கானூயிர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் அரசும், சமூகமும் கானூறை மாந்தர்களை பற்றி கவலைப்படுவதில்லை. கானூறை மாந்தர்கள் பழங்குடிகளின் வாழ்வும், கோபமும் மலைகளையும், மரங்களையும் தாண்டி எதிரொலிப்பதில்லை. இந்நிலையில் வனத்தோடும், மண்ணோடும் இரண்டற பிணைந்த பழங்குடிகளின் வாழ்வியலை இதுவரை யாரும் சொல்ல முயலாத வடிவத்தில் புதிய முயற்சியாக பாடல்களை தொகுத்து அந்தப்பாடலுக்கு பொருத்தமான கதைளை ”சப்பே கொகாலு”வில் பிரதிபலிக்க செய்திருக்கிறார் கவிஞர் ஒடியன் லட்சுமணன்.
மலை, மரம், மண், வனம் சார்ந்த சுற்றுச்சூழல் குறித்த படைப்புகள் அதிகமாக இருந்த போதும், அவைகளோடு இரண்டற கலந்த பழங்குடிகள் வாழ்வியல் குறித்த படைப்புகள் மிகச்சொற்பம். பழங்குடிகளின் மொழிகளும், பழங்குடிகளும் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவர்களின் இசையையும், பாடல்களையும் ஆவணப்படுத்திய லட்சுமணின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. வரவேற்க வேண்டியது. நகர மக்களின் வாழ்வில் மட்டுமின்றி பழங்குடிகளின் வாழ்விலும் இசையென்பது பிரிக்க முடியாத ஒன்றாய் பிணைந்திருப்பதை லட்சுமணன் அழகாய் பதிவு செய்திருக்கிறார்.
கொகாலு வாசிக்கும் ஊமைப்பெண் சப்பே ஏரிக்காக பலியிடப்பட்டாள் என்பது, அரசு இயந்திரங்களால் ஊமைகளாக்கப்படும் பழங்குடிகள், நாகரீக சமுகத்தினரால் தொடர்ந்து பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆதிபழங்குடியின சமூகம் ஆதிக்க நாகரீக சமூகத்தின் மீது கோப தீயை உமிழ்ந்திருந்தால், நிச்சயம் நாடு தாங்கியிருக்காது. ஆனால் பழங்குடிகள் தனக்கான கண்ணீரை ஒருபோதும் அழுதவர்களில்லை. தனக்காக கோபங்களை அதற்கான வீரியத்துடன் காட்டியவர்களில்லை என எழுத்தாளர் அவர்களின் பண்பை விளக்கியிருக்கிறார்.
எழுத்தாளர் லட்சுமணின் எழுத்து நடையில் வரிகளும், வார்த்தைகளும் கவிதைகளாய் படர்கிறது. நிலவின் வெளிச்சம், கூரையில் இருந்த ஓட்டைகளின் வழியே உள்ளே ஒழுகி கொண்டிருந்தது, கரடிப்பாறையை வெயில் கும்மி கொண்டிருந்தது, மாதங்கள் மசால் (முயல்) கணக்காக ஒடியது போன்ற எண்ணற்ற வரிகள் ரசிக்கும் படி உள்ளது. வீணன், வீணிகளின் கதைகள் மனதை கொள்ளை கொள்ளும் காதல் பதிவுகள். காதல் கதைகளை படிக்க படிக்க காதலிக்க ஆசை எழுவதை தவிர்க்க முடியவில்லை.
பழங்குடிகள் எதையும் தனக்கென வைத்து கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சாவாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ளும் இயல்புடையவர்கள். எழுத்தாளர் பாலமுருகன் குறிப்பிட்டதை போல, பாலின சமத்துவம், பொதுவுடமை கொள்கை, சுரண்டலற்ற சமூகம், விருந்தோம்பல் பண்பு, தோழமையை பகிர்ந்து கொள்ளும் தன்மை, இனம் சார்ந்த பற்று, பிற இனத்தவர்களை வெறுக்காத தன்மை, சனநாயகத்தன்மை, கடும் உழைப்பும் படைப்பாற்றல் கொண்ட திறன், மூதாதையர் வழிபாடு என பழங்குடியினர் எளிய நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். வாழ்வியல் மற்றும் நெறிமுறைகளில் சமவெளி நாகரீக சமூகத்தை விட, மலைவாழ் பழங்குடிகள் உயர்ந்தே நிற்கின்றார்கள். ஆனால் ஆதிக்க சமூகம் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவது தான் வேதனை.
பழங்குடிகளின் மொழிகளை புரிந்து கொள்வது சிரமமாக இருந்தாலும், அது படிக்க தடையாக இருந்து விடவில்லை. இப்புத்தகம் பழங்குடிகளின் பண்பாட்டு கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது. பழங்குடிகளின் வாழ்வியலை படிக்க, படிக்க இனம் புரியாத ஒரு இன்பமும்… அதை விட பயம் கலந்த துக்கமும் தொற்றிக்கொள்கிறது. அரசர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, ஆதிக்க இந்திய ஆட்சி என ஆட்சிகள் மாறினாலும், காலங்கள் மாறினாலும், அதிகார வர்க்கத்தின் கோரமுகம் பழங்குடிகள் மீது வரலாறு நெடுகிலும் மன்னிக்க முடியாத வரலாற்று அநீதியை இழைத்து கொண்டே தான் இருக்கிறது.
இன்று ஒரு கும்பல் வந்தேறிகளிகளை நாடு கடத்த வேண்டுமென உரக்கமாய் கூக்குரலிட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த கும்பலும் வந்தேறியது தான் என்பதை மறந்து / மறைத்து செயல்படுவதை பழங்குடியின வரலாறு மெளனமாய் பார்த்து கொண்டு தான் இருக்கிறது. பழங்குடிகள் விதைக்காகவும், விவசாயத்திற்காகவும் தான் நிலத்தை இழந்ததது அதிகம் என்பது ரணமாய் மனதில் பதிகிறது. கோவன் என்ற பழங்குடி இருளர் தலைவனின் பெயர் கொண்ட கோயமுத்தூர் தொழில் நகரமாய் வளர்ந்து பிரம்மாண்டமாய் காட்சி தருகிறது. ஆனால் அந்த நகரத்தின் மண்ணிற்குள் பழங்குடிகளின் இரத்தம் உறைந்து கிடக்கிறது. தூடியலூர், சூலூர் போன்ற பகுதிகளில் பழங்குடிகளின் வாழ்விடமாய் ஒரு காலத்தில் இருந்தது என்பதை படிக்கும் போது, பழங்குடிகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம் உருவாகிறது.
பழங்குடி சமூகத்தின் பழக்க வழக்கங்கள், காதல்கள், வாழ்வியல் நெறிமுறைகள், ஏமாற்றங்கள், கோபங்கள் என அவர்களின் வாழ்வியலை பாடல் வழி கதைகளாய் முழுமையாக தாங்கி நிற்கும் சப்பே கொகாலு - பழங்குடிகளின் வாழ்வியல் ஆவணம்.
- வி.கிஷோர், ஊடகவியலார் (