ஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த கவிதை வடிவத்தின் காலம் முடிந்ததோ? என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறாய் இருந்தது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் மரபுக் கவிதைகள் தமிழில் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் புதிய உரைநடையின் வருகையாலும் கவிதை என்பதே அதன் வடிவத்தில் மட்டும்தான் வாழ்கிறது என்ற அசட்டுத்தனமான பழைய பண்டித மனோபாவத்தாலும் தமிழ்க்கவிதைகள் குற்றுயிரும் கொலையுயிருமாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய ஞாயிறு மகாகவி பாரதி தோன்றி சொற்புதிது சுவைபுதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்று கவிதைக்குப் புதுரத்தம் பாய்ச்சி அதனை உயிர்ப்பித்து உலவ விட்டான்.

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள் பாரதி, பாரதிதாசன், கவிமணி, தமிழ்ஒளி, கம்பதாசன் முதலான ஒப்புயர்வற்ற கவிஞர் பெருமக்களின் ஆற்றல்மிகுந்த கவிப்பெருக்கால் வற்றாத ஜீவநதியாய்ப் பெருகியோடி வளம் பெருக்கின. இருபதாம் நூற்றாண்டின் இடையிலே தோன்றிய புதுக்கவிதை என்ற புதிய நதியொன்று தானும் பெருகித் தமிழையும் வளப்படுத்துகின்றது. மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ அது கவிதையாய் இருக்கவேண்டும் என்பதுதான் நம் விருப்பம். இந்த இரண்டு ஜீவநதிகளின் பெருக்கால் தமிழை வளப்படுத்தும் கவிஞர்கள் பல்லாயிரம் பேர். கடந்த கால் நூற்றாண்டுகளில் தமிழ்க் கவிதைகள், தமிழகக் கவிதைகளாக மட்டுமில்லாமல் உலகக் கவிதைகளாகப் பேருரு எடுத்துள்ளன. உலகெங்கும் பரவி வாழும் தமிழக, ஈழக் கவிஞர்கள் பலரும் புதுக்கவிதைகளைப் படைப்பதில் காட்டும் ஆர்வத்துக்கு இணையாக மரபுக் கவிதைகளைப் படைப்பதிலும் அண்மைக் காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் இப்புதிய போக்கினை நான் நேரில் கண்டு உணர்ந்திருக்கிறேன்.

தமிழின் மரபுக் கவிதை வடிவங்களைக் கற்பதிலும் பாடல்கள் புனைவதிலும் இன்றைய தமிழ் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். உலகெங்கும் பல தமிழ் இலக்கிய அமைப்புகள் மரபுக் கவிதைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றன. திங்கள் பாவரங்குகளில் மரபுக் கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்கப்படுகின்றன. இன்றைய மரபுக் கவிதைகளின் புத்தெழுச்சிக்கு வளம் சேர்க்கும் ஒரு மூத்த படைப்பாளிதான் கவிஞர் வெண்பாவூர் சுந்தரம் அவர்கள்.

வெண்பாவில் என் பா விருந்து என்ற இந்நூல் கவிஞர் வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் இரண்டாவது படைப்பாக அவரின் எழுபத்திரண்டாம் அகவையில் வெளிவருகின்றது. 210 நேரிசை வெண்பாக்கள், 5 இன்னிசை வெண்பாக்கள், 2 நேரிசைச் சிந்தியல் வெண்பாக்கள், 8 இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்கள், 25 குறள் வெண்பாக்கள் என்று 250 முத்தான வெண்பாக்களால் இந்நூலினைப் படைத்துள்ளார் கவிஞர். இவரின் முதல் படைப்பு அறுபது கண்ட அழகிய நூறு (2002) எனும் கவிதை நூலாகும். வெண்பாவூர் என்ற தம்முடைய ஊரின் பெயருக்கேற்ப வெண்பா புனைவதில் இளமைக்காலம் முதலாகவே ஆர்வம் காட்டிவரும் கவிஞர் சுந்தரம் அவர்கள், தொடர்ந்து வெண்பா நூல்களையே எழுதி வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தோடு பத்தாயிரம் வெண்பாக்கள் இயற்றல் என்ற கனவுத் திட்டத்தை முன்மொழிந்து செயலாற்றி வருகிறார்.

1. வான்மறை வழங்கும் வள்ளுவம்

2. தமிழமிழ்து

3. அறவழி

4. கல்வி

5. காதல்

6. தத்துவம்

7. சமுதாய உணர்வு

8. பேரறிஞர் அண்ணா

9. பிற

10. நான் ஏன் எழுதுகிறேன்?

11. செம்மொழி கண்ட செந்தமிழ்

12. தின்மை செய்யாமையே சீரறம்

13. அரிதா மானிடப் பிறப்பு?

14. அடிகளாசிரியர்

15. மாற்றுத் திறனாளி கல்வி மேம்பாட்டு மையம்

16. அமிழ்தொக்கும் ஆதித்தனார்

17. ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்

18. மனக்கவலை தீர்க்கும் மருந்து

முதலான பதினெட்டுத் தலைப்புகளில் தன்பா விருந்தினை இந்நூலில் படைத்துள்ள வெண்பாவூர் சுந்தரம் அவர்களின் கவிதைகளில் மிகுதியும் நமக்குத் தட்டுப்படுவன குறள் கூறும் அறச் சிந்தனைகள்தாம். திருக்குறளை நன்கு கற்றுணர்ந்து அதனை உள்வாங்கிச் செம்மைநலம் சான்றுள்ள அவரின் கவி உள்ளம் எதைச் சொன்னாலும் குறளறமாக இருப்பது அவர் கவிதைகளின் தனிச்சிறப்பு எனலாம்.

 வெண்பாவுக்கு வன்பா என்றொரு பெயருமுண்டு. ஏனெனில் மரபுக் கவிதைகள் எழுதப் பயில்வோருக்குத் தொடக்கத்தில் சிம்ம சொப்பனமாயிருப்பது வெண்பா எழுதப் பயில்வதுதான். வேற்றுத்தளை விரவாமல், வேற்றுச் சீர் கலவாமல் எதுகை, மோனைத் தொடை அழகுகளோடு செப்பலோசை தோன்ற வெண்பாவிற்குரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்தும் ஒரு வெண்பா எழுதி முடிப்பதற்குள், “காரிகை கற்றுக் கவிதை பாடுவதைவிடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்று நமக்கு அயர்ச்சி தோன்றிவிடும். ஆனால் அதே வெண்பா கொஞ்சம் பழகிவிட்டால் போதும் பழகிய குழந்தையைப் போல் நம்மைப் பார்க்கும் போதெல்லாம் இருகரங்களையும் நீட்டி என்னைத் தூக்கு என்பதுபோல் கொஞ்சும் -கெஞ்சும். வெண்பாவூர் சுந்தரம் அவர்களுக்கும் அப்படித்தான், வெண்பா அவரைக் கண்டால் பழகிய குழந்தைபோல் கெஞ்சுகிறது.. கொஞ்சுகிறது.

 பின்வரும்; வெண்பாவைப் பாருங்கள் எப்பொழுதோ கேட்ட கண்ணதாசனின், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற திரைப்படப் பாடலை நம் நினைவுக்குக் கொண்டுவரும் அழகான எளிமையான வெண்பா

கால்இரண்டும் இல்லானைக் கண்டுதெளி, நீயணிய

காலணி இல்லையென்று கண்கலங்கேல்! ஞாலமதில்

உன்னிலும்கீழ் எத்தனைபேர் ஓர்ந்திடுக, ஆகாதோ

கன்னலென நின்றன்வாழ்க் கை?

சுவைஞனைப்; பார்த்துத் தோழமையோடு உரையாடும் -உறவாடும் தொனியிலான இத்தகு ஓசை நயத்துக்குத்தான் செப்பலோசை என்று பெயர். பலருடைய வெண்பாக்களில் வெண்பா இலக்கணம் பெயரளவிற்கு இருக்கும், ஆனால் உண்மையில் வெண்பாவுக்கு உயிர் என்று சொல்லப்படும் செப்பலோசை இருக்காது. வெண்பாவூராரின் வெண்பாக்களுக்குச் செப்பலோசை உண்டு அதனால் அவர் வெண்பாக்களுக்கு உயிர் உண்டு.

 பெரும்பாலான தத்துவக் கவிதைகள் இவ்வுலக வாழ்க்கையைப் பொருட் படுத்துவதே இல்லை. நிலையாமையைப் பேசும் கவிதைகளுக்கோ சொல்லவே வேண்டாம். எல்லாம் மாயை, எதுவும் நிலையில்லை, எதைக் கொண்டுவந்தாய் எதை இழக்க என்றெல்லாம் பேசி, சும்மாயிரு செயலற என்று நம்மை வாழத் தகுதியற்றவர்கள் ஆக்கிவிடும். ஆனால் சுந்தரம் அவர்களின் தத்துவக் கவிதையோ நம்மை அப்படிச் சோம்பியிருக்கச் சொல்லவில்லை, மாறாக நிலையில்லாத உலகத்தின் நிலையறிந்து ஊருக்கு உழைக்கச் சொல்லுகிறது. அதாவது பொதுத்தொண்டு செய்து தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் வாழச்சொல்லுகிறது. உண்மைக் கவிஞனின் கடமை இதுவல்லவா? இதோ பாடல்,

உன்னுடைய தென்றிங்கே ஒன்றுமில்லை, சேர்ப்பதில்தான்

உன்னுடனே கூட வருவதெது? -மண்ணில்

எதுகொண்டு வந்தாய் இழப்பதற்கு? நீயும்

பொதுத்தொண்டும் கொஞ்சம் புரி.

கவிஞரின் இந்தப் பாடலைப் படிக்கும்போது, ஊருக்குழைத்தல் யோகம் என்று சொன்னானே பாரதி! அந்த வேதவாக்கியம் அல்லவா நம் நினைவுக்கு வருகிறது?

 தாய்மொழிப் பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்று ஒரு பக்கம் பரந்த மனம் படைத்த தேசப்பற்றாளர்கள் பிதற்றிக் கொண்டிருக்க, மறுபக்கமோ தாய்மொழிப் பற்றென்பது பிறமொழிகளின் மீதான காழ்ப்புணர்ச்சி என்று ஒரு சிலர் நஞ்சை உமிழ்ந்து கொண்டிருக்க இரண்டுக்கும் இடையே சொந்த மொழியிலும் வந்த மொழியிலும் அரைகுறைகளாகப் பலர் உலவும் சூழலில் கவிஞர் வெண்பாவூர் சுந்தரத்தின் கவிதை மிக அழகாக, தெளிவாக மொழிச்சிக்கலுக்கான தீர்வை முன்மொழிகின்றது.

இந்தியென்ன ஆங்கிலம் இன்ன பிறவுமென்ன

எந்தமொழி யானாலும் இங்கறிக!- சொந்தமெனப்

போயவற்றைத் தூக்கிவைத்துப் போற்றிப் புகழாமல்

தாய்மொழிக்கு முன்னுரிமை தா

எந்த மொழியும் படி, அறிவைப் பெறு பிழையில்லை. ஆனால் தாய்மொழியை மறவாதே.. அதற்கு முன்னுரிமை கொடு என்று நடுவுநிலைமையோடு நமக்கு வழிகாட்டுகின்ற இத்தகு படைப்புகள்தாம் இன்றைய தலைமுறையினருக்குத் தேவை.

 வழக்கமான தேய்ந்த பாட்டையிலான உள்ளடக்கங்களை மீறிப் புதுப்பாதை காட்டுகின்ற பல நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட சோதிமிக்க நவகவிதைகள்தாம் இன்றைய காலத்தின் தேவை. வெண்பா என்ற வடிவத்திலே பழமையும் மரபும் கவிதையின் வேராக இருந்தாலும் புதுமையை நோக்கிய கிளை பரப்பல்கள்தாம் உண்மையான வளர்ச்சியின் அடையாளம். தொடரப்போகும் அவரது பத்தாயிரம் வெண்பாக் கனவுத் திட்டத்தில் இதனையும் கவிஞர் கருத்தில் கொள்வார் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

-முனைவர் நா.இளங்கோ

Pin It