‘இயல்பின்றித் தவிக்கும் வீடு’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கடற்கரய்’ தந்த முதல் நூல். விருத்தாசலத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் ஹைதர் கான். இதில் 92 கவிதைகள் உள்ளன. கணையாழி, கனவு, புதிய கோடங்கி, கவிதா சரண் ஆகிய ஏடுகளில் கவிதை எழுதியுள்ளார்.
 
‘பூக்களுதிரும் புல்வெளித் தரை’ – பூ உதிரும் சாதாரண செயல் பற்றிப் பேசுகிறது.

 எந்தப் பூவும் இலைகளின் நிறத்தை எடுத்துக்
 கொள்வதேயில்லை

என்பது வித்தியாசமான கவலையாக இருக்கிறது.

 மரத்தின் தலையில்
 வண்ணமிட்டிருந்த நிறம்
 இனி மரத்தோடிராது

என்பது கவிமனக் கவலையின் அழகான பதிவு.

 பூக்களுதிரு மோசை
 மனதில் பிரளயத்தையே நிகழ்த்தி
 ஊமையாக்கி விடுகிறதென்னை

என்ற முத்தாய்ப்பு சற்றே செயற்கையாக இருக்கிறது. இதில் பிள்ளைத்தனம் சார்ந்த துணுக்குறுதல் நியாயப்படுத்தப்படவில்லை.

 சாதாரண குடும்பத்தின் சங்கடங்கள் கவிந்து நிற்கும் கவிதை ‘பிரயாசையின் வெளியில்’! அம்மா, அண்ணன், அப்பா, தம்பி பற்றிய நிலைப்பாடுகள் கவிதையின் கட்டமைப்பாக வளர்கின்றன. இந்நிலையில் இறந்தவர்களின் நினைவு நாள் அனுசரிக்க வேண்டியது, பொருளாதாரக் கவலை தருகிறது.

 இத்தனைக்கும் நடுவில்
 ஆலாய்ப் பறக்கும் எனது பிரயாசையின்
 பித்ருக்களின் முகச்சாயல் வெளியில்
 துருத்தி முன் வந்து நிற்கும்

என்பதில் குடும்ப பாரம் அழுத்துவது எளிமையாக ஆனால் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘இயல்பின்றித் தவிக்கும் வீடு’. இதில் ‘நீ இல்லாத வீடு’ என்ற வரி பல முறைகள் எழுதப்பட்டுள்ளதால் எரிச்சலூட்டுகிறது.

 நீ இல்லாத வீட்டிலிருக்கும்
 எப்பொருளும் அதன் இயல்பை விட்டு
 நகர்ந்து செல்லவே விருப்பம் தெரிவிக்கின்றன.

என்பதில் ஒரு புதிய பார்வை தெரிகிறது. தன் மனவுணர்வு ஜடப் பொருட்கள் மீது இறக்கி வைக்கப்படுகிறது.

 நீ இல்லாத வீடு
 உனது வாசனையை உற்பத்தி செய்து கொண்டே
 இருக்கிறது.

என்பது ஓர் அழகான கற்பனை. எனவே ‘பளிச்’ படிமம்  உருவாகி இருக்கிறது. (‘பெருங்காயம் இருந்த பாண்டம்' என்பது போல)! இக்கவிதை நன்றாக வந்திருக்க வேண்டியது. உத்தி சரியாக அமையாததால் தடம் மாறிவிட்டது.

 ‘வேறு வேறு’, ‘ராதையில்லாத உலகம்’, பரந்த வெளி’, ‘உனக்கான தெருவொன்றில்’ என்ற தலைப்புகளில் அமைந்த கவிதைகள் காதல் பற்றிப் பேசுகின்றன.

 நமக்கான ஒரு மொழி
 அறியப்படாமலே விலகிக் கொண்டிருந்தது
 நமக்குள்

என்பது நயமான வெளிப்பாடு. காதலர்களுக்குள் ஏற்படும் தயக்கம் இதுமாதிரி அழகாக சொல்லப்பட்டதில்லை. கவிஞருக்குப் பாராட்டுகள்!

 உன் பற்களின் பசபசப்பில் குழைத்தலாய்த்
 தொடர்ந்தது
 எனது குற்றங்களின் நெடிய நிழல்

என்ற வரிகளில் விசேஷப் பார்வை மொழி லாவகத்தைப் பதிவு செய்துள்ளது. மேற்கண்ட நயங்கள் ‘உனக்கான தெருவொன்றில்’ கவிதையில் காணப்படுகின்றன.

 ‘வீடற்ற ஒரு வீடு’ – வாடகைக் குடித்தனக்காரர்களின் சங்கடங்களைத் தெளிவாக்குகிறது.

 அவர்களோ
 குழந்தைகளின் சிறு குறும்பிலும்
 குற்றம் கண்டறிபவர்களாக இருக்கிறார்கள்

என்பது மனிதாபிமானம் சுருங்கி விட்டதைக் காட்டுகிறது.

 ‘பெயரின்றி அமையாத உலகு’ – வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. நம் பெயர்கள் பற்றிய சிந்தனைகள் பேசப்பட்டுள்ளன. மிக எளிமையான கவிதை.

 ‘மரத்தடி நிழலில் மதியம் ஒரு மணிக்கு’ – கவிதையில் மனம்போன போக்கில் கட்டற்ற சுதந்திரம் காணப்படுகிறது. மொழி நாகரிகத்தின் கழுத்து அறுபட்டுத் தொங்குகிறது.

 ஏழைக்  குடும்பத்துச் சிறுவன் பழங்கள் உண்ண முடியாமல் போவதைச் சொல்கிறது. ‘நினைவு, நினைவு சார்ந்த பதிவுகளும்’ என்ற கவிதை.

குறுங்கவிதைகள் சில உள்ளன. மரணம் பற்றிய கவிதைகளும் உள்ளன.
 
பிரேதமாயிருப்பதை விட
பிரேதத்தோடிருதுப்பது
மரணத்தைக் கொண்டு வந்து
மடியிலமர்த்தியிருப்பதைப் போன்றிருக்கிறதெனக்கு

என்பதில் ஓர் அழுத்தம் நம் மனத்தில் வந்து அமர்ந்து கொள்கிறது.

இன்னும் பேசுவதற்குப் பல கவிதைகள் உள்ளன. ‘எ’ என்ற எழுத்தின் மீது கடற்கரய்க்கு அப்படியென்ன வெறுப்பு? பல இடங்களில் ‘யெ’ என்ற எழுத்தையே பயன்படுத்தியுள்ளார். எழுத்துப்பிழைகள் பல உள்ளன. நிறைவாக, கருப்பொருள் தேர்வு, தலைப்பு தருதல் ஆகியவை முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. சுயசிந்தனை கவிதைக்கு வலு சேர்க்கிறது. நல்ல முயற்சி!

Pin It