இலக்கிய வகைமைகளில் கவிதையே மொழியின் உச்சம் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளியை முழுமைப் பெறச் செய்வது சிறுகதையே. சிறுகதை எழுதுவது சிரமம். கவிதை உலகில் பிரவேசிப்பவர்கள் சிறுகதைத் துறையில் ஈடுபட்டே தன் எழுத்துப் பயணத்தைத் தொடர்கின்றனர். ஐந்து கவிதைத் தொகுதிகளுக்குப் பிறகு ஆசு தந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு'.

'ஒரு பூவரசு மரக்கட்டில்' உடன் தொடங்கி உள்ளது தொகுப்பு. ஒரு பூவரசு மரம் இத் தொகுப்பில் ஒரு முக்கிய பாத்திரமாகவே இடம் பெற்றுள்ளது. பிறந்த வீட்டில் இருந்த போது பூவரசு மரம் கலைவாணிக்கு ஒரு தோழனாகவே இருந்துள்ளது. அவள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்துள்ளது. அம்மா பூவரசு மரத்தைத் தெய்வமாக்கிட வணங்கவேச் செய்தாள். வீசிய புயல் ஒன்றில் பூவரசு வீழ்ந்து விட துக்கம் பரவியது. வீழ்ந்த மரம் கட்டில் ஆனது. அக் கட்டிலே கலைவாணிக்குச் சீதனமாக வழங்கப் பட்டது. கணவனோ உணர்ச்சியில்லா கட்டையாகவே இருக்கிறான். பூவரசு கட்டில் பயன் படுத்தப் பட வில்லை. ஓர் இளம் பெண்ணின் சோகத்தை மென்மையாகக் கூறியுள்ளார். சங்கக் கால கவிதையொன்றில் புன்னை மரம் ஒரு பெண்ணுக்குத் தோழியாக இருப்பதாக ஒரு கவிஞன் பாடியுள்ளது நினைவிற்கு வருகிறது. இதில் ஆசிரியர் தோழனாகக் காட்டியுள்ளார். மரம் மக்களின் வாழ்வுடன் இணைந்துள்ளதையும் உணர்த்தியுள்ளார்.இத் தொகுப்பிலுள்ள சில கதைகளிலும் பூவரசு மரம் இடம் பெற்றுள்ளது.

ஒரு பூவரசு மரம் போல ஒரு மலை இடம் பெற்ற கதை 'கல் வடிக்கும் கண்ணீர்'."இந்த மலை சோறு  போடுகிறது, மக்களைக் காப்பாற்றுகிறது. பாட்டன் பூட்டன் என்று எத்தனையோ தலைமுறைகளை இந்த மலைகள் கண்டிருக்கின்றன.மலைகள் நமக்காகத் தோன்றினாலும் அதுகள ரொம்பதான் வருத்தி விட்டோம். எத்தனையோ அடிகள் , வலிகள் , தழும்புகள் . வாயிருந்தால் மனம் விட்டு அழுதிருக்கும்." என மலை குறித்து எழுதி மனதை வலிக்கச் செய்துள்ளார். மாமா மலையை நம்பி வாழ்பவர்.பிள்ளைகளுக்காக கடுமையாக உழைப்பவர்.மகள் பூப்படைந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து விடுகிறார். கதையை இத்துடன் நிறுத்தி வாசகரைச் சிந்திக்கச் செய்துள்ளார். இக் கதை ஒரு குறுநாவல் அளவிற்கு விரிவாக உள்ளது.

'ஒரு பூவரசு மரக் கட்டில்' , ' கல் வடிக்கும் கண்ணீர்' போல ' கானல் தடங்கள்' கவிதையில் காடு ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. அப்பா திட்டியதால் காட்டுக்குள் செல்கிறான். அவனைத் தேடி அவன் காதலி செல்கிறாள். காட்டுத் திருடர்களால் களவாடப் படுகிறாள். அவன் வருந்துகிறான். மஞ்சள் பூ பேசுவதான பேச்சு மனத்தை வருடுகிறது.அப்பா மகன் உறவு அம்மா மகன் உறவு குறித்தெல்லாம் அழகாக பேசியுள்ளார். வாழ்க்கை என்றhல் எதையும் எதிர் கொள்ள வேண்டும் என்கிறார்.  

'கல் வடிக்கும் கண்ணீர்'க்கு எதிராக மிகச் சிறிய கதையாக உள்ளது 'விரிசல்'. எதார்த்தமாக ஒரு குடும்பத்தில் நிலவும் ஒரு காட்சியை விவரித்துள்ளார். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவனின் நிலையைக் கூறியுள்ளார்.

'தனி மரத்தின் நிழல்' கவிதையும் ஒரு பெண்ணை மையப் படுத்தியே உள்ளது. அம்மா இன்றி அப்பா இழந்து தனித்து இருக்கும் பெண் தன்னைக் கவர்ந்த கலையூர் நாகப்பனைத்  தேடிச் செல்ல அவன் வேறு ஒருத்தியுடன் சென்று விடுகிறான். அவள் தனித்து விடுகிறாள். இறுதியில் துணையாக கறுப்பி என்னும் நாயே உடனிருக்கிறது. தனி மரமாக நிற்கும் முத்துவின் நிலையைக் கூறி ஓர் இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சின்னத் தாயி அம்மாள், ஆனந்தாயி அம்மாள், மங்கைய்மாள், வீரம்மாள், நாகம்மாள், பச்சையம்மாள்  என்னும் 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு' என்று ஒரு சிறுகதை. சின்னத்தாய்க்கு தன் மகள் வீரம்மாளுக்கு ஆனந்தாயின் பேரனை மாப்பிள்ளையாக்க ஆசை. நாகம்மாள் நயவஞ்சமாக  தன் நோஞ்சான் மகனுக்கு வீரம்மாளை மணமுடிக்கிறார்.நாகம்மாளே இக் கதையில் வில்லி. அவளால் எல்லா அம்மாக்களுமே பாதிப்பு. அம்மன் பெயரும் 'பச்சையம்மன் '. "அம்மாக்கள் மறைந்த பின்பும் தெரு விழித்துக் கொண்டிருந்தது.மீண்டும் எழும் அம்மாக்களுக்காக...'' என்று எழுதி அம்மாக்கள் தொடர் கதையே என்கிறார்.

நாட்டில் நிலவிய பஞ்சம் பற்றிய கதை 'பாழ்பட்ட காலத்தின் கதை'. பஞ்சத்தால் மக்கள்   கிழங்கை மண்ணிலிருந்து நோண்டி எடுத்து சாப்பிட்டு பசியைப் போக்கிக் கொள்கின்றனர். மக்களின் நிலையறிந்து மணி அடித்து மாதா கோவில் பாதிரியார் மக்களுக்கு கோதுமை வழங்குகிறார். அடுத்த முறை மணியடிக்கிறது. மக்கள் ஆவலுடன் ஓடுகின்றனர். ஆனால்  பாதிரியார் இறந்ததாக தகவல். தாது வருசத்தில் பஞ்சம் நிலவும் என்பதை வைத்து எழுதப் பட்டுள்ளது. பஞசத்தால் மக்கள் பாதித்ததான கதை படித்ததால் மனம் பாதித்தது. ஒரு பெரியவர் தனக்குக் கிடைத்த கிழங்கையும் மற்றவருக்குத் தந்து உதவுவது மனித நேயச் செயல்.

சந்தேகப் படுவதால் பாதிக்கப் படும் ஒரு பெண்ணின் நிலையைப் பற்றிய கதை 'இரண்டாவது கொள்ளி'. நாகவள்ளியின் கணவன் ராச வேலுக்கு அவள் மீது சந்தேகம். அதனால் அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறான். நாகவள்ளியின் மீது ஆசை கொண்டிருந்த கணவனின் தம்பி தங்க வேலுக்கு வாழ்க்கைப் படுகிறாள். ஊர் அவளைப் பேசுவதை நிறுத்த வில்லை. ஒரு நாள் அவனும் காணாமல் போக விசாரிக்கிறாள். ஆனால் அவன் வேறு ஒருத்தியுடன் ஓடி விடுவதாகச் செய்தி. பெண் கற்பு நிலை தவறhமல் இருந்தாலும் சமுகம் விடாது என்கிறார். சந்தேகப் படுவதும் சபலப் படுவதும் ஆண்களே என்கிறார்.எவரும் இல்லாமல் பெண்ணால் வாழ முடியும் என்கிறார்.அவளே இரண்டாவது கொள்ளி வைத்துக் கொள்வது என்பது முரணாக உள்ளது.

'உயிரறிதல்'  உள்ளம் தொட்டது. நாவிதன் செல்லக் கண்ணு. அவன் மனைவி இந்திராணி. இவர்களின் ஒரே மகள் தனம். அப்பாவிற்கு மழித்தல் தொழில். அம்மா பிரசவம் பார்ப்பவள். தனம் அம்மாவிற்குத் துணையாக செல்பவள். தனம் ராசப்பனோடு பழகுவது குறித்து ஊர் தவறாக பேசுகிறது. பெற்றேhருக்கும் வருத்தம். தனம் தனியாக ஒரு பிரசவத்தைப் பார்த்து வெற்றியுடன் ஊரை விட்டு வெளியேறுகிறாள்.பிள்ளைகளுக்கும் பொறுப்பு உண்டு என்கிறது. சிசுக்களின் மீது பாசம் உள்ளவளாகவும் உள்ளாள். 

மனம் கவர்ந்த கதை 'மனுஷிகள்...மனசுகள்' . செல்லா வேலைக் காரி என்பதால் குழந்தையைத் தொட வேண்டாம் என்கிறhள் நாயுடும்மா. நாயுடும்மாவிற்கோ புற்று நோயால் மார்பகம் அகற்றப் பட்டதால் குழந்தைக்குப் பால் தர முடியாத நிலை. குழந்தை பசியால் அழ செல்லா தன் பால் தந்து பசியாற்றுகிறாள். நாயுடும்மாவோ 'தாயுக்கு தாயானவளே' என நெகிழ்கிறார். வாசகரையும் நெகிழச் செய்கிறது. செல்லா உயர்ந்து நிற்கிறாள்.

மீனை பிடித்து விற்பனைச் செய்து வாழ்வர் சிலர். மீனை பிடித்து குழம்பு வைத்தோ வறுத்தோ சாப்பிடுவர் சிலர். ராமசாமியும் மாரியப்பனும் மீனைப் பிடித்து சாப்பிட ஏரிக்குச் செல்கின்றனர். விரால் மீன்கள் சிக்காமல் விளையாட்டுக் காட்டுகின்றன. இறுதியில் ஒன்று சிக்குகிறது. அதுவும் குஞ்சுகளை பொரித்ததாக உள்ளது. பரிதாபப் பட்டு ஏரியிலேயே விட்டு விடுகின்றனர். வீட்டில் அம்மா மீன் வறுத்து வைத்திருந்தும் அவனுக்குச் சாப்பிட மனமில்லை. உயிரினங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்.

'ஒரிதழ் பூ' மணக்கிறது. ராசாத்திக்கும் பூவிற்குமான உறவைக் காட்டுகிறது. பூ மீதான அவளின் பிரியத்தை வெளிப் படுத்தியுள்ளார்." ராசாத்தியின் மனசெல்லாம் அந்தப் பூவைச் சுற்றியே வட்டமிட்டது " என்று எழுதியதற்கு ஏற்ப கதை முழுதும் அந்தப் பூவைச் சுற்றியே வந்துள்ளது.

'தற்கொலைக் காரனின் புதிய வெளிச்சம்' தற்கொலைச் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது. வாழ்விற்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.

'இசை வழியும் உடலின் சித்திரம்' காமத்திற்கும் அதிலிருந்து விடுபடுதலுக்கும் இடைப் பட்ட ஒரு மனத்தின் போராட்டம் ஆகும். காணும் எல்லாவற்றிலும் செண்பகாவையே காண்பது அவளின் மீதுள்ள ஈர்ப்பாகும்.   

ஆசு ஒரு நல்ல கவிஞராக அறியப் பட்டவர். 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு' வில் ஒரு நல்ல கதைஞராகியுள்ளார். கதை சொல்வதிலும் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டுள்ளார்.கதையில் இருக்கும் எதார்த்தம் கதை சொல்லலில் இல்லை. ஆசு ஒரு கவிஞர் என்பதால் கவித்துவமான வரிகள் சற்று மேலோங்கியே உள்ளது. இயற்கையை அதிகம் இடம் பெறச் செய்துள்ளார். மனித உணர்வுகளை மனித உறவுகளை கதைகளின் மூலம் அறியச் செய்துள்ளார்.மனிதர்கள் மனத்தில் ஈரம் உள்ளவர்களாக உள்ளனர்.இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்களாகவும் நிஜ மனிதர்களாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது. குடும்பத்தினரிடையேயான பாசத்தை. பாசப்  போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். காதலையும் பேசியுள்ளார். கிராமங்கள் அருகி வரும் அழிந்து வரும் இச்சூழ்நிலையில் ஒவ்வொரு கதையிலும் கிராமத்தையே மையப் படுத்தியுள்ளார்.  இருபத்தொன்றாம் நூற்றhண்டிலும் தொழில்நுடபம் வளர்ந்த வேளையிலும் அதன் பாதிப்பின்றி இன்னும் மக்கள் உள்ளனர் என்கிறார். வாழ்க்கை அனுபவத்தில் கற்றதையே கதையாக்கித் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வாசிப்பவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

Pin It