அரை நூற்றாண்டுக் காலம் உலகில் மூடிக்கிடந்த செவிகள், மெல்லத் திறந்து உள்ளன. எண்ணற்ற தலைமுறைகளாக, ஈழம் பேணி வந்த தமிழர் நாகரிகம், சிங்கள இனவாதத்தின் கோரப்பிடியில் சிதைக்கப்படும் நாள்களில், ஈழத்தின் வாழ்வும் இன்று வதைபடும் நிலைமையும், அம்மண்ணின் படைப்பாளிகளின் எழுதுகோல் மூலம் மனிதகுலத்தின் உதவியைத் தேடுகின்றது.

arunagiri_450தாய்த்தமிழகத்து எழுத்தாளர்களைத் தமிழ் ஈழம் போற்றியதே? வரவேற்றதே? குதூகலித்துக் கொண்டாடியதே? ஆனால், ஈழத்து எழுத்தாளர்களை, புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களை, தமிழகம் ஏன் பற்றிக் கொள்ளவில்லை?

துன்பத்தின் பிடியில் பரிதவிக்கும் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், ஆதரவையும் தர வேண்டிய கடமையில், தாய்த் தமிழகம் தவறி விட்டது என்பது உண்மைதான். விதிவிலக்காக, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். அவர், ஏறத்தாழ தமிழ்நாட்டின் கவிஞராகவே ஆகிவிட்டார்.

எழுத்தாளர்களின் கருவூலங்களைத் தேடித்தேடி அவற்றை அறிவதிலும், அனைவரும் அறிய வேண்டுமே என்று ஆசைப்படுவதும், ஆருயிர்த்தம்பி அருணகிரிநாதனின் உடன்பிறந்த குணம்; தேடல் அவரது இயல்பு! அதனால்தான், ஈழ எழுத்தாளர்களை இடைவிடாமல் சந்தித்தார். அவர்களின் எண்ணங்கள், படைப்புகள், பாடுகளை, சங்கொலியில் தொடர்ந்து எழுதினார். இதோ, புத்தகமாகவும் ஆக்கி விட்டார்.

ஒரு நல்ல கடமையைச் செய்தோம் என்ற மனநிறைவு அவருக்கு; அவர் மூலம், எனக்கும்தான்!

தமிழ்க்குலத்தின் தவமைந்தன் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களால், மாமனிதர் விருது பெற்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனுடன் நடைபெற்ற உரையாடலில் நூல் தொடங்குகிறது. அவர் பிறந்த ஊரான நாவற்குடா, அருகில் உள்ள உப்பேரி, ஏரிக்கரையில் எழுவான்கரை, படுவான்கரை ஊர்கள், மட்டக்களப்பு வாவியில் பாடும் மீன்கள், பத்து வயதில் அவர் எழுதிய காந்தித் தாத்தா கவிதை, சிங்களர் ஆதிக்கத்தை எதிர்த்துக் களமாடிய நிகழ்வுகள், தந்தை செல்வாவின் அரவணைப்பு, தமிழக வருகை,பச்சையப்பன் கல்லூரி மாணவ வாழ்க்கை, அறிஞர் அண்ணா, பாவேந்தர், ராஜாஜி, சி.பா. ஆதித்தனார் ஆகியோருடன் சந்திப்பு, கவிஞனாக உருவெடுத்த அனுபவம், பின்னர் வெலிக்கடைச் சிறை உள்ளிட்ட சிறைகளில் சுமந்த துன்பச் சிலுவைகள், விடுதலைப்புலிகளுடன் நெருக்கம், கியூபா பயணம், பிரபாகரனின் நம்பிக்கையைப் பெற்றது, தமிழ் ஈழத்தின் ஒப்பற்ற விடுதலைக் கவிஞனாக, இலக்கியங்களை நெஞ்சில் ஏந்தித் தொடரும் அவரது பயணம் ஆகியவற்றை அருமையாகச் சித்தரிக்கின்றது, இந்த நூல்!

சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், திறனாய்வுகள் என எழுத்தால் முத்திரை பதித்து உள்ள ஈழப்படைப்பாளி எஸ்.பொ எனும் பொன்னுதுரை, சென்னை கிறித்துவக் கல்லூரியில் படிப்பு, கல்லூரிப் பருவத்தில் பேச்சாளர்; பொது உடைமைக் கொள்கையில் ஈர்ப்பு, தமிழ் ஈழ தேசிய விடுதலைக்கு முரண்பட்ட பொது உடைமை இயக்கத்தில் இருந்து வெளியேறல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இலக்கிய போதகர் என இத்தகைய அனுபவத் தடம் பெற்றுள்ள எஸ்.பொ, ‘ஒருவனுடைய எழுத்தில் அழகும், சத்தியமும், உயிரோட்டமும், உண்மையின் வீச்சும் இருக்க வேண்டும்’ என்கிறார். அவற்றை, அவரது எழுத்தில் பார்க்கலாம். புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை, தமிழகத்தில் அறிமுகப்படுத்துகின்ற அரும்பணியைச் செய்து கொண்டு இருக்கின்றார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தில், அவர் தனது ஆத்திரத்தை இப்படிக் கொட்டுகிறார்: ‘நீங்கள் தமிழ் இனம் சபிக்கப்பட்ட இனம்’ என்கிறார்; ‘இனக்கொலை நடத்தியும், நூல் நிலையத்தை எரித்தும் நடந்த சிங்கள இனவாதத்தின் ஊழிக்கூத்தில் இருந்து, ஈழத்தை மீட்டெடுப்போம்’ என்கிறார்.

தமிழக எழுத்து உலகில், அநேகம் பேருக்குப் பரிச்சயமான பெயர்களுள் ஒன்று, காந்தளகம் பதிப்பக நிறுவனர், மறவன்புலவு சச்சிதானந்தம். புதைந்து கிடக்கும் நூல்களை, தமிழ் மன்றத்துக்குக் கொண்டு வரும் சாதனையாளர். ஈழத்தமிழரின் சோக வரலாறை, தம் விரல் நுனியில் வைத்து இருக்கின்றார். அவர் தந்துள்ள பல நூல்கள், தமிழச் சரிதத்தை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும்.

எழுத்தாளர் நவம் மாஸ்டரின் எழுத்துப் பணியும், ஏற்பட்ட அனுபவங்களும், அவர் சுவாசிக்கும் ஈழ விடுதலை வேட்கைக் காற்றும், எமக்கு முகவரி இல்லையே என்ற உள்ளத்தின் ஊமைக்காயமும, மனதை நெருடுகின்றன.

திருச்சியில் வசிக்கும் எழுத்தாளர் மகாதேவா, தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் உள்ள எழுத்து உறவுகளை நன்றாகச் சொல்லுகிறார். தங்கள் தாயக விடுதலைக்கு, காலம் தந்த அருட்கொடையான விடுதலைப்புலிகள் குறித்தும், இன்றைய இந்திய அரசு ஈழத்துக்கு இழைத்த துரோகம் பற்றியும் அவர் சொல்வதை வாசிக்கும்போது மனம் கனக்கின்றது.

நாடகங்கள், கதைகள் தீட்டுகின்ற யாழூர் துரையின் மனதில் தைத்த முட்கள்தாம், ஈழத்தில் நடந்த அவலங்கள். இந்த முட்கள் என்றுதான் நீங்குமோ? என்ற ஏக்கம் எழுகின்றது.

இலண்டனில் வசிக்கும் நூலக இயலாளர், நூல் தேட்டம் தொகுதிகளைத் தந்த செல்வராஜா, மனம் திறந்து பேசுகிறார்.

அண்மையில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தில் அற்புதமாக நடித்து, தேசிய விருதும் பெற்ற ஜெயபாலன், ஒரு கவிஞர். ‘தேம்ஸ் நதியின் துடைப்பங்களோடு, எங்கள் பாட்டி நாட்டின் சிற்றாறுகளைப் பெருக்க வருவேன்’ என்று, அவரது மருமகள், லண்டன் நகரத்தில் கூறிய வார்த்தைகள், புலம்பெயர் தமிழர்களின் இதய ஓலத்தின் வெளிப்பாடுதானே?

ஆயிரம் காட்டுத் தீகளும் அணைந்தே போகும்;
முகம் கொடுக்கும் புல்வெளிகளோ
மீண்டும் பூத்துக் குலுங்கும்

என்கிறது அவரது கவிதை!

இலங்கைத் தீவில், மண்ணின் மைந்தர்களான பூர்வீகத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற இரு பிரிவுகள் உண்டு. மலையகத் தமிழ் இலக்கியத்தின் நிலையை நன்றாகச் சொல்லுகிறார் அந்தனி ஜீவா. இலங்கையில் இந்தியத் தூதராக இதுவரை ஒரு தமிழரும் இருந்தது இல்லை என்கின்ற இவரது ஆதங்கத்தில் நாம் உணருவது, இந்திய அரசின் திட்டமிட்ட சதியைத்தான்.

யாழினி குலேந்திரன் எனும சட்ட வல்லுநரோடு அருணகிரி நடத்திய நேர்காணலில், நாம் அறிய வேண்டிய பல செய்திகளைக் காணலாம்.

தினக்குரல் நாளிதழின் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் நேர்காணலும், தாயகம் திரும்பிய கந்தையா தரும் செய்திகளும், முருகர் குணசிங்கத்தின் விரிவான பேட்டியும், நூலுக்கு அடர்த்தி தருகின்றன.

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோர் மனம் விட்டுச் சொன்ன செய்திகளும், தாயகத் தமிழர்கள் அறிய வேண்டியவை.

ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகி, வாசகர்களின் நெஞ்சைப் பிழிந்த ஈழத்து அகதிகளின் சோகக் கதைகள், சுப. தமிழ்ச்செல்வன் 2006 இல் ஆனந்த விகடனுக்குத் தந்த செவ்வி என, நூலை வாசித்து முடிக்கையில் மனதுக்குள் பெரும் பாரம் கனமாக ஏறுகிறது.

என்ன செய்தாலும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் பயன் அளிக்கும் வித்தில் திறம்படச் செய்பவர்தான், எனக்கு வாய்த்து உள்ள கருவூலங்களுள் ஒன்றான தம்பி அருணகிரி ஆவார். அவரது எழுத்தை நூலாக்கிட முன்வந்த விகடன் பிரசுரத்தார்க்கு மிகமிக நன்றி.

- வைகோ

Pin It