இந்நாட்டில் குமிழிட்டு மேற்கிளம்பிய இனவன்முறையின் புதிய பரிமாணங்கள்- அதனடியாக தோன்றிய இயக்கங்கள், அவை தரிசித்திருந்த பாஸிச வழிமுறைகள், மேற்கொண்ட வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் யாவும் மக்களின் வாழ்வை பல்வேறு விதங்களில் தாக்கியிருந்தது. இந்த வாழ்க்கை அலைகழிப்புகளினூடே மனிதர்கள், அவர்கள் எங்கு வாழ்ந்துக் கொண்டிருந்தாலும் அல்லது இன்றைய இலங்கையின் நசிவு தரும் வட-கிழக்கு சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அச்சிதைவுக்கு எதிரான, அச்சமூங்களிலே இருக்க கூடிய ஆத்மார்த்த சிந்தனைகளின் மற்றொரு யதார்த்தமாய் தமது இருப்பு குறித்து கவித்தீ உமிழத் தயங்குவதில்லை. இவ்வுணர்வு இக்கவிஞனிலும் இவ்வாறு பிரவாகம் கொண்டிருக்கின்றது:

wahabdeen_400காகம் தூக்கிய பணியாரமாய்
கனவுகளைப் பறிகொடுத்து
எரிக்கப்பட்ட எல்லாம்
கடலுக்குள் சாம்பலாய்.

முள்ளுக்கம்பிகளால்
கைது செய்யப்பட்ட கடலிலிருந்து
தூது கொண்டுவரும
கடற்காற்று
இப்போதெல்லாம் வீசுவதில்லை.

இக் கவிஞரின் கவிதைகளின் அடிநாதமாக அமைவது மனித நேசிப்பாகும். இனமுரண்பாடும் யுத்தமும் மேலோங்கிய சூழலில் அவற்றை மீறி மனித உறவை மனித நேயத்தை சித்தரிக்க முனைவதாகவும் இக் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

ஆக ஒருபுறமான சிங்கள பெருந்தேசியவாதமும் மறுபுறமான குறுந்தமிழ்த் தேசியமும் முஸ்லிம் மக்களை எதிரியாகப் பார்த்ததுடன் நசிவு தரும் அரசியல் பின்னணியில் மோசமான இன வன்முறைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கென சுயநிர்ண உரிமை உண்டு என்பதையும் மறுத்து அவர்களின் வாழ்வை சிதைப்பதாகவே அவ் அரசியல் முன்னெடுப்புகள் அமைந்திருந்தன. இவ்வாறான சூழலில் அவர்கள் சொந்த‌ மண்ணிலிருந்து எவ்வாறு அந்நியமாக்கப்பட்டனர் என்ற உணர்விலிருந்து பிறப்பெடுக்கக் கூடிய கவிவரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன.

காடுகளை வெட்டி
கனகாலம் குடியிருந்த பூமியிலே
கேடுவிளைந்த வலி
கேவலத்தை
பேரினத்தின் சூழ்ச்சியிலே
பூர்வீகம் எனும்
பொக்கிஷத்தை நாம் இழந்தோம்
சிலை புதைத்த தந்திரத்தால்
தலை வெடித்து நாம் பிரிந்தோம்!

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் சிந்தித்தல் காலத்தின் தேவையாகும். முஸ்லிம் மக்களின் தேசிய சுயநிர்ண உரிமைக்கான முன்னெடுப்புகளானது குறுகிய இனவாதமாகவோ அல்லது ஏனைய சமூகங்களுக்கு எதிரானதாகவோ (சந்தர்ப்பவாத அரசியல் அதனையே செய்ய முனைகின்றது) முன்னெடுக்கப்படாமல் இலங்கையில் ஏனைய அடக்கப்பட்ட மக்களின் அரசியல் முன்னெடுப்புகளுடன் இணைக்கப்படல் வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். இந்தப் புள்ளியிலிருந்தே தேசிய சிறுப்பான்மை இனங்களின் அரசியல் புறப்பாடு கொள்ள வேண்டியிருக்கின்றது.

நாடு கடந்த அமெரிக்காவின் மாநிலங்களாக ஏனைய நாடுகளை இணைப்பது என்ற தெளிவான அரசியல் திட்டத்துடன் அமெரிக்கா செய்து வருகின்ற சூழ்ச்சியின் விளைவே உலகமயமாகும். உலகமயம் என்ற திட்டத்தின் பின்னணியில் இடம்பெற்றுவரும் அட்டுழியங்கள், மனித அழிப்புகள், வதைகள், மரண ஓலங்கள்- பிள்ளைகளின் கதறல்கள்; இவையொருபுறமிருக்க இவற்றையெல்லாம் மூடி மறைத்து சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக சமன் செய்துவிடலாம் என நம்ப வைத்து கூத்துக்களை முன்நின்று நடாத்தும் கோமாளிகள்- இவையெல்லாம் இதயமுள்ள எவரின் ஆன்மாவையையும் அதிர வைக்கும். இத்தகைய முகடுத் தட்டிப்போனதோர் எல்லைப்பரப்பில் மீண்டும் ஒரு புனரமைப்புக்கான தருண‌ம் குறித்து கவிஞரொருவரில் உணர்வில் வந்து சேர்ந்த தாக்கங்களை பின்வரும் வரிகள் உணர்த்தி நிற்கின்றன:

மேற்குலக வயலில்
நவீன விவசாயத்தை
வயசு செய்யப்புறப்பட்டது.
பூமி வெடித்து
பூகம்பம் அழுகிறது.
 
உலகமயத்தின் உண்மை முகம் எப்படியிருக்கின்றது என்பதை தோலுரிக்க முனையும் இக்கவிஞன் அதன் திருடி வாழும் பண்பினை தயவு தாட்யண்யமின்றி விமர்சிக்க முற்படுகின்றார்.

இந்நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை. கவிதைகளின் தலைப்புக்களே ஆசிரியர் எடுத்துக் கொண்ட பொருளை தெளிவாக்குகின்றன. எமது நாட்டிற் காணப்படும் சில வாழ்க்கைப் பிரச்சனைகளை நுணுக்க விபரங்களுடன் கவிதையாக்கியிருக்கின்றார். தமது கவிதைகளினூடாக யாவருக்கும் பொதுவான உயரிய லட்சியங்களை எடுத்துரைக்கின்றார். அவரது கவிதைகளில் வெளிப்படும் நம்பிக்கை, சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் முதலியன மனிதகுலத்திற்கு அவசியமானவையே. எத்தனையோ நிலைகளிலிருந்தும் தளங்களிலிருந்தம் படிகளிலிருந்தும் வாழ்க்கையின் வரம்பற்றக் கோலத்தை இவரது எழுத்துக்கள் பிரதிபலிக்க முனைகின்றது. அக்கவிதைகளில் பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. மனித உறவுகளும் உணவுகளும் சமுதாய உறவுகளின்- வாழ்க்கை உறவுகளின் அடிப்படையில் தோன்றுவனவாகும் என்பது இலக்கிய நியதி. இக் கவிஞர் இந்நியதியை அறிந்தோ அறியாமலோ பல இடங்களில் ஆற்றலுடன் புலப்படுத்தி நிற்கின்றார். இது இவரின் தனித்துவமான ஆளுமையாகும்.

இவரது கவிதைகளில் மற்றொரு சிறப்பம்சம் தான் பேச்சோசை பண்பு, அதன் நாட்டுப்புற தன்மை சிதையாத வகையில் கையாண்டமையாகும். கிழக்கு மாகாண மக்களிடையே பேசப்படும் தமிழின் அழகைக் இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளில் காண முடிகின்றது.

இவரது கவிதைகளில் காணப்படுகின்ற முக்கியமானதொரு போக்கினை இவ்விடத்தில் குறித்துக் காட்டுவதும் அவசியமானதாகும். இவரது கவிதைகளில் சமூக அவலங்களை கண்டு கவலைப்படுவதே இக்கவிதைத் தொகுதியின் முக்கிய குணாம்சமாகும். கிழக்கு முஸ்லிம் மக்களின் இயலாமைகளை, அங்குள்ள ஏற்படும் மனித இழிவுகளை தன் கவி வரிகள் கொண்டு திட்டியிருக்கின்றார். அவர் இன்னும் மேலே சென்று சமுதாய பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் தோண்ட‌ முற்படுவாராயின் அம்மக்களின் பிரச்சனைகளை இன்னும் ஆழமாக வெளிக்கொணர்வார் என்பது இக்கவிஞர் மீதான எனது தோழமையான விமர்சனமாகும். கூடவே மக்களின் நலனிலிந்து அந்நியமுறாமல் புதிய புதிய பரிசோத‌னை முயற்சிகள் தமிழில் இடம்பெற வேண்டும். உள்ளடக்கத்தில் மாத்திரமன்று உருவத்திலும் கவனமெடுத்தல் என்பது சமகால சமூகத் தேவையாகும்.

இன்றைய சூழலில், வணிகக் கலாசாரப் போக்குகள் அதிகரித்து வரும் வேளையில் தமிழ் கவிதையில் பாலியல் வக்கிரங்களும், வன்முறைகளும் வாசகர் மனங்களை கொள்ளை நோய் போல தாக்கி வருகின்றன‌. இத்தருணத்தில் வாழ்க்கை பற்றிய புதிய அனுபவத்தை உணர்வைத் தரக் கூடிய படைப்புகள் தேவையாகின்றது. அவை எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். மார்க்சியத்தை வளப்படுத்தியவர்களில் ஒருவரான‌ அறிஞர் ஜோர்ஜ் பிளக்களோவ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"தகுதியும் திறனுமுடைய கலைஞன் தற்காலத்தில் வெற்றி சூடி நிற்கும் மகத்தான விடுதலைக் கருத்தோட்டங்களைச் சார்ந்து நின்று, தனது படைப்பின் ஆற்றலைச் கணிசமான அளவு உயர்த்த வேண்டும்."

புதிய ஜனநாயக பாதையில் உருவாகிவரும் புதிய தலைமுறையினர் சரித்திரத்தின் இந்தத் தீர்பை மதித்து நடப்பதன் ஊடாக தமிழ் மொழிக்கு மாத்திரமின்றி முழு மனித சமூகத்தின் வளர்ச்சிக்கே காத்திரமான பங்களிப்பை நல்க முடியும். தத்தமது காலநகர்வோடு பயணிக்கும் கவிதைகளோடு பயணிக்கமுடியுமானால் இவை அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஓர் அனுபவத்தைப் பெறலாம்.

Pin It