"எம் இல்லங்கள் தீக்கிரையானது
எம் குழந்தைகள் மடிந்தனர்
எம் பெண்கள் கற்பிழந்தனர்
எம் இளைஞர் சுடப்பட்டனர்
எம் தேசம் அழிக்கப்பட்டது
நாங்கள் எம் மொழியைப்
பேசியிருக்கக் கூடாது''

porum_valiyum_450ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத்தில் ஒரு பெரும் போர் நடந்து முடிந்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கானோர் அகதியாக்கப்பட்டு புலம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான குழந்தைகளும், தாய்மார்களும் பெரியோரும் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் செத்து மடிந்தனர். ஒரு போரினால், இவ்வளவு துயரங்கள் நடக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கின்ற படிப்பினை. ஆனால் எதற்காக இந்தப்போர் நடந்தது?

உலகம் தோன்றிய காலந்தொட்டு போர்களும் தொடர்ந்து வருகின்றன. ஆனால், இதுவரை உலகின் எப்பாகத்திலுமே நிகழாத ஒரு போர் வெறியாட்டம் தமிழீழத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. தமிழீழத் தீவின் தமிழர்கள் எதற்காகப் போராடினார்கள்? எதற்காகச் செத்து மடிந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு சொல்லப்படும் மிக எளிய பதில் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

சொந்தநாட்டில், சொந்த மொழியைப் பேசினார்கள் என்பதுதான் அவர்கள் துரத்தப்பட்டதற்கும், கற்பழிக்கப்பட்டதற்கும், கொலை செய்யப்பட்டதற்கும், பழிவாங்கப்பட்டதற்கு மான ஒரே காரணம். உலகின் எந்த மூலையிலும் இந்தக் காரணத்திற்காக இப்படியொரு அநீதி இழைக்கப்பட்டதில்லை.

ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைகளைக்  கண்டு கண்ணீர் வடித்த, பதைபதைத்த, எதிர்ப்பை பதிவு செய்த, இன்னும் செய்து வருகிற இந்த பூகோளத்தின் அனைத்து மக்களும், தமிழீழத்தில் கண்முன்னே நடந்த அநீதியை அமைதியாக வேடிக்கை பார்த்தனர். ஈழத் தமிழர்கள் கூக்குரலெடுத்து அலறினர். இருகரங்களை நீட்டி உதவிக்கழைத்தனர். ஆனால், உலகமோ செவிகளையும், கண்களையும் இழந்து போய்க் காட்சியளித்தது.

அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணம் மட்டுந்தான் அவர்களின் அத்துணை துயரங்களுக்கும் காரணம். தமிழர்கள் அங்கு மட்டுமா வசித்தார்கள்? தமிழ்நாட்டில் வசித்த தமிழர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் உதவி செய்திருப்பார்களே? என்று இந்த உலகம் கேட்குமானால், என்னால் பதில் சொல்ல முடியும் அதிர்ச்சியடையாமல் இருந்தால்.

இந்தியப் பேரரசின் ஆட்சிக்கட்டிலிலும், தமிழகத்தின் அரசியல் களத்திலும் வீற்றிருந்த தமிழன், காட்டிக்கொடுத்தான். ஈழத்தமிழர்கள் செத்துமடிய தன்னாலான உதவிகளைச் செய்தான். அங்கு தமிழீழம் வீழ இங்கே தலைவர்கள் வாழ்ந்தனர். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தமிழீழத்தின் இறுதிக்கட்டப் போரில் தமிழகத்தில் வாழ்ந்த அத்துணை தமிழர்களும் கோழைகளே. நான் உள்பட.

சமகாலத்தில் நடந்த இந்த அக்கிரமத்தை இந்தியாவின் மற்ற சகோதர இனத்தவர்களோ, உலகின் மற்ற பாகங்களிலுள்ள யாருமோ தெளிவாக அறியவில்லை. ஆதலால், அதைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில், இன்னொரு தோல்வியை தமிழினம் சந்திக்கும் வரலாறு எழுதப்படாமல் இருப்பதற்காக.

இதைப் பதிவு செய்திருக்கும் புத்தகம்தான் "போரும் வலியும்' இது எழுத வேண்டிய புத்தகம் அல்ல. படிக்க வேண்டிய புத்தகமும் அல்ல. இந்தப் புத்தகம் நெடுகிலும் வழிந்து கிடக்கும் துயரங்கள் இன்னொரு இனத்துக்கோ, இன்னொரு நாட்டு மக்களுக்கோ நிகழாமல் இருக்கவே நினைக்கிறேன். என் இயலாமைகளையும், எனக்கான அவமானங்களையும் சொல்லும் இந்தப் புத்தகம், என்னை என் கண் முன்னே நிற்கச் செய்து ஒரு கேள்வி கேட்டது. "நீ யார்?' என்று! அதற்கு, "நான் ஒரு தமிழன்' என்றேன். "இனி அப்படிச் சொல்லாதே' என்றது மனசாட்சி.

போர் நிகழக்கூடாது எங்குமே என்பதுதான் என் எண்ணம். போரும் அதற்கான வலிகளும், இழப்புகளும் சொல்லில் அடங்காதவை. மேலும், எதற்காகப் போர் நடக்கிறது என்பதை பொறுத்தே போர் பற்றி நாம் முடிவு செய்ய முடியும். ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் என்றால் அது தேவையற்றது. தன் எல்லைகளை விரிவாக்க விரும்பும் தலைவர்களின் சுயநலமும், பதவி போதைகளும் பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி தன் எல்லைகளை அதிகரிக்கும் அகம்பாவம் என்பேன்.

ஆனால் இந்தப் புத்தகம் குறிப்பிடும் போர் என்பது எந்த அயல் நாட்டோருக்கும் இல்லை. தன் சொந்த இடத்தில், தன் இனம் அழிவதைக் கண்டு, அடக்குமுறைகளுக்கு எதிராக அந்த இனம் எழுந்தபோது இருக்க இடம் இன்றி, வாழ சொந்த நாடின்றி, விரட்டப்படுவதைத் தடுக்க ஒரு இனம் தன்னைத்தானே போராடி அழித்துக்கொண்ட போர் அது.

இப்பெருமை கொண்ட தமிழினத்தின்... ஈழத் தமிழினத்தின் கிழித்து எறியப்பட்ட வாழ்க்கை பக்கங்களில் ஒரு சில இரத்தக் கறை படிந்த காகிதங்கள் தான் இவை. இன்னும் சொல்லப்படாத, சொல்ல முடியாத, மறைக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.

அதை நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. இனி என் கண்களில் இருந்து வடிவதற்கு ஏதுமில்லை. இது நாம் படிக்க வேண்டிய புத்தகம் அல்ல. இதுபோல எத்தனை புத்தகங்கள் வாசித்தாலும், நமக்கு எந்த சூடு சொரணையும் வரப்போவதில்லை. எனவே, இது நமக்கான புத்தகம் என்று நான் சொல்ல மாட்டேன். இதை ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய, ஃப்ரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு இனத்தின் வலிமையையும், கடைசிவரை தனது உயிர்காக்க, உடமை காக்க, இருப்பிடமும், சொந்த பூமியும் காக்க எப்படி ஒரு இனம் போராடியது என்பதை இந்த உலகம் அறிய வேண்டும்.

முதலில் இது புலிகளின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை. அவர்கள் போராளிகள். இலங்கை யுத்தங்களின் நடுவே சிக்கிக்கொண்டு, கொடூரமான, கூறுவதற்கு வார்த்தைகளின்றி எந்த மொழிக்காரர்களின், எந்த நாட்டுக்காரர்களின் ஆதரவுக் கரமும் நீளாததால், தன் கண்முன்னே தன் இன மக்கள் அழிந்த கதையைத்தான் ஒரு துர்பாக்கியசாலி எழுதியிருக்கிறார்.

இதை வாசித்தபோது, எனக்கேற்பட்ட உளச்சோர்வும், துயரமும், ஆற்றாத கண்ணீரும் எழுத்தில் அடங்காதவை. சொல்லில் வடிக்க முடியாத அத்துயரில் நெக்குருகிப் போனேன். நான் ஈழ மண்ணில் ஏதோ ஓர் இடத்தில் மரணித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
- இயக்குனர் சேரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

***

போரும் வலியும்

ஆசிரியர் - சாவித்திரி அத்துவிதானந்தன்

வெளியீடு: சேரன் நூலகம்

9A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா சாலை,

தியாகராய நகர், சென்னை - 17

பக்கம் - 216

விலை ரூ.150

( 'போரும் வலியும்' புத்தகம், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த  ஜனவரி 11, 2013 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 36 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம், தமிழ்க்குளம் பதிப்பகம், பாதை நூலகம் மற்றும் தாய்மடித் தமிழ்ச்சங்கம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.)

Pin It