1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த மறுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு பகுதி:

இந்தியாவில் இன்று சராசரி தனி மனித வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நூறு பணக்காரர்களின் சொத்துக்கு சமமாக இருக்கிறது. 1.2 பில்லியன் மக்கள் தொகைக் கொண்ட ஒரு தேசத்தில், நாள் வருவாய் ரூ.20க்கும் குறைவாகக் கொண்டு வாழ்வோர் 800 மில்லியன் மக்கள். பகாசுர கம்பெனிகள்தான் இந்த ஒரு நாட்டை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு நாட்டையே ஆட்சி செய்கிறார்கள். அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், பெரும் தொழில் நிறுவனங்களின் சேவகர்களாக மாறி வருகின்றனர்.

இந்த மாற்றங்களினால் ஜாதிய கட்டமைப்பு களுக்கிடையிலான உறவுகளில் தாக்கங்கள் நிகழ்ந்துள்ளதா? இந்திய சமுகம் உடைந்து சிதறிவிடாமல் ஜாதிய உறவுகளே தடுத்து வருகின்றன என்றும், தொழில் புரட்சிக்குப் பிறகு மேற்கத்திய சமூகத்தில் நிகழ்ந்ததைப்போன்ற பிளவுக் கூறுகள் தலைதூக்காமல் சமூகத்தைக் காப்பாற்றியதும் ஜாதி அமைப்புதான் என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.

இதற்கு நேர் எதிரான கருத்துகளை முன் வைப்போரும் உண்டு. இந்த பகாசுர தொழில் நிறு வனங்களின் வருகைக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகர் மயமாகும் போக்கு அதி கரித்து வருகிறது என்றும், அதனால் தொழிலாளர்கள் வேலை செய்யும் சூழல்கள் மாறிக் கொண்டு வருவதால் ஜாதியமைப்பின் இறுக்கம் தளர்ந்து, அதன் தேவைக்கான அவசியம் குறைந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். இரண்டு கருத்துகளும் ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை தான்.

பொதுமைப்படுத்தப்படும் கருத்துகள், உண்மை நிலவரங்கள் ஆக முடியாது. அண்மையில் அமெரிக் காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை உலகின் மிகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 55 பேர் இந்தியர்கள். இதில் தரப்பட்டுள்ள சொத்து விவரங்கள் - அவர்கள் வெளிப்படையாக அறிவித்தது மட்டும்தான். இந்த 55 இந்திய கோடீசு வரர்களில் முதல் 10 இடத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இந்த 10 நபர்களில் 7 பேர் ‘வைசியர்கள்’. இவர்கள் பெரும் தொழில் நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு உலகம் முழுதும் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். துறை முகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், கப்பல் கம்பெனிகள், மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல், எரிவாயு, அலைபேசி இணைப்புகள், சினிமா தயாரிப்பு, ‘ஸ்டெம்செல்’, சேமிப்பு கிடங்குகள், மின் விநியோக அமைப்புகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை நடத்தி வருகிறார்கள். யார் இவர்கள்? முகேஷ் அம்பானி (ரிலையன்சு), லட்சுமி மிட்டல், திலிப் சிங்காவி, ரூஜா சகோதரர்கள், கே.எம்.பிர்லா, சாவித்ரிதேவி ஜின்டால், கவுதம் அடானி, சுனில் மிட்டல் ஆகியோர். எஞ்சியுள்ள 45 உலக அளவிலான பணக்காரர்களில், மேலும் 19 பேர் வைசியர்கள். மற்றவர்களில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்சி, போராஸ், கத்ரிஸ் (அனைவரும் வணிக ஜாதிகள்) இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒரு ‘தலித்’தோ ஒரு ஆதிவாசியோ கிடையாது.

பெரிய தொழில்கள் மட்டுமல்ல, வைசியர்களான பனியாக்கள் சிறு தொழில்களிலும் ‘லேவாதேவி’ என்ற வட்டிக்கு கடன் வழங்குவதிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வறுமையில் உழலும் மக்கள் இவர்களின் சுரண்டல் பிடியில் சிக்குண்டு கிடக் கிறார்கள். பழங்குடி மக்கள் அதிகம் வாழக்கூடிய வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோராம், மேகலயா, நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலிருந்து ஆயுதம் தாங்கிய குழுக்களின் போராட்டங்களும், இராணுவ குவிப்பும், இரத்த ஆறுமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே இந்த மாநிலத்தில் குடியேறிய மார்வாடிகள் ஆரவாரம் இல்லாமல், தங்கள் தொழிலை நிலைப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இந்தப் பகுதிகளில் அனேகமாக அனைத்துப் பொருளாதார செயல்பாடு களையும் தங்களுடைய ஆளுகைக்குக் கீழே இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்தியாவில் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடைசியாக எடுக்கப்பட்டது 1931 ஆம் ஆண்டில்தான். அந்தக் கணக்கெடுப்பின்படி வைசியர்கள் (பனியா) 2.7 சதவிதம் (அதே நேரத்தில் தீண்டப்படாதவர்கள் 12.5 சதவீதம்) பனியாக்களின் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளமான வாழ்க்கைச் சூழல் இருந்தும்கூட, அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர, அதிகரித்ததாக தெரியவில்லை., ஆனால், பெரும் வர்த்தகங்கள், சிறு தொழில்கள், விவசாயம், பெரும் தொழில்களில் உயர்ந்து நிற்கிறார்கள். மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்த அளவில் உள்ள ஒரு பிரிவு பொருளாதாரத்தில் மட்டும் அசைக்க முடியாத சக்தியாக மேலும் மேலும் உயர்வது ஏன்? ஜாதியும் முதலாளித்துவமும் தனித்துவமான இந்திய சமூக ‘உலைக்களத்தில்’ பிரிக்க முடியாமல், பிணைந்து போய்கிடப்பதுதான் இதற்கான காரணம். திறமை, தகுதிகளைப் பார்க்காமல், தன்னுடைய ஜாதி என்பதற்காகவே கைகோர்த்து ஒருவருக்கொருவர் உயர்வதற்கும் உயர்த்துவதற்குமான ‘ஓர் சார்புத் தன்மை’ ஜாதியமைப்புக்குள்ளேயே அசைக்க முடியாமல் இறுகிப் போய் நிற்கிறது (Cronyism is built into the caste system).

வைசியர்கள் (பனியாக்கள்) என்ன செய்கிறார்கள்? அவர்கள் நம்பும் மதசாஸ்திரங்கள் அவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறார்கள். வட்டி வாங்கும் உரிமை வைசியர்களுக்கு உண்டு என்று “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது. மனு சாஸ்திரம் எந்தப் பிரிவினரிடமிருந்து எவ்வளவு வட்டி வாங்க வேண்டும் என்று மேலும் விரிவாகக் கூறுகிறது. “பிராமணர்”களிடமிருந்து 2 சதவீதமும், க்ஷத்தியர்க ளிடமிருந்து 3 சதவீதமும், ‘சூத்திரர்’களிடமிருந்து 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்பட வேண்டும் என்று ‘மனு சாஸ்திரம்’ வரையறுத்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு ஒரு “பிராமணன்” 24 சதவீதமும், ஒவ்வொரு சூத்திரர், பஞ்சமர் - 60 சதவீதமும் வரி செலுத்தியாக வேண்டும். இன்றைக்கும்கூட கந்து வட்டிக்காரர்கள், ஏழை விவசாயிக்கு அல்லது நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளிக்கு 60 சதவீத வட்டி வாங்குவது வழக்கமாக உள்ளது. ஒரு வேளை அவர்கள் பணமாக செலுத்த முடியாதபோது, “உடல் ரீதியாக வட்டி” வாங்கிவிடுகிறார்கள். அதாவது, தலைதலைமுறையாக இந்த மக்கள் கடன் கொடுத்த ‘முதலாளி’க்கு அடிமையாக உடல் உழைப்பைத் தந்து வருகிறார்கள். திருப்பி செலுத்த முடியாத கடனுக்காக வட்டி இப்படி உடல் உழைப்பாக சுரண்டப்படுகிறது. ‘மனுசாஸ்திர’ப்படி எந்த ஒரு மேல்ஜாதியினரையும் ‘கீழ் ஜாதியினருக்கு’ சேவை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

அர்த்தசாஸ்திரமும் மனு சாஸ்திரமும் வகுத்துள்ள வாழ்க்கை முறையினால் ‘வைசியர்கள்’ (பனியாக்கள்) தொழில் துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். “பூதேவர்கள்” என்று கூறிக் கொள்ளும், அதாவது வானத்திலிருந்து பூமியில் உள்ள அற்ப மனிதர்களுக்காக சேவை செய்வதற்காக கடவுளால் அனுப்பப்பட்டதாகக் கூறிக் கொள்ளும் “பிராமணர்கள்” என்ன செய்கிறார்கள்? 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு “பிராமணர்கள்” 6.4 சதவீதம் என்று கூறுகிறது. ஆனால், இந்த சதவீதம்கூட, வைசியர்களைப்போல குறைந்து வந்துள்ளது. சமூக வளர்ச்சி ஆய்வு மய்யம் (Centre for the Study of Developing Society - CSDS) நடத்திய கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத்தில் பார்ப்பனர் பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை கணிசமாகக் குறைந்த போதிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருப்பது எதைக் காட்டுகிறது? பார்ப் பனர்கள் செல்வாக்கும் அதிகாரமும் குறைந்த வரு கிறது என்ற கருத்தை இந்த உண்மைகள் மறுக்கின்றன.

அம்பேத்கர் புள்ளி விவரங்களுடன் விளக்குகிறார். 1928இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்கள் அரசு பதவிகளில் 37 சதவீத ‘கெசட்டட்’ அதிகாரிகள் பதவிகளிலும் 43 சதவீத ‘கெசட்டட்’ அல்லாத பதவிகளிலும் இருந்தனர். 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் கைவிடப்பட்டதால் உண்மை நிலை மறைக்கப் பட்டது. எனவே 1931 ஆம் ஆண்டு நிலை அப்படியே தொடர்ந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. மக்கள் தொகை விகிதாசாரத்தில் வகிக்கும் பதவிகள் பற்றிய பார்ப்பனர் புள்ளி விவரங்கள் ஏதும் கிடைத்திடாத நிலையில், இது தொடர்பாக வெளிவந்த தகவல்களை மட்டுமே நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு குஷ்வந்த் சிங் (பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர்) , ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் இவ்வாறு கூறியிருந்தார்:

“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப் பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக் கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணை செய லாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் “கூர்ந்த அறிவுத் திறன்” தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை” - என்று குஷ்வந்த் சிங் எழுதினார்.

குஷ்வந்த் சிங் தந்துள்ள இந்த புள்ளி விவரங்களில் பிழைகள் இருக்கலாம்; ஆனால், மிக மோசமான அளவில் பிழைகளாக இருக்க வாய்ப்பில்லை. அதற்குப் பிறகு கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. புதிய கணக்கெடுப்புகள் வந்தால் உண்மை நிலையைக் கண்டறிய முடியும். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூக வளர்ச்சி மய்யத்தின் (சி.எஸ்.டி.எஸ்.) கணக் கெடுப்பின்படி, 1950 முதல் 2000 வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 47 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். இதே காலகட்டத்தில் உயர்நீதிமன்றங்கள் கீழ் நீதிமன்றங்களில் இணை நீதிபதிகளாக இருந்த பார்ப்பனர்கள் 40 சதவீதம். 2007 ஆம் ஆண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை இந்தியாவில் உயர் அதிகாரிகளாக 37.17 சதவீதம் பார்ப்பனர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலோர் உயர் அதிகாரப் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர்.

ஊடகங்களிலும் காலங்காலமாக பார்ப்பனர் களே ஆதிக்கத்தில் இருந்து வருகிறார்கள். இதில்கூட, 1945இல் அம்பேத்கர் கூறிய கருத்துகளே காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “தீண்டப்படாதவர் களுக்கு பத்திரிகை இல்லை. காங்கிரஸ் நடத்தும் பத்திரிகைகள் தீண்டப்படாதவர்களை இருட்டடிக் கின்றன. அவர்கள் குறைந்த அளவில்கூட வெளிச்சத் துக்கு வந்துவிடக் கூடாது என்று உறுதியாக முடிவு செய்துவிட்டன. தீண்டப்படாதவர்கள் தங்களுக்காக பத்திரிகை நடத்த முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. விளம்பரங்கள் மூலம் வருவாய் இல்லாமல் எந்த ஒரு பத்திரிகையும் உயிர்வாழ முடியாது. விளம்பரங்கள், தொழில் வணிக நிறுவனங் களிடமிருந்து தான் கிடைக்கும். சிறிய தொழில் பெரிய தொழில் எதுவாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் காங்கிரசோடு இணைந்து நிற்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத எந்த அமைப்பையும் அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

இந்தியாவிலே பத்திரிகைகளுக்கு செய்தி தரும் மிகப் பெரிய செய்தி நிறுவனமான ‘அசோசி யேட்டட் பிரஸ்’சில் பணியாற்றுகிறவர்கள் அனை வருமே சென்னைப் பார்ப்பனர்கள். இந்தியாவில் வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளுமே இவர்களின் கைப்பிடிக்குள்தான் அடக்கம். இந்த செய்தி நிறுவனம் வழங்கும் செய்திகளையே வெளியிடுகின்றன. இந்தப் பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே தருவார்கள். காங்கிரசுக்கு எதிரான எந்த செய்தியும் விளம்பரமாகாமல் தடுத்து விடுவார்கள். தீண்டப் படாதவர்கள் சக்திக்கும் அப்பாற்பட்ட நிலை இது” என்கிறார் அம்பேத்கர்.

2006 ஆம் ஆண்டு சமூக வளர்ச்சி மய்யம் (சி.எஸ்.டி.எஸ்.) புதுடில்லியில் இயங்கும் ஊடகங் களின் சமூகப் பின்னணி குறித்த கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, டெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் 37 இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கக்கூடிய 315 நபர்களைக் கண்டறிந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் இந்தி அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் 90 சதவீதம் பேரும், தொலைக்காட்சிகளில் 79 சதவீதம் பேரும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் முன்னேறிய ஜாதியினர். இதில் 49 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். ஒருவர்கூட தலித்தோ, ஆதிவாசியோ இல்லை. ‘சூத்திரர்’ என்ற பிரிவில் உள்ளவர்கள் 4 சதவீதம்; முஸ்லிம்கள் 3 சதவீதம் (இவர்களின் மக்கள் தொகை 13.4 சதவீதம்). இது பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை. மிகப் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமை யாளர்கள் யார்? 4 பெரிய ‘தேசிய’ நாளேடுகளில் மூன்று வைசியர்களிடமும், ஒன்று பார்ப்பனரிடமும் இருக்கிறது. ‘டைம்ஸ்’ குழுமம் (பென்னட் கோல்மென் அண்ட் கோ லிமிடெட்) நடத்தும் பல பத்திரிகைகளில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடும், ‘டைம்ஸ்’ 24 மணி நேர தொலைக்காட்சியும் அடங்கும். இதன் உரிமையாளர் ‘பனியா’ (சமணர் குடும்பம்) ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டின் உரிமையாளர் ‘பரியாஸ்’ என்ற பிரிவினர். இவர்கள் மார்வாரி பனியாக்கள். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமமும் ‘கோயாங்கா’ எனும் மார்வாரி பனியாக்களுக்கே சொந்தமானது. ‘இந்து’ நாளேடு, பார்ப்பனர் குடும்பத்துக்கு உரிமையானது. இந்தியா விலே அதிகம் விற்கக்கூடிய ‘தய்னிக் ஜெக்ரான்’ இந்தி நாளேடு, கான்பூரைச் சார்ந்த பனியாக்களான குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது. மிகவும் செல்வாக்குகளை மற்றொரு இந்தி நாளேடான ‘தைனிக் பாஸ்கர்’ அகர்வால் என்ற பனியாவுக்கு சொந்தமானது. குஜராத் பனியாவான அம்பானி குடும்பம் - 27 தேசிய, மாநில தொலைக்காட்சிகளின் முக்கிய பங்குதாரர். இவை அனைத்தும் அம்பானி குழுமத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரும் செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ‘இசட் டி.வி.’யின் உரிமையாளரான சுபாஷ்சந்திரா ஒரு பனியா. தென்னிந்தியாவில் ஜாதியத்தின் வெளிப்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக ஈநாடு குழுமம் பல செய்தி பத்திரிகைகளோடு உலக அளவில் திரைப்பட நகரங்களையும் 12 தொலைக்காட்சி அலை வரிசைகளையும் நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர் ரமோஜிராவ், இவர் ஆந்திராவைச் சார்ந்த ‘கம்மவா’ என்ற விவசாயம் செய்யும் ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர் பார்ப்பன-பனியாக்களைப் போல் இந்தக் குழுமம் கொடிகட்டிப் பறக்கிறது. மற்றொரு ஊடகக் குழுமமான ‘சன்’ நிறுவனம் மாறன்களுக்குச் சொந்தமானது. இவர்கள் ‘பிற் படுத்தப்பட்டோர்’ என்று அழைக்கப்படுகிறார்கள்; அரசியலில் செல்வாக்குள்ளவர்கள் - என்று பட்டிய லிட்டுள்ளார் அருந்ததிராய்!

Pin It