போர்டு பவுண்டேஷன் - சி.ஐ.ஏ உறவு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்; பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கைக் குலைக்கவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும் - ஜேம்ஸ் பெட்ராஸ் - The ford foundation and the CIA doccumented Case of philanthropic collaboration with the secred police.

guna bookகாலாவதியாகிவிட்ட பின்நவீனத்துவத்தைப் பற்றிப் பேசுவது தேவைதானா? என்று கேள்வி எழலாம். உண்மைதான். அது தோன்றிய இடங்களிலேயே ஊற்றி மூடப்பட்டு, அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இங்கு பின்நவீனத்துவவாதிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கிய பா.ம.க மற்றும் தலித் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவே! அவைகள் மக்களைப் பிளவுப்படுத்தி, மக்களின் வளங்களைச் சூறையாட ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனவே! பின்நவீனத்துவவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள அரசியல் ஆண்ட பரம்பரை அரசியலையும், புதிய இனவாதக் கட்சிகளையும் பிரசவித்து மக்களை மேலும் மேலும் கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றனவே! இவர்கள் எல்லோரும் தவறாமல் கம்யூனிச எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டு கடமையாற்றி வருகிறார்களே!

எனவே இந்த அமைப்புகளைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இவைகளின் செயல்பாட்டை எதிர்கொள்கிறவர்கள் இவற்றின் வேர்களையும், அதன் ஊற்றுக்கண்ணான பின்நவீனத்துவத்தையும் தேடுவது அவசியமாகும்.

அமைப்பே கூடாது; அது அதிகாரத்துவ முறை என்றெல்லாம் பேசியவர்களுக்குப் பின்னாலிருந்து ஆளும்வர்க்கங்களுக்கான இத்தனை அமைப்புகள் முளைத்திருக்கின்றன. ஆயுதப்போராட்டம் தவறானது என்றவர்களுக்குப் பின்னாலிருந்து முளைத்தவர்கள் சாதியாதிக்க அடையாள அரசியலுக்காக ஆயுதம் ஏந்துகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் காரணமாக பின்நவீனத்துவம் என்ற பேரில் ஒரு குழு யோனி மையவாத எதிர்ப்பு, குடி கலாச்சாரம் என சீர்குலைவு அரசியலைப் பேசியும், செயல்பட்டும் கொண்டிருந்தது என்பது அப்படியே புறக்கணிக்கப்பட வேண்டியதா என்ன? இந்த அரசியல் எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது? இதனால் பலனடைகிறவர்கள் யார்? என்பதையெல்லாம் கண்டறியச் செய்யப்பட்ட சிறிய முயற்சிதான் இக்கட்டுரைகள். இப்பணியில் இந்நூல் முதலும் அல்ல, இறுதியும் அல்ல. எனக்கு முன்பே புதிய ஜனநாயகம், புதியக் கலாச்சாரம் போன்ற இதழ்களும்; யமுனா ராஜேந்திரன் போன்ற எழுத்தாளர்களும் விரிவாக எழுதியுள்ளனர். தவிர அனைத்து இடதுசாரி அமைப்புகளிலும் பின்நவீனத்துவம் முக்கியமான விவாதப் பொருளாக இருந்திருக்கிறது என்பதே உண்மை.

அரசுகள் என்பது துப்பாக்கிகளால் மட்டுமே நிலைநிறுத்தப்பட்ட நிறுவனங்களல்ல. மக்கள் எல்லோரும் தங்களின் தலைக்கு மேலே கத்தித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பயந்து இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டிருக்கவில்லை. அரசுகள் மக்களை வழிநடத்துவதற்கும், சமாளிப்பதற்கும் தத்துவ – அரசியல் நடவடிக்கைகள் இன்றியமையாததாகும். அரசு என்பது உருவானதும் அது தனது செயலுக்கு ஞாயம் கற்பிக்க மதம் மற்றும் கருத்து நிறுவனங்களான மேல்கட்டுமானத்தை உறுதிபட உருவாக்கினார்கள் என்பதையும், மேல்கட்டுமானம்தான் அடித்தளமான உற்பத்தியையும், சுரண்டலையும் பாதுகாக்கிறது என்பதையும் உணர்ந்தவர்கள் ஆளும்வர்க்க தத்துவ – அரசியல் நடவடிக்கைகளைப் புறக்கணிக்க முடியாது.

ஆதலால் பின்நவீனத்துவத்திற்கும் இன்றைய சமூகக் கொடுமைகளுக்கும் இருக்கிற பிரிக்க முடியாத உறவைப் புறந்தள்ள முடியாது.

இன்றைக்கு இருக்கிற சாதி, மத, தலைவிதி தத்துவங்களுக்கெல்லாம் பின்நவீனத்துவம்தான் காரணமா? எனக் கேள்வி எழுகிறதல்லவா? இல்லைதான். ஆனால் இவையெல்லாம் மக்கள் மற்றும் மக்கள் இயக்கங்களின் நீண்ட போராட்டங்களால் ஓரளவு பலவீனமடைந்து வந்த நிலையில் பின்நவீனத்துவம் மீண்டும் அவற்றிற்கு பலமளித்துப் பாதுகாத்திருக்கிறது.

பின்நவீனத்துவவாதிகள் சாதி மற்றும் சமூக அடையாளங்களை உயர்த்திப் பிடித்து மதிப்பளித்தனர். அதற்கான அடையாள அரசியலைக் கட்டியமைத்தனர். இவர்கள்தான் சாதிய விடுதலைக்கான தலித் அரசியலை பிழைப்புவாத அரசியலாக மாற்றினார்கள். இடைநிலை சாதி மக்களின் உரிமைக்கான அரசியலை சாதியாதிக்கத்திற்கான அரசியலாக மாற்றினார்கள். சாதியைப் பாதுகாக்கிற எந்த ஒரு செயலும் இந்துத்துவத்தை – பார்ப்பனியத்தைப் பாதுகாத்துப் பலப்படுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பின்நவீனத்துவவாதிகள் நேர்மையற்று செயல்பட்டார்கள். இவர்கள் கம்யூனிசத்தின் மீதும், கம்யூனிஸ்ட் தலைவர்களின் மீதும் மட்டுமே கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். புரட்சியின் மீது நம்பிக்கையோடு வந்த புதிய ஆதரவாளர்களை திசைத் திருப்புவதில் முக்கியப் பங்காற்றினார்கள்.

சம உரிமை, சம ஊதியம், ஆணாதிக்கத்தின் அடித்தளமான நிலவுடமை எதிர்ப்பு என சரியான பாதையில் செயல்பட்டுக் கொண்டிருந்தன பெண்கள் இயக்கங்கள். ஆனால் இவர்களிடையே புகுந்த பின்நவீனத்துவவாதிகள் பெண்களின் வீரமிகுந்த போராட்டங்களை கைவிடச் செய்தனர். ஆணாதிக்கவாதிகள் பெண்களை அடுப்படியில் முடக்கியது போல் பின்நவீனத்துவவாதிகள் பெண் போராளிகளை கவிதை, கட்டுரை என்று குறுகிய வட்டத்தில் முடக்கினார்கள்.

பின்நவீனத்துவவாதிகள் அவர்களுடைய எசமானர்களின் கனவை நிறைவேற்றினர். போர்டு பவுண்டேசனுக்கு 1952 முதல் 1954 வரை தலைவராக இருந்த ரிச்சர்ட் பிசல் கூறினார் “இடதுசாரி அறிவுஜீவிகளை களத்தில் தோற்கடிப்பதைவிட அவர்களின் இலட்சியத்தில் இருந்து விலக்கி இழுத்துச் செல்வதுதான் பவுண்டேசனின் நோக்கம்.”

தமிழ்நாட்டின் பின்நவீனத்துவவாதிகளான அ.மார்க்ஸ் குழுவினர் கம்யூனிஸ்ட் ஊழியர்களையும், ஆதரவாளர்களையும், அறிவுஜீவிகளையும் இலட்சியத்திலிருந்தும், அமைப்பிலிருந்தும் விலக்கி இழுத்து சென்றனர். அதிகார வர்க்கத்தைப் பாதுகாத்தனர்.

கம்யூனிச எதிர்ப்பும், பின்நவீனத்துவ – அடையாள அரசியலும் அ.மார்க்ஸ் குழுவினரோடு முடிந்து போனதல்ல. இவர்களுக்கிடையே தலித் ஆதார மையங்களும், ஏவாஞ்சலிக்கல் சர்ச்சுகளும், போர்டு பவுண்டேஷன்களும், வேர்ல்ட் விஷன் அமைப்புகளும் உள்ளன. அமெரிக்காவின் யுனெஸ்கோ கூரியர் அண்ட் பப்ளிகேஷன் நிறுவனமும் அதில் அங்கம் வகித்த தெ.பொ. மீனாட்சிசுந்தரம், க.நா.சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா போன்ற தமிழறிஞர்கள் இருந்துள்ளனர். இவர்களின் மொத்த உருவமாக இன்று பெங்களூரு குணாவும் இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்குள் மட்டுமல்ல ஈழத்திலேயே இவர்களது கைகள் செய்த கைங்கர்யத்தை தோழர் சபாநாவலன் (inioru.com) கூறுவதாவது-

“மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு தன்னார்வ உதவி நிறுவனங்கள் அல்லது அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மூன்றாமுலக நாடுகளில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. வறிய நாடுகளின் வளர்ச்சியைச் சிதைத்து அந்நாடுகளைத் தமது கட்டுபாட்டுக்கு உட்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட NGO என்ற கருத்தமைப்பும் அதன் செயற்பாடுகளும் மொத்த மனித குலத்தையும் பயங்கர அழிவிற்குள் இழுத்துச் செல்கின்றன. சிறிய பொருளாதார (Micro Finance) உதவிகள், மனித உரிமைச் செயற்பாடுகள், ஜனநாயகம், பெண்ணியம், தலித்தியம் என்ற இன்னோரன்ன தலையங்கங்களின் கீழ் வறிய நாடுகளைத் தமது அடிமைகளாக மாற்ற விளையும் இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் உலகின் சந்து பொந்துகளெல்லாம் வியாபித்திருக்கின்றன.

‘அரசு சாரா’ இவ்வமைப்புக்கள் சமூக, அரசியல், விஞ்ஞான, மத மற்றும் சுற்றுச் சூழல் விவகாரங்களில் சர்வதேச சக்திகளாகச் செயற்படுகின்றன. இவ்வாறான அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மக்கள் அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் மாற்றியமைப்பதில் மிகப்பெரும் பாத்திரத்தை வகிக்கின்றன’. (Ghils 1992 : பக்: 417-31) ( International Civil Society: INGOs in the international system ). என்று கூறும் கில்ஸ் சந்தைப்படுத்துதலுக்கன சூழலை தன்னார்வ நிறுவனங்கள் தோற்றுவிக்கின்றன என்கிறார். அதனை மக்களின் மொழியில் சொன்னால் உலகமயமாதலின் மூலதனச் சுரண்டலுக்கான சூழலைத் தோற்றுவிக்கின்றன எனலாம்.

நிதி வழங்கலில் உலகமய ஆதரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ள இத் தன்னார்வ நிறுவவங்கள் ஏகாதிபத்திய நட்பு அரசுகளை உள் நாடுகளில் எதிர்ப்பின்றி உருவாக்குவதில் பிரதான பாத்திரத்தை வகித்திருக்கின்றன.

அடையாள அரசியல் என்று விச வித்திலிருந்து விருட்சமாக எழுந்து உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கோட்பாட்டு அடிப்படையை வழங்குவது பின் நவீனத்துவம் என்ற சமூகவிரோத தத்துவமாகும்.

சந்தை மூலதனச் சுரண்டலுக்கும் சர்வாதிகார ஆட்சி முறைமைக்கும் இடையே ஒரு மூன்றாவது பாதையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்ற இத் தன்னார்வ நிறுவனங்கள் அரச சாரா நிறுவனங்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டன. ஒரு போதும் அரசை எதிர்க்கும் நிறுவனங்களாகத் தம்மை அறிமுகப்படுத்தாத இத் தன்னார்வ நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் சந்தையையும் மூலதனச் சுரண்டலையும் எதிர்மறையில் வலுப்ப்படுத்தலே ஆகும்.

அறுபதுகளில் பிரான்சைக் குலுக்கிய புரட்சி அலை பிரஞ்சு ஜனாதிபதியை நாட்டைவிட்டே துரத்தும் அளவிற்கு எழுச்சிபெற்றது. சார்ள் து கோல் என்ற பிரஞ்சு ஜானதிபதி ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரும் அளவிற்கு கம்யூனிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தினர். புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர், வர்க்கப் பிளவு வாதத்தை பிரஞ்சு அரசு பின் நவீனத்துவம், பின் அமைப்பியல் போன்ற கோட்பாடுகள் ஊடாக முன்வைக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் எங்கும் கோரத் தாண்டவமாடிய பிரஞ்சு அரசு, உள் நாட்டில் கம்யூனிசத்தின் எதிரிகளை தோற்றுவிக்கிறது. சமூகத்தின் உயர் சிந்தனைக் குழாம்களாக ஜாக் தெரீதா, மிகேயில் பூக்கோ, லியோத்தார் போன்றவர்கள் தோற்றுவிக்கப்படுகின்றனர். இவர்கள் தோற்றுவித்த அதிகாரவர்க்கம் சார்ந்த தத்துவமான பின்நவீனவீனத்துவம் மாஜிகல் ரியலிசம் என்ற பெயரில் லத்தீன் அமரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு புரட்சிக்கு எதிரான சமூகச் சீர்குலைவுகளை ஏற்படுத்துகின்றது.

புலிகளிலிருந்து பிளவுற்ற இலங்கை அரசின் உளவாளி கருணா முன்வைத்த அரசியல் கிழக்குத் தேசியம். ஏற்கனவே யாழ்ப்பாண மையவாதச் செயற்பாடுகளில் விரக்தியடைந்திருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்தியதர இளைஞர்களை இலங்கை பாசிச அரசிற்கு ஆதரவாக மாற்றும் கபட நோக்கோடு கருணா முன்வைத்த கிழக்குத் தேசியத்தை அடையாள அரசியலில் புதிய பரிணாமம் என பிரான்சிற்கு வந்து வாழ்த்திய அ.மார்க்ஸ் போன்ற பின் நவீனத்துவ வாதிகளின் ஈழ அடையாளம் 'புலியெதிர்ப்பு அரசியல்'. 'புலியெதிர்ப்பு அரசியலை' இலங்கை அரசு தீனி போட்டு வளர்ப்பது ஆயிரம் ஆதாரங்களோடு நிறுவ வேண்டியதற்கான தேவை அற்றுப் போய்விட்டது. வெளிப்படையாகவே இனக்கொலையாளிகளோடு அவர்கள் உலா வருகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தமிழகத்தில் ஈழப் பிரச்சனை குறித்து பேசும் 'தமிழினவாதிகள்' புலியெதிர்ப்பு அரசியலின் ஊக்கசக்திகளாக அமைந்துவிடுகிறார்கள் என்ற அருவருப்பான உண்மை பலருக்கு மங்கலாகவே தெரிகின்றது.

இன்று இலங்கை 2000 வரையிலான தன்னார்வ நிறுவனங்கள் செயற்படுகின்றன. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ஆங்காங்கே தோன்றிய மக்கள் இயக்கங்களும் தேசியப் பொருளாதார முனைப்புக்களும் இத் தன்னார்வ நிறுவனங்களால் உடனுக்குடன் உள்வாங்கப்படுகின்றன. சாதிச் சங்கங்கள் மக்களை வர்க்க அடிப்படையில் பிளவுபடுத்தி வர்க்க ஒருங்கிணைவை பலவீனப்படுத்துகின்றன.

புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தை இலங்கை பாசிச இராணுவம் கையகப்படுத்திய 2000 ஆண்டில் இலங்கை இராணுவம் அங்கு சாட்சியின்றிய இனச்சுத்திகரிப்பை நடத்தியது.

செம்மணிப் படுகொலைகள் போன்ற கோரப் படுகொலைகளை சரத் பொன்சேகா தலைமையிலான இராணுவம் நடத்தியது. அதற்கு எதிராக குரலெழுப்பவோ, குறைந்தபட்சம் செய்திகளை வெளியிடவோ எந்த மக்கள் அமைப்புக்களும் அற்றுப் போயிருந்த நிலையில் சாட்சியின்றி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் தான் மக்களை மீள ஒழுங்கு படுத்துகிறோம், 'வன்முறைக்கு' எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்ற தலையங்கத்தில் சேவா லங்கா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் குடிகொள்ள ஆரம்பித்தன.

புலிகளின் பிடியிலிருந்த மனித உரிமை தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்தியங்களது கைகளில் விழுந்த ஆரம்பக் கதை இதுவே.

வன்னிப் படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்திய காலப்பகுதி முழுவதும் மக்கள் அங்கிருந்து வெளியேற தடைசெய்யப்பட்டனர். வெளியேறிய பலர் கொல்லப்பட்டனர். மறு புறத்தில் இலங்கை இராணுவம் சாரிசாரியாக கொசுக்கள் கொல்லப்படுவது போன்று மக்களைக் கொன்று போட்டது. இதற்கு எதிராகக் குரல்கொடுக்க உலகின் ஜனனாயக முற்போக்கு இயக்கங்களோ அவற்றோடு தொடர்புடைய உள்ளூர் அமைப்புக்களோ இருக்கவில்லை. ஏகாதிபத்தியங்களின் கூறுகளான சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் புலிகளிடமிருந்த அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்டன.

இன்று வடக்கும் கிழக்கும் தன்னார்வ நிறுவனங்களின் தத்துப் பிள்ளையாக மாறியிருப்பதன் அடிப்படை இதுவே.

இவ்வாறு ஏகாதிபத்திய சார்பு அழிவு அரசியலுக்கு எதிராக புதிய வர்க்க அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கத் தவறியதன் விளைவே புலியெதிர்ப்பு அரசியலின் இருப்பும் தன்னார்வ நிறுவனங்களின் வளர்ச்சியும்.”

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றப் பிழைப்புவாதிகளே தங்களை கம்யூனிஸ்டுகள் என்றுக் கூறிக் கொள்ளுமளவுக்கு கம்யூனிஸ்டுகளின் போராட்டமும், அர்ப்பணிப்பும், தியாகமும் மறுக்க முடியாதது. இன்று சாதிவெறியை பிழைப்பாக கொண்டுள்ள இராமதாசு கூட நானும் நக்சலைட்டுதான் என்று கூறுமளவுக்கு கம்யூனிஸ்டுகள் புரட்சிகரப் பாத்திரமாற்றினார்கள். கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் கூட கம்யூனிசத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்தான் இருந்தனர். ஆளும்வர்க்கத்திற்கு இருந்த அந்த குறையை நிவர்த்தி செய்துத் தந்தவர்கள் பின்நவீனத்துவவாதிகள்தான்.

எனவே பின்நவீனத்துவம் குறித்து இன்னமும் விரிவான ஆய்வுகள் தேவை என்பதை வலியுறுத்துவதற்கு இந்த கட்டுரைகளின் தொகுப்பு துணை செய்யும் என நம்புகிறேன்.

இந்தக் கட்டுரைகளுக்காக உதவிய அனைவரும் நன்றிக்குரியவர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து நீண்ட காலமாகவே பேசியும், எழுதியும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தோழர் முருகவேள். எனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவர் இதுவரையிலும் தாம் சேகரித்தத் தகவல்கள் அனைத்தையும் தந்து உதவினார். என்னால்தான் எல்லாவற்றையும் பயன்படுத்த முடியவில்லை.

இதனை வெளியிடுவதால் எதிர்கொள்ள வேண்டிய ஆபாச வசவுகள், மிரட்டல்கள் அனைத்தையும் தெரிந்தே தனது கீற்று இணையத் தளத்தில் வெளியிட்டார் தோழர் கீற்று நந்தன்.

இதன் முக்கியத்துவம் கருதி இனியொருடாட் காம் இணையத்தளத்திலும் வெளியிட்டு உற்சாகப்படுத்தினார் தோழர் சபாநாவலன்.

இவர்கள் இருவரும் வெளியிட்டது மட்டுமில்லாமல் இது குறித்து தகவல்களையும் தந்து உரமூட்டினர்.

இவர்களைப் போலவே பேராசிரியர் வீ.அரசுவின் பங்களிப்பு முக்கியமானது. நிறப்பிரிகையின் அனைத்து தொகுப்புகளையும் தந்து உதவியதோடு யுனெஸ்கோ கூரியர் சார்ந்த அமெரிக்க செயல்பாட்டையும், அதற்கு அடிமை சேவகம் புரிந்த தமிழறிஞர்கள் குறித்தும் அளவற்றத் தகவல்களை சொல்லித் தந்தார்.

பேராசிரியர் வீ.அரசுவின் ஆவண காப்பகத்திலிருந்து நூல்களைக் கண்டுப்பிடிப்பதற்கு தோழர் சதீசு செய்த உதவி அற்புதமானது.

ஒவ்வொரு கட்டுரையின்போதும் பின்னூட்டமிட்டு கூடுதல் தகவல்களையும், ஊக்கத்தையும் கொடுத்த தோழர்கள் பெருந்துணை.

மார்க்சிய தத்துவ- அரசியல் தளத்திலே தோழர் அ.கா. ஈசுவரனை அறியாதவர்கள் இருக்க முடியாது. மார்க்சியத்திற்கு எதிரான எதனோடும் சமரசம் செய்து கொள்ளாமல் மார்க்சிய செவ்வியல் நூல்களைப் படைப்பதோடு இடதுசாரிகள் மத்தியில் இணக்கமான செயல்பாடுகளையும் கொண்டிருப்பவர். இச்சிறு நூலுக்கான முன்னுரை ஒன்று தர முடியுமா தோழர் என்று கேட்டவுடன் அவர் மறுப்பில்லாமல் மனமுவந்து உடனடியாக எழுதித் தந்ததில் தோழமை நிரம்பி வழிந்தது.

அதுபோலவே ஒரு முயற்சி செய்துப் பார்ப்போமென்றுதான் முகநூல் தோழர் சுப்ரமணியன் ரவிகுமார் எனும் ஸ்ரீரசாவிடம் அட்டைப்படம் வரைந்து தர முடியுமா தோழர் எனக் கேட்டேன். முகநூலில் கூட அதுவரையில் தனிப்பட்ட வகையில் பேசிக்கொள்ளாத நிலையிலும் அவர் ஒத்துக்கொண்டு வரைந்து தந்தார்.

இப்படி எல்லாத் தோழர்களின் கூட்டு முயற்சியோடுதான் இந்த வெளியீடு வருகிறது. அத்தனைத் தோழர்களுக்கும் தோழமையுடன் நன்றியும்.

(பின்நவீனத்துவம் - கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி நூலிற்கு எழுதப்பட்ட முன்னுரை)

பின்நவீனத்துவம்- கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி

ஆசிரியர்- திருப்பூர் குணா

வெளியீடு:
பொன்னுலகம் பதிப்பகம்
4/413 பாரதிநகர், 3வது வீதி
பிச்சம்பாளையம் (அஞ்சல்)
திருப்பூர்- 641 603

மின்னஞ்சல்- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அலைபேசி எண் - 94866 41586

விலை – ரூ.60/-

Pin It