தருமபுரி  -  நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தாழ்த்தப்பட்ட எமது கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள், வன்னிய சாதி வன்முறை கும்பலின் குண்டாந்தடிகளில் அடிபட்டு, பெட்ரோல் குண்டுகளில் தீக்கிரையாகி, உடைமைகள் சூறையாடப்பட்டு எம் பிள்ளைகள் கதறி ஓடி ஒளிந்த நாள்! ஆண்டாண்டு காலமாய் உழைத்துச் சேர்த்த சொத்துக்கள் தீப்பிழம்பாய் எரிந்து புகைந்ததில் எம் ஓலக்குரல்களின் சத்தம் இன்றும் ஓயாமல் குமுறும் கறுப்பு நாள்! மீண்டும் ஒரு வெண்மணியாய், அணையா நெருப்பாய் தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்தப்பட்ட அநீதி நாள்! தமிழகமே தலைகுனிந்து எம்மைத் திரும்பிப் பார்த்த நவம்பர் நாள்!

பா.ம.க.வின் நயவஞ்சக அரசியலில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசியலில், வாக்குக்காய் வன்னியர் நலன் பேசும் வஞ்சக அரசியலில், சுமூகமாக இருந்த எமது வாழ்க்கையும் பொருளாதாரமும் பொசுங்கிக் கருகிய நாள்! ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாசும் அணிந்து வன்னியப் பெண்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் என்ற அவதூறுகளை அள்ளி வீசி, 'காதல் நாடகம்' என்று கூறி, எங்களையும், வன்னிய அடித்தட்டு மக்களையும் திட்டமிட்டு மோதவிட்டுக் குளிர்காய்ந்த நாள்! சமூகத்தில் எதார்த்தமாக உருவாகும் காதலையும், சாதி உறவை உடைத்து சமூக மக்களாய் ஒன்றிணையும் வளர்ச்சியையும் ஏற்காத சாதியவாதிகள் அதிகாரப் பசியில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பழிவாங்கிய நாள்!

நாகரிகம் என்பது ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டும் சொந்தம் என்ற மனநிலை. தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கு வாழக் கூடாதாம்! துணிமணிகள் அணியக்கூடாதாம்! நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறி, சாதி இழிவுத் தொழிலை மறுத்து, சாதி ஒழிப்பு அரசியலில் அணிதிரண்டு, சுய மரியாதையுடன் நிமிர்ந்து நின்று வாழ்வதை ஏற்காத இந்த உதிரி வன்முறையாளர்கள், தன் மனதுக்குள் குமுறியிருந்த சாதி வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டதன் வெளிப்பாடுதான் இந்த வன்முறையின் கோரச் சம்பவம்.

தாக்கப்பட்டு ஒரு வருடம் கடந்தும் எமக்கான வீடுகள், உடைமைகள், பாதுகாப்பான வாழ்வு என்பது தமிழக அரசின் பாரபட்சத்தால் மீட்கமுடியாத நிலை, இன்றும் அனைத்து வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படாத இழுத்தடிப்புகள், மேலும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலை, தாக்கப்பட்ட கிராமங்களுக்கு அச்சட்டத்தின்கீழ் முழுமையான இழப்பீடுகள் கொடுக்கப்படாத நிலை. எங்கள் எதிர்காலமும் உரிமையும் அடக்குமுறைச் சட்டத்தால் அடக்கப்பட்டு கட்டுண்ட நிலையில், நீதிக்காய் நெடுநாட்களாய்க் காத்திருக்கின்றோம்.

நீதிமன்றமோ சாதி மறுப்புத் திருமண உரிமையை நசுக்கி, சாதி ஆதிக்கக் கும்பலுக்குத் துணையாக இளவரசனைக் கொன்று புதைத்தது. தொடர்ந்து இன்றும் வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருக்கிறது. நீதி மறுக்கப்படும் நிலையில், திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யும் இச்சதிவேலைகள் சாதியச் சக்திகளுக்கு உரமூட்டுவதாய் அமைந்திருக்கிறது.  விளைவாய் இன்று, தாக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள வன்னிய, பிற்படுத்தப்பட்ட கிராமங்களில், சாதியக் கும்பல் கட்டப்பஞ்சாயத்துகளைக் கூட்டி ஊர்க்கட்டுப்பாடுகளை விதிக்கிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்கு முடிவெட்டுதல் கூடாது, மாவு, நெல் அரைத்தல் கூடாது, அவர்களுடன் பேசக்கூடாது, வேலைக்கு அமர்த்தக்கூடாது போன்ற சமூகப் புறக்கணிப்புகளை அமல்படுத்துகிறது.

இக்கட்டுப்பாடுகள் வன்னிய உழைக்கும் மக்களிடமும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. வன்னிய மக்களின் வாழ்வாதாரத்திற்கே இவை தடையாக மாறியிருக்கிறது. மாறாக, வன்னிய மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு நாங்களே காரணம் என்ற குரோதத்தை சாதியக் கும்பல் வளர்க்கிறது. சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோரை ஒதுக்குவது, அவர்களின் வீட்டை அடித்து நொறுக்குவது என எமக்கு எதிராக புதிய சாதியச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

ஒரு வருடம் கடந்தும், 144 தடைச்சட்டம் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைவைத் தடுக்கும் சட்டமாகவே போடப்பட்டிருக்கிறது. ஊரை எரித்தவர்களை, இப்பொழுதும் சாதிவெறி உணர்வை தீவிரப்படுத்துபவர் களைத் தடுக்க நாதியில்லாத 144 தடைச் சட்டம் எதற்கு? மோதலைத் தடுக்க என்கிறது மாவட்ட நிர்வாகம். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எம்மைப் பாதுகாக்கவா, சாதிய குண்டர்களைப் பாதுகாக்கவா?

பள்ளிகளில், கல்லூரிகளில் தொடரும் சாதிவெறி மனோபாவம் எம் பிள்ளைகளின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது. அச்சுறுத்தும் கயவர் களைக் கண்டிக்காமல் தமிழக அரசின் காவல்துறை கண்டுகொள்ளா நிலை.  விளைவாய், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் பணிமாற்றம், அச்சுறுத்தல் எனத் தொடர்கிறது...

இதுபோல் எத்தனை எத்தனை நாட்கள் எமது வரலாறு துயரங்களாய் தொடரப்போகிறதோ? இன்றும் சமத்துவத்தை மறுத்து, சக மனிதத்தை மிதித்து, பழைமையைப் போற்றி, சாதிய இழிவுகளைக் காக்க, தாழ்த்தப்பட்டோரைத் தாக்கி அழிக்கும் செயல்கள் முடிவில்லாப் பயணமாய் தொடர்கிறது. தருமபுரி முதல் மரக்காணம் வரை சாதிப் பெருமையைக் கொக்கரித்து கூட்டணி கூட்டும் ராமதாஸ் கும்பல் பாராளுமன்றத் தேர்தலுக்காய் இன்று 'தலித் அல்லாதோர் சமுதாயக் கூட்டணி'யை அமைத்திருக்கிறது.  மேலும் தருமபுரியை மையம்கொண்டு சாதிபலத்தைத் திரட்டுகிறது, புதிய வன்முறைக்கு வழிவகுக்கிறது.

எனவே, ஓராண்டு கடந்துள்ள இச்சூழலில், சாதி ஆதிக்க வெறியர்களைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்டதற்கான நீதியைப் பெறவும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஊர்க் கட்டுப்பாடுகளை முறியடிக்கவும், எதிர்வரும் வன்முறையான சாதிய சவால்களை எதிர்த்து நிற்கவும் நமது போராட்டத்தைத் தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், கட்சிகளும் எமது கோரிக்கைக்குத் துணைநின்று சமூகத்தில் தலைதூக்கியுள்ள சாதியக் கூட்டணி அரசியலை, தலித் எதிர்ப்பு மனநிலையை உடைக்க உறுதுணையாய் நிற்குமாறு நவம்பர் 7 உண்ணாநிலை போராட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறோம்.
 
சாதித் தீ எம் கிராமங்களை எரித்தாலும், உடைமைகளைச் சூறையாடினாலும், வாழ்வாதாரத்தை நசுக்கினாலும், எரிந்த தீயிலிருந்து எழுந்து நிற்போம்!
 
1.        நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய தாழ்த்தப்பட்ட கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்று!

2.       வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் நடத்து!

3.       பாதிக்கப்பட்ட எங்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை உடனடியாக நிறைவேற்று! ஒரு வருடம் கடந்தும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதில் மெத்தனம் காட்டாமல் விடுபட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக்கொடு!

4.       பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதி அருகில் எங்களின் வாழ்வாதாரம் பயனடையும் வகையில் தொழிற்சாலையை அமைத்திடு!

5.       நாகராசனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறு! நாகராசன் கொலைக்குக் காரணமான சாதி வெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்!

6.       தாக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கைக்குப் போராடுவதைத் தடுக்கும் 144 தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கு!

7.       சாதிவெறியைத் தூண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்துவரும் சாதிய கட்டப்பஞ்சாயத்துகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

8.       வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சாதி ஆதிக்க சக்திகளின் உடைமைகளை பறிமுதல் செய்!

9.       உழைக்கும் மக்களிடையே சாதிவெறியைத் தூண்டிவரும் வன்னியர் சங்கத்தைத் தடை செய்!

10.   பள்ளி, கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதி ஆதிக்க மனநிலையில் ஒதுக்கும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்!

11.   கௌரவக் கொலைகளைத் தடுத்திட சிறப்பு சட்டத்தை இயற்றிடு! சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்கு!

 சாதிவெறியை தகர்ப்போம்! தலித் அல்லாதோர் சமுதாயக் கூட்டணியை ஒழிப்போம்!
ராமதாஸ் கும்பலை புறக்கணிப்போம்! தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்!
தாழ்த்தப்பட்ட, வன்னிய உழைக்கும் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்!
 
- தர்மபுரி - நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம பொதுமக்கள்
 9003458338, 8508239715

Pin It