க. நா. சு. , தி. க. சி. , கு. பா. ரா. , டி. கே. சி. , உ. வே. சா. , வ. உ. சி. , மா. பொ. சி. ,தெ. பா. மீ. என மு்ன்றெழுத்தில் இலக்கியம் செய்தவர்கள் வரிசையில் முக்கியமானவர் வீ.ந.சோ. நல்ல விமரிசகர். குறிப்பாக கட்டுரையாளர். தொழிற்சங்க வாதி. தமிழ்த் தேசியப் போராளி. தனித் தமிழ் ஆர்வலர். 

‘இப்படிக்கு’ இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கட்டுரை எழுதி வருகிறார். ஓர் இதழுக்கு ஒரு கட்டுரை இவருடையது மட்டுமே. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்திருக்கும் தொகுப்பு ‘இந்திய நாடும் இறையாண்மைக் கோட்பாடும்’. முதல் தொகுப்பு ‘அச்சறுத்துகிறது ஆதிக்க மொழி’.

நாடகக் கலைஞர் கலைமாமணி கே.ஆர்.அம்பிகா பற்றியதே முதல் கட்டுரை. அவர் வாழ்க்கையை அவர் வாயிலாகவே கேட்டு ஆவணப்படமாக்கியவர் அம்பை. இதன் மீதான விமரிசனமாகவே கட்டுரை. நாடகக் கலைஞர்களின் பரிதாப நிலையை பேசியுள்ளார். தமிழ் எங்கும் இல்லை என்னும் வருத்தமும் வெளிப்பட்டுள்ளது. ”அரியனை மயக்கத்தில் அரசியலாளர்கள். திரை மயக்கத்தில் இளைஞர்கள். திருக்குறள் மயக்கத்தில் தமிழ் அறிஞர்கள். பசி மயக்கத்தில் நாடகக் கலைஞர்கள்” என இறுதி எடுத்துக் காட்டத்தக்கது.

‘கணித மேதை’ வசந்தா கந்தசாமியை இரண்டாம் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அஹணுவைப் பிளக்க முடியும் என்று நிறுவியவர், சுழியனை வகுக்க முடியாது என்பதை முறியடித்தவர் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் பிற்படுத்தப்பட்டவர் என்றும் தமிழராக பிறந்ததுதான் என்றும் கவலைப் பட்டுள்ளார். தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.

மகேஸ்வேதா தேவி என்னும் எழுத்தாளரின் மனிதாபிமான செயலை ஒரு கட்டுரையில் பாராட்டியுள்ளார். மரணதன்டனை அளிக்கப் பட்ட இருவரின் நிலையை விவரித்து ஏன் குற்றவாளி ஆக்கப்பட்டனர் என்று விளக்கமளித்து குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்துக் காப்பாற்றியுள்ளார். ஓர் எழுத்தாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார். ஒரு படைப்பாளியை இவ்வாறான செயலே தீர்மானிக்கும் என்கிறார்.

அடுத்து அடையாளம் காட்டப்பட்டவர் சந்திரலேகா. இவர் வரைந்த அடையாளச் சின்னமே ‘ஏர் இந்தியா மகாராஜா’. அவர் மறைவையொட்டி “ சந்திலேகா தன் கலை உலக வேட்கைகளை காற்றைப் போல, வானைப் போல, சுதந்திரமாகப் பாதுகாத்தார் என்பதுதான் அவருக்குப் பெருமை” என அவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

கே. ஆர். அம்பிகா, வசந்தா, மகேஸ்வேதா தேவி, சுந்திரலேகா ஆகிய பெண்மணிகளிலிருந்து மாறுபட்டவர், வித்தியாசமானவர் ‘கோமதி’. சிற்றிதழ் சேகரிப்பாளர் தி. மா. சரவணினின் மனைவி. அவர் மரணத்தை முன் வைத்து எழுதி சோகத்தை ஒவ்வொரு வரியிலும் இழையோடச் செய்துள்ளார். இடையே சிற்றிதழ்கள் குறித்தும் தி. மா. சரவணனின் பணி குறித்தும் போற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண் குறித்து எழுதியவர் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ வில் பெண்ணுரிமையைப் பேசியுள்ளார். பெண் ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு உயர்ந்தவள் என காட்டியுள்ளார். பெண்ணடிமைத் தனத்தை மனித உரிமை மீறல் என்கிறார். ஆண்களுக்கு எதிரானது எனினும் ஆண்களையும் போராட அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு முன் வருபவர்கள் ‘நல்ல ஆண்கள்’ என்கிறார்.

இந்தியாவின் தலைப் பகுதியில் இருப்பது காவக்ஷமீர். இந்தியாவின் தலைவலியும் காக்ஷமீரே. காரணம் காக்ஷமீருடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதே என குற்றம் சாட்டியுள்ளார். தீர்விற்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்னும் தலைப்பை வைத்து சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ‘கற்பு’ என்பது உறுதி மொழியைக் காப்பதே என உறுதிப்படுத்தியுள்ளார்.

விந்தன் - தமிழகத்தின் சிறநத எழுத்தாளர். ’விந்தன் - தமிழர்களின் பெருமை’ என்கிறார். அடிப்படைக் கல்வியைப் பெறாத இவரின் ‘படைப்புகள்’ பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் புலவர்கள் யாசகம் பெற்று வாழ்ந்துள்ளனர். இக்கால ‘அரசியல்வாதிகள்’ வாய்ப்புகள் பல தந்தும் மறுத்துள்ளார் என வியக்கச் செய்கின்றனர். தொடர்ந்து ‘அடடா அடடா இவர்தான் கவிஞர்’ என தாராபாரதியைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். பட்டுக் கோட்டையார் எழுத்துக்கும் வாழ்விற்கும் இடைவெளி இல்லாதவர் என புகழாரித்து ஒரு தலித் சிறுவனை சொந்த பொறுப்பில் படிக்க வைத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர்களுக்கு அவர் படைப்பை வைத்து ஒவ்வொர் ஆண்டும் ‘சாகத்திய அகாதமி’ விருது வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டு வழங்கப்படும் போதும் சர்ச்சை எழுப்புவதும் விவாதம் செய்வதும் ஒரு சடங்காகவே நிகழ்கிறது. தி. க. சி. க்கு அவர் விமரிசனத்திற்காக வழங்கப்பட்டது. எதிர்ப்புகள் தீவிரமாயின. ’சர்ச்சையா - தாக்குதலா’வில் எதிர்ப்பவர்களுக்கு விளக்கமளித்துள்ளார். ஆதாரத்துடன் விவாதித்துள்ளார். பா. செயப்பிரகாசம் அவர்களும் ‘கால் காசி கடுதாசி’ என ஒரு சிறு தொகுப்பையே தி. க. சி. க்கு ஆதரவாக வெளியிட்டுள்ளது சுட்டத்தக்கது. ‘தமிழர்கள் தடுமாறக் கூடாது’ என எச்சரித்துள்ளார்.

‘தமிழ்ச்சமு்கத்தின் மீது திரைப்படத்தாக்கம்’ தமிழ்ச்சமு்கத்தின் மீதுள்ள அக்கறையைக் காட்டுகிறது. ”தி. மு. க. ஆண்டாலும், அ. தி. மு. க. ஆணடாலும் திரைப்படக் காரர்கள் மட்டுமே கலைஞர்களாக, படைப்பாளிகளாக, இலக்கியவாதிகளாக, கவிஞர்களாக இயல், இசை, நாடக மன்றம் கருதுகிறது” என்று எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திரை மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பியுள்ளது வரவேற்பிற்குரியது.

“அளவற்ற மகிழ்ச்சியில் அம்பேத்கார்’ கட்டுரையில் இந்திய பொதுவுடைமைக் கட்சித்தலைவரான தோழர் இரா. நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு ‘அம்பேத்கார் விருது’ வழங்கியதைப் பாராட்டியுள்ளார். வழங்கிய தமிழக முதல்வர் கலைஞரையும் பாராட்டத் தவற வில்லை. தோழரின் போராட்ட வாழ்வைக் குறித்தும் பேசியுள்ளார். ஆனால் தலித்துகள் மீது வன்கொடுமைத் தொடர்வதைச் சுட்டி இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக் களைய முற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் பிரிவான ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ நடத்திய ஒரு பேரணியை வைத்து எழுதியுள்ள ஒரு கட்டுரை ‘ஒரு பேரணியும் அது தரும் செய்திகளும்’. சே குவேரா, ப. சீவானந்தம், கே. பாலதண்டாயுதம், பகத்சிங் போன்ற ‘விடுதலை போராளிகள்’ படங்கள் சுமந்து கோசமிட்டுள்ளனர். இவ்விடுதலைப் போராளிகள் காட்டிய வழிகள் மு்லமே ‘விடியல்’ ஏற்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு தமிழக அரசு சங்கராச்சாரியாரைக் கைது செய்கிறது. இதை வைத்து எழுதப்பட்டதே ‘புஷ்யமித்ர சுங்கன் கைது’. ‘சங்கரமடத்துக்கு கைது’ புதிதல்ல என்று அதன் மோசடி வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். கைது செய்ததை நியாயம் என்று தெரிவித்து தண்டிக்க வேண்டும் என்கிறார். தமிழர்களையும் எச்சரித்துள்ளார்.

வீ. நா. சோ. அடிப்படையில் ஒரு தமிழ் உணர்வாளர். ஒவ்வொரு கட்டுரையிலுமே அவரின் தமிழ்ப்பற்று வெளிப்பட்டுள்ளது. ‘நீதி மன்றங்களில் இந்தி’ இருப்பதை எதிர்த்து தமிழ் வேண்டும் என்கிறார். போராடவும் துhண்டுகிறார். தாய் மொழியைப் புறக்கணித்தால் என்ன ஏற்படும் என ‘சோமாலியா’வை உதாரணமாக்கிய கட்டுரை ‘தாய்மொழித் தளத்தில் வளமையும் வறுமையும்’. தமிழ் உணர்வையூட்டுகிறது.

இந்தியை எதிர்க்க “ஏன் இந்த அச்சம்?” என்கிறார். எதிர்க்கா விடில் இந்தி தமிழத்தில் காலுhன்றி விடும் என்றும் கவலைப்பட்டுள்ளார். ’குறையொன்றுமில்லை’யில் மற்ற மாநிலத்தவர் போல் தமிழர்களும் தமிழ் உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறார். தமிழர்களைத் கொண்டே தமிழை வளரவிடாமல் தடுக்கிறது என குற்றமும் சாட்டியுள்ளார். தமிழநாட்டில் ‘இந்தியர்’களே மிகுந்துள்ளனர் என கவலையும் பட்டுள்ளார்.

உ. வே. சா. ஒரு தமிழறிஞர் என்பதை அனைவரும் அறிஞர். ஆனால் அவரிடம் ‘சாதி வெறி’யே மேலோங்கியுள்ளது என “வருண அதர்ம”த்திற்கு எதிரான போர் மு்லம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழறிஞராயிலும் சாதி வெறி கூடாது என்கிறார். ”தமிழா? சாதியா?” எனக் கேட்டால் உ. வே. சா. எதைத் தேர்வு செய்வார்? அறிந்தவர்க் கூறினால் தெரிந்து கொள்ளலாம்” என ஒரு வினாவையும் எழுப்பியுள்ளார். வினா எழுப்பிய மற்றெhரு கட்டுரை ‘அழுவதற்கும் நேரமில்லை’. இந்தியாவின் எதிர்காலம் இளஞ்சிறார்களின் கையில் என்பர். இளஞ்சிறார்களின் எதிர்காலம் கல்வி கற்பதில் உள்ளது. ஆனால் இன்றைய கல்வி ஓர் அறிவாளியை உருவாக்கவில்லை என்று கல்வியை விமரிசித்துள்ளார். குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவது கூடாது என்பது அவரின் வேண்டுதல். ” இந்தக் குழந்தைகள் விடுதலை ஆவார்களா?” என வினா எழுப்பி சிந்திக்கச் செய்கிறார்.

புத்தகங்களே
குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள் என்னும் அப்துல் ரகுமானின் கவிதையை கட்டுரையாக்கியது போலிருந்தது. இவ்வாறு பல வினாக்கள். ’இந்த கொண்டாட்டம் யாருக்கு ?’ என வினவியதில் கோபம் உள்ளது. திருபாய் அம்பானியின் உழைப்பு, உயர்வைப் பற்றி பேசினாலும் இந்தியா பணக்காரர்கள் நாடாகி விட்டதைக் கண்டித்துள்ளார். பாமரர்களுக்காக வருந்தியுள்ளார். வேளாண் தொழில் வீழ்ச்சி அடைந்ததையும் உரைத்துள்ளார்.

செம்மொழி ஆய்வு மையத்தை விவேகானந்தர் நினைவு இல்லத்தில் அமைக்க முடிவு செய்தது தமிழக அரசு. தமிழ்ப்பகைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இராமநாதபுரம் மாமன்னர் பாஸ்கர சேதுபதி தனக்குக் கிடைத்த அமெரிக்க மாநாட்டு வாய்ப்பை விவேகானந்தருக்கு அளித்தார் என உண்மையை வெளிச்சப்படுத்தி அதுவே தமிழனின் தனிக்குணம் என்கிறார். ’தனியே அவர்க்கொரு குணமுண்டு’ மு்லம் காசுமீரிகள் போல் தமிழர்களும் தனித்த அடையாளத்துடன் வாழ வேண்டியுள்ளார்.

“இறையாண்மை’ என்னும் சொல் சமீபங்களில் மிகுதியாக பேசப்பட்டது. தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதே குற்றம் என்கிறது ‘இந்திய இறையாண்மை’. “மக்களே இறையாண்மையுள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான் குடியரசு” என அம்பேத்கர் தலைமையிலான குழுக் குறிப்பிட்டதைக் கூறி விளக்கமளித்து புரியச் செய்துள்ளார். உண்மையான இறையாண்மையை அறியச் செய்துள்ளார்.

இந்தியா ஒரு நாடு ஆயினும் இந்தியர் என அனைவரும் அழைக்கபட்டாலும் மக்களின் நம்பிக்கைகள் மாறுபடுகிறது என்கிறது ‘திசைகளின் முரண்’. ”வடக்கே மாபலி அசுரன், கொடியவன். தெற்கே மாபலி நல்லவன். மக்களின் நம்பிக்கைக்குரியவன்” என்பது சான்று. இராமலீலா, இராவணலீலா நிகழ்வுகளையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.

நாடறிந்த ஒரு கட்டுரையாளர் அ. மார்க்ஸ். பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர். ’ஆங்கில மொழி பயிற்சி அவசியம்’ என்பது இவர் கருத்து. மொழி, இனம், தேசியம் என்பதை மாயை என்பார். ’திசை மாறிச் சிந்திக்கிறார்’ என விமரிசித்துள்ளார். ஏகாதிப்பத்திய நாடுகளுக்கு எதிரியாக இருந்த தோழர் அந்தோனிசாமியின் மகனே அ. மார்க்ஸ் என்று வருத்தப்பட்டுள்ளார். தோழர் மார்க்ஸின் பெயரை இவருக்கு வைத்துள்ளனரே என்னும் தொனியிலேயே ‘மார்க்ஸ் பெயரால் இவர்’ என தலைப்பிட்டுள்ளார்.

பேச வேண்டிய சு{ழலில் பேச வேண்டும். பேச வேண்டியதை பேச வேண்டும். பேசக் கூடாததை பேசக்சுடாது. இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று மக்கள் ‘பேசி’ கெடுத்ததையும் பகத்சிங்கை துhக்கிலிட வேண்டாம் என காந்தி ‘பேசாமல்’ கெடுத்ததையும் சான்றுகளாக்கியுள்ளார். இயேசு, புத்தன், காந்தி என்று மகான்கனை பட்டியலிடுகின்றனர். ‘காந்தி’ என்னும் பிம்பத்தைச் சிதைத்துள்ளார்.

வாசித்து முடிக்கும் போது மனநிறைவையும் மனத்துக்குள் ஒரு தாகத்தையும் எது ஏற்படுத்துகிறதோ அதுவே சிறந்த தொகுப்பு. அவ்வகையில் ‘இந்திய நாடும் இறையாண்மைக் கோட்பாடும்’ அமைந்துள்ளது. வீ. ந. சோ. வின் பணி பாராட்டத்தக்கது. ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு தளத்தில் எழுதியுள்ளார். எதை எழுத வேண்டுமோ,எவரை எழுத வேண்டுமோ அதனை, அவரை முழுமையாக உள்வாங்கி, கிரகித்து எழுதியுள்ளார். புள்ளி விவரங்கள் சேகரித்து அளித்து பிரமிப்பை ஊட்டுகிறார். தமிழ், தமிழினம் தமிழ்த் தேசியம் என்பவையே வீ. நா. சோ. முதன்மைப் படுத்தியுள்ளார். வாசிப்போரிடையே தமிழ் உணர்வை ஊட்டியுள்ளார். தமிழை மேம்படுத்த வேண்டுமென்கிறார். தாய் மொழியே தேவை என்கிறார். பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார். இந்திய மொழி இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. எழுத்தாளர்களாக இருந்தாலும் தமிழைப் புறக்கணிக்கிற போது எதிர்க்கவும் தயங்க வில்லை. சாதியம் மறுக்கிறார்.

வீ. நா. சோ. வின் எழுத்து ஒரே சீராக வாசிப்பாளனை அழைத்துச் செல்கிறது. எவ்விதம் தொடங்கி எவ்விதம் முடிக்க வேண்டும் என்னும் வித்தையைக் கற்றவர் என கட்டுரைகள் உள்ளன. ஒரு தேர்ந்த கட்டுரையளராக வீ. நா. சோ. வை அறிய முடிகிறது. அவருக்குள் ஒரு கவிஞ‌ரும் உள்ளார் என்பதை அவர் எடுத்துக்காட்டிய கவிதைகள் முன்னிற்கின்றன. கவிதைகளை சரியான இடத்தில் சேர்த்து இருப்பது சிறப்பு. அவரே ஒரு கவிஞர் என ‘கோமதி’யின் மரணம் குறித்த கவிதை உள்ளது.

கோமதி இன்றில்லை.
உண்மைதான்.
நம்ப முடியவில்லை.
ஆனால், நடந்து விட்டதே.
துயரங்களை மென்று அசை போட்டுக்
கொண்டே நகர்கிறது காலம்.
நம்பித்தான் தீர வேண்டி இருக்கிறது.
கோமதி இன்றில்லை. மனத்தை மெல்ல வருடுகிறது. உணர்வுகளை உசுப்புகிறது.

கட்டுரையின் தன்மைகளில் ஒன்று எடுத்துக் காட்டப்படும் ‘மேற்கோள்கள்’. கட்டுரையாளர் மேற்கோள்களைக் காட்டிக் கட்டுரையை வலுவடையச் செய்கிறார். இவரின் எழுத்துக்களும் மேற்கோளுக்குரியவை என்பதில் மாற்றுக் கருத்து இராது. ஒரு மேற்கோள். “எழுத்திற்கு அசைவு வேண்டும். படிப்பவரை அசைக்க வேண்டும். உலுக்க வேண்டும். படிக்கும் வாசகர்கள் ஒன்று ஏற்க வேண்டும். அல்லது மறுக்க வேண்டும். அசைக்கும் திறன் இல்லாத எழுத்து செத்த எழுத்து. ” வீ. ந. சோ. வின் எழுத்து அசைக்கிறது. உலுக்குகிறது.
ஒன்றாக்குகிறது. தொடர்ந்து வீ. ந. சோ. வின் கட்டுரைகளை வெளியிட்டு வரும் ‘இப்படிக்கு’ நன்றிக் கூற வேண்டும்.

வீ. ந. சோ. வித்தியாசமானவர். வியக்கச் செய்கிறார். வீ. ந. சோ. வாழும் வரை தமிழும் வாழும். தமிழினமும் வாழும். வாழ்க. 
 
வெளியீடு
 மித்ர ஆர்ட்ஸ் கிரியேவுன்ஸ் 32-9 ஆற்காடு சாலை சென்னை 600024. 
 
- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It