நரேந்திர மோடி அரசு, இந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இரண்டு தடவைகள் வரவு-செலவுத் திட்டங்களை அறிவித்தது. 2015 பிப்பிரவரி 28-இல் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்த திட்டம்தான். 2015-16ஆம் நிதி ஆண்டுக்கான முழு வரவு செலவுத் திட்டம் ஆகும்.

இந்தியாவிலுள்ள 126 கோடி மக்களுக்கும், பொதுவான நன்மை தரும் துறைகள் என்பவை எல்லோருக்கும் இலவசக் கல்வி, எல்லோருக்கும் இலவச வைத்தியம், வேலை அற்றோருக்கு வேலை அளிப்பது என்பவை தான். ஆனால் மோடி அரசு இத்துறைகளை அறவே புறக்கணித்துவிட்டது.

எடுத்துக்காட்டாக. குழந்தைகளுக்கான - ஒருங்கிணைந்த மதிய உணவுத் திட்டம், ஊட்டச்சத்து உணவுத் திட்டம் இவற்றுக்கு 2014-15ஆம் ஆண்டில் 18,195 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

இப்போது இது குறைக்கப்பட்டு, 2015-16ஆம் ஆண்டுக்கு 8,335.8 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வ சிக்க்ஷh அபியான் என்கிற ‘எல்லாக் குழந்தைகளுக்கும் ஆன கல்வித் திட்டம்’ என்பதற்கு 27,758 கோடி சென்ற ஆண்டில் ஒதுக்கப்பட்டது. 2015-2016க்கு, அது, 22,000 கோடியாகவும்; மதிய உணவுக்கு ரூ.13,215 கோடி என்பது 9,236 கோடியாகவும்; ‘மத்திய மிக் சிக்ஷா திட்டத்’துக்கு ரூ.5,000 கோடி என்பது 3,565 கோடியாகவும் குறைக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில், இந்திய அரசு, கல்விக்கு 2014-15ஆம் ஆண்டுக்கான திட்டத்திலிருந்து, 17 விழுக்காடு தொகையை 2015-16ஆம் ஆண்டில் குறைத்துவிட்டது.

நல்ல பழக்கவழக்கங்களான குறித்த நேரத்தில் கடமைகளைச் செய்தல், உழைப்புக்கு முதலிடம் கொடுத்தல், எல்லோரும் சமமானவர்கள் என்று எண் ணுதல், முடிந்தவரையில் மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்கிற நாட்டுப் பற்றைக் கற்றுக்கொள்ளுதல் என்கிற அடிப்படைப் பண்புகளைக் கல்வி நிலையங்கள்தான் கற்றுத்தர முடியும்.

ஆனால் இந்தியாவில் தரப்படும் கல்வி இந்தப் பண்புகளை வளர்க்க வில்லை.

இந்தியாவில் பள்ளிப் படிப்பைப் பெறும் 70 விழுக்காடு குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்; அவர்களுக்குப் பாடம் கற்பிக்க 12 இலட்சம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அரசுப் பள்ளிகளில் சரிவரப் பாடம் கற்பிக்கப்படாததால், 5ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் 2ஆம் வகுப்புப் பாட நூலைக் கூடச் சரியாகப் படிக்கும் திறமையைப் பெற்றிருக்கவில்லை. மேலும் முதல் வகுப்பில் 100 குழந்தைகள் சேர்ந்தால், அவர்களில் 42 விழுக் காடு குழந்தைகள்தான் 10ஆம் வகுப்புப் படிப்பை எட்டுகிறார்கள். அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியல் வகுப்பு-பழங்குடி வகுப்புக் குழந்தைகளில் அதிகம் பேர் பத்தாம் வகுப்பைக்கூட எட்டுவது இல்லை.

அடுத்து, இந்திய அரசின் தேசிய மக்கள் நல - சுகா தாரக் கொள்கைக் குறிப்பில், தேசிய மொத்த வருமா னத்தில் ((GDP). குறைந்தது 2.5 விழுக்காடு மக்கள் நலம் என்கிற சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவெறும் வாய்ச்சவடாலாக மட்டும் இன்றுவரை இருக்கிறது.

அதாவது, 2015-16ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் துறைத் திட்டத்துக்கு, ரூபா 33,150 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி, அடிப்படை மருத்துவ வசதியைப் புறந்தள்ளி விட்டு, அதே மூச்சில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ் நாடு, இமாசலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில்-அனைத் திந்திய மருத்துவ மற்றும் அறிவியல் நிறுவனங்களை (All India Institute of Medical Sciences)ப் புதிதாகத் தொடங்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது.

இந்தியத் தலைநகரான புதுதில்லியிலுள்ள AIIMS - என்ற தலைமை மருத்துவ நிறுவனத்திலேயே-திறமை யான மருத்துவர்கள் இல்லை; நல்ல நிர்வாகம் இல்லை; சிறப்பான வைத்தியம் தரப்படவில்லை. இது அரசியல் கட்சிகளின்-செல்வாக்குள்ள தரகர்களின் தலையீட்டால் சீர்குலைந்து கிடக்கிறது.

காட்டாக, தெருவில் கடை வைத்திருக்கும் ஒரு சிறு வணிகர், தன் இரண்டு வயது ஆண் குழந்தையை புதுதில்லி AIIMS-தலைமை மருத்துவமனையில் சேர்த் தார். அக்குழந்தைக்குப் பிறவியிலேயே விநோதமான நோய் தொற்றியுள்ளது. அக்குழந்தைக்கு இலவசமாக மருத்துவம் செய்ய அவர் கோரினார். அதற்காக, தில்லி உயர்நீதிமன்றத்தில் குழந்தையின் பெற்றோர் வழக் குத் தொடுத்தனர்.

AIIMS அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட் டார்கள். “இந்த மருத்துவமனைக்கு அரசினால் ஒதுக் கப்பட்ட நிதியைக் கொண்டு, பொதுவான நோய் களுக்கு உரிய மருந்துகளைத்தான் வாங்க முடியும். விநோதமான நோய்களுக்கான மருந்துகளை வாங்கி வைத்தியம் செய்ய முடியாது” என்று, தில்லி உயர்நீதி மன்றத்தில் அவர்கள் பதில் மனுவைப் (Affidafit) பதிவு செய்தனர். (“Sunday Times of India”,, Delhi 22.3.2015). (இதுதான் மோடி அரசின் இலட்சணம்)

மற்றும் இந்தியாவில் 80 அகவையைத் தாண்டிய வர்கள் ஒரு கோடிக்கு மேல் இருக்கிறார்கள். இவர் களை உள்ளிட்டு, 60 அகவை தாண்டிய மூத்தகுடி மக்கள் என்போர் 10.5 கோடிக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களில் ஏழைகளுக்கு இலவச வைத்தியம் தர ஒரு திட்டமும் இல்லை. இப்போது முதியோர் நலம் பற்றி அக்கறை கொள்ளுவோம் என்று அரசு அறிவித் துள்ளது.

அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளு வதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது பெரிய குறை.

அறிவியல் ஆய்வுப் பணிகளுக்காக, இந்திய அரசு, தேசிய மொத்த வருமானத்தில் (GDP) வெறும் 0.8 விழுக்காட்டு அளவே நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா தேசிய மொத்த வருமானத்தில் 2.8 விழுக் காடு ஒதுக்குகிறது; சீனா 1.8 விழுக்காடு ஒதுக்குகிறது.

அதனால் தான் மருத்துவம் மற்றும் அறிவி யல், பாதுகாப்புத் துறைக் கருவிகள் பற்றிய ஆய்வுகள் அங்கெல்லாம் வளர்ந்துள்ளன. நிற்க.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மத்திய அரசு - வருமான வரி, கலால் வரி முதலான கொழுத்த வரி வசூல்கள் மூலம் வருமானம் பெறுகிறது.

அந்த வரிகள் மூலம் வரும் வருமானத்தில் 42 விழுக்காடு பங்கை அந்தந்த மாநிலத்துக்குத் திருப்பித் தர வேண்டும் என்று, 14வது நிதிக்குழு பரிந்துரை செய்தது. மோடி அரசு இதை மட்டும் ஏற்றுக்கொண் டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் மாநிலங்களுக்கு ஏற் கெனவே 2014-15 வரை, மத்திய அரசால் 31 திட்டங் களுக்கு அளிக்கப்பட்ட நிதி உதவியில், இப்போது 8 திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க முடியாது என்று, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்து விட்டது.

இத்துடன் நில்லாமல், கலால் வரி (Excise Tax) போன்ற மறைமுக வரிகளைப் பெரிய அளவில் விதித்து ஏழைகளை வதைக்கவும் அரசு திட்டம் தீட்டிக் கொண்டது.

மொத்த வரவு செலவில், ரூபா.77,526 கோடி ஊரக வளர்ச்சிகளுக்கு உரிய நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

இதில் ஆளும் கட்சிகளின் தலையீடும், அதிகார வர்க்க ஊழலும் இல்லாவிட்டால் ஊரகச் சாலை வசதி கள், குடிநீர் வசதிகள் பெருக்கப்பட வழி ஏற்படும்.

வேளாண் உற்பத்திப் பொருட்களான கோதுமை, பார்லி, பருத்தி, உருளைக்கிழங்கு இப்படிப்பட்ட பொருள்களுக்கு ஏற்கெனவே பரிவர்த்தனை வரியிலிருந்து இந்திய அரசு விலக்கு அளித்திருந்தது.

இப்போது, வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதா கவே, அரசு ஆணை மூலம் - நெல் அல்லது அரிசி, வெங்காயம், வேர்க்கடலை, இஞ்சி, சூரியகாந்தி விதை, பாக்கு முதலான 38 வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குப் பரிவர்த்தனை வரியிலிருந்து விலக்கு அளிக் கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பண்டங்களை வாங்கி உண்ணும் நிலையில் உள்ள உழைப்பாளி மக்கள் இந்தியாவில் அதிகம்.

இந்த நிலையில், மோடி அரசு பதவி ஏற்ற உடனேயே அமர்த்திய எட்டு பேர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு (HLC) வினர் :

1. உணவு சேமிப்புக் குழுமம் (FCI) வேண்டிய தில்லை;

2. வேளாண் உற்பத்திப் பொருள்களான நெல், கோதுமை இவற்றை அரசு கொள்முதல் செய்வது வேண்டியதில்லை;

3. பங்கீட்டுக் கடைகள் வைத்து அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், உண்ணும் எண்ணெய் முதலான பண்டங்களை, அவற்றின் மூலம், குறைந்த விலைக்கு ஏழை - நடுத்தர மக்களுக்கு வழங்குவதற்குப் பதிலாகப் பணமாக வழங்கிவிடலாம் எனச் செய்துள்ள பரிந்துரைகள் மிகவும் கேடானவை.

100க்கு 67 பேர் பண்டங்களை வாங்கி உண்ணும் நிலையில் இருப்பதை உணராமல், இம்முடிவுகளை அரசு ஏற்றால், உழைப்பாளி மக்கள் எல்லோராலும் வெளிச்சந்தையில் அவற்றை உயர்ந்த விலை தந்து வாங்க முடியாது; இராப் பட்டினி கிடப்போரின் எண் ணிக்கை அதிகமாகும்.

மொத்த வேளாண் பண்ட உற்பத்தி செய்வோரில் 6 விழுக்காட்டுப் பேர் மட்டுமே அரசுக் கொள்முதல் நிலை யங்களில் கட்டுப்படியாகாத விலைக்குத் தானியங் களை விற்கிறார்கள். மற்றவர்களில்-சிறு, குறு வேளாண் குடிகள், கடன் தொல்லை தாங்காமல், தனியாரிடம் ஈன விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

எந்த உண்ணும் பண்டத்தையும் தனியார் பெரு வணிகர்கள் மொத்தமாகக் கொள்முதல் செய்வதைத் தடைசெய்வது முதலாவது தேவை.

முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கே முன்னுரி மை அளிக்கும் நரேந்திர மோடி அவர்களின் அரசு, வெகுமக்கள் நலனுக்கு எதிரானதே என்பதை, நடு நிலையில் நின்று, எல்லோரும் உணர வேண்டு கிறோம்.

1.4.2015           

வே. ஆனைமுத்து

Pin It