‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதைத் தொகுப்பை வா.மணிகண்டன் எழுதியுள்ளார். இதில் 57 கவிதைகள் உள்ளன. காதல், மரணம், தத்துவம், மனித நேயம் எனப் பாடுபொருள் பலவாகும்.

 கவிதை ஆக்கம் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படலாம். சரியான உருப்பெறுதல் நடைபெறும் முன்னே கவிதையை எழுதிவிட்டது போல ஒரு போதாமை இவர் கவிதைகளில் முன் நிற்கிறது. எடுத்துக்காட்டாக ‘சுவரில் ஊர்ந்த கதைகள்…’

 தன் நாவுகளால்
 என் கண்ணீரையும்
 அசைவற்ற விழிகளில்
 நிர்வாணத்தின்
 நெளிவுகளையும்
 பதிவு செய்திருக்கிறது
 இந்தச் சுவர்
 இப்போது
 படிமமாக்குகிறது
 சுண்ணாம்பினை
 உதிர்த்து
 தனக்கான ஓவியங்களை

இக்கவிதையை இரண்டு பகுதிகளாகப் பிரித்தால் பிற்பகுதியில் ஒரு தகவல் காணப்படுகிறது. இத்தோடு முதல் பகுதியைத் தொடர்பு படுத்துவது கடினமாக இருக்கிறது. கண்ணீர் எதற்காக என்று புரியவில்லை.ஒரு கவிதைக்கான சொற்களின் தேர்வு வெற்றியடையவில்லை. எனவே கவிதையின் கர்ப்ப காலம் முறையாக இல்லை.

 ‘விரல்களில் உதிரும் சொற்கள்’ – கவிதை சொல்லி என்ன சொல்ல நினைக்கிறார் என்று தெரியவில்லை.வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டும் என நினைத்து ஏதோ எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது. ‘வண்ணக் கைக்குட்டை விற்பவன்’ புனைவுக் கவிதை! துணியிலிருந்து வண்ணப் பூக்கள் எதிர்தல், குருவிகள் தடுமாறிப் பறத்தல், மலை உருளுதல், தலைவர்கள் முழக்கம் போன்றவை சுவாரஸ்யமூட்டுகின்றன. இவையெல்லாம் ஓவியத்தில் காணப்படுபவை என்று கவிதை முடிகிறது. ‘சில கணங்கள்’ கவிதை பரவாயில்லை.

 ‘மழை ஓய்ந்த இரவு’ , ‘சாயல் படிந்த சூரியன்’ போன்றவற்றில் மனுஷ்யபுத்திரன் பாணி முழமையாகப் படிந்துள்ளது. ‘நிழற் குறிப்பு’ நன்றாகத் தொடங்கிப் போய்க் கொண்டிருந்த கவிதை முடிவு தெரியாமல் நிற்கிறது. ‘ஆத்ம திருப்தி’ ஒரு வகையில் துர்ப் போதனை செய்கிறது.. சொல்லும் முறையை மாற்றினால் யதார்த்தம் பதிவாகும்.

 நாயின் மீது இரத்தம் தெறிக்கக் கல்லெறியுங்கள்
 வலியில் ஊளையிட்டு ஓடும்

என்பது போல் ஐந்து தவறுகளைப் போதனை செய்கிறார்.கவிதையின் நோக்கம் பாழ்பட்டு விபரீதம் தலைதூக்கி நிற்கிறது.

 ‘யாரும் பதிக்காத கால்தடங்கள்’ –ல் ஒரு புதிய படிமம் காணப்படுகிறது.

 உனக்கு எழுதி முடித்த கடிதத்தின்
 கோடொன்று
 சலனமில்லாத் தனிமையில்
 இருள் துளைத்து
 மரங்களற்ற பரப்பொன்றில்
 சாலையாய் நீள்கிறது.

மற்ற வரிகளைப் படித்தால் தகவல்கள் துண்டு துண்டாக நிற்கின்றன.வாசிப்பு அனுபவம் சங்கடமாக இருக்கிறது.

 மரணம் பற்றிச் சில கவிதைகள் பேசுகின்றன. ‘உயிர் பிரிதலின் ஓசை’ நண்பர்களை விளித்துப் பேசுகிறது.

 சப்தங்களைக் குறையுங்கள்
 அதிகாரத்தின் கொடுக்கினை நிறுத்துங்கள்

என்றெல்லாம் கூறி…

 மரணம் அரங்கேறும்
 இக்கணத்தை
 நிசப்தத்தின் கரங்களுக்குள்
 ஒப்படைத்து
 உயிர் பிரியும் ஓசையை
 ரசிக்கலாம்

என்கிறார் மணிகண்டன். ‘பூப் பூக்கும் ஓசை: அதை கேட்கத்தான் ஆசை’ என்ற வைரமுத்து வரிகள் நினைவிற்கு வருகின்றன. கவிதையாக்கத்தில் மிகமிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் கவிதைகள் உள்ளன.

Pin It