இந்திய நாவலாசியர்களின் ஆங்கில நாவல்கள், சமீப காலமாக புகழ் பெற்று வருகின்றன. டெல்லியில் உள்ள ரூபா பதிப்பகம், இதுவரை ஆங்கில நாவலாசிரியர்களின், புகழ் பெற்ற நாவல்களைத்தான் இந்தியப் பதிப்புகளாக வெளியிட்டு வந்தது. இந்திய எழுத்தாளர்களின் மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. ஆர் கே நாராயணனுக்குப் பிறகு, பிரபலம் என்று யாரையும் சொல்வதற்கில்லை என்றே இருந்தது அவர்கள் எண்ணம். ஆனால் இப்போது பல இந்திய நாவலாசிரியர்கள், முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சேத்தன் பகத்.

புகழ் பெற்ற இவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் 3 இடியட்ஸ், தமிழில் நண்பன். இந்திப்படம் வெளிவந்தபோது சேத்தன் தரப்பிலிருந்து பெரிய கூச்சல் ஏதுமில்லை. சரியாக கவனித்து விட்டார்கள் போல.

2011ல் வெளியிடப்பட்ட நாவல்தான் ரெவல்யூஷன் 2020. அதாவது 2020ல் ஒரு பெரும் சமூக புரட்சி வரும் என்கிற கனவின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். நாவல் நம் இந்தியக் கல்வி முறையை, முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

நாவலுக்குள் போவதற்கு முன் ஒரு மூன்று நான்கு பக்கங்களுக்கு நிகழ்கால நிகழ்வு ஒன்றைச் சொல்கிறார் பகத். அதாவது கங்கா டெக் எனப்படும் பொறியியற் கல்லூரி விழாவுக்கு வரும் பகத், அதன் நிறுவனர் கோபால் மூலமாக அறியப்படும் கதை, நாவலாக விரிகிறது.

கோபால், ராகவ், ஆர்த்தி என்கிற மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட கதை. களம் வாரனாசி என்கிற காசி. புண்ணிய ஷேத்திரம் என்று நம்பப்படும் இடம், பகத்தால் தோலுறித்துக் காட்டப்படும்போது, நமக்கு அதிர்ந்து போகிறது. கோபால் மக்கு. ராகவ் பொறியியல் நுழைவுத் தேர்வில் முதன்மை இடம் பெற்ற கெட்டிக்காரன். இருவரும் காதலிப்பது ஒரே பெண். ஆர்த்தி. ஆனால் ஆர்த்தி தேர்ந்தெடுப்பது ராகவ்வை.

கோபாலின் தந்தைக்கு எப்படியாவது அவனை ஒரு பொறியாளனாக ஆக்கிவிடவேண்டும் என்கிற ஆசை. கூடவே அவருக்கும், அவர் தம்பிக்குமான சொத்து சண்டை. முப்பது ஏக்கர் விவசாய நிலத்தை கட்டிடம் கட்டுபவரிடம் விற்க நினைக்கிறான் தம்பி. ஆனால் விவசாய நிலத்தை வேறு எதற்கும் தரமாட்டேன் என்கிறார் அண்ணன்.

பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் ராகவ், கல்லூரியில் சேருவதும், மறுபடி தேர்வை எழுத நிர்பந்திக்கப்பட்ட கோபால், கோட்டா எனும் ஊருக்குப் போய், பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து, படிப்பு வராமல் மறுபடியும் தோற்பது எனப் போகிறது கதை.

கோபாலின் தந்தை, அவர் ஆசை நிறைவேறாமலேயே இறக்கிறார். அவர் விட்டுச் சென்ற கடன் சுமை கோபாலைத் தாக்குகிறது. கடன் வசூல் செய்ய வரும் ஆட்கள் அந்த ஊர் சட்ட மன்ற உறுப்பினர் சுக்லாவின் ஆட்கள்.

கோபாலிடம் இருக்கும் 30 ஏக்கர் நிலம் சுக்லாவிற்கு வேறு திட்டங்களைப் போட வைக்கிறது. கடனுக்கு 15 ஏக்கர். மீதி நிலத்தில் பொறியியற் கல்லூரி. கோபால் தான் நிறுவனர். பொறியியலே தெரியாதவன் கல்லூரி ஆரம்பிக்கிறான். கொஞ்சம் தமிழ்நாட்டு வாடை அடிக்கிறதா? சித்தப்பாவின் பங்கை சரிக்கட்ட, அவரது மகன் கடத்தப்படுகிறான். சொன்ன இடத்தில் கையெழுத்து போடுகிறார் சித்தப்பா. நில அபகரிப்பு, கூலிப்படை வாரணாசியிலும் உண்டு போல.

விவசாய நிலத்தை மாற்றி, பொறியியல் கல்லூரி கட்டி, திறப்புவிழாவின் போது, ஐஐடியில் படித்த ராகவ், வந்த வேலையை உதறிவிட்டு, உள்ளூர் செய்தித்தாளில் நிருபராகச் சேர்கிறான். அவன் சுக்லாவின் வண்டவாளங்களை தாளில் ஏற்றுகிறான். ஏற்கனவே சுக்லாவின் மேல், கங்கையைச் சுத்தம் செய்யக் கொடுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.

செய்தி பற்றிக் கொண்டு, சுக்லாவின் சட்டமன்ற பதவி பறிக்கப்படுகிறது. வழக்கு போடப்பட்டு சுக்லா சிறையில். ஆனால் அவர் ஆசியுடன் கங்காடெக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுவிடுகிறது. சுக்லாவின் பேரில் உள்ள அபிமானத்தால், கோபால் தன் செல்வாக்கை பயன்படுத்தி, ராகவ்வை வேலையில் இருந்து தூக்குகிறான். ஆனாலும் ஓயவில்லை ராகவ். சொந்த செலவில் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கிறான். பெயர் ரெவல்யூஷன் 2020. ஒரே தாள். ஒரு பக்கம் முழுக்க திருமண விளம்பரங்கள். மறுபக்கம் அரசியல் கட்டுரைகள். பத்திரிக்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கும்போது, சுக்லாவின் ஆட்கள் நுழைந்து, ராகவ்வின் அலுவலகத்தை துவம்சம் செய்கிறார்கள்.

பத்திரிக்கை நாட்டத்தால், ஆர்த்தியின் பால் ஈடுபாடு குறைந்து காணப்படும் ராகவ். அவளை வளைத்து போட முயலும் கோபால். ஆர்த்தி மெல்ல மெல்ல கோபால் பக்கம் வருகிறாள். இருவரும் கல்யாணம் வரை போய் விடுகிறார்கள்.

கிளைமேக்ஸ். கோபாலின் பிறந்தநாளுக்கு ஆர்த்தி வருகிறாள். கதவு திறந்திருக்கிறது. கோபால் இல்லை. மாடிக்குச் செல்கிறாள். படுக்கையறைக்கதவு மூடப்படவில்லை. மெல்லத் திறக்கிறாள் ஆர்த்தி. அங்கே.. இரு பக்கமும் மேலாடையில்லாத இரண்டு பெண்களுடன், ஜட்டியுடன் படுத்திருக்கிறான் கோபால்.

‘ கோபால் நீயா இப்படி? ‘

‘ பணக்காரனுக்கு இதெல்லாம் சகஜம்.. நீயும் வா ‘

கோபால் ஆர்த்தி உறவு முறிகிறது. எதையும் செய்யாமல் பணத்தைக் கொடுத்து இரண்டு விலைமாதர்களையும் வெளியே அனுப்புகிறான் கோபால். அவன் மனம் நிம்மதி அடைகிறது.

ராகவ் வேலை நீக்கம் செய்யப்பட்ட பத்திரிக்கையில், மீண்டும் அவனுக்கு வேலை கிடைக்கச் செய்கிறான் கோபால். மீண்டும் ராகவ்வும் ஆர்த்தியும் சேர உதவுகிறான். அவர்கள் திருமணம் நடக்கும் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து, பால்கனி வழியே அவர்கள் திருமணத்தை காண்கிறான்.

சேத்தன் பகத்தின் நடை நன்றாக இருக்கிறது. வாரணாசியில் ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வது சகஜமாகிவிட்டது தெரிகிறது. கல்யாணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்த பின், உடல் உறவுக்கும் அவர்கள் அஞ்சவில்லை என்றும் எழுதுகிறார். கோபாலுடன் ‘அதுவரை’ போன ஆர்த்தி, எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ராகவ்வை திருமணம் செய்து கொள்வது இந்திய பெண்களின் மனமாற்றத்தைச் சித்தரிக்கிறது.

இதெல்லாம் அங்கேதான். இங்கு குஷ்பு சொன்னால், கேஸ் போடுவோம். ‘ நீ செக்சியாக இருக்கிறாய் என்பது ஒரு பாராட்டுதான் ‘ என்று ஒரு பெண்மணி சொன்னால், ஒழுக்கப் போலீஸ் ஆகிவிடுவோம்.

நாவலைப் படிக்க முடியாதவர்களுக்கு, இன்னும் கொஞ்ச நாளில் ஏதேனும் ஒரு கான் நடித்து ‘ இரு நண்பர்களும் ஒரு காதலியும் ‘ என்று ஒரு இந்திப் படம் வரலாம். அதை ஷங்கர் ரீமேக் செய்யலாம்.

Pin It