கிட்டத்தட்ட 164 பக்கங்கங்களை கொண்ட இந்நூல் தமிழ்ப் புத்தகலாயத்தின் (சென்னை) வெளியீடாகும். எம். இஸ்மத் பாஷா அவர்கள் இதனை தமிழிலே மொழி பெயர்த்துள்ளார்.

ஜுலியஸ் பூசிக் செக்கோஸ்லோவாக்கிய நாடு எமக்களித்த மாபெரும் சிந்தனையாளராவார். அவர் ஆசிரியர், பத்திரிகையாளர், கலை இலக்கிய நிபுணர், இசைக் கலைஞர் எனப் பல்துறை ஆளுமைகளை கொண்டவராக விளங்கியவர்.

1930களில் இட்லரின் ஆட்சிக் காலப்பகுதி மிகுந்த இருண்ட நாட்கள் என்பதில் சந்தேகமில்லை. முதிர்ந்த பாசிஸத்திற்கும் இந்த காலப்பகுதிக்குமான எல்லைக் கோட்டை காண்பதில் உள்ள சிரமத்தை விட ஒப்புவமைகளைக் கண்டு கொள்ளுதல் எளிதாய் அமையும். கொன்று குவிக்கப்பட்ட மனிதர்கள் போக மக்கள் இயக்கங்களும், அதன் பத்திரிகைகளும் சட்டவிரோதமாக்கப்பட்டன. இவ் வரையறைக்குள், இப்பாசிஸத்தின் கனதியான பரிணாமங்களை இவை தரிசிக்க தவறவில்லை. ஆனால் இவ்வாறானதோர் சூழலிலும், தம் செயற்பாடுகளுக்கு வியூகம் அமைக்க முற்பட்ட பூசிக் 1942 இல் இட்லரின் ரகசிய போனிஸ் படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளான பின் 1543 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி பெர்லினில் கூடிய நாஜிக் கோர்ட் அவருக்கு மரணத் தண்டனையை விதித்தது.

வாழ்வில் பல சமரசங்களை கைவிட்டும், சிதைந்த சிதைவுறும் ஆளுமையின் மத்தியில் மனித குலத்தின் கம்பீரத்தையும், மௌனத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு காத்திரமான முறையில் தேக்கி தரவும் முற்பட்டது இவரது வாழ்வு. அத்தகைய நாகரிகத்தை தமது மூச்சு காற்றாக கொண்டிருந்தமையினால் தான், மரணத்தின் வாயிலில் நின்றுக்கொண்டு கூட அவரால் “தூக்கு மேடைக் குறிப்பு ” எனும் மகத்தான படைப்பை எமக்களிக்க முடிந்தது.

பூசிக் பான்கிராப்ட்ஸ் சிறையிலிருக்கும் போது பல குறிப்புகளை எழுதியுள்ளார். அவரது அறைக்கு பென்சிலையும் காகிதங்களையும் கொடுத்து உதவியதுடன் மட்டுமன்று எழுதிய குறிப்புகளை வெளியிலே கொண்டு சென்று அவற்றினை பாதுக்காத்தவர் ஏ. கோலின்ஸ்கி என்ற செக் காவலாளியாவார்.

1945 - ஏப்ரலில் நாஜி அரசாங்கமானது, ஜேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர், கைதிகளையெல்லாம் விடுதலை செய்தனர். அவர்களை சித்திரவதை செய்து சாக்காட்டிலே தள்ளிவிட பாசிஸ்ட் வெறியர்களுக்கு அவகாசம் கிட்டவில்லை. அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் பூசிக்கின் மனைவி அகுஸ்தினா பூசிக், பூசிக்கின் வாழ்க்கை சரித்திரத்தின் கடைசி அத்தியாயத்தை எமக்களித்த பெருமை இவரையே சாரும்.

மனித குல வரலாற்றிற்கு, பூசிக் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது. தானே தன்னளவில் ஒரு தலைமுறையின் காத்திரமான பிரதிநிதியாக இருந்தும், தன் சிறைக்காலத்தின் அனுபவங்களை புதிய தலைமுறையினருக்கு நம்பிக்கையுடன் தேக்கி தரமுற்படுகின்றார்

அவரது நம்பிக்கை கீற்று. இப்படியாய் பிரவாகம் கொள்கின்றது.
“நான் திரும்பவும் சொல்கின்றேன்
நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றோம்

அதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அதற்காகவே சாகின்றோம்.
எங்கள் பெயர்களில் துக்கத்தின் சாயல்
ஒருப்போதும் அணுகாதிருக்கட்டும்”

இத்தகைய கம்பீரத்தை - எத்தகைய புரட்சிக்குமுரிய முன் நிபந்தனையாகிய கம்பீரத்தை தம் காலத்து தலைமுறையினரிடம் கையளிக்கின்ற போது வாழ்விலிருந்து அந்நியப்பாடாலும் தொலைத்தூர தீவுகளுக்குள் ஒதுங்கி விரக்த்தியில் மூழ்காமலும் வாழ்க்கையை இவர் எதிர் கொண்ட விதம் திடுக்கிட வைக்கும் அளவுக்கு வளம் சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

செவ்வம் கொழிக்கும் நாடுகளில் பிச்சையெடுப்பதன் மூலம் தனது கம்பீரத்திற்கும், வயிற்றுப் பிழைப்பிற்கும், வழிதேடிக் கொண்ட புத்தி ஜீவிகளும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும் இத்தகைய நாகரிகங்களை இழிவுப்படுத்தியும், இவை சார்ந்த தத்துவங்களை திரிபுபடுத்தியும் காட்ட தவறவில்லை. முதலாளித்துவத்தின் அடக்குமுறைகளை கோரப்படுத்தியோ, அல்லது விகாரப்படுத்தியோ அவை காடடுகின்றன. என்.ஜி.ஓ (Nபுழு) எனும் சமூக நிறுவனங்கள் ஏகாதிப்பத்திய முதலாளித்துவ நாடுகளின் ஆசிர்வாதத்துடன் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றன. இத்தகைய முயற்சிகள் நடந்தேறுகையில் முதலாளித்துவம் தனக்குள் புன்னகைத்துக் கொள்வதாகவே படுகின்றது.

இந்த சூழலில் கம்யூனிஸ்ட் ஒருவர் புரட்சியின் மீது நம்பிக்கையை தரக்கூடிய எழுத்துக்களை படையுங்கள் என்பதற்கு ஜீலியஸ் பூசிக்கின் படைப்புகள் எமக்கு ஆதாரமாய் அமைத்துக் காணப்படுவதில் வியப்பொன்றுமில்லை.

இன்னொரு புறமாய் - இரு உலக மகாயுத்தங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஏகாதிப்பத்தியும் பாசிசமும் உச்ச வளர்ச்சியடைந்திருந்ததன் விளைவாக மக்கள் மீதான சுரண்டலும் ஆக்கிரமிப்புகளும் கட்டவிழ்ந்து விடப்பட்டிருந்தன. இத்தகைய பின்னணியில் பல புத்திஜீவிகள் சமுதா பிரச்சிணைகளிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் விலகி நின்றனர். தனிமனித பிரச்சனைகளுக்கு உடன் பிறந்த இயல்பூக்கங்கள் இளம் பருவ பதிவுகளுமே காரணம் என்ற சித்தாந்தம் சிகமன் ப்ரொய்ட் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டன. இத்தகைய பார்வை குறித்து மாக்ஸிம் கார்க்கியின் கூற்று இவ்வாறு அமைத்துக் காணப்படுகின்றது.

“ஒரு நீதி நெறிக்கொள்கையை உருவாக்க ஒருவரையொருவர் கடித்து தின்பதற்கு வெறிக்கொள்ள இவர்கள் முயன்றனர். கூர்மையான தன்னுணர்வும் தன் நோக்குமுடையவர்கள் தங்களைப் போல அடுத்தவர்கள் இருந்தால் பொறாமையும், பகைமையும் கொண்டனர். மனித உறவுகளில் ஒருவர் மற்றொருவர் மீது பொறாமையும், சந்தேகமும் கொள்வது சாதாரண நிலைமையாயிற்று. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் கால வழக்கமாயிற்று. நல்ல உடல் நலமுள்ளவர்களாகவும் ஆயினர். நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்களை அலட்சியத்தோடு அற்பமாக நினைக்கும் மனநிலைக்கு மாறினர். நமது அறிவாளிகளின் தனிமனித “சுதந்திர உணர்வு “சித்திப் பிரமைக்கும் முழுப் பைத்தியத்திற்கும் அவர்களை ஆளாக்கியது. இவ்வாறு “தனி மனிதம்” என்ற கொள்கையுடையவர்களது உள்ளங்கள் ஒடிந்து மனம் குழம்பி உயதர்வு எண்ணங்கள் குன்றி பள்ளத்தில் வீழ்ந்து விட்டனர். இவர்கள் மனநோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறார்கள். தங்கள் மீது கழிவிரக்கம் கொண்டு கதறுகிறார்கள். தங்கள் மீது பிறரும் இரக்கம் காட்ட வேண்டும் என்று உரக்க கூவுகின்றார்கள்

இத்தகைய கொள்கையை பூர்ஷவா உலகம் மிகுந்த பிரபலத்துடன் வரவேற்றது. போருக்கு பின் முதிர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் சமுதாய முரண்பாடுகள் சமுதாயத்தை சீரழித்துவிடும் அதனை மனிதனால் தடுத்து நிறுத்த முடியாது என்ற இவர்களின் ஓலம் வாழ்க்கை மீதான அருவருப்பையும் அச்சத்தினையும் ஏற்படுத்துவதாக அமைந்துக் காணாப்பட்டன. இந்த பண்பினை டி.எஸ். எலியட் எஸ்ராபௌன்ட், ஜேம்ஸ் முதலானோரின் இலக்கிய படைப்புகளில் காணக்கூடியதாக உள்ளன.

இதன் மறுபப்புறமாய்! உழைக்கும் வர்க்கமும், அதன் நேச சக்திகளும் ஏகபோகங்களையும் ஆதிக்க சக்திகளையும் எதிர்த்து புதிய சமூகமாறுதலுக்காக போராடிக் கொண்டிருந்தார். அத்தகைய மாறும் அணியின் தாற்பாரியத்தை எமக்கு தருவதாகவே “தூக்கு மேடை குறிப்பு” எனும் இந்நூல் அமைந்துள்ளது.

வேறு வார்த்தையில் கூறுவதாயின் இம் மனிதனில் வெளிப்பட்டு நிற்கும் இவ்வுணர்வு ஒரு சிந்தனையாளன் ஆழவும் முறைப்பட்டுக் கொள்ளவும், வரவுகளை அள்ளித் தெளிக்கவும் நம்பிக்கையின்மையில் தோய்ந்து சகதியில் புரளவும் அமைந்த சந்தர்ப்பங்கள் இருந்தும் வாழ்வை இப்படியாக ! ஆக்கப்பூர்வமாய் சித்தரிப்பது கம்யூனிஸ்ட் ஒருவரின் ஆன்ம பலத்தையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

சிறைக்காலத்து அனுபவங்களை கூறுகின்ற அதேவேளை தன் சக தோழர்கள் குறித்தும். கொடூரமிக்க சிறையதிகாரிகள் குறித்தும் யாவற்றுக்கும் மேலாக தன் சிறைக்காலத்திலும் கூட மனித குலத்தின் விடுதலைக்காய் தாம் எடுத்த எத்தனிப்புகள் குறித்தும் இந்நூல் மிக அழகாய் படம் பிடித்துக் காட்டுகின்றது. நாகரிகத்தின் இருவேறுப்பட்ட முரண்களை இப்படியாய் சாடுகின்றார் ஓர் ஒப்புவமை வசதி கருதி இரு அதிகாரிகளின் பண்புகள் பொறுத்து அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாக்கம் கொள்கின்றன.

“வினோஹாhர்டியில் பத்து வருடங்களுக்கு முன்பு புளோரா கபேயில் சிற்றுண்டி அருந்திவிட்டு, மேஜையில் பணத்தால் தட்டி “ஹெட் வெயிட்டர் பில் எங்கே?” என்று கேட்க வாயெடுப்பதற்குள், ஒரு நெட்டையான ஒல்லிப் பேர்வழி உள்பக்கத்தில் வந்து நிற்பான். அவன் நாற்காலிகளுக்கு இடையே, துளி கூட சந்தடியில்லாமல் புகுந்து நீர்ச்சிலந்தி போல நகர்ந்து உன் அருகே வெகு விரைவாக வந்து மேஜை மேல் பில்லை வைத்திருப்பான், மனிதனை அடித்து சாப்பிடும் மிருகத்தை போல் மிக, மிக விரைவாகவும் சந்தடியில்லாமலும் நகர கூடிய ஆற்றல் அவளுக்கு இருந்தது. எதையும் பார்த்த கணமே உணரும் அம்மிருகங்களின் கண்களும் அவனுக்கிருந்தன. நீ உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட அவனுக்கு சொல்ல வேண்டியதில்லை.”

..................

அவன் பிறவியிலேயே புத்திசாலி. மற்றவர்களிடம் இல்லாத ஒரு விசேஷம் என்னவென்றால், அவன் கிரிமினல் போலீஸ் இலாகாவில் வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கீர்த்தி அடைந்திருக்கலாம். சிறிய கிரிமினல் குற்றவாளிகள், கொலைக்காரர்கள், சமுதாயத்தில் வேரில்லாதவர்கள், முதலியவர்கள் தங்களுடைய தோலைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே கவலைப்படுகிறார்கள். ஆதலால் அவனிடம் மனதைத்திறந்து விஷயம் முழுவதையும் சொல்லியிருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட சுயநவமிகள், அரசியல் போலீஸிடம் அதிகமாகச் சிக்குவதில்லை. இங்கே போலீஸார், தங்கள் கையில் சிக்கிய ஒருவனுடைய யுக்தியை மட்டும் போலீஸ் யுக்தியினால் சமாளிக்கவில்லை அதைவிடப் பெரிய ஒரு சக்தியைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு உறுதியான கொள்கைப் பிடிப்பையும், தங்கள் வசப்பட்ட நபர் சேர்ந்திருக்கும் கோஷ்டியின் புத்திசாலித் தனத்தையும் எதிர்த்து அவர்கள் சமாளிக்கவேண்டியிருக்கிறது. தந்திரமும் அடி உதைகளும் கொள்கைப் பிடிப்பை உடைக்க முடியாது.

பிறிதொரு மனிதன் குறித்து தனது தூரிகையை இவ்வாறு நகர்த்தி செல்கின்றார்.

“யாருக்கு தொந்தரவு ஏற்பட்டிருக்கிறது. வெளிநிலமையைப் பற்றி யாருக்கு சில உற்சாக வார்த்தைகள் கூற வேண்டும் என்பதெல்லாம் எப்படியோ அவருக்கு பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விடுகின்றது. மனத்தத்தளிப்பை எதிர்த்து சமாளிக்க ஒருவனுக்கு மன வலு வேண்டியிருக்கும் போது தன்னுடைய வாஞ்சையினால் யாருக்கு உற்சாகமூட்ட வேண்டும்: என்பது அவருக்குத் தெரியும். அடுத்து வரும் பட்டினித் தண்டனையை தாக்குப்பிடிக்க யாருக்கு ஒரு துண்டு ரொட்டி, அல்லது ஒரு அகப்பை “சூப்” அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்த விசயங்கயெல்லாம் அவருக்கு தனது சொந்த அனுபவத்தாலும் இளகிய உள்ளத்தினாலும் தெரிகிறது. தெரிந்தவுடன் ஒவ்வொருக்கும் அவசியமானவற்றை செய்கின்றார்.

அவர் தான் அப்பாஸ் கொரியா, ஒரு படை வீரன், வலுவானவன் - தைரியசாலி - நிஜமனிதன். நாகரிகத்தின் இரு வேறு முரண்பட்ட அர்த்தங்களை பரிணாமங்களை, வீச்சுக்களை இங்கே சந்திக்கின்றோம். ஜூலியஸ் பூசிக், தூக்கு மேடை குறிப்பு எனும் இந்நூலின் ஊடாக மனித குலத்திற்கு வழங்கிய மகத்தான பங்களிப்பு குறித்து நோக்குகின்ற போது மாஓ கூறிய சில வரிகள் ஞாபகத்திற்கு வருக்கின்றன.

நமது வேலைகளில் பொறுப்பற்றவர்களாக நடந்துக் கொள்பவர்கள் அநோகர் உள்ளனர். இவர்கள் பளுவானவற்றை காட்டிலும் இலகுவானவற்றை நல்லதென்று ஏற்றுக்கொண்டு, பிறருக்கு பளுவானவற்றை தள்ளிவிட்டு எளிதானவற்றை தமக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். எந்தபணியிலும் அவர்கள் தம்மைப் பற்றி தான் முதலில் நினைக்கின்றார் பிறகுதான் மற்றவர்களைப் பற்றி இவர்கள் ஏதேனும் கொஞ்சம் நஞ்சம் செய்து விட்டால் கர்வம் தலைக்கேறியிருக்கும். அது தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதைப் பற்றித் தம்பட்டம் அடிப்பார்கள். இவர்கள் தோழர்கள் பேரிலும் மக்கள் பேரிலும் மனமார்ந்த அன்பைக் கொண்டவர்கல்லர். ஆனால் உணர்ச்சியற்றவர்களாளக, அக்கறையற்றவர்களாக, அலட்ச்சியமிக்கவர்களாக இருப்பவர்கள். உண்மையில் இத்தகையவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். உண்மையான கம்யூனிஸ்டுகள் என கருதப்படவே முடியாதவர்கள”

நம்மில் விவேகமுள்ளவர்களும் உணர்வுகளும் அநேகம் ஆனால் ஏதாவதொன்றில் தன்னை அர்ப்பணித்து கொள்ள எத்தனை பேர் தயார்? போராட்டங்கள் யாவும் குவிந்த பின்னர் எம்முடன் இணைந்துக் கொள்ளலாம் என்ற எண்ணமா? என்ற கேள்விகளின் பின்னணியில் பூசிக்கின் பங்களிப்புக் குறித்து நோக்குகின்ற போது அவர் தன்னைப் பற்றி சிந்தனை ஏதுவுமின்றி, பிறருக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். இத்தகைய ஆளுமைப் பின்னணியே தூக்குமேடை குறிப்பு எனும் மகத்தான நூலை, அவரால் இத்தகைய வலிமையுடன் வெளிக்கொணர முடிந்தது.

இறுதியாக இந்நூலின் மொழிப்பெயர்ப்புப் பற்றிக் கூறுவதாயின் இஸ்மத் பாஷா அவர்கள் தமிழிலே எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார். பூசிக்கின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகிய தூக்கு மேடை குறிப்பு நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததன் மூலம் தமிழுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளார். உலகலாவிய ரீதியில் உழைக்கும் மக்கள் கலைகளிலும், அரசியலிலும் தமது அடையாளங்களை இழந்து நிற்கும் இன்றைய நாளில் பூசிக்கும், அவரது நாகரிகமும் சில சமயங்களில் பின் தள்ளப்படுவது தற்செயல் நிகழ்ச்சியல்ல.

எமது யாசிப்பு இத்தகைய மானுட அணியிற் கால்பதித்து நிற்பதாகும். இதுவே இந்த மகத்தான வீரனுக்கு நாம் வழங்கும் அஞ்சலியாகும்.

- லெனின் மதிவானம்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It