ஹைக்கூ ஒரு மனப்புதிர் என்ற நூலினை விமர்சிக்கும் பொறுப்பு ஒன்றினைத் தந்திருக்கிறார் செல்லம்மாள் கண்ணன். நூலினை விமர்சிக்கும் முன்பாக செ.க.வைப் பற்றி கொஞ்சம் சொல்வது இந்த விமர்சனத்திற்கு சுவையூட்டும் என நான் நம்புகிறேன்.

அடுத்த வீட்டுப் பையன் போல் இருக்கிறார். அதனால் சுலபமாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்று சில அறிமுகக் கதாநாயகர்களைப் பற்றி திரை விமர்சனங்களில், பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். செல்லம்மாள் கண்ணனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும். ஒரு கூட்டத்திலும் தனித்து தெரியமாட்டார் இவர். யாருடைய கவனத்தை ஈர்க்கும் முயற்சி ஏதும் இவரிடமிருந்து வராது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கவிஞர்களைக் காண்பது அரிது. இரண்டு பேர் பாராட்டி விட்டாலே பாரதிக்கு அடுத்தது தான்தான் என்று மமதை கொண்டு உலவும் கவிஞர்கள் பட்டாளத்தில் இவர் வித்தியாசமானவர். ஆனால் இவரது கவிதைகள்..

கிட்டத்தட்ட மனித வெடிகுண்டைப் போல அமைதியாக இருக்கும் இவரிடமிருந்து புறப்படும் கவிதைகள் சிந்தனைப் பரப்பில் வெடித்துச் சிதறும் அணுகுண்டுகள்.

ஆரம்பகால சிறகு சிற்றிதழில் இவர் ஹைக்கூ குறித்து எழுதிய கட்டுரைகள் ஆசிரியர் குழுவிற்கே வகுப்பெடுத்தன என்பது உண்மை.

பத்து தலைப்புகளில் கட்டுரைகள் கொண்ட நூல். ஒரு இராவணத் தவமாகவே இருக்கிறது இந்த முயற்சி. கட்டுரைகளில் ஆங்காங்கே மேற்கோள்கள் சுவையாக கையாளப்பட்டிருக்கிறது.

எப்போது அழகை அழகு என்று கண்டுபிடித்தோமோ அப்போது அவலட்சணமும் ஆரம்பமாகி விட்டது. முதல் கட்டுரையான ஹைக்கூ ஒரு மனப்புதிரில் லா.வோட்ஸ¤வின் இந்த வரிகள்தான் ஹைக்கூவின் மையப்புள்ளி என்கிறார் செ. க.

சலனமற்ற குளத்தில் நிலவும் தூங்குகிறது என்ற ஜப்பானியக் கவிதை வரிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. இந்தக் கவிதை சொல்லும் செய்திகள் ஏராளம். இயற்கையை அதன் போக்கில் விடாது ஊடுருவிய மனித இனம் அழித்தது எத்தனையெத்தனை? இன்னும் பல எண்ணங்களை ஒரு விடுகதை போல் அவிழ்க்கிறது இந்தக் கவிதை.

ஹைக்கூ ஒரு மனப்புதிர் என்றால் அது யாருடையது? கவிஞனுடையதா? வாசகனுடையதா? இது போன்ற பல கேள்விகளை உள்ளடக்கிய ஒரு கட்டுரைக்கு முன்னோடியாக இருக்கிறது இந்தக் கட்டுரை.

இந்த நூலில் சொல்வதற்கு ஏராளம். ஜென் தத்துவம் சார்ந்த, இயற்கையைப் பாடிய ஜப்பானிய கவிஞர்களைத் தாண்டி, தமிழன் பல காத தூரம் வந்து விட்டான் என்பதற்கு ஹைக்கூ கவிதைகளில் பன்முகப்பார்வை என்ற மூன்றாம் கட்டுரை ஒரு சான்று.

கலவரத்தில்/ எரியூட்டப்பட்ட மரப்பொந்து /பார்க்கும்போதெல்லாம் எரியும் என்ற பா.சத்தியமோகனின் கவிதை ஒரு சரியான தேர்வு. ஒரு கட்டுரை சொல்ல வேண்டிய அனைத்தையும் அவரவர் கற்பனைக்கே விட்டு விடும் அளவிற்கு வீரியம் மிக்க வரிகள்.

ஒன்பதாவது கட்டுரையாக வந்திருக்கும் சுஜாதாவின் ஹைக்கூ தோட்டம் ஒரு புதிய முயற்சி. ஆனாலும் பல ஹைக்கூ கவிஞர்களை அலசி ஆராய்ந்து தனி நூலாகவே வெளியிட்டிருக்கலாம். சுஜாதா பால் ஏன் இந்த ஹைக்கூ கவிஞர்களுக்கு அலாதி பிரியம்? ஒன்று ஹைக்கூ என்னும் வடிவத்தை வெகு சன சஞ்சிகைகள் மூலம் பரவாலாக்கியவர் என்ற நன்றிக் கடன்? பல நல்ல ஹைக்கூகளையும், அதன் பிரம்மாக்களையும் போகிற போக்கில் பிரபலமாக்கியவர் என்பதாலா? சோதனை முயற்சிகள் பலவற்றை ஹைக்கூவில் செய்து - அதாவது மெல்லிய நகைச்சுவை அல்லது நையாண்டி கையாளப்பட்ட கவிதைகள் - அது ஓரளவுக்கு ஏற்கப்பட்டதால், புதிய கவிஞர்களுக்கு தைரியம் கொடுத்ததாலா? இப்படி பல கேள்விகள் எனக்கு ஏற்படுகிறது.

இந்த நூல் ஒரு புதிய முயற்சி என்பதைத் தாண்டி ஒரு பால பாடமாகவே புதிய கவிஞர்களுக்கு இருக்கிறது என்பது ஓரளவிற்கு உண்மை. ஆனாலும் ஓரளவிற்கு பரிச்சயப்பட்டவர்களுக்கு சில சமயம் சோர்வைத்தரும் செய்திகள் நிரம்பிய கட்டுரைகள் இந்த நூலில் உண்டு.

ஒரு ஹைக்கூ கவிதை என்பது ஒரு நவீன ஓவியம் போல் சட்டென்று புரியாத வரிகளும் வடிவமும் கொண்டது. இதற்கு பதவுரை பொழிப்புரை என்பதெல்லாம் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். அதைப் போன்ற விளக்கவுரைகளைத் தவிர்த்திருந்தால் இந்த நூல் வேறொரு தளத்திற்கு போயிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

கத்தரிக்கப்பட்ட /சிகைக் குவியலாக /விதவையின் காமம் என்ற நிமோஷினியின் வரிகளுக்கு ஒரு போதனை உரையையே நிகழ்த்துகிறார் செ.க. சமுகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சுட்டுவதாக இருக்கிறது அவரது விளக்கம். பெண் விடுதலை, மறுமணம் என்று திசை தெரியாமல் அல்லாடுகிறது அவரது விளக்கம். ஆனால் கவிதை சொல்ல வந்தது அதுதானா?

என்னுள் ஓடும் சிந்தனைகள் வேறு கோணங்களில்.. வேறு திசைகளில் பயணிக்கின்றன.

கத்தரிக்கப்பட்ட சிகை மீண்டும் துளிர்க்கும். அதேபோலவே விதவையின் காமமும்.. சிகையினை வெட்டினால் காமம் தீர்ந்துவிடுமோ? மீண்டும் துளிர்க்காதோ? இது என்ன முட்டாள்தனம் என்று சமூகத்தைப் பார்த்து கேலி பேசுவதாக இருக்கிறது இந்தக் கவிதை. சிகையில் பலமிருந்ததாக சொல்லப்பட்ட சாம்ஸன் கதை போல, பெண்ணுக்கு சிகையால்தான் காமம் வருவதாக எண்ணுவது எப்படிப்பட்ட பிற்போக்குத்தனம்? சாமிக்கு மொட்டையடித்த திருப்தியோடு சம்போகத்தில் ஈடுபடுவது இல்லையா?

ஒரு விசயத்தை குறிப்பிட்டாக வேண்டும். செல்லம்மாள் கண்ணன் ஹைக்கூ குறித்தான சிந்தனைகளிலேயே முழ்கி இருக்கிறார் என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று. ஆனாலும் யாரோ அவரை குழப்பி இருக்க வேண்டும். அதனால் தன் வழக்கமான நடையிலிருந்து பெரிதும் மாறுபட்டு கட்டுரைகளை எளிமைபடுத்தி இருக்கிறார். விளைவு சுவை!

- சிறகு இரவிச்சந்திரன்

Pin It