நூல் அணிந்துரை

கவிதை இலக்கியங்களில் தனிப்பாடல்களுக்குத் தனித்த சிறப்புகள் உண்டு. புலவர்களின் அச்சு அசலான வாழ்க்கை அப்படியே வெளிப்படுவது இந்தத் தனிப்பாடல்களில்தான். சங்க இலக்கியப் புறப்பாடல்களின் நீட்சியாகத்தான் தமிழில் தனிப்பாடல்கள் தோற்றம்பெற்றன. இந்தப் பாடல்களின் கவிதை ஆக்க முறைகளில், அதாவது உருவத்தில், உத்திகளில் செயற்கை இருக்கலாம், ஆனால் கவிதைகளின் உள்ளடக்கங்கள் பெரிதும் புனைவுகள் அற்றவை.  வாழ்க்கையின் மிதமிஞ்சிய மகிழ்ச்சியோ, சோகமோ இரண்டையும் எவ்வித மறைப்பும் இல்லாமல் அப்படியே உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் பாங்கிலானவை. புலவர்களின் நேரடி வாழ்க்கைப் பதிவுகளாக இருப்பதால் இவ்வகைப் பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காத காட்டாற்று வெள்ளம்போல் பெருகிஓடும். காப்பியங்கள், பிரபந்தங்கள் முதலான இலக்கிய வகைகளில் புலவனின் புலமை வெளிப்படும், ஆனால் தனிப்பாடல்களில்தான் புலவன் வெளிப்படுவான். எனவேதான் புலவன் இயற்றியளித்த நூல்களுக்கு இல்லாத தனிப்பெருமையை இத்தனிப்பாடல்கள் பெறுகின்றன. தமிழின் தனிப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு முழுமைபெற்ற காட்சிச் சித்திரம். புலவனின் பசி, வறுமை, இழப்பு, வெறுப்பு, விரக்தி முதலான சோகக்காட்சிகளும், அன்பு, பாராட்டு, நிறைவு, ரசனை, கேலி முதலான இன்பக் காட்சிகளும் நிறைந்த காட்சிக் களஞ்சியங்களே தனிப்பாடல்கள்.

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் செய்யுள் இலக்கியங்களை 1. முத்தகம், 2. குளகம், 3. தொகைநிலை, 4. தொடர்நிலை என நான்காகப் பகுத்துரைக்கும். அவற்றுள், முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும் என்று முத்தகச் செய்யுள் வகைக்கு இலக்கணம் கூறுவார் தண்டி. இன்றைக்குத் தனிப்பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இலக்கிய வகைதான் பழைய முத்தகம். தனிப்பாடல்களைத் தனியன், தனிப்பாசுரம், தனிநிலைச் செய்யுள், தனிப்பா முதலான பெயர்களாலும் குறிப்பிடுவதுண்டு.

தமிழின் முதல் தனிப்பாடல் திரட்டினைப் பதிப்பித்த பெருமை தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரையே சேரும். இத்தொகுதி வெளிவருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வழிகாட்டியவர் பொன்னுசாமித் தேவர். தனிப்பாடல் திரட்டு என்ற பெயரிலான இந்நூல் வெளிவந்த ஆண்டு 1862. இடம்பெற்றுள்ள தனிப்பாடல்களின் எண்ணிக்கை 1248. இதனைத் தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தனிப்பாடல் திரட்டுகள் மூலம் மற்றும் உரையுடன் கூடிய பதிப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு அச்சில் கிடைக்கும் தமிழ்த் தனிப்பாடல்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் இருக்கும். தொகுப்புகளாக மட்டுமல்லாமல் தனிப்பாடல்களை இலக்கிய இரசனை நோக்கில் சுவைபட விவரிக்கும் சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன. சான்றாக, 1.தமிழ் தந்த கவியமுதம் (கு.அழகிரிசாமி), 2.தனிப்பாடல் நகைச்சுவை (வே.கபிலன்), 3.தனிப்பாடல் கனிச்சுவை (அரசுமணி), 4.தனிப்பாடல் இன்பம் (செந்துறை முத்து) முதலான நூல்களைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் எழுதப்பட்ட நூலே தமிழ் இலக்கியக் கதைகள் (நா.பார்த்தசாரதி).
எழுத்தாளர் நா.பார்த்தசாரதி அவர்கள், தேர்ந்தெடுத்த சில தனிப்பாடல்கள் வழி அறியலாகும் புலவர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைக் கதைவடிவில் அமைத்து உருவாக்கிய நூலே தமிழ் இலக்கியக் கதைகள் என்ற படைப்பாகும். இந்த நூலில் ஆசிரியர் நா.பா அவர்கள் அறுபத்தேழு கதைகளைப் புனைந்து வழங்கியுள்ளார்கள். தமிழிலக்கியக் கதைகள் என்னும் இக்கதைத் தொகுப்பினை ஆய்வு நோக்கில் அறிமுகம் செய்யும் வகையில் வே.பூங்குழலி பெருமாள் எழுதியுள்ள ஆய்வுநூலே தனிப்பாடல்களில் தமிழ் இலக்கியக் கதைகள் எனும் இப்படைப்பு.

II

இந்நூலாசிரியர் திருமதி வே.பூங்குழலி பெருமாள், புதுவையின் புகழ்மிகு இயலிசைப் புலவர் கலைமாமணி செவாலியே இராச. வெங்கடேசன் அவர்களின் புதல்வி. சுப்பிரமணிய பாரதியார் அரசு மேனிலைப்பள்ளியின் தமிழாசிரியை. சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், கூர்த்த ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த படைப்பாளர். கடல்கடந்த பிரான்சு, சுவட்சர்லாந்து முதலான ஐரோப்பிய நாடுகளிலும் இலக்கிய மேடைகளில் தனிமுத்திரை பதித்தவர். தம் இளமுனைவர் பட்டத்திற்குத் தாம் எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன் கொள்ளத்தக்க வகையில் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கைப் பதிவுகள் குறித்த நா.பா. அவர்களின் நூலைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம்காட்டும் பெரும் பணியினை இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் வே. பூங்குழலி பெருமாளின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ் இலக்கியக் கதைகள் எனும் நூலை விளக்கமுறையில் ஆய்வுசெய்யும் இப்படைப்பு பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1.    தனிப்பாடல்களும் அவற்றின் காலப் பின்னணியும்
2.    தமிழ் இலக்கியக் கதைகளின் வழி அறியலாகும் தமிழ்ப் புலவர்களின் வாழ்நிலை
3.    நா.பார்த்தசாரதியின் கதைகளை எடுத்துரைக்கும் புலமைவளம்.

மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கும் நூலின் அமைப்பினைக் காணும் எவரும் நூலின் மூன்று அடுக்குகளையும் தனித்தனியே இனங்காண முடியும். முதல் அடுக்கு தனிப்பாடல்களைக் குறித்துப் பேசுகிறது. இரண்டாம் அடுக்கு தனிப்பாடல் வழி அறியலாகும் தமிழ்ப்புலவர்களின் வாழ்நிலையைப் பேசுகிறது. மூன்றாவது அடுக்கு நா.பார்த்தசாரதி அவர்களின் படைப்பாளுமை குறித்துப் பேசுகிறது. ஆக, நூல் ஒன்றாயினும் தொடர்புடைய மூன்று வௌ;வேறு செய்திகளை விவரிக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் இவ்வாய்வு வாசகர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை.

நல்ல ஆய்வு என்பது தகவல்களைத் திரட்டுவதில் மட்டும் முழுமை பெறுவதில்லை. திரட்டிய தகவல்களைத் திறம்படப் பகுத்து உண்மை காண்பதில்தான் அதன் முழுமை அடங்கியுள்ளது. அந்த வகையில் நூலாசிரியர் திருமதி வே. பூங்குழலி வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தரவுகளைப் பகுத்துப் பட்டியலிட்டு விளக்கம் கூறுவதில் முழுக்கவனம் செலுத்தியுள்ளார்.

நூலின் முடிப்புரையில் நூலாசிரியர் தனிப்பாடல்கள் குறித்தும், தமிழ்ப் புலவர்கள் குறித்தும் பல செய்திகளைத்; தொகுத்துக் கூறியுள்ளார்.

புலவர்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளின் வாழ்வியல் நிலைகள் வெளிப்படத் தனிப்பாடல்களே வாய்ப்பாக அமைந்தன. இத்தனிப்பாடல்களைக் கொண்ட தமிழ் இலக்கியக் கதைகள் தமிழ்ப் புலவர்களின் வாழ்நிலையையும், தமிழ்க் கொடையையும், சமுதாயச் சூழலையும் வெளிப்படுத்தக் கூடியனவாய் அமைந்துள்ளன.

புலவர்கள் வறுமையின் காரணமாகப் புரவலர்களை நாடிச் சென்றுள்ளனர். புரவலர்களிடம் பொருள் பெற்றபோது வரம்புகடந்து புகழ்ந்து பாடிய புலவர்கள், பொருள் கிடைக்காதபோது தூற்றுவதிலும் அளவை மீறினர். அதே சமயம் வறுமையில் நல்குரவு என்னும் இடும்பையில் இருந்தபோதும் தம் செம்மையையும் தன்மானத்தையும் இழக்கவில்லை. இன்மையையே இன்பமாகக் கொண்டு வாழ்ந்தனர்.

புரவலர்கள், புலவர்களின் தமிழைப் போற்றினர். பாடலைக் கேட்பதில் ஆர்வம் மிக்குடையவராயிருந்தனர். தமிழ் உணர்வு மிக்கவராய் விளங்கினமையால் புலவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். மன்னர் தவறு செய்தவிடத்து அஞ்சாமல் எடுத்துக் கூறும் துணிவைப் பெற்றிருந்தனர் புலவர்கள்.
புலவர்கள் தமக்குள் போட்டியும் பொறாமையும் மிக்கிருந்தன. ...

இப்படித் தொடரும் இந்த முடிப்புரை தமிழ்கூறு நல்லுகத்திற்குத் தமிழ்ப் புலவர்களின் உண்மைநிலையைத் தௌ;ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டவல்லது. நூலின் பின்னிணைப்பாக நூலாசிரியர் இணைத்துள்ள தகவல்கள் உண்மையில் பெரும்பயன் தரவல்லன. மூன்று பின்னிணைப்புகள் நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

1. நூலாசிரியர் வரலாறு -தமிழ் இலக்கியக் கதைகள் நூலின் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.
2. தமிழ் இலக்கியக் கதைகளில் இடம்பெற்றுள்ள புலவர்களும் பாடல்களும் -அகரவரிசையில்.
3. தமிழ் இலக்கியக் கதைகளில் இடம்பெற்றுள்ள புலவர்களின் வரலாறு (குறிப்பிடத் தக்கவர்கள் மட்டும்)

இந்த ஆய்வு நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். ஆய்வேடுகளுக்கே உரிய செயற்கையான நடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய மொழிநடையில் இவ்வாய்வுநூல் அமைந்திருக்கின்றது. எடுத்துக் கொண்ட கருப்பொருளுக்கு ஏற்ப ஆய்வுப் பகுதியின் இடையிடையே தனிப்பாடல் கவிதைப் பகுதிகளும் சுவைகூட்டுகின்ற காரணத்தால் ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலை விரும்பி வாசிக்க இயலும். அனைவரும் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

நூலாசிரியர் திருமதி வே. பூங்குழலி பெருமாள் அவர்களின் முதல் ஆய்வு முயற்சி இந்நூல். அவர் மேலும் பல நல்ல ஆக்கங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்குத் தக்க பணியாற்ற வேண்டும் என்பதே என் விழைவு.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-8

Pin It