தமிழ் இலக்கிய பரப்பில் ஓர் அற்புதம். ஆச்சரியம்.தவிர்க்க முடியாத இலக்கியம். காலத்தால் அழியாத காவியம். இப்படி எப்படி வேண்டுமானாலும் புகழத்தக்க வண்ணம் பல சிறப்புகளைக் கொண்ட ஒரு நாவல் கன்னி. இத்தனை வருட கால எனது வாசிப்பில் என்னை மெய் மறக்கச் செய்த, உறங்க விடாமல் செய்த ஓர் அழகிய படைப்பு. கவிதை உலகில் ஒரு பித்தனாக அறியப்பட்ட ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் சிறந்த படைப்பு.. தமிழ் உள்ளளவும் இந்தப் படைப்பு இருக்கும். தமிழின் அலங்கார கிரீடத்தில் ஒரு மாணிக்கக் கல்லாக ஒளி விடும்.. தமிழினி வெளியீடாக 2006 ல் வந்திருக்கும் இந்த நாவல் தமிழினி வெளியீட்டில் ஒரு சிறந்த வெளியீடு எனத் தயங்காமல் கூறலாம்.

Kanni Novelஒவ்வொரு அத்தியாயங்களைப் படித்து முடித்த ஒவ்வொரு இரவும் உறக்கம் கலைத்து, உறங்க விடாமல் செய்த காவியம். எந்தப் படைப்பும் என்னை இப்படி இம்சித்ததில்லை. உறக்கம் தொலைத்ததில்லை. சந்தனப் பாண்டியாகப் பைத்தியம் பிடித்த மனநிலைக்குக் கொண்டு சென்றதும் இல்லை. சந்தனப் பாண்டி, அமலா அக்கா, மரிய சாரா என முப்பரிணாமத்தில் சுழலும் நாவல், பேசாத விசயங்களை எந்தக் குறையம் சொல்லாமல் பேசிச் செல்கிறது. இதுதான் இந்தப் படைப்பின் மிகப் பெரிய வெற்றி.

பெரும்பாலான படைப்புகள் படைப்பாளியின் சுய அரிப்பைச் சொரிந்து கொள்ளும் களமாக ஆகிவிட்ட இக்காலத்தில், எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல், மிகப் பெரும் விசயத்தை, அதன் தர்க்க நியாயத்தை, அநியாயத்தை நம் முன் வைத்துப் போகும் ஒரு வேலையை மட்டுமே இந்த நாவல் செய்கிறது. நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும் ஒரு சமுதாயத்தின் மதம், நம்பிக்கைகள் குறித்த, விமர்சனங்களைக் கூட, நாசூக்காகச் சொல்லிச் செல்கிறது. சந்தனப் பாண்டியின் மனவுலகம், அதில் ஏற்படும் மாற்றங்கள் என ஒவ்வொன்றும் மிக இயல்பாகவும் ஆழமாகவும் அமைந்தள்ளது. நாவலில் வரும் கவிஞர்களான ராஜ மார்த்தாண்டன், தேவதேவன், கதைக்களம் என அனைத்தும் இந்த நாவலில் கூறப்படும் விசயங்கள் உண்மையோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பாண்டி - அமலா அக்கா ஆகிய இருவருக்குமிடையேயான அன்பை மிக அழகாகவும், ஆழமாகவும் எடுத்தக் காட்டும் இந்நாவல், உறவுகளை வெறும் சதைத் துணக்குகளாகப் பார்க்கும் சமூகத்திலிருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. அன்பின் ஆழத்தை, “இப்படியே இருந்தா பைத்தியமாயிருவேடா… கத்தினாள். உதடுகள் துடிக்க முகம் கலைய அழுகையை அடக்கியவாறு அழுத்தமாகச் சொன்னாள், “இல்லன்னா நான் சாகணும்” (ப.249) என்கிற வரிகள் உணர்த்தி விடுகிறது. பாண்டிக்கும் அமலாவுக்குமான உறவு ஓர் அழகிய துன்பியல் ஒவியத்தை மனதிற்குள் வரைந்து போகிறது. இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தினைப் போல அழகியலும், துன்பியலும் நிறைந்து காணப்படுகிறது. அமலாவின் ஒரு வாலாக உடன் நடக்கும் பாண்டி, அமலாவிடம் உயிராக இருக்கிறான். அமலாவும் அப்படித்தான். அண்ணன் தங்கை உறவினை இந்தளவுக்கு அழகாகத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் சொன்னதில்லை.

மரிய சாராவுக்கும் பாண்டிக்குமான காதல். இதுவும் ஓர் அழகிய துன்பவியல் ஓவியம்தான். இருவருக்குமான காதல், ஒரு மலரைப் போல குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்து ஓர் அமரத் தன்மையை எய்தி விடுகிறது. இங்கிருந்துதான் இந்த நாவலின் கதையே ஆரம்பமாகிறது எனலாம். ஒரு கவிஞனான பாண்டியின் மனநிலை எப்படியெல்லாம் மாற்றம் கொள்கிறது என்பது மிகத் தெளிவாக விவரிக்கப்படுகிறது.

பைத்திய மனநிலை எப்படி இருக்கும், பைத்திய மனநிலைக்கு ஆளானவர்கள் எப்படி சிந்திப்பார்கள், எப்படிச் செயல்படுவார்கள், அவர்களது உலகம் எப்படி இருக்கும் என்பதை, உலக இலக்கியங்கள் எதுவும் பேசியிருக்கிறதா என்பது தெரியவில்லை. தமிழ் இலக்கியங்கள் இப்படிப் பேச வில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். பைத்தியமான பாண்டியின் அக உலகம், மாயங்கள் நிறைந்ததாகவும், குழந்தைத் தனமானதாகவும், வேடிக்கைகள் நிரம்பியவையாகவும், ஆச்சரியங்கள் கொண்டவையாகவும், சதா கனவுலகில் சஞ்சரிக்கும் ஒரு தனிமனித உலகாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. மனநிலை பிறழ்ந்தவர்களின் உலகம் இப்படித்தான் இருக்குமா? என்கிற சந்தேகத்தையும் எழுப்பகிறது. இருப்பினும் இந்தப் புனைவு அழகாகவும், ஆச்சரியங்கள் கொண்டதாகவும், வலி நிரம்பியதாகவும், உயிரின் ஒவ்வொரு அணுவையும் ஊசி கொண்டு குத்துபவையாகவும் உள்ளன.

நாவலின் ஆரம்பம்;, அமைப்பு, போக்கு என அனைத்தும் ஒரு மனநிலைப் பிறழ்வு போலவே அமைந்தள்ளது எதார்த்தமானதா? அல்லது ஆசிரியரின் திறனா என்பது விளங்க வில்லை. அந்தப் பிறழ்வு கூட, நம்மைப் பாண்டியின் மனநிலைக்கு அணுக்கமாகக் கொண்டு செல்லப் பயன்படுகிறது என்பதோடு, அவனைப் போலவே அவனோடு பயணிக்கவும் வைக்கிறது. அமலா அக்காவின் கரம் பிடித்து நடக்கவும், சைக்கிளில் பறக்கவும் வைக்கிறது.

மனம் உடைந்து ஆழ் கடலுக்குள் ஒரு கல்லாகச் சமைந்து விடும் தருணங்களை இந்தச் சமூகம் ஏராளமாகப் பாதகாத்து வைத்திருக்கிறது. அதற்கு ஒழுங்கு, தர்மம், சடங்கு, நம்பிக்கை, பாரம்பரியம் என ஏதேதோ சொல்லிக் கொள்கிறது. எல்லாம் எதற்கென்கிற கேள்வி எழுக்கிற வரையிலும் தொடர்கிறது. சந்தனப் பாண்டியின் வாழ்வில் இரண்டு பெண்கள் இடையீடு செய்கிறார்கள். ஒரு பெண் சகோதரி, அக்கா என்கிற உறவாக வந்து அவனைச் செழுமைப் படுத்துவதிலும், அன்பைப் பகிர்ந்து கொள்வதிலும், அவனது பேரன்பிற்குப் பாத்திரமாவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறாள். தனது உறவில் அக்காவாக வரும் அமலாவிடம், அமலா அக்கா என உயிராக இருக்கிறான் பாண்டி. அவளும். இது போன்ற உறவுகள் நம்முடைய வாழ்விலும் நிகழ்வதுண்டு. மாறாத, மறக்க முடியாத உறவாக நிலைத்து விடுவதுமுண்டு. எனது வாழ்விலும் இப்படியொரு உறவிருந்தது. நான் முதுகலை படிக்கிற காலத்தில். என்னை முழுமையாக அந்த உறவு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதுவொரு அழகிய கனவு போல மனதின் அடியாழத்தில் அப்படியே இருக்கிறது. நானும் அப்படித்தான். அக்கா என்கிற ஓர் உறவில் உருகி வழிந்த நாட்கள் உண்டு. உடன் நடந்த நாட்கள் உண்டு. இன்று அவை வெறும் நினைத்து மட்டுமே பார்க்கக் கூடிய கனவுக் காட்சிகள்தான் ஆனாலும், ஒரு கட்டத்திற்கு மேல் தொடராமல் விலகி விடுகிறோம்.. ஆனால், சந்தனப் பாண்டியின் மனநிலையில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தி அவனை விட்டு விலகி விடுகிறாள் அமலா. அது அவனுள் மிகப்பரிய மனச்சிதைவை ஏற்படுத்தி விடுகிறது.

அதுபோலத்தான் மரிய சாராவும். பத்து நாட்களுக்குள் ஒரு பேரன்பை, துயரமும் மகிழ்வும் கலந்து நிகழ்த்திக் காட்டி, இந்தச் சமூகச் சிறைகளுக்குள் அமலா அக்காவைப் போல மறைந்து விடுகிறாள். இந்த இரண்டு நிகழ்வுகளும் பாண்டிக்குள் மிகப் பெரிய சோகத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி அவனது மனநலம் பிறழ்ந்த தன்மைக்கு அவனை ஆளாக்கி விடுகின்றன. அருட்கன்னியர், அருட்தந்தையர் என்பது கிறித்தவ மதத்திற்குள் இருக்கும் புனிதமான நடைமுறை. அப்படி நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சமூகத்தை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித சமூகத்தில் மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை என்பது இதுவே. தனது உடல், மனம் சார்ந்த ஆசைகளை, வேட்கைகளை மறைத்து வாழ நிர்ப்பந்திக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயமாக இருக்க முடியும். கேரளாவைச் சார்ந்த அருட்கன்னியர் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்து, அது வழக்கான போது அந்தப் பாதிரியார் கூறியது “என்னிடம் கடவுள் அப்படி நடக்கும்படி கூறினார்” என்று. எவ்வளவு வேடிக்கை. அது நம்பும் மக்களும் இருக்கிறார்களே என்பது அதைவிடவும் வேடிக்கை அல்லவா? எனக்குத் தெரிந்து சில பாதிரிகள் இருக்கின்றனர். அதில் ஒருவர் மனதளவில் எவ்வித ஆரோக்கியமும் இல்லாதவர். ஆரோக்கியமற்றவர். ஒருசில பெண்களுக்காகப் பல ஆண்களைப் பழி வாங்கியவர். அத்தோடு இளம் பெண்களுக்கும் காம வலை வீசியவர். ஆடை மட்டுமே வெள்ளை. மனம், உடல் முழுவதும் அழுக்கு நிறைந்தவர். இப்போதும் அந்த வெள்ளை உடையை அணிந்து தனது காம வேலைகளில் ஈடுபட்டே வருகிறார். அவரது காம வலை எப்போதும் கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் மீதே விழும்.. அதில் ஒருசிலர் விழுந்து விடுவர். பின்னர் அவர்களைத் திருப்தி செய்வதற்காகவே அவர் உழைக்க ஆரம்பித்து விடுவார். அவரிடம் நான் கூறிய செய்தியை இங்கே கூறலாம் என எண்ணுகிறேன். “நீங்கள் ஒன்று ரொம்ப இன்னசென்டாக இருக்கணும். இல்லண்ணா பக்கா கிரிமினலாக இருக்கணும். நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்”. நல்ல ஆரோக்கியமுள்ள மனிதனாக இருந்தால் அந்த வெள்ளை ஆடையைக் களைந்து சாதாரண மனிதனாக அந்தப் பெண்களில் யாரையாவது மணந்து வாழ்வான். ஆனால், அவர் அப்படியல்லவே. பல பெண்களைப் பார்க்க இந்த ஆடையும் அடையாளமும் தேவையாயிற்றே. அவரது இந்தச் செயல்களுக்குச் சில பாதிரிகளும் உடந்தை. காரணம் அவர்களும் அத்தகையவர்களே.

அவரைத் தவறு சொல்ல முடியாது. இந்தச் சமூகத்தை்தான் தவறு கூற முடியும். சாதாரண உணவுகளை உட்கொள்ளும் சாதாரண மனிதர்களாலேயே தங்களது உடல் பசியை அடக்க முடியாதபோது, பாதாம், பிஸ்தா, அது இதுவென்று விலை உயர்ந்த உணவுகளை உண்டு, உல்லாசமாக வாகனங்களில் பயணம் செய்து ஓர் அரசனைப் போல வாழ்க்கை நடத்தும் இந்த வெள்ளை ஆடைகளால் எப்படி உடல் மற்றும் மன பசியின்றி வாழ முடியும். அதை எப்படி அவர்களிடம் எதிர்பார்க்க முடியும். தென்னிந்திய திருச்சபைகளில் போதகர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படியிருந்தும் அவர்களே பிறர்மனை நோக்குவதும், பிற பெண்களைப் பாலியல் வலையில் வீழ்த்துவதும் நடைபெறுகிறபோது திருமணமே செய்து கொள்ளாத கத்தோலிக்க, சீரோ மலபார், மலங்கரை கத்தோலிக்கர்களால் எப்படி தங்கள் ஆசைகளை அடக்கிக் கொள்ள முடியும். அதை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும். இந்தச் சமூக நடைமுறையை மாற்றுவதே இத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்பளிக்கும். அதுவரை இது தொடரவே செய்யும்.

பாதிரிகள், அருட்கன்னியர்கள் புனிதமானவர்கள் என்கிற இந்த நடைமுறைகள், எப்படி பாண்டியின் மனநிலைக்குள் மாயா ஜாலங்களை நிகழ்த்துகின்றன என்பதே இந்த நாவலின் மையப் பொருளாக அமைகிறது. விருப்பமே இல்லாமல், துறவறம் ஏற்பதன் விளைவு என்ன என்பதை இந்த நாவல் பேசுகிறது. உயிருக்குயிரான அக்காவும், காதலியும் தங்கள் அன்பைப் பொழிந்து, துறவறத்திற்குள் செல்வதென்பது பாண்டியின் மன நிலை மாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றது எனலாம்.

தமக்கை, காதலி என்கிற இரண்டு நீர்ச் சுழிக்கள் சிக்குண்ட துறும்பாக பாண்டியின் மன நிலை மாட்டிக் கொள்கிறது. “இனி எனக்குப் போன் செய்யாதே” (ப.249) என்கிற அமலா அக்காவின் வார்த்தைகள் அவனது மனதுக்கள் ஆழிப் பேரலலையாக மாறி மறிந்து கிடக்கும் போதுதான், காதல் என்கிற வடிவில் மீண்டுமொரு ஆழிப் பேரலை. “அவுங்க திருவிழாவுக்கு வரல. வில்லேஜ் எக்ஸ்பிரியன்சுக்காக வந்திருந்தாங்க. சிஸ்டர்ர்க்கு படிக்கிறாங்கள்லா” அவன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை” (ப. 402).

இங்கிருந்துதான் அவன் முழுமையாக ஒரு மனநலப் பிறழ்வுக்கு ஆளாகிறான். அன்புக்கும் காதலுக்கும் ரொம்ப வேறுபாடு ஒன்றும் கிடையாது. ஒரு விதத்தில் இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்குமிடையே உடலென்னும் சிறு கோடு மட்டும்தான் வேறுபாடாக. வேறென்ன வேறுபாட்டைச் சொல்லி விட முடியும். அன்பே இங்கு அனைத்துக்கும் பிரதானமானதாக இருக்கிறது. அன்பில்லாமல் போகிறபோது மனம் மரத்துப் போகிறது ஒரு கல்லென. அதுதான் இங்குப் பாண்டிக்கும் நிகழ்கிறது. இடையிடையே பாண்டி எழுதிய கவிதைகள் நாவல் முழுவதும் இடம்பெறுகின்றன. பாண்டி ஒரு கவிஞனாக இருப்பது அவனது மனநிலையை இன்னும் பேதலிக்க வைத்து விடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

மத நம்பிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் மத நம்பிக்கைகள் குறித்த, கேள்விகளை மட்டுமே நம் முன் வைக்கிறது. முடிவையும் நம்மிடமே விட்டுச் செல்கிறது. பிற்சேர்க்கை ஒன்றில், ஷெல்லி தன்னுடைய தோழி எமிலியா விவியானா, அவளது விருப்பத்திற்கு மாறாக அருட்கன்னியராகச் சென்றபோது, எழுதிய கவிதை இந்நாவலில் இடம் பெற்றள்ளது. இந்நாவலும் பாண்டியின் விருப்பத்திற்குரிய அமலா அக்கா, விருப்பமே இல்லாமல் கன்னியராகப் போவதையும், அவனது காதலி அருட்கன்னியராகப் போவதையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதில் மையமாக எழும் கேள்வி, யார் மனப் பிறழ்வுக்கு ஆளானவர்கள் என்பதுதான். பாண்டியா, இல்லை இந்தச் சமூகமா? இந்தவொரு கேள்வியையே இந்த நாவல் பேசிச் செல்கிறது ஒரு நதியைப் போல. நானும்..

நாவலை நிறைவு செய்கிற போது ஓர் ஏக்கம், பாண்டிக்குப் புத்தி தெளிந்து விடாதா? பாண்டியும் மரிய சாராவும் சேர்ந்து விட மாட்டார்களா? அமலா அக்கா அருட்கன்னியராகப் போக மாட்டேன் என்று சொல்லி விட மாட்டாளா? ஏக்கங்கள் எப்போதும் ஏக்கங்களாகவேதான் நீடிக்கிறது. இந்த ஏக்கம் சமூகத்தின் மீதான ஏக்கம். சமூகத்தின் மீதான கோபம். எப்படியும் இதிலிருந்து விடுபட சில மாதங்களாவது ஆகும். அதுவரை பாண்டியைப் போல சாராவைத் தேடிக் கொண்டும், அமலா அக்காவை நினைத்துக் கொண்டும் இந்தப் பொழுதுகள் செல்லட்டும்.

இப்படியொரு நாவலைத் தந்துள்ள ஜெ. பிரான்சிஸ் கிருபாவிற்கு மனதின் அடியாளத்திலிருந்து அன்பும் நன்றியும்.

- இராஜேஷ் பெ.செ.