உணர்வுப் பாவலர் உசேன் புதுச்சேரியின் ஆசுகவி, இருபத்தோராம் நூற்றாண்டின் கவி காளமேகம். அவரின் படைப்பு வேகம் அசாத்தியமானது. இக்காலக் கவிஞர்களுக்குச் சிம்மசொப்பனமாயிருக்கும் மரபுப் பாவடிவங்களான வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் இவருக்குத் தண்ணீர்பட்டபாடு. இவரின் ஐம்பதாவது படைப்பாக வெளிவந்த வீராயி காப்பியம் இரண்டாயிரத்து அறுநூறு (2600) நேரிசை வெண்பாக்களால் ஆனது. அடுத்து ஐம்பத்தோராம் படைப்பாக இவர் எழுதிவெளியிட்ட தாய்நாட்டுக்கே வா! என்ற காப்பியமோ எண்ணூற்றுப் பதினெட்டு (818) கட்டளைக் கலித்துறைப் பாக்களால் ஆனது. கட்டளைக் கலித்துறையால் அமைந்ததோர் காப்பியம் தமிழுக்கு இல்லையே என்ற பெருங்குறை இவரால் தீர்ந்தது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், காப்பியம், வில்லுப்பாட்டு, கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு என்ற அனைத்து இலக்கிய வடிவங்களிலும் தமது படைப்பாளுமையைச் செலுத்திப் புதுச்சேரிக்குப் புகழ்சேர்க்கும் படைப்பாளராக விளங்கி வருபவர் பாவலர் உசேன்.

சாதனைச் செம்மல் சாயபு மரைக்காயர் அந்தாதி என்ற இந்நூல் உணர்வுப் பாவலர் உசேன் அவர்களின் அறுபத்தொன்றாம் இலக்கியப் படைப்பு. அந்தாதி என்ற தலைப்பிலான இந்நூலுக்குள் அந்தாதி, இரட்டை மணிமாலை, பதிகம் என்ற மூன்று இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தாதி, இரட்டை மணிமாலை, பதிகம் என்ற இம்மூன்று இலக்கிய வகைகளும் காரைக்கால் அம்மையாரால் தமிழிலக்கிய உலகுக்கு வழங்கப்பட்ட அரிய கொடை. இம்மூன்று சிற்றிலக்கியங்களையும் அறிமுகம் செய்தவர் அவரே. அதுமட்டுமன்றி கட்டளைக் கலித்துறை என்ற பாவகையால் இலக்கியம் படைத்த முதல்வரும் அவரே. காரைக்கால் அம்மையார் கையாண்ட அந்தாதி, இரட்டை மணிமாலை, பதிகம் என்ற இம்மூன்று சிற்றிலக்கிய வகைகளையும் கையாண்டு காரைக்கால் பேராசிரியர் மு.சாயபுமரைக்காயர் புகழ்பாடும் வகையில் பாவலர் உசேன் அவர்கள் சாதனைச் செம்மல் சாயபு மரைக்காயர் அந்தாதி என்ற இந்நூலை உருவாக்கியிருப்பது உண்மையில் வியப்பிற்குரியது.

பேராசிரியர் மு.சாயபுமரைக்காயர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர். நாடறிந்த இலக்கியப் படைப்பாளி, தமிழ் மாமணி, கலைமாமணி, பல்கலைச் செல்வர், இலக்கியச் சுடர், எழுத்து வேந்தர் முதலான முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். பலநூறு நல்ல ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் உருவாக்கிய பெரும்பேராசான். மிகச்சிறந்த மனிதநேயர், மத நல்லிணக்க மாமணி, அப்பழுக்கற்ற அன்பாளர், உற்றுழி உதவும் உவப்பாளர் என்று பேராசிரியரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லவற்றுக்கும்  மேலாக என்னுடைய குரு, பேராசான், வழிகாட்டி. உரையாசிரியர்கள் சொல்வதுபோல், விரிவஞ்சி விடுத்தேன்..

பேராசிரியர் மு.சாயபுமரைக்காயரின் பணிஓய்வுப் பராட்டுவிழாவின் ஓர் அங்கமாக பாவலர் உசேன் அவர்களால் சூட்டப்படும் இப்பாமாலை (சாதனைச் செம்மல் சாயபு மரைக்காயர் அந்தாதி) வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற இரண்டு பாவகைகளாலும் பேராசிரியரின் புகழ்பாடுகிறது. நூற்று முப்பத்தொரு பாடல்களைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மூன்று நூல்கள் வருமாறு,

1.    சாதனைச் செம்மல் சாயபு மரைக்காயர் அந்தாதி:
வெண்பா, கட்டளைக் கலித்துறை யாப்பில் தொடுக்கப்பட்ட நூறு பாடல்களைக் கொண்ட நூல். அந்தாதி அமைப்பிலானது.
2.    இன்முகச் செல்வர் சாயபு மரைக்காயர் இரட்டை மணிமாலை:
வெண்பா, கட்டளைக் கலித்துறை யாப்பில் தொடுக்கப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட நூல்.
அந்தாதி அமைப்பிலானது.
3.    பல்கலைச் செல்வர் சாயபு மரைக்காயர் பதிகம்:
வெண்பா யாப்பில் தொடுக்கப்பட்ட பத்துபாடல்களைக் கொண்ட நூல்.

மூன்று நூல்களுமே பேராசிரியரின் பேசரிய பெருமைகளை பல்வேறு உத்திகளில் பல்வேறு கோணங்களில் சித்திரிக்கின்றன. குறிப்பாக, பதிகத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் பின்வருமாறு,

நேயம் நிறைந்தவர்! நேர்மையைக் காப்பவர்!
தூய மனத்தவர்! சோர்விலா -தேயத்தார்!
ஈயும் குணத்தவர்! யார்க்கும் உறவினர்!
சாயபும ரைக்காயர் சால்பு

எப்பொழுதும் புன்சிரிப்பு! இன்னிதழ்சொல் தேன்குவிப்பு!
தப்பா துதவும் கரத்துடிப்பு! -முப்போதும்
மானிடரைப்போற்றும் மாண்பு! செயல்முனைப்பு1
வானவர்க்கும் அன்பரிவர் வாழ்த்து!

பேராசிரியரின் பண்புநலன்களைப் படம்பிடிக்கும் இந்த இரண்டு பாடல்களிலும் பாவலர் உசேனின் கவிதை ஓட்டத்தையும் அவரின் சொல் தேர்வையும் தேர்ந்த சொற்கள் கற்போர் நெஞ்சில் கவிப்பொருளைச் சித்திரமாகத் தீட்டும் அதிசயத்தையும் நாம் உணர்ந்து இன்புறமுடியும்.

தொடர்ச்சியாகப் பாவலர் உசேன் அவர்களின் கவிதைகளை அவதானித்து வருபவன் என்ற முறையில் அவர் கவிதைகளின் தனிச்சிறப்புகளாகச் சிலவற்றைப் பட்டியலிட முடியும். அவை பின்வருமாறு,

1.    ஓசைநயத்தோடு இயைந்து நிற்கும் யாப்புநெறி
2.    இயல்பான சொல்தேர்வு
3.    வகையுளிகள் அதிகம் விரவாத வடிவநேர்த்தி
4.    யாப்புக்குள் அடங்கும் கருத்துச் செறிவு.

சாயபு மரைக்காயர் அந்தாதி என்ற இத்தொகுதியிலும் உசேன் அவர்களின் மேலே சொல்லப்பட்ட தனிச்சிறப்பான கவிதைப் பண்புகள் பொருந்தி சிறக்கின்றன. குறிப்பாக, முதலில் இடம்பெற்றுள்ள அந்தாதியில் வெண்பா, கட்டளைக் கலித்துறை இரண்டு பாவகைகள் அடுத்தடுத்து அந்தாதியாகத் தொடுக்கப்பட்ட நூறு பாடல்களும் ஆற்றொழுக்காக காரைக்கால் சிறப்பு, சாயபு மரைக்காயர் குடும்ப பராம்பரியம், சாயபு மரைக்காயர் இல்லத்தார், அவர்பெற்ற சிறப்புகள், அவரின் படைப்புகள், அவரின் தனிச்சிறப்புகள் எனத் தொடர்ச்சியாக ஓட்டமும் நடையுமாக நம்மைக் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் லாவகத்தோடு அமைக்கப்பட்டிருப்பது உசேன் அவர்களின் படைப்பிலக்கிய செய்நேர்த்தியைக் காட்டுகிறது.

ஆமென்ற போதும் இலையென்ற போதிலும் அவ்விரண்டும்
நாம்பெற்ற பேறென்றே ஏற்றுத்தான் கொள்கின்ற நல்லவுள்ளம்
ஓமென்றும் யேசென்றும் ராமென்றும் பல்லோர் உரைத்திடினும்
நாமெல்லாம் உற்ற சகோதரர் என்றென்னும் நல்லவரே!  (அந்தாதி: 31)

பேராசிரியரின் பண்பட்ட உள்ளப் பாங்கையும் மத நல்லிணக்க அணுகுமுறையையும் வெளிப்படுத்தும் கட்டளைக் கலித்துறைப் பாடல் இது. அந்தாதியில் இடம்பெற்றுள்ள இப்பாடலின் சொல்லழகும், பொருளழகும் கற்பவர் நெஞ்சை நிச்சயம் களிப்புறச்செய்யும் என்பதில் ஐயமில்லை.

மனமுவந்து ஒருவரைப் பாராட்டுதல் என்பது ஓர் உயரிய பண்பு. இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஒருவரை ஒருவர் பாராட்டுதல் என்பதே அருகிப்போய்விட்டது. அதிலும் கற்றவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளிடம் இப்பண்பைக் காண்பது அரிதிலும் அரிது. பாவலர் உசேன் இதில் விதிவிலக்கானவர். தகுதியானவர்களைத் தகுதிவாய்ந்தவர்கள் பாராட்டுவதுதான் பெருமைக்குரியது. இந்த வகையில் பாவலர் உசேன் பாராட்டுவதற்குரிய தகுதியை முழுதாகப் பெற்றவர். பாராட்டுபெறும் பேராசிரியர் மு.சாயபுமரைக்காயரோ பாராட்டு பெறுவதற்கான தகுதியை முற்று முழுதாகப் பெற்றவர். கவிமாலை சூட்டிப் பாராட்டும் இந்தப் பாராட்டு காற்றோடு கலந்து கரைந்துபோகும் பாராட்டு அன்று காலப் பெட்டகத்தில் கல்வெட்டாய் நின்று நிலைபெறும் பேறுபெற்றது.

அனைத்து வளங்கள் அகிலத்தில் பெற்று
பனியும் மலருமாய் பாட்டும் இனிமையுமாய்
கன்னல் சுவையுமாய் கண்ணும் ஒளியுமாய்
என்றென்றும் வாழ்க இனிது        (அந்தாதி: 98)

என்று உசேன் அவர்களோடு இணைந்து நாமும் பேராசிரியர் மு.சாயபுமரைக்காயரைப் பாராட்டுவோம். மனிதம் போற்றுவோம்!

Pin It