திருச்சியில் 23.12.2018 அன்று பெரியாரை ஆதரிக்கும் சில தமிழ்த்தேசிய அமைப்புகள், “பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அந்தப்பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினர். திராவிடர் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், சிறுபான்மையின இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளும், தலைவர்களும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். காட்டாறு குழுவும் அதில் பங்கேற்றது. பெரியார் கருஞ்சட்டைப் பேரணியும் நடைபெற்றது.

karunchattai perani trichy 1தமிழ்நாட்டில், தமிழ்த்தேசியம் பேசும் பெரும்பாலான அமைப்புகள், பெரியாரைத் தமிழ்த் தேசியத்திற்கும், தமிழர்களுக்கும் நேர் எதிரியாகக் கட்டமைத்து வருகிறார்கள். இந்தச்சூழலில், தமிழ்த் தேசியம் பேசும் சில முக்கிய அமைப்புகள் பெரியாரின் உழைப்பை அறிந்து, பெரியார் பெயரில் மாநாடு கூட்டுவதை வரவேற்கவும், பாராட்டவும் வேண்டும். “தமிழ்த்தேசியம்” தான் விடுதலையைப் பெற்றுத் தரும் என்று நம்பும் ஆயிரக்கணக்கான புதிய இளைஞர்களுக்குப் பெரியாரை நட்புசக்தியாகக் காட்ட, இந்த மாநாடு பயன்பட்டால் மகிழ்ச்சி.

அதேநேரம், திராவிடர் இயக்கங்களுக்கென்று இன்றுவரை இருக்கும் சில ஆரிய எதிர்ப்புத் தனித் தன்மைகள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் பண்பாடுகளை இந்த மாநாட்டுக்குழு மாற்றத் துணிந்துள்ளதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. “இதுதான் பெரியாரியல், இது தான் பெரியார் இயக்கம், இது தான் திராவிடர் இயக்கப்பண்பாடு” என, பெரியாரியலுக்கு எதிரான சில நடவடிக்கை களைத் தொடங்கியுள்ளனர். அதை எதிர்க்க வேண்டியுள்ளது.

இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த தோழர்கள் பொழிலன், திருமுருகன் ஆகியோர் திராவிடர் இயக்கங்களுக்கு எதிரானவர்கள் அல்ல; அதேநேரம் திராவிடர் இயக்கத்தவர்களும் அல்ல. அவர்கள் நடத்தும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் நமக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை விளக்கவே இக்கட்டுரை.

திணிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது மிக மிகத் தவறான முன்னடுப்பு ஆகும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போடு விஜயேந்திர சங்கராச்சாரி எழுந்து நிற்கவில்லை என்பதற்கான எதிர்வினை என மாநாட்டுக்குழு விளக்கம் கூறலாம். அந்தச் சிக்கலில், தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் சங்கராச்சாரிக்கு எதிராக எதிர்வினை ஆற்றின. அந்த நேரத்தில் எதிர்வினையாற்றுவது மிக மிக அவசியம்.

ஆனால், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு “பெரியாரிய உணர்வாளர்கள்” என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டிலும் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது என்ற பண்பைத் தொடங்குவது ஆபத்தானது. அது தமிழ்த்தேசியர்களின் பண்பு. திராவிடர்களின் பண்பாடு அல்ல.

சந்திரசேகரந்திர சங்கராச்சாரி, தமிழை நீச பாசை என்று பேசினார். அதற்காக திராவிடர் இயக்கங்கள் இன்றுவரை அவரை விமர்சித்து வருகின்றனர். சங்கராச்சாரி தமிழை நீச பாசை என்று கூறிவிட்டார் என்பதற்காக, நாம் அதே தமிழை “மிக உயர்ந்தமொழி” என்று மொழிப்புகழ் பாடிக் கொண்டிருக்கவில்லை. நாம் “தமிழ் காட்டுமிராண்டிமொழி” என்று தான் இன்றுவரை கூறுகிறோம். அதற்காக தமிழ்க்குழுமங்களும், இந்துக்குழுமங்களும் நம்மைக் கடுமையாக விமர்சிக்கும் சூழலிலும் தமிழ் உயர்ந்த மொழி அல்லது “மொழி இருந்தால் தான் இனம் இருக்கும்” என்பவை போல எப்போதும் எந்த திராவிடர் இயக்கத் தோழரும் பேசியதில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்துச் சிக்கல் 24.01.2018 இல் உருவானது. அப்போது, விஜயேந்திரருக்கு எதிராக அனைத்து திராவிடர் இயக்கங்களும் களத்தில் இறங்கின. அந்த எதிர்வினைக்குப் பிறகு, திராவிடர் இயக்கங்கள் 2018 பிப்ரவரியிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக - பல மாநாடுகளை நடத்திவிட்டன. இனியும் நடக்கப் போகின்றன. எந்த திராவிடர் இயக்க மாநாட்டிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதில்லை. அதுதான் திராவிடர் இயக்கங்களுக்குரிய அடையாளம். திருச்சியில் நடந்தது “தமிழ்த்தேசியர்கள் நடத்திய மாநாடு” என்பதற்கு முதல் சான்று தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப் பட்டதுதான். இந்தப் போக்குத் தொடராமல் தடுக்க வேண்டியது திராவிடர்களின் கடமை.

இந்தக் கூட்டமைப்பினர், அதன் நோக்கத்தையும், 23.12.2018 திருச்சி தமிழின உரிமை மீட்பு மாநாட்டுத் தீர்மானங்களையும் இணைத்து ஒரு சிறு நூலாக அச்சிட்டு, அதே மாநாட்டில் வெளியிட்டிருந்தனர். அந்த நூல் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்படவேண்டிய நூலாகும்.

இந்த மாநாட்டின் தீர்மானங்களையும், இந்தக் கூட்டமைப்பின் நோக்கம் பற்றிய விளக்கத்தையும் திராவிடர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் எவரும் உருவாக்கவில்லை; தமிழ்த்தேசியர்களே அவற்றை உருவாக்கி, முழுமையாக்கி, அச்சிட்டுள்ளார்கள் என்பதற்கு அந்த நோக்கங்களும், சில தீர்மானங்களுமே சான்றாக உள்ளன.

நமது தலைவர்களும் சில தீர்மானங்களைக் கொடுத்திருப்பார்கள். அதனால்தான் “ஜாதிஅற்றோர் இடஒதுக்கீடு” போன்ற பல பெரியாரியல் தீர்மானங்கள் வந்துள்ளன. பெரியாரியல் தீர்மானங்களையும், தமிழ்த்தேசியத் தீர்மானங்களையும் இணைந்து “பெரியாரிய உணர்வாளர்கள்” என்ற பெயரில் மொத்தமாக வெளியிடுவது, புதிய இளைஞர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

தலைவனைப் புகழ்ந்து, தத்துவத்தை ஒழிப்பது பார்ப்பனர்களுக்கும், அவர்களது அடிமைகளுக்கும் கைவந்த கலை. புத்தருக்கும் முந்தைய காலத்திலிருந்து இதுதான் இந்தியப் பகுதியின் வரலாறு. புத்தர் வாழ்க! பெளத்தம் ஒழிக! என்பது போல, புத்தரின் காவி வண்ணத்தையும், புலால் உண்ணாமையையும் தனதாக்கிக் கொண்டு புத்தத்தை அழித்தது போல - பெரியாரின் கருப்புச் சட்டையையும், தனித்தமிழ்நாட்டையும் தனதாக்கிக் கொண்டு பெரியாரியரை அழிக்கும் நிலை உருவாகிறதோ என்ற அச்சத்தை அந்தச் சிறு நூல் உண்டாக்கியுள்ளது.

பெரியாரிய மாநாட்டில் மணியரசனின் குழப்பவாதம்

மாநாட்டில் வெளியிடப்பட்ட அந்த நூலின் 2 ஆம் பக்கத்தில்,

“தமிழ்க்கடலாய், அதேபோது சமயச்சார்பினராய் இருந்த மறைமலை அடிகள் மற்றும் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ.விசுவநாதம், குமாரசாமி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, திருமலைச்சாமி என எண்ணற்ற தமிழ்அறிஞர்களும், சுயமரியாதை இயக்கத்தவர்களும் தங்களுக்குள் வேறுபாடு கொண்டிருப்பினும் தமிழ்மொழி காக்க, இனம் காக்க ஒருங்கிணைந்து போராடினர்”...

என்று உள்ளது. அதாவது மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் பெயர்களுக்கு அடுத்த நிலையில் பெரியார் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரும் பார்ப்பனத்தனம் உள்ளது. 1937 இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கியவர் பெரியார் தான். அவரது பெயர் மூன்றாம் இடத்திற்குச் சென்றதன் பின்னணியில் தோழர் மணியரசன் இருக்கிறார்.

1937 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கியவர்கள் மறைமலைஅடிகள், சோம சுந்தரபாரதியார் போன்ற தமிழ் அறிஞர்கள் தான். அவர்கள் தொடங்கிய போரில், பெரியார் வலியச்சென்று தன்னை இணைத்துக்கொண்டார் என்று பல ஆண்டுகளாக தோழர் மணியரசன் அவர்கள் பேசியும், எழுதியும் வருகிறார். அவரது திரிபுவாதங்களுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள், “பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்” என்ற ஒரு பெரிய நூலையே எழுதியுள்ளார். அந்த நூலின் கட்டுரைகள் கீற்று இணைய தளத்தில் உள்ளன. தி.வி.க வின் இணைய தளத்தில் அந்த நூலே இலவசமாகக் கிடைக்கிறது.

அந்த நூலின் தொடக்கத்தில், 1937 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாருக்குத் தமிழர்கள் வழங்கிய இடத்தைப் பறிக்க நடக்கும் மோசடிகளைப் பற்றித் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் எழுதியாதைப் பாருங்கள்.

“என்ன காரணத்தாலோ, பெரியாருக்குத் தமிழ்ச் சமூகம் அளித்து வந்துள்ள இடத்திலிருந்து அவரைப் பலவந்தமாக, தந்திரமாக, சூழ்ச்சியாக…எப்படியாவது இறக்கிட வேண்டுமென பலர் முயற்சியாய் முயற்சிக்கின்றனர்; பலபட எழுதுகின்றனர்.”

என்று பதிவு செய்துள்ளார். தோழர் மணியரசன் அவர்களுக்கு எழுதப்பட்ட அந்த வாக்கியங்கள், அப்படியே இந்த மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பொருந்துகிறது. அந்த நூலில், அந்த வரிகளைத் தொடர்ந்து,

“அவற்றில் ஒன்றாக, ‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழில் 2014 மே -15 இதழில் ஒரு பதிவினைப் படித்தேன்; தோழர் பெ.மணியரசன், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-04-2014 அன்று நடந்த 5ஆவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் ஆற்றிய உரையே அது. அவ்வுரையில் தோழர் மணியரசன் மூன்று செய்திகளை முன்வைக்கிறார்.”

...3. 1937 இல் சென்னை மாகாண முதலமைச்சராக ஆனவுடன் இராஜாஜி 1938 இல் ஒரு பகுதி பள்ளிக்கூடங்களில் வெள்ளோட்டமாக இந்தியைக் கட்டாயப் பாடமொழி ஆக்கினார் (இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார் என்பதே சரி) அந்த இந்தித் திணிப்பைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர்.இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு முன்னெடுத்த பின் அது பெரும் வீச்சைப் பெற்றது.”

டும்.. டும்.. டும்.. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பார்ப்பன விலக்கானாலும், சமற்கிருத விலக்கானாலும்,… இந்தி எதிர்ப் பானாலும், தனித் தமிழ் நாடானாலும் தமிழறிஞர்களே முன்னோடி; பெரியார் பின்னோடியேதான். டும்..டும்.”

இவ்வாறு, தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிடுகிறார். தொடர்ந்து மிக மிக ஆழமான, விரிவான பதிலை தமிழ்த்தேசியர்களுக்கு அளித்துள்ளார். அவரது நூலிலிருந்து மேலும் சில பத்திகளைப் படியுங்கள்.

...“தமிழறிஞர்கள்தான் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினர். பெரியார் பின்னர் வந்து சேர்ந்து எல்லாப் புகழையும் அவரே தட்டிப் பறித்துச் சென்றுவிட்டார்”என்ற ஒரு செய்தி பல நிகழ்வுகளில் பேசப்படுகின்றது. ‘நாம் தமிழர் கட்சி’ஆவணத்தில், சக்திவேல் என்ற நபர் எழுதியுள்ள, ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்ற நூலில், அவரே வெளியிட்ட ஒளிநாடாவில் என பரவலாக இக்கருத்தே முன் வைக்கப்படுகிறது.

அவர்கள் கூறும் வாதம் - 10. 8. 1937அன்று சென்னை இராமகிருஷ்ண மடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்தான் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, அடுத்தக் கல்வியாண்டு முதல் இந்தி கட்டாயப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளில் வைக்கப்படும் என்று பேசினார். உடனே தமிழறிஞர்கள் 26. 8. 1937அன்று கரந்தை தமிழ்ச் சங்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது தான் முதல் இந்தி எதிர்ப்பு நடவடிக்கையாக எல்லோராலும் கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு முன்னதாகவே 22.8.1937அன்று ‘குடிஅரசில்’, “சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா?” என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியிருக்கிறார்.

...“நமது தமிழ்ப் பண்டிதர் கம்பராமாயணத்தில் கருப்பொருள் தேடவும், திருவிளையாடல் புராணத் துக்கு 77 ஆவது உரை எழுதவும், பெரியபுராணத்துக்கு 113 ஆவது உரை எழுதவும் தான் தகுதியுடையவர்களாகவும் கவலை உடையவர்களாகவும்” உள்ளதைக் கண்டிக்கிறார்.

“இந்த நாட்டில் உண்மைத் தமிழ் இரத்தம் ஓடும் மக்கள் ஒருவர் இருவராவது இருக்கிறார்களா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது” என்கிறார், பெரியார். தோழர் மணியரசன் பெருமிதத்தோடு குறிப்பிடுவதைப் போல, தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்புக்கு வழிகாட்டியிருந்தால் இந்தக் கோபம் பெரியாருக்கு எப்படி வந்திருக்க முடியும்?

...“ஆகையால், ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் பொதுக்கூட்டம் போட்டு, இந்த சூழ்ச்சியைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு மேன்மை தங்கிய கவர்னருக்கும், தமிழ் வேளாள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும், ஆரிய மந்திரி கனம் ஆச்சாரியாருக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்”என்று 22.8. 1937 ‘குடிஅரசில்’தலையங்கமாக எழுதுகிறார்.

அப்படிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, 27.08. 1937அன்று கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புக் கூட்டத்தைத்தான் 10.08.1937இல் இராஜாஜியின் கட்டாய இந்தி எதிர்ப்பு அறிவிப்புக்கு எதிரான முதல் எதிர்வினை என்றும், பெரியார் அதற்குப் பின்னரே இந்தி எதிர்ப்புப் போரில் இணைந்து கொண்டார் என்கிறார்கள் இந்த அறிஞர்கள்! பிறருக்கு ஆலோசனை சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை பெரியார். 01.07.1937முதல் நாளேடாக மாற்றப்பட்டு வெளிவந்து கொண்டிருந்த தமது‘விடுதலை’யில் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த யோசனையை மீண்டும் எடுத்துரைக்கிறார்.

“திருநெல்வேலியிலிருந்து ஒரு‘ஜாதா’அதாவது தமிழ் பாஷை அபிமானம் கொண்ட மக்கள் முறையீட்டுக் கூட்டம் ஒன்று தொடங்கி, நேரே சென்னை வரையில் கால்நடையாய் நடந்து, வழியில் ஆங்காங்கு கூட்டம் போட்டு,தீர்மானமும் செய்து மக்களுக்கு இந்திப் புரட்டையும் சூழ்ச்சியையும் விளக்கிக் கொண்டுபோய் சரணாகதி மந்திரிகளுக்குத் தெரிவித்துத் தமிழைக் காப்பாற்றவும், விரோதமான சூழ்ச்சியை அழிக்கவும் முயற்சிக்க வேண்டியது முக்கிய கடமையாகும்”என்ற செயல் திட்டத்தையும் முன் வைக்கிறார்.

...பெரியோர்களுக்கு விண்ணப்பம் என்ற மற்றொரு உள்தலைப்பில் “பெரியோர்களே! முன் மாதிரி காட்ட வாருங்கள்! உங்களுடைய உள்ளங்களுக்கு புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள் - உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளைஞர்களுக்கு நீங்கள் வழிகாட்டு கிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஞாபகத்தில் வையுங்கள்” என்று முடிக்கிறார்.

அத்தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ள சில சொற்களைத் தான் அனைவர் கவனத்துக்கும் முன்வைக்க விரும்புகிறோம். அது தான் நாம் சுட்டிக் காட்ட விரும்பும் பகுதியும் கூட 

“தோழர்கள் எஸ்.எஸ். பாரதியார் (சோமச்சுந்தர பாரதியார்), உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ நாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாக செல்ல வேண்டும்” என்பதே அது.

இச்சொற்றொடர் நமக்குக் கூறும் செய்தி தான் என்ன? மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எவர் ஒருவரும் இது நாள் வரையிலும் கீழிறங்கி வரவுமில்லை; கருத்தாளர்களாக இருக்கிறார்களே அன்றி வினைஞர்கள் (செயற்படுவோர்) ஆகவுமில்லை என்பதுதானே?

எல்லோருடைய ஒத்துழைப்பும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தேவை என்று கருதிய பெரியார், இது எப்போதோ ஒரு சமயம் எழுதப்பட்டதல்ல; இந்தி எதிர்ப்புப் போர் தொடங்க வேண்டியிருந்த அதி உச்ச நிலையில் எழுதப்பட்டது. எங்கோ தனியிடத்தில் இரகசியமாய்க் கூறப்பட்டதல்ல; அப்போது தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடாகவும், இந்தி எதிர்ப்பு செய்திகளை, போராட்டங்களை, திட்டங்களை அறிய தமிழ்நாடு முழுதும் விரிவாக வாசிக்கப் பட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், கட்டாய இந்திப் பாட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் வெளிவந்த முதல் இதழில் தலையங்கமாக எழுதப்பட்ட வரிகளே இவை.

இவ்வரிகள் இந்தி எதிர்ப்புப் போரை தமிழறிஞர்கள் நடத்தினார்களா? பெரியார் நடத்தினாரா? என்பதைத் தெளிவாக நமக்கு விளக்கும்.”

தி.வி.க தலைவர் எழுதிய இந்த நூல், பெரியார் 1922 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியையும், அதன் பின் உள்ள இந்து மத - பார்ப்பன ஆதிக்கத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து எதிர்த்து வந்துள்ளார் என்பதையும், அந்த எதிர்ப்புகளை வெறும் எழுத்துக்களில் மட்டுமல்லாமல், தீவிரமான செயல்பாடுகளால் நடைமுறைப்படுத்தியும் காட்டியவர் என்பதை சான்றுகளுடன் விளக்கியுள்ளது.

trichy meeting 344தோழர் கொளத்தூர் மணி எழுதிய நூலின் பதிவுகளைப் பார்த்தோம். இனி, தோழர் பெரியாரே எழுதியவற்றைப் பார்ப்போம்.

சென்னை இராமகிருஷ்ண மடத்தில் 10.8. 1937 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் இந்தித் திணிப்பு அறிவிக்கப்படுகிறது. அந்த அறிவிப்புக்கு முன்பே, அப்படி ஒரு அறிவிப்பு வருவதை அறிந்து அதற்கு முன்னதாகவே 08.08.1937 குடி அரசிலேயே ஒரு தலையங்கம் எழுதியுள்ளார் பெரியார். 

தோழர் ஆச்சாரியார் பட்டத்துக்கு வந்த 10 நாளில் இந்தியா பூராவும், தமிழ்நாடும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றார். இதை காங்கிரசிலுள்ள ஒரு தமிழ் மகனாவது கண்டிக்கவே இல்லை. ஒரு தமிழ்ப் பண்டிதனாவது ஆட்சேபிக்கவே இல்லை. தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் எதற்கு ஆக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதைப்பற்றிக் கூட எந்தத் தமிழனும் சிந்தித்ததாகவும் தெரியவில்லை.

ஒரு பார்ப்பனர் தமிழ்மக்கள் பேரால் ஆட்சி பெற்று அரசியல் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களைப் பார்த்து “நீங்கள் எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று சொன்னால் அவரது நெஞ்சுத் துணிவு எவ்வளவாய் இருக்க வேண்டும்? இதையும் மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது என்று சொன்னால் இந்நாட்டில் உண்மைத் தமிழ்மக்கள் யாராவது இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இதன் அவசியத்துக்கு காரணம் என்னவென்றால் சமஸ்கிருதம் படிப்பதன் மூலம்தான் மக்கள் புராண கால ஒழுக்கத்துக்கு போகமுடியும் என்று விளக்கிக் கூறுகிறார். தமிழ்மக்கள் எல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இவர்களால் சூழ்ச்சி செய்யப்பட்ட காலத்திலேயே நாம் இதை எடுத்துக் காட்டினோம். ஹிந்தி என்பதும் சமஸ்கிருத பாஷையே யாகும். இதை சுமார் 75 வருஷங்களுக்கு முன்பாகவே சரித்திரபுத்தகம் எழுதிய பாதிரிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

...சமஸ்கிருத பாஷையின் முக்கிய தத்துவம் வருணாச்சிரம தர்மமாகும். அதாவது வருணாச்சிரம தர்மத்துக்கு ஏற்ற கதை புராணம், சரித்திரம் “வேதவாக்கு” விதிநூல் ஆகியவைகளேயாகும். வருணாச்சிரம தர்மத்தின் முக்கியத் தத்துவம் பார்ப்பான் பிராமண ஜாதியை சேர்ந்தவன். மற்றவர்கள் சூத்திர (அடிமை) ஜாதியைச் சேர்ந்தவர்கள். முன்னையவனுக்கு பின்னைய வனுடைய சொத்து, பெண்டு பிள்ளை, சரீரம் ஆகியவை கட்டுப்பட்டவை களாகும் என்பதுதான். ஆகவே இந்த நிலையை மறுபடியும் ஏற்படுத்தப் பார்ப்பனர்கள் முயற்சியேதான் “தமிழ் மக்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுவதாகும். -தோழர் பெரியார், குடி அரசு 08.08.1937

மேற்கண்ட பெரியாரின் எழுத்துக்களும், பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய தோழர் கொளத்தூர் மணியின் எழுத்துக்களும் இணைய தளங்களில் விரவிக் கிடக்கின்றன. அவ்வளவு விரிவான பதிலுரை எழுதப்பட்ட பிறகும், தோழர் மணியரசன் உருவாக்கிய குழப்பவாதம், திருச்சியில் வெளியிடப்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நோக்கம் குறித்த நூலில் பதிவாகியுள்ளது.

ஒரு பெயருக்கு இத்தனை பக்க விமர்சனமா? என்று கேள்வி எழுலாம். நமக்கு பெயர்களிலோ, அந்தப் பெயர்கள் இடம் பெறும் இடத்திலோ எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால், பெரியாரின் பெயரைத் தள்ளி வைத்ததில், தமிழ்த்தேசியர்கள் எதேச்சையாகயோ, இயல்பாகவோ செயல்படவில்லை, திட்டமிட்டுத் தான் மூன்றாம் இடத்தில் பதிவு செய்கிறார்கள் என்பதை, மேலும் ஒரு செய்தியைப் பார்த்தால் புரியும்.

மாநாட்டில் வீரவணக்கத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இந்தி எதிர்ப்புப் போரில் வீரமரணம் எய்திய நடராசன், தாளமுத்து ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. வழக்கமான வாக்கியம் என்றால், “தாளமுத்து, நடராசன்” என்று தான் இருந்திருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஜாதி ஒழிப்புச் சிந்தனையின் அடிப்படையில், பல விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, “நடராசன், தாளமுத்து” எனப் பெயர்களின் வரிசை சரியாக மாற்றப்பட்டது.

வீரவணக்கத் தீர்மானத்தில் அந்த வரிசை சரியான மாற்றத்தைப் பெற்றுள்ளது. ஆக, தீர்மானத்தை வடித்தவர்கள் கவனக்குறைவாகவோ, அறியாமலோ எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இப்போது, பெரியாருக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாவது இடத்தை எண்ணிப் பாருங்கள். தோழர்கள் பொழிலன், திருமுருகன் உருவத்தில் தோழர்கள் மணியரசனும், சீமானும் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

நெருப்புத் துண்டாக ‘திராவிடம்’

அடுத்து கொள்கைத் தீர்மானங்களில் முதலாவதாகவும் ஒட்டுமொத்தத் தீர்மானங்களில் 4 வது தீர்மானமாகவும் நிறைவேறியுள்ள பெரியாரிய எதிர்ப்புத் தீர்மானத்தைப் பாருங்கள்.

“ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள்வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.”

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் தமிழ்த்தேசியர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் “தமிழர்கள்” என்று பதியச் சொல்கிறார்கள். பெரியாரோ, “திராவிடர்கள்” என்று பதிவு செய்யச் சொல்கிறார். 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் திருவாரூரில் நீதிக்கட்சியின் 15 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட 18 வது தீர்மானத்தைப் பாருங்கள்.

  1. சென்சஸ்: அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சென்சஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் “திராவிடர்கள்” என்றே சொல்ல வேண்டும் என்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக் காரர்கள் மதம் என்ன என்று கேட்டால் “திராவிட சமயம்” என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக்கொள்கிறது. - குடிஅரசு - 08.09.1940

அந்தத் தீர்மானங்களும், அந்தத் தீர்மானங்களுக்குரிய விளக்கங்களும் 01.09.40 குடி அரசில் வந்தன. அதன் பிறகு 08.09.40 குடி அரசிலும் வந்தன. தொடர்ச்சியாக வந்த அந்த விளக்கங்களில் இருந்து சில வரிகள்...

திராவிடர்கள் தனி வர்க்கத்தார் என்று விளக்கிக் காட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்ப மிருக்கிற தென்பதையும். அச்சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதையும் அடுத்து நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் நன்கு விளக்கும்.

அதாவது, அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கை கணக்கு எடுக்கும் சென்சஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களை “திராவிடர்கள்” என்று சொல்லியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். இதையும் ஒவ்வொரு திராவிட மகனும், திராவிட மகளும் மனதிலிருத்தி நடந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். என்று இத்தகைய கட்டுப்பாடு நம்மவர்களிடையே ஏற்படுகிறதோ அன்றுதான் நாம் முன்னேற முடியும். எதுவரை நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு வருகிறோமோ, அதுவரை நாம் அடிமை வாழ்வை விரும்புகிறோமென்பதுதான் பொருள்படும். எனவே, அடிமைத்தளையிலிருந்து விடுபட முதற்படி தன்னைத் “திராவிடன்” என்று சொல்லிக் கொள்வதேயாகும். இதனைச் செய்ய எவரும் தம்மை மறந்தும் தவறிவிட மாட்டார்கள் என்றே கருதுகின்றோம். - தோழர் பெரியார், குடிஅரசு - 01.09.1940

1940 க்குப்பிறகு, 1948 இல் பெரியார்,

“என்ன மதத்தினர் என்று கேட்டல், ‘வள்ளுவர் மதம்’ என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்ன வென்றால், “குறள் நெறி” என்று சொல்லுங்கள். குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது” - விடுதலை, 31.12.1948

என்றும் கூறியுள்ளார். ஆனால் அது ஒரு உரையாக வந்தது தான். தீர்மானமாக வரவில்லை. அது சென்சஸ் பற்றிய கருத்தும் இல்லை. மேலும், குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது என்று 1948 இல் கூறிய பெரியார், அதன் பிறகு அவரது மரணம் வரை திருக்குறளைக் கடுமையாக மறுத்துப் பேசுகிறார். திருவள்ளுவரைத் தூக்கி எறியுங்கள்! திருக்குறளைத் தூக்கி எறியுங்கள்!! என்று வள்ளுவத்தையும், குறளையும் தகர்த்து எறிகிறார். அவை தனித் தொகுப்பாக இதே இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம் “திராவிடர்” என்ற மரபு, சமூக இன அடையாளத்தை இறுதிவரைப் பரப்புகிறார்.

தி.க, தி.வி.க, த.பெ.தி.க ஆகிய திராவிடர் இயக்கங்களின் தீர்மானங்கள் என்றாலும், குறைந்தபட்சம் அந்தத் தலைவர்கள் ஒப்புதலோடு இந்தத் தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், “திராவிடர்” என்ற அடையாளமே முன்னிறுத்தப் பட்டிருக்கும். பெரியாரின் ஆயுதமான “திராவிடர்” என்ற பதத்தை உச்சரிக்கக்கூடத் தொடை நடுங்குபவர்கள் தீர்மானம் நிறைவேற்றினால், அதில் “திராவிடர்” அடையாளம் சிதைக்கப்பட்டு “தமிழர்கள்” என்று தான் வரும். ஆபத்தில்லாத கருப்புச்சட்டை அடையாளங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படும்.

நீக்கப்பட வேண்டியது ஆங்கிலப் பெயர்களா? ஜாதிப் பெயர்களா?

“தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டுமான தமிழக அரசின் அண்மை அறிவிப்பை இம்மாநாடு வரவேற்கிறது. அந்த அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்துவதோடு, எஞ்சியுள்ள எல்லா ஊர்ப் பெயர்களையும் முழுமையாக மாற்றிட வேண்டும் என்றும், தமிழில் பெயரில்லாத இந்திய, தமிழக அரசுகளின் திட்டங்களின் பெயர்கள், கோயில்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே அமைத்திட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.”

தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர், மா.பா.பாண்டியராஜன், 11.12.2018 இல், சென்னை ஆவடி நகராட்சியில் உள்ள பூங்காக்களின் திறப்பு விழாவில் பேசியபோது,

“தமிழகத்திலுள்ள மூவாயிரம் ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், சமஸ்கிருதப் பெயர்கள் மாற்றி அமைக்கப்படாது” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் எத்தனை ஊர்களுக்குப் பெயர் உள்ளது எனத் தெரியவில்லை. ஆங்கில உச்சரிப்பில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். தூத்துக்குடி, திருவல்லிக்கேணி என்பது, ட்யூட்டிகோரின், ட்ரிப்ளிகேன் என ஆங்கில உச்சரிப்பில் உள்ள ஊர்களை தமிழ் உச்சரிப்புகளாக மாற்ற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மற்றபடி ஆங்கிலத்தில் எந்த ஊரின் பெயரும் இல்லை. அப்படி நமக்கத் தெரியாமல் இருந்தாலும் அரசு கூறுவது போல 3000 ஊர்களுக்கு ஆங்கிலப் பெயர் இருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

அதேசமயம், தமிழ்நாட்டில் ஆங்கில இனிஷியல் கொண்ட ஊர்கள் ஏராளமாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உத்தமபாளையம் அருகே “என்.டி.பட்டி”, கே.ஜி.பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் தமிழாக்கம் என்னவென்றால், நாராயணத் “தேவன்” பட்டி, குள்ளப்பக் “கவுண்டன்” பட்டி ஆகும். கோவையில் பி.என்.பாளையம் என்றால், பாப்ப “நாயக்கன்” பாளையம் ஆகும். இப்படி ஆங்கில இனிஷியலில் நூற்றுக்கணக்கான ஊர்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். அந்த ஆங்கில இனிஷியல்களை தமிழாக்கம் செய்தால் மீண்டும் ஜாதிப்பெயர்கள் தான் வரும்.

கே.கே. நகர், டி.நகர், ஆர்.எஸ்.புரம் என்பவற்றை கலைஞர் கருணாநிதி நகர், தியாகராய நகர், இரத்தினசாமிபுரம் என்று மாற்றுமளவுக்கு, இன்றைய தமிழ்நாடு அரசு நேர்மையாக இருக்காது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே, இப்படிப்பட்ட ஜாதிப்பெயர்களை மீண்டும் புதுப்பிக்கத் துடிப்பவர்களின் அறிவிப்பை அவசர அவசரமாகப் பாராட்ட வேண்டிய அவசியம் என்ன?

அமைச்சரின் பின்னணியையும், இந்த அறிவிப்பின் பின்னணியையும் யோசித்தால், காசி, அலகாபாத் போன்ற நகரங்களின் பெயர்களை சமஸ்கிருதமயமாக்கியது போலத் தமிழ்நாட்டிலும் ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருதமயமாக்கல் தொடங்க இருப்பதாகவே தெரிகிறது. அவரது அறிவிப்பில், “சமஸ்கிருதப் பெயர்கள் மாற்றி அமைக்கப்படாது” என்று தெளிவாகவே அறிவித்துள்ளார்.

இந்த பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியை, அவசர, அவசரமாகப் பாராட்டியே ஆகவேண்டுமானால் கூட, “சமஸ்கிருதப் பெயர்கள் மாற்றி அமைக்கப்படாது”என்ற அடுத்த வாக்கியத்தை மறைத்து விட்டுப் பாராட்ட வேண்டிய தேவை என்ன? குறைந்தபட்சம், “சமஸ்கிருதப் பெயர்கள்” குறித்த அறிவிப்புக்கு ஒரு கண்டனத்தையும் சேர்த்துப் பதிவு செய்ய என்ன தடை?

தமிழ்நாடு அரசின் இந்தத் தமிழாக்க அறிவிப்புக்கு முன்பு, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் கடந்த 19.07.2017 அன்று, ஊர், தெருப் பெயர்களில் இருக்கும் ஜாதிப்பெயர்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“தமிழக அரசு 1978 அக்.டோபர் 3 அன்று ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் சாலைகள், தெருக்களின் பெயர்களோடு, ஜாதிப் பெயரும் இருக்குமானால், ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும். இதைச் செயல்படுத்த மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கலெக்டர்கள் கண்காணித்து, அரசின் முடிவைச் செயல்படுத்தியதற்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.”

என்று உயர்நீதிமன்றம், அரசு நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது. வழக்கு குறித்து, 20.07.2017 விடுதலை நாளேட்டில் விளக்கமான செய்தி உள்ளது.

ஒரு திராவிடர் இயக்கத்தின் மாநாடு அல்லது உண்மையான பெரியாரிய உணர்வாளர்களின் ஏற்பாட்டில் நடக்கும் மாநாடு என்றால், அந்த மாநாட்டுத் தீர்மானத்தில், ஆங்கிலப் பெயரை மாற்றச் சொல்வோமா? ஜாதிப்பெயரை மாற்றச் சொல்வோமா?

அகற்ற வேண்டியது கோவிலையா? கோவிலின் பெயரையா?

இதைவிட மிகக் கொடுமையாக அதே தீர்மானத்தில், “கோவில்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும்” என்று ஒரு கோரிக்கையும் உள்ளது. ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் என்பவர், “கோவிலை அகற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைப்பாரே ஒழிய, கோவிலின் பெயரைத் தமிழில் மாற்றுங்கள் என்று மனநிலை பாதிக்கப்பட்ட போதிலும்கூடக் கூறமாட்டார். அண்மைக்காலச் சான்று ஒன்றைப் படிப்போம்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருஷ்ணன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி விடுத்த உத்தரவு இது.

“பொதுச்சாலை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சில பேராசைக்காரர்கள், மாபியா கும்பல்கள் அரசு நிலங்களை அபகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் பொது இடங்களில் கோவில்கள் கட்டுகின்றனர். அதனால், வாகனப் போக்கு வரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் சிலர் சாலையோரம் கோவில்களைக் கட்டுகின்றனர்.

இதுபோன்ற செயலை இந்து சமய அறநிலையத்துறை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அது மத உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்துவ தாகிவிடும். பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. தெய்வமாக இருந்தாலும், பொது இடங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஆக்கிரமித்தால், அந்த தெய்வத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது.

இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர், ஆணையர் ஆகியோரை எதிர்மனு தாரர்களாகச் சேர்க்கிறேன்.

இந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும், பொதுச்சாலை களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 21.01.2019 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கிறேன்.”

இந்த உத்தரவு ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோவில்கள் பற்றியது. ஜாதி ஒழிப்பு, ஆணாதிக்க, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு அடிப்படையிலும் கோவில்கள் இடிக்கப்பட வேண்டும். அந்தக் கட்டிடங்கள் மக்களுக்குப் பயன்படவேண்டும். அதை மக்களே நடத்த வேண்டும் என்பதே பெரியாரியல். பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்த காலத்திலிருந்து இந்த இதழ் வெளியாகும் நாள் வரை ஒரு பெரியாரியல்வாதி கூட எங்கும், என்றும், “கோவில்களின் பெயரைத் தமிழில் மாற்றுங்கள்” என்று கோரிக்கை வைத்தது இல்லை.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைப் போர் என்பது சுயமரியாதையையும், மனித உரிமையையும் அடிப்படையாகக் கொண்டது. “வெறும் மொழியை” முன்னிறுத்திப் போராடுவது பெரியாரியல் அல்ல. பெரியாரியலுக்கு எதிரானது.

ஆனால், “பெரியாரிய உணர்வாளர்கள்” என்ற பெயரில் “வெறும்” மொழிவிடுதலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தோழர் மணியரசனும், தோழர் சீமானும்கூட எதிர்இடத்தில் நின்று, நேர்மையாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். இவர்களோ, கருப்புச்சட்டை போட்டுக் கொண்டு, பெரியார் வாழ்க! என்று கூறிக்கொண்டு, நம்மையே மேடை போடச்செய்து, நமது கூட்டத்தையே கூட்டி, நமது தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகின்றனர். நாமும் ரசித்துப் பார்க்கிறோம்.

(காட்டாறு 2018 டிசம்பர்)

தொடரும்