'நீல இறகு' தொகுப்பில் 89 கவிதைகள் உள்ளன. தென்றலின் கவிதைகளைப் படிப்பதற்கு முன் உயிர்மை பதிப்பகம் இவரைப் பற்றித் தரும் குறிப்புகளைப் பார்க்கலாம்...

"ஒரு வனாந்திரத்தில் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டு அலையும் சிறுமியின் குதூகலமும் பேதமையும் இக்கவிதைகளை ஒளி மிகுந்ததாக மாற்றுகின்றன. கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாகிய குழந்தைமை எல்லா சந்தர்ப்பங்களிலும் நெருங்கிச் செல்ல முயலும் தென்றலின் முதல் தொகுப்பு இது."

' அன்புள்ள எறும்பே' என்ற தலைப்பில்...

நீ என்றும்
விளைச்சலுக்காக
வானம் பார்த்து நின்றதாக
ஞாபகமில்லை எனக்கு
ஏ எறும்பே
கடுங்குளிரில்
ஒரு பிடி உணவு வேண்டி
உன் வாசலில் வந்து நின்றேன்
நீயோ
கதவடைத்து
கூட்டத்தோடு கை நனைத்தாய்
உறைந்து போனேன் நான்
நல்லது
முன்பைவிட எனக்கு
இப்போது தெளிவாய்க் கேட்கிறது
பட்டாம்பூச்சியின் பாடலும்
வண்டின் ரீங்காரமும்.

இதில் விளக்க ஒன்றுமில்லை. கவிதையைப் படித்தவுடன் ஒரு எல்.கே.ஜி. மிகவும் சிரத்தையுடன் உட்கார்ந்து கொண்டு எறும்பிடம் வாய்விட்டுப் பேசும் காட்சி மனத்தில் தெரிகிறது. இக்குழந்தையின் அடுத்த செயல் பட்டாம்பூச்சியின் பின்னால் செல்வதாக இருக்கலாம். மொழிநயம் ஏதுமில்லாத நிலையில் குழந்தைமை அழகாக வழிகிறது இக்கவிதையில் !

' அப்பொழுதும்' என்ற தலைப்பில்...

ஒரு பொன் வண்டாய்
நான் இருந்திருந்தால்
நிச்சயம் நான்
ஒன்றும் பேசாமல்
இருந்திருப்பேன்
அப்பொழுதும்
உன் தீப்பெட்டிக்குள்
நான் அடங்கிவிடமாட்டேன்

--- ஒரு குழந்தை தன் சகாவிடம் சொல்வதுபோல் அமைந்துள்ளது. குழந்தையே ஆனாலும் சுயம் பேசுவது ரசிக்க முடிகிறது.

புத்தகத் தலைப்புக் கவிதை' நீல இறகு'

கிளி அழுதது
வானம் பச்சையாய் இருக்கவில்லை
கிளி அழுதது
இறக்கை நீலமாக இருக்கவில்லைகிளி கடல் பார்த்தது
கிளியைக் காணவில்லை
கரை ஒதுங்கியுள்ளது
ஓர் ஒற்றை நீல இறகு

--- கவிதை வெளிப்பாட்டில் குழந்தைமை என்னும் நிலை மாறி கருப்பொருளிலும் கலந்துவிட்டது. கவிதையில் தர்க்கம் பார்க்கக்கூடாது என்றாலும் கருப்பொருளில் தெளிவில்லாமல் ஒரு மயக்கம் காணப்படுகிறது. கிளி இறந்திருந்தால் கரை ஒதுங்கியுள்ளது பச்சை இறகாகத்தான் இருக்கும். நீல இறகு எதனால் ?

' மரத்துடனான சிநேகம்' பேதமை நிறைந்தது. தொடர்பில்லாமல் தகவல்கள் இறைந்து கிடக்கின்றன.

என் பாதங்கள்
நீரைச் சுவை க்கத் தொடங்கிய போது
அலறியபடி
மரத்திடம் சென்றேன்

--- பாதங்கள் நீர் சுவைக்க , மழை காரணமாக இருக்குமோ ? விளங்கவில்லை.

' பாதையும் பயணமும்' என்ற கவிதை வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறது. அகலமாய் ஆரம்பித்த பாதையும்பயணமும் முள்வேலியில் சிக்குண்டதுபோல் , வலுவிழந்த நதிபோல் , மொட்டைச் சுவரில் மோதிக்கொண்டதுபோல் மடிந்து போகிறதாம்.

பிறந்த நாளன்று ஒரு முயல் கொல்லப்படுகிறதாம். சிறுகவிதை நன்றாக உள்ளது. கவிதைத் தலைப்பு

' பிறந்த நாளன்று'

பிறந்த நாளன்று
பொதுவாக யாரும் எதையும் கொல்லவதில்லை
நான் ஒரு முறை கொன்றேன்
வேண்டுமென்றில்லை
அப்படி நிகழ்ந்துவிட்டது
அதன் பின்
பிறந்த நாட்கள் வருகின்றன
தொப்பியினுள்
மந்திரவாதி எடுக்கும் முயல்களாக

--- கடைசி இரண்டு வரிகள் கவிதையை நிற்க வைக்கின்றன. புதிய உவமை ! ஆனால் மந்திரவாதி என்பதற்குப் பதிலாக மேஜிக் நிபுணர் என்று இருக்கலாம்.

' கால் மிதியில்' என்ற கவிதை மிகவும் யதார்த்தமானது.

கால் மிதியில்
முகம் துடைக்கும்
பாதம்

கடைசியாக , ஓர் அநியாயத் தர்க்கம் கொண்ட கவிதை' எப்பொழுது'

வெட்கம் விட்டுச் சொல்கிறேன்
உண்மையில்
சாப்பாடு வேண்டாத மீன்களையும்
தண்ணீர் கேட்காத செடிகளையும்தாம்
வளர்க்க முடியும் என்னால்
அவரவர் தேவையை
அவரவர் பூர்த்தி செய்யும்
நாள்தான் எப்போது?

இத்தொகுப்பு ஒரு வகையில் வித்தியாசமானது. தென்றல் என்ற இளம் பெண்ணின் மழலைக் கவிதைகள் நிரம்பியது. பிறர் கவிதைகளைப் படிப்பதும் , கவிதை விமர்சனங்களைப் பயிலுவதும் படைப்புத் திறனை அதிகரிக்கும்.

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It