semozhi_sirpikal_450தமிழ் மொழிக்காக, அதன் செம்மொழித் தகதிக்காக, பிரதிபலன் எதிர்பாராமல் தம் வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்ற அறிஞர்கள் பலர் இம்மண்ணில் வாழ்ந்து மறைந்து உள்ளனர். அவர்களுக்குச் சிறப்புச் செய்யும் வகையிலும், சமகாலத் தமிழருக்கு அவர்களை அறிமுகம் செய்யும் விதமாகவும், இந்த நூலைத் தொகுத்து உள்ளனர்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தின் வரலாறு நெடியது. அதன் முழுக்காலத்தையும், அத்துணை அறிஞர்களையும் வரிசைக்குள் நிறுத்துவது மேரு நிகர்த்த செயல். எனவே, தமிழ் மொழிக்குக் குறிப்பிடத்தக்க பணி ஆற்றிய வீரமா முனிவர் தொடங்கி, அண்மைக்காலம் வரையிலும், உலகளாவிய சிறப்பைத் தமிழுக்கு உருவாக்கித் தந்த அறிஞர்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்று உள்ளன.

இப்பட்டியலை வகுத்துக் கொடுத்தவர், பேராசிரியர் க. அன்பழகன்.

கலைஞர் மு. கருணாநிதி, பரிதிமாற் கலைஞர், தேசிய கவி சுப்பிரமணிய பாரதி, மனோன்மணீயம் சுந்தரனார், மறைமலை அடிகள் தொடங்கி, கீழ்காணும் தமிழ்ப்பெரியோர்களைப் பற்றிய குறிப்புகள், ஒரு பக்க அளவில், சுருக்கமாக இடம் பெற்று உள்ளன.

1. பா.வே. மாணிக்க நாயக்கர் 2. வீரமா முனிவர் 3. சீகன் பால்கு 4. ராபர்ட் கால்டுவெல் 5. ஜி.யூ. போப் 6. எல்லீஸ் 7. கமில் சுவலெபில் 8. தனிநாயகம் அடிகள் 9. வள்ளலார் இராமலிங்க அடிகள் 10. ஆறுமுக நாவலர் 11. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 12. கோபாலகிருட்டிண பாரதி 13. அரசஞ்சண்முகனார். 14. காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்யார் 15. விபுலானந்த அடிகள் 16. தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் 17. ஞானப்பிரகாச அடிகளார் 18. நா. கதிரைவேற் பிள்ளை 19. அயோத்திதாசப் பண்டிதர் 20. வள்ளல் பாண்டித்துரைத் தேவர் 21. மன்னர் பாஸ்கர சேதுபதி 22. அரசர் அண்ணாமலைச் செட்டியார் 23. சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் 24. வ.உ.சிதம்பரனார் 25. தந்தை பெரியார் 26. பூவளூர் தியாகராயர் 27. உ.வே.சா 28. சி.வை. தாமோதரம் பிள்ளை 29. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் 30. அறிஞர் அண்ணா 31. காயிதேமில்லத் 32. கி.ஆ.பெ. விசுவநாதம் 33. ம.பொ. சிவஞானம் 34. பெருஞ்சித்திரனார் 35. மு.சி. பூரணலிங்கம் பிள்ளை 36. ந. சஞ்சீவி 37. தி. இலக்குமணப் பிள்ளை 38. கா.சு.பிள்ளை 39. நாவலர் சோமசுந்தர பாரதியார் 40. த.வே.உமா மகேசுவரனார் 41. ந.மு. வேங்கடசாமி நாட்டார் 42. இரா. இராகவையங்கார் 43. மு. இராகவையங்கார் 44. மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை 45. வி. கனகசபைப் பிள்ளை 46. ந.சி. கந்தையா பிள்ளை 47. வை.மு. கோதைநாயகி அம்மாள் 48. பம்மல் சம்பந்தனார் 49. கா. நமச்சிவாய முதலியார் 50. செல்வகேசவராயர் 51. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் 52. ச.வையாபுரிப் பிள்ளை 53. செய்குதம்பிப் பாவலர் 54. செகவீரபாண்டியனார் 55. திரு வி.க. 57. ரா.பி. சேதுப்பிள்ளை 58. மு. அருணாசலம் 59. தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 60. மா. இராசமாணிக்கனார் 61. மு. வரதராசனார் 62. தேவநேயப் பாவாணர் 63. சி. இலக்குவனார் 64. க. வெள்ளைவாரணனார் 65. வ. சுப. மாணிக்கனார் 66. அவ்வை துரைசாமி 67. அ.ச.ஞானசம்பந்தன் 68. பாரதிதாசன் 69. சுத்தானந்த பாரதி 70. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 71. நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை 72. கவிஞர் மீரா 73. மயிலை சிவ.முத்து 74. புதுமைப்பித்தன் 75. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி 76. அகிலன் 77. விந்தன் 78. தீபம் நா. பார்த்தசாரதி 79. அ. மாதவையா 80. தி.கோ. சீனிவாசன் 81. கீ. இராமலிங்கனார் 82. புலவர் குழந்தை 83. தமிழ் ஒளி 84. ஆ. சிங்காரவேலு முதலியார் 85. கா. அப்பாத்துரையார் 86. மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் 87. மங்கலங்கிழார் 88. பெரியசாமித் தூரன் 89. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 90. ந. பிச்சமூர்த்தி 91. சங்கரதாஸ் சுவாமிகள் 92. சி.சு. செல்லப்பா 93. க.நா. சுப்ரமணியம் 94. வல்லிக்கண்ணன் 95. வ.ரா. 96. வெ. சாமிநாத சர்மா 97. பெ.நா. அப்புஸ்வாமி 98. நா. வானமாமலை 99. மயிலை சீனி வேங்கடசாமி 100. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் 101. கி.வா. ஜகந்நாதன் 102. திருக்குறள் வீ.முனுசாமி 103 கு.ச. ஆனந்தன் 104. க. கைலாசபதி 105. ஜெயகாந்தன் 106. கா. சிவத்தம்பி 107. கி. ராஜநாராயணன் 108. ச.வே. சுப்பிரமணியம் 109. மணவை முஸ்தபா.

இப்பட்டியல், படைப்பாளிகளை இரண்டாவதாக நிலைப்படுத்தி, தமிழுக்காகத் தொண்டு ஆற்றிய ஒருவரது செயற்கரிய செயலையும், அதனால் சூழலில் உண்டான விளைவுகளையும் முன்னிட்டு, அறிஞர்கள் இடம் பெறுகிறார்கள். மொழியியல் சார்ந்த, இலக்கியப் பணியாளர்களை முதன்மையாகக் கொண்ட இப்பட்டியலில், மொழி வளர்ச்சியின் இதரக் கூறுகளான படைப்பு இலக்கியம், இசை, நாடகம், கல்விப்பணி, அச்சுப்பணி, கல்வெட்டு இயல், கலைச் சொல் ஆக்கம், மொழிபெயர்ப்பு, வரலாறு, அறிவியல் மற்றும் களப்பணி ஆகிய கூறுகளில் தமிழுக்குத் தொண்டு ஆற்றிய அறிஞர்களை வகைமையாகத் தகவு அமைத்துக் கொண்டு உள்ளது. மொழி வரலாறில் தடம் பதித்துக் கொண்ட அறிஞர்களின் உள்ளும் புறமுமான வாழ்க்கையை இந்நூல் பதிவு செய்து உள்ளது. ஆனால், கிருபானந்த வாரியார், உவமைக் கவிஞர் சுரதா, கவிஞர் கண்ணதாசன் ஆகியோரது பெயர்கள் விடுபட்டு இருப்பது குறிப்பாகத் தெரிகின்றது.

இந்நூலின் மற்றொரு சிறப்பு: ஒரே நூலில், தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் குறிப்புகள் இடம் பெற்று உள்ளன.

பரிதி இளம்வழுதியின் எண்ணப்படி இந்த நூல் உருவாகி உள்ளது. குறிப்புகளை, அஜயன் பாலா எழுதி உள்ளார். நாச்சிமுத்து, பெரியார் சாக்ரடீசு, ரமேஷ் சக்ரபாணி ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு, இந்நூலை உருவாக்கி உள்ளது. ஓவியர் பச்சைமுத்துவின் கைவண்ணம் பளிச்சிடுகின்றது. விஜயனின் வடிவமைப்பு அருமை.

நூலை முழுமையாக வாசிக்கும்போது, தமிழரது வாழ்க்கைக்குள் பயணித்து வெளிவருவதை உணர முடியும்.

தமிழர்தம் இல்லங்கள்தோறும், குறிப்பாகத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருக்க வேண்டிய நூல். உயரிய தரத்தில் அச்சிட்டு உள்ளனர்.

248 பக்கங்கள். விலை ரூ.1200

வெளியீடு: ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ், 501, அரிஹந்த் டவர்ஸ், ஜவஹர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை - 600 107

தொலைபேசி: 044-42178992; இணையதளம்: www.abramedia.in ; E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It