் மட்டும் இல்லாமல் வண்ண வண்ணமாய் பெட்டிச் செய்திகள், தனித்துக் காட்டப்பட்ட முக்கிய சொற்கள், சமன்பாடுகள், விதிகள் என்று படித்தல் அனுபவத்தை இனிமையாக்கும் வகையிலும், ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் உள்ளன.

மேலும் விரைவுத் தகவல் குறியீடுகள் (QR Code) ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. ஒளி - ஒலிப்படங்கள் தீக்ஷா எனும் செயலியுடன் இணைக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேலும் மேலும் சிறப்புறச் செய்கிறது. அது மட்டுமில்லாது இணையதள இணைப்புகளும், பிற தகவல் பெறும் புத்தகங்களும் ஒவ்வொரு பாடமுடிவிலும் தரப்பட்டுள்ளன. பிற மாநிலப் பாடத்திட்டங் களோடும் மத்திய பாடத்திட்டத்தோடும் (NCERT) ஒப்பிடுகையில், நமது பாடத்திட்டம் மிக மிக சிறப்பாகவே உள்ளது.

ஒவ்வொரு பாடத்தின் பின் வினாக்கள், ஒரு மதிப்பெண், அதாவது ஒரிரு சொற்களில் விடையளித்தல், விரிவாக விடையளித்தல், பாடக்கருத்துக்களின் அடிப்படையில் சிந்தித்து விடையளித்தல் என பிரிக்கப்பட்டுள்ளன. பதினோறாம் வகுப்பில் போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் வினாக்கள் தனியாக பின்னிணைப்பாக வழங்கப் பட்டுள்ளன. செய்முறைப் பகுதிகளையும் பாடப் புத்தகத்திலேயே பின்னிணைப்பாகத் தரப்பட்டு பயன்பெறும் வகையில் புத்தகங்கள் சிறப்பாகவே உள்ளன.

ஆயினும், புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையும் அளவையும் காணும்போது ஆசிரியர்களும் மாணவர்களும் சற்று மலைப்புரும் வகையில்தான் இருக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்களின் கருத்து என்னவென்றால் அருமையான புத்தகம், அனைத்துப் பாடப் பொருள்களும் மிக மிக விரிவாகவும், போதும் எனக்கூறும் அளவிற்கு எடுத்துக் காட்டுகளுடனும் தரப்பட்டுள்ளன. மாணவனின் சிந்திக்கும் திறனைத் தூண்டும் வகையில் வினாக்களும் உள்ளன.

ஆனால், இத்தனை பாடங்களையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் கற்பித்து, பயிற்சி அளிப்பது என்பது சற்றுக் கடினமே என்கின்றனர். நேரம் போதாது என்பதின் மறைமுகப்பொருள் என்ன வென்றால், ஒரு ஆசிரியராக எனது பார்வையில், மாணவர்களிடம் கருத்துக்களை விளக்கிக் கூறிப் புரிய வைப்பதோடு, தேர்வுக்குத் தயார்படுத்துதலும் எங்களையே சாரும். இவற்றைக் கருதுகையில் போதுமான நேரத்தை சிறப்பு வகுப்புகள் மூலமே பெறமுடியும். செயல் படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே இப்பாடத்திட்டத்தை ஒரு சுமையாகக் கருதச் செய்கிறது.

நடைமுறைச் சிக்கல்கள் என்று நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மாணவர்களது கற்றல்திறன் வேறுபாடு ஆகும். அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும்போது முந்தைய வகுப்புகளில் கற்ற கருத்துக்களை 35% மாவது நினைவில் வைத்து இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், தேர்ச்சி மதிப்பெண் 100 க்கு 35 என அறிஞர் குழுக்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில மாணவர்கள் இன்னும் மேல்நிலை வகுப்புகளில் கூட வாசித்தல் குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது ஆரம்பக் கல்வியில் ஆசிரியர் - பெற்றோர் பங்கு என்பது முக்கியமான காரணி. இதில் ஏற்படும் குறைபாடுகளே மேல்நிலைக் கல்விவரை தொடர்கிறது. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசித்தலும், நல்ல தமிழ்ப் பேச்சுக்கள் (மேடைப்பேச்சு, பட்டிமன்றம் முதலியன) கேட்கும் பழக்கமும் மாணவர்களிடையே குறைந்து வருகின்றது. இதனால் அவர்களுக்குப் பாடப் பகுதியிலும் சொற்றொடர்களைப் புரியவைக்க - சொற்களை அறிமுகப்படுத்த அதிகநேரம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியராக எனது அனுபவத்தில் கூறவேண்டியது, கூற விரும்புவது, மாணவர்களது வாழ்க்கைச்சூழல் அவர்களது கற்றல் செயல்பாட்டில் தடைகளை ஏற்படுத்துகிறது. மேலும் அனைவரும் அறிந்த ஒன்று இக்கால கட்டத்தில் அவர்களது கவனத்தை திசைதிருப்பும் ஊடகங்களின் ஆக்கிரமிப்பும், கற்றலில் தடையை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் விடுத்துப் பார்த்தால், தற்போதைய பாடத்திட்டமாற்றம் கற்றல் - கற்பித்தலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதின் தொடக்கமே எனக்கூறுவேன்.

Pin It