Pralayan's Drama 'Pari Padu Kalam'

இதுகாறும் நாம் கண்டும், கேட்டும், பழகியும் வந்த புராண இதிகாசங்கள், பழங்கதைகள், மரபுவழிக்கதைகள் என அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது பண்பாட்டுத் தளத்தில் பணியாற்றுகிறவர்களின் கடமையாக சமூகம் முன் வைத்துள்ளது. பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து கேட்டு வந்திருக்கிற இத்தகைய கதையாடல்கள் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவதும், மறு விசாரணை நடத்துவதும், அதன் மரபு அடுக்குகளில் மறைந்திருக்கிற அல்லது திட்டமிட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கிற பேருண்மைகளை, புறக்கணிப்புகளை, இருட்டடிப்புகளை வெளிக்கொண்டுவரும்.

இத்தகைய மறுவாசிப்புக்குட்படுத்தும் நடவடிக்கைகள், இதுவரையிலான நமது நம்பிக்கைகளின் மீது அதிர்வுகளை ஏற்படுத்தி புதிய கேள்விகளை எழுப்புவதன் மூலம், புதிய சாளரங்களை திறந்து வைக்கவும் உதவுகிறது. ஏற்கனவே, இதுபோன்ற மறுவாசிப்பு முயற்சிகள், கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் அரங்கேறியிருக்கின்றன. அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்' ஒரு காத்திரமான முயற்சியாக தமிழில் வந்திருந்தது.

தமிழ் நாடகத் துறையில் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிற, சென்னை கலைக்குழுவின் தலைவரும் இயக்குனருமான ‘பிரளயன்' இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட ‘உபகதை' நாடகம் மறுவாசிப்பின் புதிய எல்லைகளையும் ருசியையும் நமக்கு தீவிரமாக அறிமுகப்படுத்தியது. அதன் நீட்சியாக இம்முறை பிரளயன், கையில் எடுத்திருப்பது தமிழ்க்குலத்தின் கருத்த வரலாற்றை. பறம்பு மலையின் மன்னன் பாரியின் கதையை ‘பாரி படுகளம்' என்ற பெயரில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் பிரளயன்.

Pralayan's Drama 'Pari Padu Kalam' புதுவை பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைக்காக, அம்மாணவர்களின் பங்களிப்புடன் தயாரித்து அரங்கேற்றப்பட்ட ‘பாரி படுகளம்', தமிழ் நாடக உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என உரக்கப் பேசலாம். மூவேந்தர்களின் பெருமை நாமறியாததல்ல. அதுவும் தமிழக அரசியல் தளத்தில் அவ்வப்போது இவ்வேந்தர்களின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்தி புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் தலைவர்களையும் தமிழகம் ‘தேமே' எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மூவேந்தர்களின் காலம் பொற்காலம் என்றும், தேனாறும் பாலாறும் அந்தக் காலத்தில் ஓடியதாகவும், கரைகளின் இருபுறமும் மக்கள் உட்கார்ந்து மொண்டு, மொண்டு குடித்து வந்ததாகவும் எழுந்த கனவுச் சித்திரங்களை இந்த நாடகத்தின் சில காட்சிகள் கலைத்துப் போடுகின்றன. கடவுளையும், தமிழையும் தமிழ்க்குடிகளையும் ரட்சித்தும் காத்தும் வந்த குற்றம்காண முடியாத குணபுருஷர்களாகவும் தமிழ்க்குல வரலாற்றின் ஆகச் சிறந்தவர்களாகவும் கட்டமைக்கப்பட்ட மூவேந்தரின் பிம்பங்களை இந்த நாடக மாந்தர்கள் போட்டுடைத்து அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள்.

‘முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி' என்ற வரிகளை யோசித்துக்கூட பார்க்க முடியாதவகையில் புளகாங்கிதம் அடைந்து கிடக்கும் தமிழ்க் குடிகளின் முன்பு, அந்த வரிகள் கற்பனைதானே தவிர, அதை நம்பி மூவேந்தர்களும் முட்டாள்களாகி சண்டைக்கு வந்து விட்டார்களே என அங்கவையும், சங்கவையும் எள்ளி நகையாடும் காட்சி ‘சுர்ர்' என உறைக்கிறது. காடும் மலையும் பாறைகளுமாக உள்ள ஒரு மலையின் நிலப்பரப்பில் ‘தேர்' ஓடக்கூடிய அளவிற்கு சமமான பாதை எப்படி இருந்திருக்க முடியும்? என்ற கேள்வியை நாடகத்தின் ஊடே பார்வையாளர்களின் மூளை எழுப்பிப் பார்த்து தனக்கு தானே தலையில் குட்டு வைத்துக் கொள்கிறது.

பறம்பு மலையை ஆண்ட ‘பாரி' மன்னனின் வாழ்வையும், மன்னனுக்கும், மக்களுக்கும் இருந்த நேச உறவையும், மலைக்குடிகள் என தரக்குறைவான நோக்கத்தில் அழைக்கப்பட்ட அம்மக்களுக்கு தங்கள் மலையின் மீதும், மரங்களின் மீதும், வனத்தின் மீதும் இருக்கும் ஒப்பற்ற அன்பையும், காட்சிகளாக பதிவு செய்திருக்கிறது நாடகம். பாரி மன்னனை வீழ்த்த மூவேந்தர்களும் செய்யும் சதியாலோசனையும், வெற்றி பெற்ற பிறகு பறம்பு மலையை பங்கிட்டு கொள்வது பற்றி அவர்கள் நடத்தும் பங்கீடு காட்சியும், மண் பிடிப்பதிலும், பெண் பிடிப்பதிலும் அவர்களுக்கிருந்த வேட்டை மனசின் வெறியை துல்லியமாகப் படம் பிடிக்கிறது.

நாடகத்தின் பல காட்சிகளும், வசனங்களும் சமகால அரசியலை ஆங்காங்கே ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ‘கூட்டுப்படைத்தளபதி' என்ற சொல்லாடலும், மூவேந்தர்களின் கூட்டுப்படைகளும் முகமூடி அணிந்த திருடர்களைப் போல பறம்பு மலையை ஆக்ரமிப்பதும் பேராசிரியர் ரவீந்திரனின் ஒளியமைப்பில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சின்னஞ்சிறு நாடான ‘ஈராக்' மீது அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டுப்படைகள் நடத்திய ஆக்ரமிப்பும், தாக்குதலும், அந்த அரசியலும், இந்த நாடகத்தின் காட்சிகளில் எதிரொலிப்பதை துல்லியமாகப் பதிவு செய்கிறது நாடகம். சிறிய மலைநாடான பறம்புவைப் பிடிக்க மூவேந்தர்களும் செய்யும் சதிகளினூடே ஜார்ஜ் புஷ்ஷின் முகமும், டோனி பிளேரின் முகமும், நமது நினைவுக்கு வந்து போவது இந்த நாடகத்தின் மைய இழைக்கு நெருக்கமாக நம்மை கொண்டு செல்கிறது.

‘பெருங்குடி' வேந்தர்களான தங்களை விட ‘சிறுகுடி' மன்னனான பாரியின் புகழ் உயர்ந்து கொண்டே போவதை தாங்கிக் கொள்ள முடியாத ‘பெருங்குடி' மனத்தின் அடுக்குகளை, அழுக்குகளை நாடகக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக திறந்து காட்டுகின்றன. ‘சிறுகுடி'களை அழித்தொழிக்கும் ‘பெருங்குடி'களின் வர்ணாசிரமச் சூதாட்டத்தின் பகடை காயாக்கப்பட்டு ‘பாரி' மன்னன் வீழ்த்தப்பட்ட கதையை நாடகம் அதன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்று முடிகிறது.

படுகளத்தில் அம்புகளுடன் வீழ்ந்து கிடக்கும் பாரி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ‘பெரியார்' சொல் கேட்டு தவறா? என்று எழுப்பும் கேள்வியும், ‘தமிழால் ஒன்றுபடுவோம்' என்று முன் வைக்கும் யோசனையும், நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் ஒலிப்பதை நாடகம் பார்வையாளர்களுக்கு மௌனமாய் சுட்டிக் காட்டி நிறைவடைகிறது.

Pralayan's Drama 'Pari Padu Kalam' ஒன்றே முக்கால் மணி நேரம் நடிக்கப்பட்ட இந்நாடகம் பாரி வாழ்ந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் தமிழ் அடையாளங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டதே இதன் சிறப்பம்சமாகும். ‘முல்லைப் பண்'ணில் தொடங்கி, நடுகல் வழிபாடு, வீரர் வணக்கநாள், பாணர்களின் பாடல், ஆட்டம், ஆணும்பெண்ணும் கூடிக் கள்ளுண்பது, அங்கவை சங்கவையின் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் காட்சிகள், கூட்டுப்படை வீரனுடன் ஒண்டிக்கு ஒண்டியாக கத்திச் சண்டை போட்டு வீழ்த்தும் மலை நாட்டுப் பெண், வன உயிர்களை தன்னுயிர்களாக நேசிக்கும் மலை மக்களின் மனம், மலைவளங்களை வணிகத்தின் வேட்டை காடாக்க மறுக்கும் பாரியின் மனம், மூவேந்தர்களின் ‘பெருங்குடி' பெருமிதம் என எல்லாவற்றையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பிரளயன்.

நாடகத்தின் முழு வண்ணமும் மலையின் ‘செம்மண்' வண்ணத்திலேயே இருந்தது நம்மை காட்சிகளோடு ஒன்றிவிட வைக்கிறது. நாடகம் முழுவதும் ஒரு நடிகனைப் போலவே ஒளியமைப்பும் ஒரு பாத்திரமாகி நாடகம் முழுவதும் தொடர்கிறது. தனது ஒவ்வொரு படைப்புகளிலும் கண்ணுக்கு சட்டென புலப்படாத அரசியல் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பார் பிரளயன். இந்த நாடகத்திலும் அது தொடர்வதையும், அவை வெடிக்கும்போது பார்வையாளர்கள் அதிர்வதையும் அரங்கில் காணமுடிந்தது.

புதுவை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பில், 35 நாட்கள் உழைப்பில் பிரளயன் உருவாக்கிய இந்நாடகத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் நல்ல தமிழில் பேசி நடித்ததை குறிப்பிட வேண்டும்.

நாடக அரங்கில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னதைப் போல 2000 ஆண்டுகால தமிழ் வரலாற்றில், முதன் முதலாக முழுமையாக வந்திருக்கிற தமிழ் நாடகம் இது.

பின்குறிப்பு: அங்கவை, சங்கவை என்ற பாரி மகளிரை தனது படத்தில் கேவலமாக சித்தரித்த இயக்குனர் ஷங்கரும், அதற்கு வாயைப் பிளந்து சிரித்தபடி ‘தமிழ்ப்பணியாற்றி' துணைபோன பாப்பையா வகையறாக்களும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த நாடகத்தை எங்காவது பார்த்து, சாப விமோசனத்தை தேடிக் கொள்வார்களாக...

- எஸ்.கருணா

Pin It