ஒவ்வொருவரும் ஒரு முறையாவது உலகைச் சுற்றி வர வேண்டும் என்பது அன்பு நண்பர் அருணகிரி அவர்களின் ஆசை. அதில், கிடைக்கும் அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்றும், அவர் சொல்லுகிறார். அந்த நூலையும் இரண்டு விரலால் எழுதக்கூடாது; பத்து விரல்களால் எழுத வேண்டும் என்றும் அவர் பணிக்கிறார். அவர் பல ஊர்கள் சென்று, அந்த அனுபவங்களை அப்படி எழுதி சில பல நூல்கள் வெளியிட்டுள்ளார். குறுவட்டமாகவும் கொண்டு வந்திருக்கிறார். குறுவட்டாக வந்துள்ள முதல் பயண அனுபவம் இவரதுதான்.

ulaga_valam_450அருணகிரி அவர்கள் இப்பொழுது “உலக வலம்” என்ற நூலை உருவாக்கியுள்ளார். இது அவரது பயணம் அல்ல; வெளிநாடுகளில் வாழும் பல நண்பர்கள், அந்த நாடு பற்றிச் சொன்ன தகவல்களின் தொகுப்பு! கடல் கடந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் அந்த நாட்டைப் பற்றி எழுத வேண்டும் என்கிறார் அருணகிரி. இந்த நூலின் வழியாக, அவரே அதற்குப் “பிள்ளையார் சுழி” போட்டு இருக்கின்றார்.

ஏறத்தாழ 35 நாடுகளைப் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்று உள்ளன. பல நாடுகளையும் பார்த்த எனக்கே தெரியாத சில ஆச்சரியமான செய்திகள் இந்நூலில் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பயண நூல்கள் எழுத முன்னோடியாக விளங்கியவர் “ஏ.கே.செட்டியார்” என்று சொல்லப்பட்ட அ.கருப்பன். இவர் “உலகம் சுற்றிய தமிழன்” என்று சிறப்புப் பெற்றவர். மகாத்மா காந்தியைப் பற்றி முதன் முதல் திரைப்படம் தயாரித்தவர். அவரது  பயண நூல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. “கற்பனைகளைச் சேர்க்க விரும்பாத செட்டியார், தான் பார்த்த காட்சிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார். உள்ளதை உள்ளபடி எழுதி இருக்கிறார்” என்று அருணகிரி கூறுவது முற்றிலும் சரியே. தேவையான செய்திகளை மட்டுமே சொல்லுவது செட்டியாரின் தனிப்பாணி.

அவர் எழுதிய நூல்கள் இன்று படிக்கக் கிடைப்பதில்லை. அந்த நூல்கள் பற்றிய சுருக்கம் இந்த நூலில் முதல் அதிகாரமாக இடம் பெற்று இருக்கின்றது. ஆஸ்திரியாவில் நேதாஜியுடன் செட்டியார் நாலு நாள் தங்கியிருந்தார் என்பது போன்ற விவரங்கள் கிடைக்கின்றன. செட்டியாரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பும் இருக்கின்றது.

புதுவையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் ஏழுமுறை உலகைச் சுற்றிய சாதனையாளர்கள். அவர்களின் பயணத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களின் பயண அனுபவங்களைப் படிக்கையில், துப்பறியும் நாவல் படிப்பது போலிருக்கிறது!

அவர்களின் தமிழுணர்வு பாராட்டத்தக்கது. மத்திய அமெரிக்காவில் மாயன் இன மக்கள் கட்டிய கோவில்களைப் பார்த்து, தஞ்சைப் பெரியகோவிலுடன் ஒப்பிட்டு, மாயன்களின் முன்னோர் தமிழர்களே என்று உறுதிப்படுத்துகின்றார்கள். கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில்களும் தமிழ் மன்னர்கள் கட்டியவை என்பதை வரலாற்றுச் சான்றுடன் கூறுகிறார்கள். கம்போடியாவுக்குக் “குமரி நாடு” என்று பெயர் வழங்கியது. அந்நாட்டு மக்கள் “குமர்” என்று அறியப்பட்டார்கள். அதுவே இப்போது “கெமர்” என்று விளங்குகிறது.

பல நாடுகளில் பணியாற்றிய காந்தளகம் சச்சிதானந்தம் அவர்கள், அந்நாளில் உயர்ந்த தமிழ் பண்பாடு பற்றிச் சொல்லுகிறார். ஈழத்தில் நடைபெற்ற இனக்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பித்ததை விவரிக்கின்றார் பன்னிருகரன் (என்ன அழகான தமிழ்ப்பெயர்!).

நோர்வே நாட்டைப் பற்றி, விஜய், லோகேஷ் தருகின்ற தகவல்கள் புதுமை. நோர்வேயில் இருமொழிகள் உள்ளன. ஆனால், இரண்டுக்கும் ஒரே எழுத்துதான். நோர்வேயில் ஓராண்டு வேலை செய்த ஊழியர்கள், ஓராண்டு ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றார்கள்.

மலேசியத் தமிழர்களின் சிக்கல்களை ஒருவர் உரைக்கிறார். இன்னொருவர் மலேசியா, சிங்கப்பூர் செல்லும் சிறுவணிகர்கள் பற்றித் தெரிவிக்கின்றார். சிங்கப்பூரில் தமிழும், தமிழரும் சிறப்பான இடத்தில் இருப்பதை “புதிய நிலா” இதழ் ஆசிரியர் ஜகாங்கீர் விவரிக்கிறார். மாலத்தீவுக்கும், சவுதிக்கும் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் படும் அல்லல்களை இருவர் சொல்கிறார்கள்.

மேல் படிப்புக்காக லண்டனுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் போக விரும்புகிறவர்களுக்கு இரு கட்டுரைகள் வழி காட்டுகின்றன.

பூடான் நமக்கு அதிக அறிமுகம் இல்லாத நாடு.  அங்கு ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலை தெற்காகக் கொண்டுபோக வேண்டும் என்று சொன்னால், வீட்டின் தெற்கேயுள்ள சன்னலை உடைத்து, அதன் வழியே உடலை இறுதிச் சடங்குக்கு எடுத்துப் போவார்களாம்!

ஈராக் அதிபர் சதாம் உசேன் மக்களின் தோழராக விளங்கியதையும், அவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கின்றது என்பதையும் அங்கு பணியாற்றிய பாபு இளங்கோவன் தெரிவிக்கிறார். கத்தார் பற்றிய நல்ல செய்திகளை ஒரு கட்டுரை சொல்கிறது.

புருணையில் இரண்டாயிரம் தமிழர்கள் குடியுரிமை பெற்று வாழுகிறார்கள். ஆனாலும், தமிழர்களை “கல்லிங்” என்று சொல்லுகிறார்கள். இதற்கு “அசிங்கமானவன்” என்று பொருள்.

மருத்துவர் அருள், இஸ்லாமிய இசைப்பாடகர் நெல்லை அபுபக்கர் தங்களது சொந்த அனுபவங்களைச் சொல்லுகிறார்கள். கலிங்கப்பட்டி சங்கர் ராசுவின் கப்பல் பயண அனுபவங்கள் நமது நெஞ்சைத் தொடுகின்றன; இல்லை, சுடுகின்றன. அவர் கூறும் ‘தண்ணீர் குடிக்கும் வானம்’ ஓர் அதிசயச் செய்தி!

தஞ்சை பத்மா உயிருக்கும் துணிந்து யாழ்ப்பாணம் சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மாவீரர் பிரபாகரனின் தாயாரைச் சந்தித்தார். படமும் எடுத்துக்கொண்டார். (அந்தப் படம் இந்நூலில் இடம்பெற்று உள்ளது.) இந்தத் துணிச்சல் எல்லாத் தமிழ்ப் பெண்களுக்கும் வந்தால், தமிழ் ஈழம் மலர்ந்துவிடும்!

பக்ரைன், துருக்கி, துபை, குவைத் பற்றி சிறுசிறு குறிப்புகள் உள்ளன. ஜெயக்குமாரின் அலாஸ்கா மெய் சிலிர்க்க வைக்கிறது. ஜப்பானில் இருபது ஆண்டுகளாக விலைகள் ஏறவில்லை. இதனால் ஊழியர்களின் ஊதியம் மாறவில்லை என்கிறார் செந்தில்குமார்.

மக்கள் தொடர்புக்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட பயணங்களுடன் நூல் முடிகிறது. தந்தை பெரியார் 34, 433 நாட்கள் பயணம் செய்தார்; அவர் செய்த பயணங்களின் மொத்தத் தொலைவு 8 இலட்சத்து 20 ஆயிரம் மைல்; இது நமது மண்ணுலகை 33 முறை சுற்றி வருவதற்கு ஒப்பாகும் என்ற குறிப்பையும் ஆசிரியர் கொடுத்திருக்கலாம்.

இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, நாம் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி வந்தது போன்ற உணர்வு ஏற்படுகின்றது!

- அ.மா.சாமி (ராணி முன்னாள் ஆசிரியர்)

Pin It