1998, பிப்ரவரி 14. காதலர் தினம். இடம் கோயம்புத்தூர். 58 பேரைக் கொன்று 200 பேரை இரத்தம் சிந்த வைத்தது குண்டு வெடிப்பு. 11 இடங்களில் 12 குண்டுகள் வெடித்தன. முஸ்லீம் தீவிரவாதிகள் குண்டு வைத்தாகச் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வெடித்தன. கலவரங்கள் என்று சொல்வதா? திட்டமிட்ட தாக்குதல்களும், அதனை எதிர்கொண்ட மக்களின் எதிர்வினையும் என்று சொல்வதா? அல்லது அரசின் ஆதரவுடன் நடைபெற்ற வெறியாட்டம் என்பதா?

heera 270அந்தக் குண்டு வெடிப்பிற்கு வெகு முன்பிருந்தே மத வெறியைக் கட்டமைக்கும் வேலையை இந்து வெறி அமைப்புகள் செய்து வந்தன. ஆனால், கோவை நகரம் இந்து முஸ்லீம் மக்களின் இணக்கமான வாழ்க்கையைக் கண்ட நகரம். தமிழகம் எங்கும் நாம் கண்டது போல, இந்தியாவில், உலகில் பல்வேறு மாறுபாடுகள் கொண்ட மக்கள் அமைதியாக வாழ்வதுபோலத்தான் கோயம்புத்தூரும் இருந்து வந்தது.

கட்டமைக்கப்பட்ட மதவெறியின் நோக்கம் என்ன என்பதை 1998 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு காட்டியது. பார'தீய' ஜனதா கட்சியின் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வரலாறு காணாத வகையில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

இருந்தபோதும், கோவையின் முகத்தை இரத்த விளாராக மாற்றிய குண்டுவெடிப்பின் பின்னுள்ள உண்மைகள் இத்தனை காலமாய்ச் சொல்லப்படாதிருந்தது. மக்களின், குறிப்பாக முஸ்லீம்களின் வேதனைகளும் துயரங்களும் இழப்புகளும் இத்தனை நாட்களாகச் சொல்லப்படாதிருந்தன.

இப்போது சம்சுதீன் ஹீரா அதனைச் சொல்லியுள்ளார். மனிதப் பதர்கள் விளைவித்த துன்பத்தினைச் சுமந்தவர்களில் சம்சுதீனும் ஒருவர். லேத் பட்டறைத் தொழிலாளியான அவர், 'மௌனத்தின் சாட்சியங்கள்' என்ற நாவலை எழுதியுள்ளார்.

பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஜூனில் மதுரையில் நடைபெற்றது.

இந்து மத வெறியர்கள் நல்லிணக்கத்தை எவ்வாறு திட்டமிட்ட வகையில் சிதைத்தனர் என்பதை நாவல் வெளிப்படுத்துகிறது, மதவெறிச் செயல்களை எதிர்கொள்ளும் முஸ்லீம்கள் தன்னிச்சையாக எதிர்வினையாற்றியதைப் பயன்படுத்திக்கொண்டு, அமைதி சூழலைச் சின்னாபின்னப்படுத்தி, பெரும்பான்மையினர் மத்தியில் மதவெறி மனப்பான்மையை உருவாக்கிய விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுநாள் வரை வாழ்ந்துவந்த வேறுபட்ட கலாச்சாரங்களின் ஒத்திசைந்த வாழ்க்கை சிதைக்கப்படும் விதத்தைச் சம்சுதீன் அழகாகப் பதிவு செய்துள்ளார்.

தலித் சாதிகளைச் சேர்ந்த உழைப்பாளிகள் மேல்சாதிகளைச் சேர்ந்தவர்களின் மதவெறி அரசியலால் உள்வாங்கப்படும் விதத்தையும், அவர்களைப் பலிகடாக்கள் ஆக்கி மதவெறி கட்டமைக்கப்படுவதையும் விவரித்துச் செல்கிறது நாவல். குண்டு வெடிப்பின் போதும், அதனையொட்டிய நிகழ்வுகளினாலும் சாதாரண மக்களின் கனவுகள் சிதைந்து போவதை விளக்கிச் செல்லும் ஆசிரியர், மதவெறியின் கையாளாகிப் போன தலித் பிரிவு முன்னோடிகள், முஸ்லீம் சகோதரர்களைக் காக்கக் கேடயமாக மாற்றம் பெற்று நின்றதையும் நெஞ்சில் பதியும் வகையில் சொல்லிச் செல்கிறார். அரசு யந்திரத்திற்குள், காவல்துறைக்குள் மதவெறி புரையோடிப் போயிருப்பதையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். காக்கிச் சட்டைக்கள் இருக்கும் கனிந்த மனங்களையும் பதிவு செய்யத் தவறவில்லை.

இந்த நாவல் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பல்வேறு அரசியல் சமூக அமைப்புகள், தனிமனிதர்கள் மதவெறி அரசியலுக்கு ஆற்றும் பதில்வினையையும் பதிவு செய்துள்ளது. அன்றைய கோவையில் இருந்த முற்போக்கு அரசியல் சக்திகளையும், மதவெறி தாக்குதல்களின் போது அவர்கள் நல்லிணக்கம் உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளையும் அந்த அமைப்பு எத்தனை பெரியது என்ற வேறுபாடின்றிப் பதிவுசெய்துள்ளார்.

இந்த நாவலை எழுதுவதற்கு முன்னால், உண்மை அறியும் குழு அறிக்கைகள், குற்றப் பத்திரிகைகள், விசாரணைக் கமிஷன் ஆவணம், பத்திரிகை செய்திகள் என்று விரிவான ஆய்வை ஆசிரியர் மேற்கொண்டிருப்பதால், சமீபக் கடந்த காலத்தின் வரலாறு தவறேதும் இல்லாது பதிவாகியிருக்கிறது.

குண்டு வெடிப்பின் போது சிதைந்து போன சாதாரண மனிதர்களின் கனவுகளைப் பற்றியும், மதவெறித் தாக்குதலின்போது முஸ்லீம்கள் எதிர்கொண்ட சொல்ல முடியாத வேதனைகள் பற்றியும், சிறையில் முஸ்லீம்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளையும் சம்சுதீன் சொல்லிச் செல்வதைப் படிக்கும் ஒருவர் விம்மி அழுவது தவிர்க்க முடியாதது.

கோவையில் மதவெறி அரசியல் கட்டமைக்கப்பட்டபோது இளம் பிராயத்தில் இருந்த யாசரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவன் ஒரு சாதாரணமான முஸ்லீம். இந்துக்களுடன் இணைந்து வாழ்ந்தவன். இறைநம்பிக்கையுள்ளவன். லேத் பட்டறைத் தொழிலாளி. மதவெறி சூழல் கட்டமைக்கப்படும் சூழலில், கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் அவனுக்குக் கிடைக்கிறது. அவர்களின் கொள்கையினால் ஈர்க்கப்படுகிறான். அனைத்து முஸ்லீம்களுக்கும் கம்யூனிச அரசியலைக் கொண்டுபோக விழைகிறான். ஆனால், எதிர்பாராத குண்டுவெடிப்புக்குப் பின்பு அந்த அப்பாவி கைது செய்யப்படுகிறான். தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகிறான். இளமையின் பெரும்பகுதி சிறைவாழ்க்கை என்றாகிறது. அதிர்ச்சி அவனை ஏறக்குறையச் சித்தபிரமை பிடித்த நிலைக்குத் தள்ளுகிறது. அவனுக்குக் கிடைத்த ஆறுதலாக அமைவது அவன் முன்பு கண்டிருந்த வைஷ்ணவி. அவள் ஒரு இளம் பிராயக் கம்யூனிஸ்ட். அவளுடன் உரையாடுவதாக நினைத்துக் கொள்வதுதான் அவன் சிறையில் கண்ட ஆறுதல்.

சிறையிலிருந்து விடுதலையான யாசர் வைஷ்ணவியைக் காண ரயில் பயணம் துவங்குவதுடன் கதை துவங்குகிறது. இரயில் சந்திக்க நேர்ந்த நவநாகரிக இளைஞனுடன் தான் கண்ட 'மதவெறி' நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வதாகக் கதை பயணப்படுகிறது. அவன் சந்திக்கப் போய்க்கொண்டிருந்த வைஷ்ணவி இடையிலேயே அவனைச் சந்திக்க வருகிறாள். கொடூர வாழ்க்கையின் அயற்சியில் உறங்கிக் கொண்டிருந்த யாசரின் தலையை அவனின் தூக்கத்தைக் கலைக்காமல் கோதி விடுவதுடன் நாவல் நிறைவடைகிறது, மானுடத்திற்கு எந்த எல்லைகளும் இல்லை என்பதை இன்னும் சிறப்பாகப் பதிவு செய்ய முடியுமா என்ன?

இந்த நாவல் மதவெறி அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்ந்துள்ள சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் படைப்பைக் கார்கியின் தாய் நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தாய் நாவல் இரஷ்யப் புரட்சிக்குச் சேவை செய்தது என்பார் லெனின். இன்றைய மத வெறி இந்தியாவில் மதவெறி கட்டமைக்கப்படும் விதம் பற்றி விளக்கிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட முற்போக்கு சக்திகளின் மீது நம்பிக்கையை விதைக்கிறது. இன்றைய இந்தியாவின் தேவை இந்த நாவலைப் பரவலாகக் கொண்டு செல்வது.

காவிப் பாசிச- கார்ப்பரேட் பாசிச கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நடைபெறவிருந்த நூல் அறிமுக விழாவை காவல்துறை நடத்த முடியாமல் தடுத்திருப்பது நூல் விளைவிக்கும் 'ஆபத்து' பற்றி அரசுகள் கவலைபடுவதைக் காட்டுகிறது. முற்போக்காளர்களின் செயல்பாட்டுக்கு அழைப்பு விடுப்பதாகவும் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ந்த மதவெறி தாக்குதல்களின் பின்னால் இதுபோன்ற நிகழ்வுகளும், அவற்றிற்கான இந்து வெறியர்களின் திட்டமிடல்களும் இருக்கின்றன. தேர்தலை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டே மதவெறி தாக்குதல்களை இந்து வெறியர்கள் கட்டமைக்கிறார்கள். எனவே, இந்த நாவலை இந்தியாவின் மொழிகள் அனைத்திலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவது காலத்தின் தேவையாக இருக்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் இந்த நாவலைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முதன்மை பொறுப்பு கம்யூனிஸ்டுகளின் கையில்தான் இருக்கிறது.

- சி.மதிவாணன்

(பிரதிகள் பெற:

பொன்னுலகம் பதிப்பகம்,
4/413இ பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம் (அஞ்சல்)
திருப்பூர்- 641 603
செல் 94866 41586
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். & இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It