திறந்து கிடக்கும் வீடு
உள்ளே நுழையும் காற்று
பேச நிறைய இருக்கிறது - கவிஞர் பாரதி வசந்தன் எழுதிய ஹைக்கூ. இடம் பெற்ற தொகுப்பு 'பேச நிறைய இருக்கிறது'. தொகுத்தவர்கள் நிலா கிருஷ்ணமூர்த்தி - விடியல் விரும்பி. இது வெளியான ஆண்டு 2005. நான்கு ஆண்டுகளுக்குப் பின் 'பேச நிறைய இருக்கிறது' என்னும் தலைப்பிலேயே ஒரு தொகுப்பை அளித்துள்ளார் கவிஞர் நிறைமதி. இத்தலைப்பிலேயே தொகுப்பின் முதல் கவிதை அமைந்துள்ளது.

கேசவனைக்
கடைசியாய்
ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.
பார்த்ததும்
எங்கிருத்தோ
ஓடி வந்து விட்டான்.
நிறைய பேசினான்.
ரயில் தாமதம்
காத்திருந்ததால் நேரிட்ட சலிப்பு
மகளைக் காண இருக்கும் ஆர்வம்
சரியாய் நான் பேசவில்லை.
அதுதான் கடைசி முறை என
தெரிந்திருந்தால்
நிறையப் பேசியிருப்பேன்.
கேசவனிடம்
பேச
நிறைய இருக்கிறது. 

கவிஞர் பாரதி வசந்தன் இயற்கையை வைத்து எழுதியுள்ளார். கவிஞர் நிறைமதி மனிதரை வைத்து எழுதியுள்ளார். 'கேசவனிடம்' மட்டுமல்ல ஒவ்வொருவரிடமும் பேச நிறைய இருக்கிறது. வாய்ப்புகளே குறைவாக உள்ளன. ஒற்றைத் தன்மையில் நேர்ப் பேச்சில் அமைந்திருந்தாலும் சிறப்பாயுள்ளது. சிந்திக்கச் செய்கிறது. 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' கவிதையிலும் 'நிறைய பேசனும்' என்கிறார். ஆனால் முடிவில்

பேசிக் கொண்டேயிருந்தார்
யார் யாருடனோ
செல் பேசியில் என்று வருத்தப்பட்டுள்ளார். வருத்தத்திலும் ஒரு நியாயம் உள்ளதை மறுப்பதிற்கில்லை. அலைபேசி மனிதர்களை பிரிக்கிறது என்பதே மெய்.

ஈரம் பட்டு இரும்பு துரு பிடிப்பது ரசாயண மாற்றம். 'ரயில் பெட்டியின் ஜன்னல் கம்பியில் துரு ஏரிய கறை'யைக் கண்ட கவிஞருக்கு கற்பனை வேறாக விரிகிறது.

பிரிவுத் துயரில்
யார் யாரோ
வடித்த கண்ணீரின்
அடையாளமாய் என்கிறார்.

பயணம் சிலருக்கு மகிழ்ச்சியளித்தாலும் பலருக்கு துயரத்தையே அளிக்கிறது. அன்னையை, தந்தையை, அண்ணனை, தம்பியை, தங்கையை. ,தாத்தாவை, பாட்டியை, காதலியை அல்லது காதலனை,நட்பை என எவராவது ஒருவரை பிரிய நேரும் போது அது துயராக மாறி கண்ணீர் வடிக்கச் செய்கிறது. இப்'பிரிவுத் துயரம்' என்னும் கவிதைக் கவிஞரின் கற்பனைக்கு 'அடையாளமாய்' உள்ளது. மேலும் சில 'உடையாளங்களை'யும் காட்டியுள்ளார். 'சுதந்திரம்(?)' கவிதையில்

ஆண் சுதந்திரத்தின் அடையாளங்களாய்
மரம், குப்பைத் தொட்டி.
குட்டிச் சுவர், சாக்கடை.
கதவோரம்
உள்ளன என்கிறார். ஆண்களின் மீதான விமரிசனமாக வெளிப்பட்டுள்ளது. சிறுநீர் கழிக்கும் வாய்ப்பை ஆண்கள் தவறாக பயன் படுத்திக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். நாய்களும் இவ்வாறுதானே கழிக்கின்றன என்பது நினைவிற்கு வருகிறது. 'சுமைகளாய்'க் கவிதையிலும் பல அடையாளங்களைப் பட்டியலிட்டுள்ளார். அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் விவரித்துள்ளார்.

ஆண் அடையாளம்
சீண்ட சொல்கிறது
பெண் அடையாளத்தை.
அதிகாரி அடையாளம்
ஏவலாளாய் மாற்றுகிறது
சக பணியாளர்களை.
ஆண்டான் அடையாளம்
தீயாய் வெந்தது
வெண் மணியில்.
அரசு அடையாளம்
காயாத சுவடுகளாய்
தாமிர பரணியில்.
சாதி அடையாளம்
'பீ' யாய் நாறுகிறது
திண்ணியத்தில்.
மத அடையாளம்
மசூதியை இடித்தது
அயோத்தியில்.
ஏகாதிபத்திய அடையாளம்
வன்முறையாய்
ஈரான் ஈராக்கில்.  கவிஞர் அடையாளங்களை விமரிசித்துள்ளார். கண்டித்துள்ளார். தகர்த்துள்ளார். அடையாங்கள் அழிந்து அனைவரும் சமம் என்னும் நிலையிலேயே வாழ வேண்டும் என்கிறார். 'அடையாளம்' பற்றியதான இக்கவிதைகள் கவிஞரை அடையாளப் படுத்தும்.

'சிவகாசி விஜியும் டைடல் பார்க் சரண்யாவும்' கவிதை இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டு வித உலககளைக் கண்முன் காட்டுகிறார். தீப்பெட்டித் தொழிற்சாலையிலிருந்து பெண் விடுபட்டு கல்வி கற்று சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் படித்தாலும் தொழில் நுட்பத் துறையில் ஓர் அடிமையாகவே இருக்க வேண்டியுள்ளது. பெண்களின் நிலை மாறாமலே உள்ளதைக் கவிதை உணர்த்துகிறது. சிவகாசி விஜியை பற்றி பேசும் போது வட்டர மொழியையும் டைடல் பார்க் சரண்யாவை குறித்து எழுதும் போது தமிங்கில மொழியையும் கையாண்டிருப்பது நல்ல யுத்தி.

தெற்கிலிருந்து வடக்கையும் வடக்கிலிருந்து மேற்கையும் மேற்கிலிருந்து கிழக்கையும் கிழக்கிலிருந்து தெற்கையும் என இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது நெடுஞ்சாலை. தூரம் நீண்டிருப்பினும் நேரம் குறைவாக. கடக்க ஏதுவாக உள்ளது. இரண்டு வழி நான்கு வழி பாதைகளாகி ஆறு வழி பாதைகளாகி வருகிறது. 'சாலைக்கு அங்குட்டு' இருக்கும் ஆத்தாவைக் காண முடியாமல் வருந்தும் கவிஞரின் குரல் 'குறுக்கே ஓடும் தே.சா. ' காட்டியுள்ளது. ஏக்கத்துடனே கவிதை பயணிக்கிறது. எதார்த்த தொனியிலேயே வெளிப்படுத்தியுள்ளார்.

மரணம் மனிதனை விரட்டிக் கொண்டே இருக்கிறது, மரண பயமும் மனிதனை விடுவதில்லை. துரத்திக் கொண்டே இருக்கிறது. பயத்தை பாம்பாக திரித்து கவிஞர் எழுதியுள்ள கவிதை 'பாம்பா? பயமா?'

மரணம் மட்டும்
தொடரும் போல
பாம்பு பற்றிய
பயமும் அவஸ்தைகளும் என்கிறார். இக்கவிதை 'சூரியப் பிறைகள்' தொகுப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய

பயம்
ஊர்ந்து கொண்டிருக்கும் - இது
பாம்பு போன தடம் என்னும் ஹைக்கூவை மனத்தில் 'ஊர்ந்து' சென்றதை உணர முடிகிறது.

சாதாரண நிகழ்வுகளுக்கும்
வண்ணம் பூசி விடுகின்றன
மரணங்கள் என மரணம் குறித்தே 'மாறும் வண்ணங்கள்' கவிதையில் எழுதியுள்ளார். 'யதார்த்தம்' கவிதையிலும் மரணத்தையே முன்வைத்துள்ளார்.

தொலைபேசியில்
நண்பனின் மரணச் செய்தி
கேட்ட கணம் நிலை குலைந்தேன்
உடம்பு முழுவதும் பதற்றம்
அடுத்த கணமே
நடைமுறைச் சிந்தனையில்
எப்ப எடுக்கிறாங்க?
என்றேன். இன்றைய நடைமுறை இதுவே. எதாரத்த நிலையை எடுத்து காட்டியுள்ளார்.

ஒரு மரணம்
நிகழ்ந்தது
வழக்கம் போல
எல்லோருக்கும்
சொல்லி அனுப்பப்பட்டது
மறுநாள்
வழக்கம் போல்
எல்லாம் நிகழ்ந்தது என்று பூமா ஈஸவரமூர்த்தி 'தினசரி கொஞ்மாவது' தொகுப்பில் எழுதியதை நினைவு கூரச் செய்தது. கவிஞரே 'கருமமே கண்ணாய்' கவிதையில்

இனிய பயணம் அமையட்டும்
இறுதி ஊர்லத்தையும்
வாழ்த்தி நிற்கிது
மாநகராட்சிப் பலகை என மரணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரவேற்க வேண்டும் என்கிறார். மரணம் குறித்த அச்சத்துடன் ஒரு கவிதையில் கூறியவர் முடிவில் மரணத்தை எதிர் கொள்வது சிறப்பு என்கிறார். மரணம் பற்றிய பல்வேறு சிந்தனைகளை மனத்தில் 'புதைத்து'ள்ளார். 'மறக்க'வும் மக்கள் கையாளும் வழிகளையும் வரிசைப் படுத்தியுள்ளார்.

'கேள்வி' சமுகத்தின் முன் பல 'கேள்வி'களை வைக்கிறது. சாதியற்ற சமு்கத்தை உருவாக்குவோம் என மாணவர்களுக்கு அறிவுரைக்கிறது. ஆனால் பள்ளியில் சேர்க்கும் போதே 'சாதி' தேவைப்படுகிறது. கலப்பு மணம் புரிந்தவரும் சலுகைக் கிடைக்கும் சாதியில் பிள்ளையை அடையாளப்படுத்துவதை விமரிசிக்கிறது. "ஜாதின்னா என்னப்பா"? என சிறுவன் வினவியிருப்பது சாதி வெறியர்களின் கன்னத்தில் விழுந்த அறை. 'சித்திரைத் திருவிழா'வில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். உண்டு கொழுத்த உயர்சாதியினரைச் சாடவும் தவறவில்லை.

சமையல் செய்வது பெண்ணின் கடமை என்று ஆண் சமூகம் காலங்காலமாக முடிவு செய்து வைத்துள்ளது. சமையல் அறை பெண்களுக்கு சிறையாகவே உள்ளது. பெண்கள் சமையலறையில் படும் சிரமங்களும் அதிகம். 'மறைபொருள்' மூலம் பெண்கள் சமையலறையில் இருந்து விடுபட வேண்டும் என்கிறார். ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்கிறார். தன்னையே உதாரணமாக்கிக் காட்டியுள்ளார்.

தொடர்ந்து
பஞ்சாராம், கூண்டு
தொட்டி, சிறுகுடில்
விடுதலைக் கெதிராய்
எத்தனை கருவிகள் என தெரிவித்து இவை 'உடைபடுமா?' என்று வினவியுள்ளார். ஆர்வத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாரம்,கூண்டு, தொட்டி. சிறுகுடில் வரிசையில் வீட்டையும் சேர்த்துக் கொள்ளாலம். அல்லது வீடும் உள்ளடக்கியுள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எடுத்துக் கொள்ள் வேண்டியுள்ளது.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பெயர் இருக்கும். பெயருக்கும் மனிதருக்கும் பொருத்தம் இருக்காது. சிலருக்குப் பிடித்திருக்கும். சிலருக்கு சலிப்பு ஏற்படும். பெரியவர்கள் வைத்தது எனினும் மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு. கவிஞருக்கு இயற்பெயரில் ஓர் அலுப்பு ஏற்பட்டதன் விளைவு 'பெயரில் என்ன இருக்கிறது'. கவிதைத் தலைப்பிலேயே வருத்தம் தெரிகிறது.

கவிதை எழுத மட்டும்
களவாடிய பெயர்
கைவசம் உள்ளதால்
பிழைத்தேன் என இறுதியில் புனைப்பெயரில் ஆறுதல் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கிளைகள் வெட்டபட
தற்காலிகமாய்
நிறுத்தப்படுகின்றன சண்டைகள்
வேர்கள்
பற்றிய
பிரக்ஞை
இல்லாமலேயே என்று முடியும் கவிதை அண்டையாருடனான சண்டையைப் பேசுகிறது. தற்காலிகமாக சண்டை நிறுத்திவதில் கவிஞருக்கு உடன்பாடில்லை. மூலம் தெரிந்து வேர்கள் அறித்து பிரச்சனை தீர்க்கப் பட வேண்டும் என்பது அவரின் விரும்பமாயுள்ளது. இதன் தலைப்பு 'அதிபர் பிரதமர் சந்திப்பு'. அண்டை வீடு என்பது அண்டை நாட்டின் குறியீடு. நல்லுறுவு வேண்டு்ம் என்கிறார்.

தமிழ் மொழி மிக இனிமையானது. மிக பழமையானது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தொடக்கம் முதலே தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் போராடி வருகின்றனர். ஆங்கில கலப்பால், ஆதிக்கத்தால் தமிழ் தடுமாறுகிறது. பேசுபவர்களும் குறைவெனினும் சரியாக உச்சரிக்க வேண்டும். வட்டார வழக்கு விலக்கு. தவறாக உச்சரித்தாலும் தமிழ் வாழ்கிறது. 'மீண்டும் மீண்டும்' கவிதையில்

சாம்பல் பறவை போன்றனது
தமிழ்
செய்தி வாசிப்பார்களின்
தொடர் தாக்குதலிலும்
மீண்டும் மீண்டும் உயிர்த்த படி என்கிறார். தமிழ் சாகாவரம் பெற்ற மொழி. எந்நிவையிலும் இறவாது. செய்தி வாசிப்பாளர்களதை தாக்கியதுடன் தமிழ் மொழியின் மீதான பற்றையும் காட்டியுள்ளார். ஆயினும் 'ஆகச் சிறந்தது'வில் ஆக ஆங்கிலம் உள்ளது என்பது முரண். 'ஆகச் சிறந்தது'தமிழ் மட்டுமே. இறுதியாக
ஆகச் சிறந்தது
எங்கேனும் உண்டா? என்னும் வினாவை முன் வைக்கிறார். வாசகரைச் சிந்திக்கச் செய்கிறார். இத்தொகுப்பில் 'ஆகச் சிறந்தது'ஆக இக்கவிதையைக் குறிப்பிட முடியும்.

'அம்மா வளர்த்தவை'களில் சாமந்தி, ரோஜா, செம்பருத்தி, அடுக்குமல்லி, கொய்யா, தென்னை, மா, கருவேப்பிலை, முருங்கை, பூசணி, சுரை, அவரை என்பவை

பூத்தும் காய்த்தும்
குடும்பத்திற்காய் இருக்க
சாலையில் நட்ட வேப்பமரம்
விரிந்த நிழலும்
குளிர்ந்த காற்றும்
ஊருக்காய் வழங்கி
உன்னதமாய் வாழ்கிறது என்கிறார். குடும்பத்துக்காக வாழ்வதை விட ஊருக்காக வாழ்வதே சிறப்பு என்கிறார். செடி, கொடி, மரம் வளர்ப்பதில் அம்மாவிற்கு உள்ள பிரியத்தைக் கூறி அம்மா மீதான தன் பிரித்தையும் கூறியுள்ளார். 'அம்மா வளர்த்தவை'களில் கவிஞரும் ஒரு வேப்ப மரமாய் ஊருக்கு வழங்கி உன்னதமாய் வாழ்ந்து வருகிறார்.

வாழக்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுடன் ஒப்பிடுவர். பெரும்பாலும் பெரும் பாலோர் வாழ்க்கைக்கே ஒப்பிட்டுள்ளனர். பயணத்துக்கு தொடக்கம் முடிவு போலவே வாழ்க்கைக்கும் உண்டு. 'பயணங்கள்' கவிதையில்

சிறு பயணங்களின் தொகுப்பாய்
வாழ்க்கைப் பயணம் என்று கவிஞரும் வாழ்க்கையோடு பயணத்தை ஒப்பிட்டுள்ளார். தொடர்ந்து 'வாக்கிங்'கில்

சிறு பயணத்தில்
தொடங்குகிறது
தினசரி
வாழ்க்கை என்கிறார். இது ஒரு 'கருத்து' ஆகவே இருப்பினும் வாழக்கையைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

'தண்டவாளங்கள்' கவிதை ஒரு குறிப்பிடத்தக்க கவிதை. இருவேறு கொள்கைகள் இணைய முடியாது என்கிறார்.

வாழ்க்கையைப் பாடுகிறனே
மாயத்தைப் பாட பணிக்கிறார்கள் என தன் கோபத்தை, வருத்தத்தை, நியாயத்தை எடுத்து உரைக்கிறார். தான் ஓர் எதாரத்தவாதி என இக்கவிதை வாயிலாக உறுதி செய்கிறார். இதனால் 'நேர்க் கோட்டுப் பயணம்' செல்வதற்கு வாய்பில்லை என்கிறார். எனினும் 'தண்டவாளங்கள்'என்னும் தலைப்பு மாற்று சிந்தனையை உண்டாக்குகிறது. இரு வேறு கருத்துக்களின் மூலம் எந்த 'பயணத்தைக்' குறிப்பிடுகிறார் என்னும் வினாவை எழச் செய்கிறது.

'வீடுகள் தோறும்' அழகிய மீன்கள், காதல் பறவைகள், மூங்கில் குருத்துகள், பணச் செடி வளர்க்க படுவதை சமீபங்களில் காண முடிகின்றது. இதற்குத் காரணம் ரசிப்போ, நேசிப்போ அல்ல.
வாஸ்து சாஸ்திரம் போற்றும் 'வஸ்துகள்' இவை. மூடநம்பிக்கை எவ்வாறெல்லாம் வீட்டிற்குள் நுழைந்து மனிதர்களை ஆட்டுவிக்கிறது என்னும் நடப்பைக் காட்டியுள்ளார். மூட நம்பிக்கையை முடக்க முயன்றுள்ளார்.

ஒரு கவிஞருக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது சமூக கரிசனம். கவிஞர் நிறை மதியிடம் சமூக கரிசனம் உள்ளது என்பதற்கு சான்றாக பல கவிதைகள் உள்ளன. சாதியத்தை எதிர்த்துள்ளார். பெண்ணியத்துக்கு ஆதரவளித்துள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் குரல் கொடுத்துள்ளார். முற்போக்குச் சிந்தனைகளை வாசக மனத்தில் தூவி ஒரு சமூக முன்னேற்றக்கு, மாற்றத்துக்கு வழி வகுத்துள்ளார். கவிஞரின் சமூக உணர்வையும் தாண்டி தனி மனித உணர்ர்வுகளையும் பிரச்சனைகளையும் தன்னையே முன்னிறுத்தி பேசியுள்ளார். பல விதமான மனிதர்களையும் அடையாளம் காட்டியுள்ளார். கவிதைகளை நேர்ப் பேச்சிலேயே அமைத்து ஒரு நெருக்கத்தை உண்டாக்கியுள்ளார். கவிதைகளில் காணும் மென்மை வாசக மனத்தை வருடிக் கொடுக்கிறது. உள்ளடக்கமும் வெளிப்பாடும் கவனத்தை ஈரக்கிறது. வடிவமைப்பில் கவிஞர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 'பேச நிறைய இருக்கிறது' தொகுப்பு குறித்து 'பேச நிறைய இருக்கிறது'. அனைத்தையும் பேசி விடுவது வாசிப்பிற்கு வழிவகுக்காது. கவிஞர் நிறைமதியிடம் கவிதையாக்கும் ஆற்றல் நிறையவே இருக்கிறது. அவரிடம் 'எழுத நிறைய இருக்கிறது' என தொகுப்பு உறுதிச் செய்கிறது. எழுத வாழ்த்துக்கள்.

Pin It