ஆம்! உங்களைத்தான் கேட்கிறேன்; எப்போது பறக்கப் போகிறீர்கள்?

கேள்வி வேடிக்கையாக இருக்கின்றதா? என்னைச் சந்திக்க வருகின்ற எல்லோரிடமும், இந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்கிறேன். அன்றாட வாழ்க்கையைக் கடத்துவதற்கே வழி இல்லை. இவன் நம்மை ஏரோப்பிளேனில் பறக்கச் சொல்லுகிறானே? என்று கூட உள்ளூர எண்ணலாம். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னுடைய கடமை, கேள்வி கேட்பதுதான். அது உங்களைக் கேலியோ, கிண்டலோ செய்வதற்காக அல்ல. தூண்டுவதற்காகத்தான்.

arunagiri_vaanga_parakkalam_450‘சென்னைக்குச் செல்வது என்றால், தொடர்வண்டியில்கூடச் செல்ல மாட்டோம், பேருந்தில்தான் செல்வோம். எங்களிடம் இப்படி ஒரு கேள்வியா? நாங்களாவது-பறப்பதாவது என்கிறீர்களா?

அப்படியானால், உங்கள் வாழ்நாள் முழுவதும் பறக்கவே போவது இல்லை என்று இப்போதே முடிவு கட்டி விட்டீர்களா? கழுத்து வலிக்க வானத்தை அண்ணாந்து நோக்கி, வானூர்திகள் பறப்பதைப் பார்ப்பதுடன் மன நிறைவு கொள்கிறீர்களா?

வானூர்திகள் யாருக்காகவோ பறக்கிறது; நமக்கு அதில் என்ன வேலை? என்று இருந்து விடாதீர்கள். அது உங்களுக்காகத்தான் பறக்கிறது. எனவே, நீங்களும் அதில் பறக்க வேண்டும். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின்

என்றார் வள்ளுவர். எனவே, பறக்க வேண்டும் என்று முதலில் எண்ணம் கொள்ளுங்கள். பின்னர் அதற்கான வழிகளை நீங்களே திட்டமிடத் தொடங்கி விடுவீர்கள். எண்ணமே வாழ்வு. உங்கள் எண்ணங்கள்தான் உங்களை உயர்த்தும். உயர்ந்ததை எண்ணுங்கள். பறந்தால்தான் உயர முடியும்!

நீங்கள் எப்போது பறக்கப் போகிறீர்கள்? என்று நான் கேட்ட பல நண்பர்கள், பின்னர் வானூர்திகளில் ஏறிப் பறந்தார்கள். அவ்வாறு பறப்பதற்கு முன்பு, வானூர்தி நிலையங்களில் இருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார்கள். ‘நீங்கள் சொன்னதால்தான் நாங்கள் முதன்முறையாக வானூர்தியில் ஏறிப் பறக்கிறோம்’ என்றார்கள். அதுபோல நீங்களும் பறக்க வேண்டும்.

சரி, இப்படியெல்லாம் நீங்கள் கேட்டுக் கொள்வதால், நாங்கள் பறப்பதைப் பற்றி யோசிக்கிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? உங்களுக்கு உதவத்தான், வானூர்திகளைப் பற்றிய செய்திகளை இந்த நூலில் நிரம்பத் தருகிறேன்.

நான் சிறுவனாக இருந்தபோது, சௌதி அரேபியாவில் பணி ஆற்றிக்கொண்டு இருந்த என்னுடைய தாய்மாமா, பேட்டரியால் இயங்கும் குட்டி விமானத்தை வாங்கிக்கொண்டு வந்து தந்தார். ‘உய்ங்’ என்ற இரைச்சலோடு, வண்ணவண்ண விளக்குகள் மின்ன, வீட்டுக்கு உள்ளேயே சுற்றிச்சுற்றி வரும். சுவரில் மோதியவுடன், தானாகவே வட்டமடித்துத் திரும்பி வரும். அந்தப் பொம்மை விமானம்தான், இளம்வயதிலேயே வானூர்திகள் குறித்த ஆவலை எனக்குத் தூண்டியது.

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லுகின்ற வானூர்திகள்,  என் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு மேலே வானில் செல்லும்போதெல்லாம் அண்ணாந்து பார்த்து மகிழ்வேன். எனது உறவினர்கள் அயல்நாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம்,  வழி அனுப்புவதற்காக சென்னை வானூர்தி நிலையத்துக்குச் சென்று வருவேன். வானூர்திகளின் மீதான மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டே வந்தது.

2003 ஆம் ஆண்டு, இருசக்கர வண்டியில் இருந்து கீழே விழுந்து, ஒரு மாத காலம் நடக்க முடியாமல் வீட்டில் இருந்தேன். பொழுதுபோக்காக, இணையத்தில் வானூர்திகளைப் பற்றிய தகவல்களைப் படித்தேன். ஆங்கிலத்தில் சுமார் 4 கோடியே 85 இலட்சம் பக்கங்கள் வரையிலும் இருந்தன. அதையெல்லாம் படித்து முடிக்க எத்தனைப் பிறவி எடுக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அயல்நாடுகளுக்குப் போகும்போது கிடைத்த வானூர்திப் பயண அனுபவங்களையும், சோதனைகளைப் பற்றியும் சிலர் குறிப்புகளாக எழுதி இருக்கிறார்களே தவிர, முழுக்க முழுக்க வானூர்திகளைப் பற்றிய தகவல்களை மட்டுமே கொண்ட நூல், தமிழில் இல்லை என்பதை உணர்ந்தேன். நாமே எழுதினால் என்ன? என்று சிந்தித்தேன். அதற்குப் பின்னர், வானூர்திகளைப் பற்றிக் கண்ணில் கண்ட செய்திகளையெல்லாம் சேகரித்தேன்.

‘அரசியல் பொதுவாழ்வில் வெற்றி பெற...’ என்ற என்னுடைய நூலில், வானூர்திகளைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். படித்தவர்கள் பலரும் பாராட்டினார்கள். அந்த நூலில் சொல்லப்பட்டு உள்ள தகவல்கள் அனைத்தும், தமிழுக்குப் புதிய தகவல்கள் என்றனர். வானூர்திகளைப் பற்றிய அந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி, தனியாக ஒரு நூலை எழுதும் ஆர்வம் பிறந்தது.  

வானூர்தி நிலையங்களில், வானூர்தி நிறுவனங்களில் பணி ஆற்றுகின்ற நண்பர்களிடமும் தகவல்களைக் கேட்டுச் சேகரித்தேன். இப்படி, ஆறு ஆண்டுகளாகச் சேகரித்த செய்திகளின் தொகுப்புதான், ‘வாங்க, பறக்கலாம்!’ என்ற தலைப்பில் ஒரு நூலாக வடிவம் பெற்றது.  ‘விமானம்’ என்பது வடமொழிச் சொல். எனவே, ‘வானூர்தி’ என்ற தமிழ்ச்சொல்லையே பெரும்பாலும் கையாண்டு இருக்கிறேன்.

வானூர்திகளைப் பற்றித் தமிழில் விரிவாக வெளிவரும் முதல் புத்தகம் இது. ஆங்கிலத்தில் உள்ள பல தொழில்நுட்பச் சொற்களுக்கு, இயன்ற அளவில் தமிழில் பொருத்தமான சொற்களை எழுதி இருப்பதுடன், தமிழில் புதிய சொற்களையும் ஆக்கி இருக்கிறேன்.

மண்ணிலும், விண்ணிலும், கடலிலும் ஒவ்வொரு நாட்டுக்கும் எல்லைக்கோடுகளை வகுத்தான் மனிதன். ஆனால், இந்த எல்லைக்கோடுகளை எளிதாகப் பறந்து கடக்கிறது வானூர்தி. உலக மாந்தர்களின் உள்ளங்களை ஒன்றாக இணைக்கிறது. 

1905 ஆம் ஆண்டில் முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானூர்தியில் பறந்து,  103 ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று அவர்கள், சில நூறு அடிகளே பறந்தார்கள். இன்று, தரையில் இறங்காமலேயே உலகத்தைச் சுற்றி வரக்கூடிய வானூர்திகள் பறக்கின்றன. எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு வானூர்திப் பயணம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

வானூர்திகளின் அடுத்த கட்டமாக, ராக்கெட்டுகளைக் கண்டுபிடித்த மனிதன், அதில் ஏறி விண்வெளிக்குப் பறந்து, நிலவிலும் கால் பதித்து விட்டான். நமது அண்டவெளியின் எல்லை எங்கே என்பதைக் கண்டு அறிவதற்காக, எத்தனையோ விண்கலங்கள், ஆயிரக்கணக்கான கோள்களைக் கடந்து, ஆண்டுக்கணக்காகப் பறந்து சென்றுகொண்டே இருக்கின்றன. புதிய புதிய கோள்களை ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றன.

நாம் வாழும் உலகம் ஒரு கிராமம் என்கிற அளவுக்கு நிலைமை உருவானதற்கு, வானூர்திகளும், விண்கலன்களும்தாம் காரணம்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகளுடன் ஆடிப்பாடும்போது,

வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்

காற்றில் ஏறிப் பயணம் செல்லப் பாதை அங்கே இருக்கும்

என்று பாடுவார். இந்த நூற்றாண்டில், உலகத்துக்கு உள்ளே பறக்கின்றோம். அடுத்த நூற்றாண்டில் விண்வெளியில் பறப்பதும், நிலவுக்கும், வேறு கோள்களுக்கும் போய்வருவதும், அன்றாட நடவடிக்கைகளாக ஆகிவிடும்.

எத்தனையோ முறை வானூர்திகளில் ஏறி, உலகைச் சுற்றி வந்து விட்டேன்; இன்னும் சுற்றுவேன். ஏராளமான செய்திகளைக் கொண்டு வந்து உங்களுக்குத் தருவேன்.  கண்டிப்பாக, நீங்கள் ரசித்துப் படிப்பீர்கள்; உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்!

எத்தனையோ தொழில் அதிபர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரிகின்ற விற்பன்னர்கள், கணினித்துறையில் பணி ஆற்றுகின்ற இளைஞர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தங்களுடைய அனுபவங்களைத் தொகுத்து எழுத வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். 

ஒருமுறையாவது உலகத்தைச் சுற்றி வாருங்கள்;

உங்கள் வாழ்க்கையை புத்தகமாக எழுதுங்கள்!

(வாங்க பறக்கலாம் நூலின் முன்னுரையில்.....)

- அருணகிரி

Pin It