பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. தம்பு சிவா என்று அழைக்கப்படும் த. சிவா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகமே முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதி. இதில் இலங்கை இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள் விலாவாரியாக தரப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். இந்தியாவின் நியூசெஞ்சுரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 86 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் மூத்த இலக்கியவாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அவ்வளவாக இல்லை. அத்தகைய பெரும் குறையை நீக்குவதற்காகவும், முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற்காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இடம்பெற்றிருக்கின்றன.
 
thambusiva_450பாகம் ஒன்றில் சரத்சந்திரர், தகழி சிவசங்கரப்பிள்ளை, கிஷன் சந்தர், மக்தூம், வல்லிக்கண்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றியும், பகுதி இரண்டில் அமரர் கைலாசபதி, கவிஞர் பசுபதி, செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், முஹம்மது சமீம், சுபத்திரன் ஆகியோர் பற்றியும் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தின் அட்டையை செ. கணேசலிங்கன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நீர்வை பொன்னையன் ஆகியோர் அலங்கரிக்கின்றனர்.
 
பேராசிரியர் க. கைலாசபதிக்கு சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இந்தத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் சபா. ஜெயராசா இவ்வாறு குறிப்பிடுகின்றார். இலங்கையினதும், இந்தியாவினதும் குறிப்பிட்ட காலகட்டத்தின் முற்போக்குச் சிந்தனை வடிவங்களின் 'குறுக்குவெட்டுமுகம்' இந்நூலாக்கத்தின் தொகுப்பாகின்றது. தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் எழுத்தாக்கங்களும் ஆளுமை வெளிப்பாடுகளும், முற்போக்கு சிந்தனைகளின் பன்மை நிலைகளைப் புலப்படுத்துகின்றன. முற்போக்காளர் ஒரே அச்சில் வார்த்த வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் என்ற புலக்காட்சியும் இங்கே தகர்ப்புக்கு உள்ளாகின்றது. இது இந்நூலாக்கத்தின் ஒரு பரிமாணம். இதன் வேறொரு பரிமாணம் ஆளுமையின் பன்முகத் தன்மைகள் ஊடே கருத்தியலுக்குத் திரும்புதலாக அமைகின்றது.
 
கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தனது முன்னுரையில் கா. சிவத்தம்பி அவர்களின் கூற்றாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'முற்போக்கு எனும் சொற்றொடர் சமூக நிலைப்பட்ட ஒரு கருதுகோலாகும். அச்சொற்றொடர் மனிதன் சமூகம் தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை, மதிப்பீடுகளை, விபரிப்பதாகும். சமூகத்தின் படிநிலை வளர்ச்சிபற்றிய கண்ணோட்டமும் இதனுள் அடங்கும். பெரும்பாலும் மார்க்ஸியம் என்ற தத்துவத்தை வரித்துக்கொண்டவர்களது அரசியல், சமூக, இலக்கிய நடவடிக்கைகள் இந்த முற்போக்குத் தன்மை கொண்டிருப்பதை அறியலாம். முற்போக்குவாதம் மார்க்ஸியம் கூறும் சமூக வளர்ச்சி விதிகளை கற்றுக்கொள்கிறது'.
 
வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து தனது உரையில் திரு. தம்புசிவா அவர்களைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'நூலாசிரியர் தம்பு சிவசுப்பிரமணியத்தை கடந்த பல தசாப்தங்களாக அறிவேன். 1970 களில் கற்பகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்து இன்று வரை எழுதிக்கொண்டிருப்பவர். இளமைக்காலம் தொட்டு இன்றுவரை மார்க்ஸிய அனுதாபியாக இருந்து வருபவர். புனைவு, பத்தி, விமர்சனம், சஞ்சிகை ஆசிரியர் என பல்வேறு தளங்களில் முகம்கொண்டவர். பண்பாளர். அவர் அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள் இப்பொழுது நூலாக்கம் பெற்றுள்ளன. இலகுவான நடையில் பொது வாசகர்களும், மாணவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் தொகுப்பு வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும், முற்போக்கு இலக்கியக் காரர்களை அறிந்துகொள்வதற்கும், அவர்களது ஆக்கங்களை தேடிப் பார்ப்பதற்குமான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை'.
 
வங்கப்பெண்களின் விடுதலைக்கும், எழுச்சிக்கும் தன் பேனா மூலம் குரல்கொடுத்த விடுதலை வீரரான சரத் சந்திரர் அவர்கள் வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேவானந்தபுரம் எனும் சிற்றூரில் 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிறந்தவர். இவர் ஆட்டத்திலும், இசையிலும் அதிக ஈடுபாடுகாட்டி வந்தவர். குழந்தை என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி வந்த சரத்சந்திரர், ஆங்கில நாவல்களையும், அறிவியல் நூல்களையும் அதிகமாக வாசிப்பதில் ஆர்வமிக்கவர். பிறர் துன்பத்தைக் காணச் சகிக்காத இவர், அக்கம்பக்கத்தாரின் காரியங்களில் பெரிதும் துணை புரிந்து வந்தார்.
 
பழைமை சிறப்புடையதானாலும், அதை பழைமையாகவே எண்ண வேண்டும். அதில் மயங்கிவிடாமல் எதிர்காலத்தில் நாட்டம் செலுத்துவதே இளமையின் இலக்கணம். என்று தெளிவுபடுத்தியவர் சரத்சந்திரர். மேலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளையும், காந்தியம், இந்து முஸ்லிம் பிரச்சனை, சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு, இளைஞர் எழுச்சி போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளை வரைந்தார். இதனால் அவர் புகழ் வளர்ந்தது. ஆனால் பத்தாம்பசலி பழைமைவாதிகள் அவர் மதத்தை அழிப்பதாக ஓலமிட்டனர்.
 
சரத் சந்திரரின் இலக்கியம் உயிர்துடிப்புடன் அமைந்திருப்பதற்குக் காரணம், அவர் தனது சொந்த அனுபவங்களையும், நண்பர்களின் வாழ்க்கை அம்சங்களையும் தனது இலக்கியத்தின் மூலம் தந்ததால்தான். அவரது இலக்கியத்தில் வரும் பாத்திரங்களும் கதைப் பொருளும் கற்பனையானவையல்ல. அவை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவை. பழக்கப்பட்டவை. அதனால்தான் சரத்சந்திரரின் பாத்திரங்கள் நரம்பு, சதையுடன் கூடிய உண்மை மனிதர்களாக நமக்குக் காணப்படுகிறார்கள். சரத் சந்திரர் பற்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார். 'அவர் இலட்சிய எழுத்தாளர் மட்டுமல்ல. இலட்சிய தேசபக்தரும் கூட. அது மட்டுமல்ல. அவர் இலட்சிய மனிதராவார். இத்தனை சிறப்புக்களையும் ஒரே ஆளிடம் காண்பது அரிது'
 
தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் தகழி என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் படைப்புளில் அவர் அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது. தகழியின் சிறுகதைத் தொகுதி 1934 இல் வெளிவந்தது. இவர் சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட அவலங்களை, போராட்டங்களை தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். 1956 இல் வெளிவந்த இவரது செம்மீன் என்ற நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. நில அமைப்பு சார்ந்த இலக்கியப் படைப்புக்கள் என்ற வகையில் கடற்கரை வாழ் மக்களின் வாழ்க்கையை செம்மீன் நாவலில் தந்திருப்பதால் அவரை 'குடா நாட்டின் வரலாற்று நாயக்' என்று சிறப்பிக்கின்றனர்.
 
இந்த நாவல் இருபது நாட்களுக்குள் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மக்களின் ஏற்றத்தாழ்வுகளில் இருக்கக்கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும், உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளரான இவர், தனது 85 ஆவது வயதில் உயிர்நீத்தார்.
 
இந்திய வாழ்க்கையின் அழகையும் அவலங்களையும் சித்தரித்த புனையியல்வாதியாக கிஷண்சந்தர் போற்றப்படுகின்றார். இவர் தனது இளமைப்பருவம் முதல் துடிப்புள்ள கொள்கைப்பற்றுறுதி கொண்ட செயல்வீரனாக இருந்தார். கே.ஏ. அப்பாஸ் என்பவர் கிஷண்சந்தரைப் பற்றி குறிப்பிடுகையில் 'கிஷண்சந்தர் படைப்பாளுமை மிக்கவர். உருதுமொழியில் அவருடைய நயமான எழுத்தாற்றலை, ஆற்றொழுக்கமான உரைநடையை எழுதிக் குவிக்கும் திறமையைக்கண்டு ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் ரகசியமாகப் பொறாமைப்பட்டேன்' என்கிறார்.
 
அவர் தனது தந்தையுடன் காஷ்மீரில் வாழ்ந்த காலத்தில் காஷ்மீர் வாழ் விவசாயிகளின் கூலிகளின் பரிதாபத்துக்குரிய ஏழ்மையைக் கண்டு வருந்தினார். இயற்கைக்கும், மனிதனுக்குமிடையே இருந்த வேறுபாடு அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன் காரணமாக அவர் மனதில் பரிவு உணர்ச்சி ஏற்பட்டு அது ஆழப் பதிந்துவிட்டது. அத்துடன் கிஷண்சந்தர் காதல்வயப்பட்டு குறுகிய காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டபோதிலும் அவருக்கு ஏற்பட்ட ஆழமான காதல் உணர்ச்சி ஒரு மென்மையான நினைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்கிணங்க அவரது பல படைப்புகள் அமைந்துள்ளன.
 
ஆந்திர மாநிலத்தில் 1908 இல் பிறந்தவர் கவிஞர் மக்தூம். மாமா பஷீருத்தீன் அவர்களிடம் வளர்ந்த இவர், தினமும் மசூதியை சுத்தம் செய்தலையும், தொழுகைக்கு வருவோரின் பாவனைக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதையும் தனது அன்றாடப் பணியாகக்கொண்டிருந்தார். 1933 க்குப் பின் தன்னுணர்ச்சிக் கவிதைகளைப் படைத்த மக்தூம் தொன்மை இலக்கியங்களையும் ஆர்வத்துடன் கற்றார். 1939ல் இரண்டாம் உலகப்போரை கண்டனம் செய்து பாடல்கள் எழுதினார். முதலாளித்துவத்தை தீவிரமாக எதிர்த்து வந்த இவர், நாடகங்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் நகைச்சுவை உணர்வுமிக்கவரும் கூட. அவர் 1969 இல் இறையடி சேர்ந்தார்.
 
திருநெல்வேலி ராஜவல்லிபுரம் எனும் கிராமத்தில் 1920 இல் பிறந்த வல்லிக்கண்ணன் அவர்கள் சென்ற தலைமுறை எழுத்தாளருக்கும், இந்தத்தலைமுறை எழுத்தாளருக்கும் பாலமாக விளங்கியவர். பெயர், புகழ், பட்டங்களை விரும்பாத உண்மைப் படைப்பாளியான இவர், தனது 16 ஆவது வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடாத்திய பெருமைக்குரியவர். 30 வயதுக்குள் 25 நூல்கள் வரை வெளியிட்டவர். கவிதை, சிறுகதை, நாவல் என்று தொடர்ந்த இவரது எழுத்துலக வாழ்வு திறனாய்வு, சஞ்சிகை, புதுக்கவிதை, வரலாறு என்று தொடர்ந்தது. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞராகவும், முன்னுரை எழுதும் முன்னுரை திலகமாகவும் அறியப்பட்ட இவர் முற்போக்கு எழுத்தாளர்கள் மீது அளவுகடந்த தோழமை உணர்வுடன் தனது கடைசிக்காலம் வரை இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சாதாரண உழவர் குடும்பத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். மக்களுடைய வாழ்வியலை ஆதாரமாக வைத்து இவரது படைப்புக்கள் உருப்பெற்றதால் மக்கள் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். அரசியல், சமூகம், காதல், பல்சுவை என பலதரப்பட்ட படைப்புக்களைப் படைத்த இவரது இலக்கியப் பிடிப்பும், கவித்திறனும் கவிதைகள் மூலம் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன. பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த இவர், 1951 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார். பலராலும் அறியப்பட்ட பட்டுக்கோட்டையார் தனது 29 ஆண்டு வாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக வெளிப்படுகின்றார்.
 
1933 இல் பிறந்த க. கைலாசபதி அவர்கள் இலக்கிய மரபில் புதிய பரிமாணங்களை உருவாக்கியவர். இவர் பேராசான் மு. கார்த்திகேசன் அவர்களின் மாணவராவார். தினகரன் நாளிதழின் ஆசிரியராக கடமை புரிந்த இவர், 1961 இல் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராக சேர்ந்து 1966 இல் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவர் கவிதை, சிறுகதை, நாடகங்களை எழுதியிருக்கிறார். 'பூ பூக்காமலேயே சடைத்து வளரந்து பெரும் தோற்றம் காட்டும் தமிழறிஞர் மத்தியில் பூத்துக்காய்த்துக் கனிந்து நின்றது கைலாசபதி என்ற பெருமரம்' என்று அவரைப்பற்றி பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு குறிப்பிட்டிருக்கிறார்.
 
பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை எனும் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் பசுபதி படாடோபத்தன்மை சிறிதும் இல்லாத ஒரு சாதாரண மனிதர். அவர் முற்போக்கு இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட செயல்வீரராகவும், போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர். இவரது கவிதையில் கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும், போராட்ட உணர்வும், தர்மாவேசமும் மிகையாக காணப்பட்டன. இளமைக் காலத்திலிருந்தே சாதிவெறியை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டி வந்தவர்.
 
எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் பசுபதியைப் பற்றி குறிப்பிடுகையில் 'நிலப் பிரபுத்துவத்தின் சாபக்கேடான சமூகக் கொடுமைகட்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் உட்பட்டு சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்வுக்குமாகத் தன் இளம்பராயம் தொடக்கம் உழைத்து வந்தவர் க. பசுபதி' என்கிறார். 'மரணம் தன்னை நெருங்கி வருவதை அறிந்திருந்தாலும் அதற்காக கலங்காமல், எதிர்கால நம்பிக்கையை ஊட்டி விடுதலைக்காக ஏங்கி நிற்கும் மக்களை நினைவுபடுத்தி நிலையான இடத்தைப் பெற்றுச் சென்றுள்ளார் பசுபதி' என்கிறார் கே. டானியல்.
 
நாவல் இலக்கியத்துறையில் 40 நாவல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்துள்ள செ. கணேசலிங்கன் அவர்கள் மு. வரதராஜன், அகிலன், காண்டேகர், ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துக்களில் கவரப்பட்டவர். இவர் பெண்ணிலைவாத சிந்தனைகளை மார்க்ஸிய நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் குமரன் என்ற கலை இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்ந்து ஈழுத்து இலக்கயத்துக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியவர். பல்துறை சார்ந்த பரிமாணங்களுடன் மார்க்ஸிய சிந்தனையில் பற்றுறுதியுடன் செயற்பட்டு இன்றும் சோர்ந்துவிடாமல் ஈழுத்து எழுத்தாளர்களுடைய நூல்களை குமரன் வெளியீடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
 
'இளம் எழுத்தாளர்கள் பலருக்கு ஏணியாக திகழ்ந்து வரும் நீர்வை பொன்னையன் அவர்கள் 1930ம் ஆண்டு யாழ்ப்பாணம் நீர்வேலி எனும் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தின்படி வாழ்க்கையை வாழும் உயர்ந்த இலட்சியம் கொண்டவர். தான்கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல் நேர்மையான எழுத்தாளராக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியம் படைத்து வந்தாலும் புகழ்ச்சி, பட்டங்களுக்கெல்லாம் சிறுமைப்பபட்டுவிடாமல் வாழ்ந்து வருகின்றார்.
 
இவர் கல்விகற்கும் காலத்திலேயே மாணவர் போராட்டங்களில் பங்குகொண்டார். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்கொடுக்கத் தவறாத ஒரு இலட்சியவாதியாகவே இருந்தார். 1957 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர் அதன் பின் பல ஆண்டுகளாக வேலைதேடி அலைந்து கிடைக்காததால் தோட்டக்காரனாகவே வாழ்ந்தவர். 'சமுதாயத்தின்கண் தான் தரிசித்த போராட்டங்களை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அதைப் பட்டைத்தீட்டி மக்களுக்கு வழங்குகின்றவனே உண்மையான படைப்பாளி' என்று கூறிவரும் நீர்வை பொன்னையன் அவர்கள் எல்லோருடனும் மிக இனிமையாக பழகக்கூடியவர். எதற்கும் மனஞ்சோராத இந்த ஆக்க இலக்கிய கர்த்தா தொடர்ந்தும் நீண்டகாலம் தனது கலை இலக்கிய சேவையை மக்களுக்காக ஆற்றவேண்டுமென்று இலக்கிய நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன' என்கிறார் நூலாசிரியர் தம்புசிவா அவர்கள்.
 
மார்க்ஸிய தத்துவத்தை இன்றுவரை ஏற்று அதன்படி செயற்படுகின்றவர்களில் முஹம்மது சமீம் அவர்கள் முன்நிற்கின்றார். பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்களில் கொள்கைவழி நின்று செயற்படுகின்ற கொள்கைவாதியாக இவர் விளங்குகின்றார். கலாசார திணைக்களத்தின் மூலம் கலாபூஷணம் விருதைப் பெற்றுக்கொண்ட இவரின் ஆரம்பகால பள்ளிப்படிப்பு அவர் பிறந்த ஊரான பதுளையில் அமைந்திருந்தது.

சாந்த சுபாவமும் எல்லோருடனும் அன்பாக பழகும் குணத்தையும் கொண்ட சமீம் அவர்கள் இலங்கை சர்வகலாசாலையில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றபின் ஐம்பதுகளில் சாஹிரா கல்லூரியின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்று தற்போது இன்டர்நெஷனல் கல்லூரியை நடாத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1935ம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த கவிஞர் சுபத்திரன் சொல்லிலும், செயலிலும் வழுவாத உன்னதமானவர். முற்போக்குத் தளத்தில் நின்று மக்கள் விடுதலைக்காக உழைத்தவர். தங்கவடிவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராவார். இவர் கட்சிக் கவிதைகள், அரசியல் கவிதைகள், பொதுவான கவிதைகள், அக உணர்வுக் கவிதைகள் என்று பல்வேறு தளத்தில் நின்று எழுதியவர். அக உணர்வு சார்ந்து அவர் எழுதிய கவிதைகள், அவர் மனதில் உருவாகிய உணர்ச்சி வயப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருக்கிறது. மேலும் அவருடைய கவிதையில் உள்ள சிறப்பு என்னவென்றால் எவர் பொருட்டு அவர் தன் கவிதைக் குரலை ஒலித்தாரோ அவர்களில் ஒருவராகத் தன்னை நிறுத்தியே தனது குரலை அவர் ஒலித்துள்ளார்.
 
இவ்வாறு பல்வேறுபட்ட இலக்கியவாதிகளை அடையாளப்படுத்தி திரு. தம்புசிவா அவர்கள் வெளிக்கொணர்ந்திருக்கும் இந்நூலானது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களோடு இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பை வாசித்துப் பயனடைய வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்!!!
 
நூலின் பெயர் - முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
நூலாசிரியர் - த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா)
முகவரி - 9/23, Nelson Place, Wellawatta.
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை - 50/= (இந்திய விலை) 

Pin It