அன்பார்ந்த தோழர்களே!

“தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று ஊருக்கு வெளியே காலனிகள் கட்டிக்கொடுக்கிறார்கள். புதிய பறைத்தெரு என்று பேர் பெறும்படிதானே அமைகின்றது. இவற்றின் மூலம் சாதி ஒழிந்துவிடாது. நன்மை செய்ததாகவும் அர்த்தமாகாது. அக்கிரகாரத்திலோ அல்லது சாதி இந்துக்கள் வாழும் தெருவிலோ பத்து வீடுகளை வாங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடியிருக்க கொடுத்தல் வேண்டும். இதுபோன்ற செயல்கள் மூலம்தான் சாதி ஒழியுமே தவிர தனிக்காலனி, தனிக்கிணறு, தனிப்பள்ளிகள் என்பவற்றின் மூலம் ஒருபோதும், ஒழியாது” _ தந்தை பெரியார், 1964.

நந்தனில் தொடங்கி கீழ்வெண்மணியில் 44 பேரை எரித்த தீ இன்று சிங்காரச் சென்னைக்காக ஆயிரக்கணக்கான குடிசைகளை எரித்துக் கொண்டிருக்கிறது. பார்ப்பனிய வர்ணாசிரமக் கட்டமைப்பு முளைவிடத் தொடங்கியச் சொத்துடைமை சமூகத்திலிருந்து சாதிய நிலவுடைமை வலுப் பெற்ற மத்தியக்காலத்திலும் இன்றைய பெருமுதலாளிகளுக்கான நவீன உலகமயமாக்கல் காலகட்டத்திலும், சாதியக் கட்டமைப்பில் கடைநிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காக முதலில் பலியாக்கப் பட்டுள்ளனர்.

இத்துடன் இந்துத்துவ வர்ணாசிரமும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை சமூக, பொருளாதார அரசமைப்புகள் பல்வேறு மாற்றமடைந்து வந்திருந்தாலும் சாதியக் கட்டமைப்புகள் மட்டும் சிதைவின்றி காப்பாற்றப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது.

“ஏகாதிபத்தியத்தின் அதிகாரமும் வலுவும், அதனால் ஆளப்படும் வர்க்கங்களின் பலவீனத்தில் தங்கியுள்ளன. இந்துக்களின் சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் ஒன்றுதிரண்டு நிற்கிறது. நமது சமூகநெறிகளும் மரபுகளும் ஒற்றுமையைச் சீர்குலைப்பவன வாகவும் சமூகப் பிரிவினைக்கு உறுதுணைபுரிவனவாகவும் உள்ளன. இதன் காரணமாகத் தான் இங்கு ஏகாதிபத்தியத்தால் தனது அடித்தளத்தை வலுப்படுத்திக்கொள்ள முடிகிறது. இன்னும் தொடர்ந்து இருக்க முடிகிறது.” - புரட்சியாளர் அம்பேத்கர்

இந்திய அரசின் புதிய விவசாயக் கொள்கையினாலும் சாதி இந்துக்களின் நேரடியான சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாலும் கிராமப்புற விவசாயப் பாட்டாளிகளான சேரி மக்கள் நகரங்களை நோக்கி விரட்டியடிக்கப் பட்டனர். 90களுக்குபின் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்கள் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வியாபார மையங்களாகவும், மூலதனக் குவிப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவும் மாற்றமடைந்துள்ளன. இதன் விளைவாய் தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நகரமயமாக்கலின் வளர்ச்சி 55 சதவிகிதத்தைத் தாண்டி உள்ளது. பெருமுதலாளிகளின் நலன்களுக்கான இந்த நகர வளர்ச்சி அடித்தட்டு உழைக்கும் மக்களின் உழைப்பை உறிஞ்சியே நடைபெற்று வருகிறது.

நிலம், கடல், கனிமம் மற்றும் மனிதவளங்களைக் கொள்ளையடிக்கும் இலாபவெறி கொண்ட பன்னாட்டுப் பெருமுதலாளிகள் வனங்களிலிருந்து பழங்குடி மக்களையும், கடலோரங்களிலிருந்து மீனவர்களையும், நிலங்களிலிருந்து சிறு குறு விவசாயிகளையும் விரட்டியடிக்கின்றனர். அதைப்போல நகர்ப்புறங்களில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக பெரிய பெரிய தொழிற்சாலைகள், பறக்கும் சாலைகள், பணக்காரர்கள் பொழுதுபோக்குவதற்காக வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள், அவர்தம் கண்களைக் குளிர வைக்கப் பூங்காக்கள், மாட மாளிகைகளையும் அமைத்து, இந்த நகரங்களை உருவாக்கப் பாடுபட்ட நகர்ப்புறக் கூலிகளான தாழ்த்தப்பட்ட மற்றும் இதர ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை இன்று நகரங்களிலிருந்து விரட்டியடிக்கின்றனர்.

“மாற்று வீடுகள் தருகின்றோம், நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள்” என்றெல்லாம் சொல்லி லட்சக்கணக்கான மக்களை நகரத்திற்கு வெளியே விரட்டியடிக் கின்றது அரசு. நாளை அங்கு உருவாக இருக்கும் துணைநகரங்களின் வளர்ச்சிக்காக மீண்டும் இவர்களின் உழைப்பைச் சுரண்ட இருக்கின்றார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட மக்கள், இன்றும் நகரத்திற்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். இந்த நகர்ப்புற நவீன சேரிகள் கல்வி, மருத்துவம் போக்குவரத்து, வேலைவாய்ப்பு போன்ற எந்த வசதியும் இல்லாமல் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே உருவாக்கப்படுகின்றது. 21 ஆம் நூற்றாண்டில் தீண்டாமை நவீன வடிவம் எடுத்திருக்கின்றது.

இந்த சாதியக் கட்டமைப்பின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி ஒடுக்குமுறையைச் செலுத்திவரும் இந்தியப் பார்ப்பனிய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்தோடு கைக்கோர்த்துக் கொண்டு சேரி மக்களை மேலும் சுரண்டுகிறது.

 பார்ப்பனிய ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அணிதிரள்வோம்!

“நமது நிலத்தைக் காக்கும்
இந்தப் போராட்டத்தில்
ஓன்று நாம் வென்றாக வேண்டும்
அல்லது நாம் கொல்லப்படுவோம்.
ஏனென்றால் தப்பி ஒடுவதற்கு
நமக்கு இடமில்லை’’
 - கென் சரோ விவா
(ஆப்பிரிக்க ஓகோனி இன மக்களின் நிலத்திற்காகப் போராடியதால் தூக்கிலிடப்பட்டவர்)

 

பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரல்:

வரவேற்புரை: பிரேம்
தலைமை : இசையரசு

சிறப்புரை
முனைவர் ஆனந்த் டெல்டும்டே
எழுத்தாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்
தோழர் பேராசிரியர். சிவலிங்கம், தலித் சுயமரியாதை சக்தி, கர்நாடகா

கலைநிகழ்ச்சிகள்
 
சாதி ஒழிப்பிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் இடையிலான உறவு குறித்து தோழர் ஆனந்த் டெல்டும்டேவின் சிறு நூல் வெளியீடு

புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம்,  கலை நிகழ்ச்சி

இடம் : டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-4

நாள் : டிசம்பர் 26, 2010   மாலை 5 மணி

- குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்
தொடர்புக்கு: 971065373, 9094162595

Pin It