“மனிதர்கள் தாம் சிந்திப்பதை விட அதிக ஒழுக்கமானவர்களே.இதற்கு மேல் அவர்கள் நினைப்பதைவிட ஒழுக்கமற்றவர்கள்”.
 --ஃப்ராய்ட்

வசுமித்ர-ஆதிரன் இணைந்து எழுதியிருக்கும் ‘கள்ளக்காதல்’ மற்றும் வசுமித்ரவின், ‘....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’, ஆகிய இரண்டு நூல்கள் குறித்து, ஒரு வாசகியாகவும், அதைக்கடந்து ஆய்வு நோக்கிலும், சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன். இத்திறனாய்விற்குள் நுழையும் போது விரிவானதொரு ‘உளவியல் சிந்தனை’ யை அடிப்படையாகக் கொள்ள வேண்டியுள்ளது.காரணம், இவ்விரு தொகுப்புகளிலும்,என்னால் யூங்கியத்தையும் பார்க்கமுடிகிறது; லக்கானியத்தையும் காணமுடிகிறது.
 
இந்தக்கவிதைகளை வாசிக்கிற போது ஃப்ராய்ட் ,யூங்,லக்கான் ஆகியோர் ஒரு நிழலைப்போலத் தொடர்கிறார்களென்றே சொல்ல வேண்டும்.

 “1930இல் எழுதிய ‘உளவியலும் இலக்கியமும்’(psychology& literature) என்னும் கட்டுரையில், யூங், இலக்கியம் குறித்த தமது உளவியல் பார்வையை விவரிக்கும் போது, முதலில் படைப்பு குறித்தே பேசுகிறார். பிறகுதான் படைப்பாளியைப் பற்றி குறிப்பிடுகிறார். படைப்புதான் படைப்பாளியின் முதன்மையான அடையாளம் என்பது அவரின் நம்பிக்கை. 

    ‘கூட்டு மனிதனின் அனுபவ வெளிப்பாடுகளாக இலக்கியங்கள் விளங்குகின்றன’,என்பதே அவரின் முக்கியமான கோட்பாடாகும். எந்தப் படைப்பாளியும் தனியர் அல்ல என்பதே இதன் சாரமாகக் கொள்ளமுடியும்.ஒரு படைப்பாளியின், படைப்பில் பலரின் பங்கு மிகுதியாக இருக்கிறது.

       குறிப்பாகத் தொன்மம் என்பது முன்னோர்களின் பங்கு. இந்தக் கூட்டுப் பண்பு முக்காலத்திற்கும் உரியது. கால,இட,மொழி வேறுபாடுகளுக்கு ஏற்ப வடிவங்கள் வேறுபடினும், மூலம் ஒன்றாகவே இருக்கின்றன. அவையே மூலப்படிவங்கள்.     

 தொன்மங்களில் சூரியன், சூரிய பகவானாக இருப்பான். நவீன நாவல்களில் ஏதாவது ஒரு பாத்திரமாக இருப்பான். இதனைக் கண்டறிய யூங்கியம் வகை செய்கிறது”. (அறிமுகமும் நெறிமுகமும்)              

 ‘கள்ளக் காதல்’ தொகுப்பில் இருக்கின்ற, ‘என்றார் கடவுள்’ எனும் உரைநடைக் கவிதைகள் ( prosaic poems) இதற்குச் சான்றாக இருக்கின்றன. தொகுப்பு முழுமையையும் ஒரு ‘கூட்டு நனவிலி மனத்தின்’ பதிவு என்றும் வாசிக்கலாம். அதே சமயம் ‘தனியராய்’ இரு ‘ஒருமைகள்’இயங்குவதையும் பார்க்கலாம். இந்த முரணே இந்தக் கவிதைகளை நோக்கி என்னை ஈர்த்து, வசீகரிக்கிறது எனலாம்.
  
  ‘மயங்கிய பெண்ணின் யோனியைத்
  திறக்க சாவியொன்றைக் கடவுளிடம் யாசிக்கையில்
  பழிவாங்கும் புன்னகையைப் பரிசாய்த் தந்து
  சாவியை அன்னை வசம் ஒப்படைகிறாள்-  அமைதி’
மிகவும் அற்புதமான இவ்வரிகள் மீண்டும் ஃப்ராய்டிற்கு நம்மைத் திருப்புகின்றன. ‘ஃப்ராய்டிற்குத் திரும்பல்’ என்னும் லக்கானின் வாசகம் நினைவிற்கு வருகிறது.இது ஃப்ராய்டை உன்னிப்பாக படிப்பது மட்டுமல்ல, புதிய போக்கில் ஃப்ராய்டை கையாள வேண்டும் என்றும் நமக்கு உணர்த்துகிறது.

 “மனிதர்கள் தாம் சிந்திப்பதை விட அதிக ஒழுக்கமானவர்களே.இதற்கு மேல் அவர்கள் நினைப்பதைவிட ஒழுக்கமற்றவர்கள்”, என்னும் ஃப்ராய்டின் கூற்றை,

   ‘கற்பை உறுப்பில் வைத்துக்
   காவல் காக்கும் அத்தனைக்
   கண்களுக்கும் கள்ளக்காதல்
   ஓர் புன்னகையைத் தருகிறது’

என்கிற கவிதையும்,
  

 ‘தீராக் காமம் இல்லற சுகம்
   தீராத் தாபம் கள்ளக்காமம்
   ஜன்னலைத் திறக்கும் முன்னது
   கதவைத் திறக்கும் பின்னது
   புணர்வதில் சாவது
   புணர்ந்தே சாவது
   இரண்டிலொன்று இரண்டுமே ஒன்று
   வாழ்விற்கும் சாவிற்கும் இடையில்
   இருக்கும் பூனை கள்ளக்காதல்’

என்னும் கவிதையும் அடிக்கோடிடுகின்றன.
 
 “பொதுவாக படைப்பாளிகளை புதிர்களாகவே ஃப்ராய்டும், யூங்கும் காண்கின்றனர். காரணம், அவர்களின் படைப்பாக்கப் பணி இரகசியமாக நடக்கிறது என்கிறார் யூங்.

 ‘தனியாள் நிலையிலும், தனியாளற்ற நிலையிலும் இயங்கும் இருமைப்போக்கு படைப்பாளிக்கு   உண்டு என்பது அவரது கோட்பாடு.இரண்டாவதான ‘தனியாளற்ற நிலை’ படைப்பு படிமுறைக்கு உரியது. இதன்படி, தனியர் வாழ்வுக்கு அப்பாலான இன்னொரு வாழ்வின் அனுபவங்களாகப் படைப்புகள் விளங்குகின்றன. அந்த இன்னொரு வாழ்வுதான் படைப்பாளியின் நனவு அறியாத கூட்டு வாழ்வு. எனவே படைப்பாளி ஒரு கூட்டு மனிதன் ஆகிறான்.

 இக்கூட்டு வாழ்வு உள்ளத்தின் ஆழ்தளத்தில் இருப்பதால், அங்கு சென்று தங்க வேண்டி உள்முகமாகப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் படைப்பாளிக்கு உள்ளது. எனவே படைப்பாளிகளை அகமுகத்தவர் என்று யூங் சுட்டுகிறார். படைப்புத் தொழிலை செய்ய வேண்டுமென்றால், கொஞ்சம் தியானிக்க வேண்டியுள்ளது”. (அறிமுகமும் நெறிமுகமும்)

 வசுமித்ர-ஆதிரன், சமயங்களில் படைப்புத் தொழிலுக்கான பித்துநிலைகளிலும், பெரும்பாலும் உள்முகமான பயணத்திற்கான தியான நிலையிலும், இத்தொகுப்பில்(இது இக்காலத்தில் நீர்த்துப்போன சொல்லாடலான தியானத்தைக் குறிக்காது) இயங்கி இருக்கிறார்கள் என்பது என் கணிப்பு.

 யூங்கிய நோக்கில் புதுமைப்பித்தனின் ‘கபாடபுரத்தை’ ஆய்ந்திருக்கிற திரு.இரவிச்சந்திரன், “கபாடபுரம் கதை(கனவு) முழுவதும் அச்சம், பதற்றம், பீதி, வியப்பு ஆகிய குழந்தைத்தனமான உணர்வுகள் பரவலாக இடம் பெறுவதைக் காணலாம்”என்னும் மிகச்சரியான கணிப்பை முன் வைக்கிறார். 

 மேலும், “இந்தக் குழந்தைத்தனம் ஃப்ராய்ட் கூறுவது போல், தனியர் நிலையிலான சொந்தக் குழந்தைப் பருவத்தைக் குறிப்பதல்ல.மாறாக, யூங்கிய நோக்கில் ‘மனிதஇனத்தின்’ குழந்தைப் பருவத்தைக் குறிப்பிடும்.அதாவது,கூட்டு மனநிலையைக் குறிக்கும். எனவே இவற்றின் மூலம் கூட்டு நனவிலி என்றாகின்றன. இக்கனவுக் கதையில், அச்ச உணர்வுகள் பரவலாக இருப்பதால் கபாடபுரம் ஒரு பதற்றக்கனவு போன்று இருக்கிறது. யூங்கிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பெருங்கனவாக விளங்குகிறது” என்கிறார்.

 இந்தப் பதற்ற உணர்விற்கு ஃப்ராய்டும், யூங்கும் சிறப்பிடம் கொடுத்தவர்கள் என்பதையும் அவர் சுட்டுகிறார். இப்பதற்றத்தின் மூலமாக, அடிப்படையாக, ஃப்ராய்ட் முன்வைப்பது பாலுணர்ச்சியையே.

யூங்கிய நோக்கில், ‘கள்ளக்காதல்’ தொகுப்பும் மொத்த மனித இனத்தின் தீராக்காமத்தைக் குறிக்கிறது எனலாம்.

இத்தொகுப்பில் உள்ள முக்கியமான அம்சமாக, படிமங்களைக் குறிப்பிட வேண்டும். கன்னிகள், முயல்கள், யாளி, பிரம்மபுத்திர, பூனை –யாவும் அழகிய படிமங்களாக உருப்பெற்றுள்ளன.

  “யூங்கிய உளப்பகுப்பாய்வில்’ கன்னி,பெண் வடிவங்கள் எல்லாம் அனிமா படிமத்துடன் தொடர்புடையதாகும். அனிமா என்பது ஆண் அகநிலையின் பெண்ணுரு..  இது உள்ளுணர்ச்சியுடன் தொடர்புடைய மூலப்படிமமாகும்.குறிப்பாகப்பாலுமையின் பங்கு, இப்படிமத்தில் மிகுதி. அனைவரிடமும் இரட்டைப் பாலுமை ஒரு மூலப் படிமமாக உள்ளது என்பது யூங்கின் வாதமாகும்.
இந்த அனிமாவை வாழ்வின் மூலப் படிமம் என்பார் யூங்”. (அறிமுகமும் நெறிமுகமும்)

தொகுப்பின் மேற்சொன்ன அத்தனைப் படிமங்களும் இந்த ‘அனிமா’ படிமத்துடன் தொடர்புடையதாகும். மிகச்சரியான உதாரணமாக இக்கவிதையைக் குறிக்கலாம்.

  ‘முத்தமிடுகிறாள்
  சிறுமி யுதாஸின் கன்னத்தில்
  அவன் குமாரனாகாது தேவனாகிறான். ‘
  ‘நானொரு வெறிபிடித்த யானை
  பாவம் சிறுமி வெறும் அங்குசம்’

இனி லக்கானுக்கு வருவோம். புதிய ஃப்ராய்டியர் ஆன அவர், மரபுவழி உளப்பகுப்பாய்வினை மறு கட்டமைப்பு செய்தவர்.  தனியாள் வரிசையில் ஃப்ராய்டும், சசூரும், கோட்பாட்டு வரிசையில் உளப்பகுப்பாய்வும், மொழியியலும் (குறியியலும்) லக்கானின் அடித்தளங்களாகும்.

 “ ‘குறிகளால் ஆனதே மொழி’ என்பது சசூர் வாதம்.

 ‘சொற்களால் ஆனதே சமூக உறவுகள்’ என்பது லெவிஸ்ட்ராஸ் வாதம்.

இவ்விரண்டையும் கலந்து, ‘குறிகளால் ஆனதே அகநிலை’என்பதை நிறுவுகிறார் லக்கான். அவரைப் பொறுத்தவரை மனித வரலாறு ‘பேச்சில்’ இருந்து தான் தொடங்குகிறது. சமூக மனிதனை மொழி ஆளுவதனால், அகநிலையை மொழி கட்டமைக்கிறது. இந்த முடிவுக்கு லக்கான் வர லெவிஸ்ட்ராஸ் காரணமாகிறார்.ஆனால் லக்கானிய அகநிலைக்குச் சமூகத்தை விட, மொழியே பிரதானமாகிறது. மொழியின் வழியாகத்தான் சமூகத்தைப் புரிந்து கொள்ளமுடியும். மொழி என்பது சமூகச் செயற்பாடு. ஏனெனில், அது தனியர் நிலைக்கு அப்பாற்பட்டதாகவும், புறநிலையோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது.  

இதன்படி, தனியர் அகநிலை முழுமையானதன்று எனக்கூறும் லக்கான், மனித அகநிலையைப் ‘பிளவு பட்ட ஆளுமையாகக் காண்கிறார்”. (அறிமுகமும் நெறிமுகமும்)

இந்தப் பிளவுபட்ட ஆளுமையை முற்றிலும் கவித்துவமானதொரு வெளிப்பாடாய்க் கொண்டிருக்கிறார், வசுமித்ர. தனது, ‘...... ஆகவே என்னைக் கொல்வதற்குக் காரணங்கள் உள்ளன’, என்கிற கவிதைத் தொகுப்பில்,

 ஒரு கவிதை அதன் தலைக் கேசம்
 குத்திட்டுத் திறக்கும் வரை
 புணர வேண்டும்’

எனத்தொடங்கும் ‘கவிதை தன்னிடத்தை நிரப்புதல்’ என்னும் கவிதை இப்படி நிறைவுறுகிறது.
  
 ஒரு
 கவிதை
 புலனைப் பற்றும் விதம்
 பிரியமான பெண்ணின்
தனங்களைப் பற்றுவதைபோல் ,

சசூர் கூறுவதைப்போல், “:நமக்கு வெளியே மொழி இருக்கிறது”, என்றாலும் அம்மொழியே அகநிலையை வடிவமைக்கிறது என்கிறார், லக்கான்.

இத்தொகுப்பின் உண்மையின் ஜ்வாலை தகிக்கும் வரியொன்று அதன் என்னுரையில் இருக்கிறது.

‘வெட்கத்தை விட்டு இம்மண்ணில் நின்று கூவக்கூடிய ஒரு சொல் இருக்கிறதென்றால் அது அயோக்கியன் என்ற சொல் மட்டுமே. மேலும் அயோக்கியர்களின் கண்ணீர் அயோக்கியத்தனமானது’.

இதை யோக்கியமாக எழுதியிருக்கும் படைப்பாளியின் இந்தப் பிளவுபட்ட தன்மையான அகநிலை, அநேகமாக எல்லா கவிதைகளிலும் விரவியிருக்கின்றன.  “குறியமைப்பில், குறிப்பானும், குறிப்பீடும் சந்திக்கும் புள்ளியே பொருண்மையாகும். குறிப்பீடு மீது குறிப்பான் ஓடுவதால் பொருண்மைக்கு முடிவு இல்லாமல் போகிறது. அதாவது குறிப்பான் மாறுவதால், குறிப்பீடும் மாறுதலுக்கு உள்ளாகிறது. அதனால் தான் மொழியால் உண்மையைக் கூற முடியாது என்கிறார் லக்கான். மொழிக்கும் உண்மைக்கும் இடையே இடைவெளி இருப்பதை லக்கானியம் வலியுறுத்துகிறது”. (அறிமுகமும் நெறிமுகமும்)

இங்கே தான் மொழியின் உச்சபட்ச சவாலான கவிதையின் பங்கு எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. மொழிக்கும்,உண்மைக்குமான அந்த இடைவெளியை ஒரு ஞானச்சுடர் போன்ற உவமை, படிமம், சொல்லாடல் மூலம் கவிஞன் கடக்க முயற்சித்து பெரும்பாலான நேரங்களில் தோற்றாலும்,சமயங்களில் வெற்றி பெற்று விடுகிறான்.
 
 ‘உதடுகளை நீண்ட நாட்களுக்கு
 மௌனிக்க செய்யமுடியாது
 கசிந்து வருகிறது

 முதல் முத்தம்-முதல் துயரம்’
 ‘இவ்வெயிலானது
 தன்
 அறைகளை
 எவ்வளவு சாவகாசமாகத்
 திறந்து விட்டிருக்கிறதென்றாய் ‘
 ......... ....... ........ ........

 
 ‘ஒரே ஒரு
 பழஞ்சொல்லில்
 தெருக்கலெல்லாம்
 முடிந்து விட்டிருந்தது’

 ‘மொழிகளென வலிகள் அறியப்படுகையில்
எனதொரு அறையில்
 மௌனங்கொள்
 உறுமலோடு அதிர்கிறது’

இப்படி பல வரிகள் அந்த இடைவெளிகளை-மொழிக்கும் உண்மைக்குமான இடைவெளிகளைக் கவித்துவமாக வெல்கின்றன.

 ‘பெண்கள் சபிக்கப்பட்ட தேவதைகள்
 ஆண்கள் ஆசீர்வதிக்கப்பட்ட சாத்தான்கள்-அவ்வளவே’ என்று படைப்பாளி கூறினாலும், தொகுப்பை முடித்தவுடன், ஆண்கள் சபிக்கப்பட்ட தேவகுமாரர்களாகவும், பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்ட சாத்தான்களாகவும் எனக்குத் தோன்றினார்கள்.

 தொகுப்பு முழுவதிலும்- முத்தம், பல்லி, பொம்மை, நேயா(சிறுமி), கொலை, குதிரை முதலியன “நச்சென” நம்மை “ஏறிமிதிக்கின்றன”.

காமத்துப்பால் பகுதியில் வருகின்ற,

 ‘ஆகச்சிறந்த புணர்ச்சியை
 நிறைவேற்ற வேண்டுமாயின்
 காளியைத்தான் புணர வேண்டும்
 அவளுக்குத்தான்
 ஆயிரம் கைகள்’
என்ற வரிகளை ஓர் ஆண் அகநிலையாகவும்,

 ‘புணர மறுத்து
 இமை மயிர்கள் தரை புரள 
 தவஞ்செய்த 
 புத்தனின் கையில் வந்து வீழ்ந்தது
 முற்றி பழுத்த யோனிப்பழம்’

என்பதனை ஒரு பெண் அகநிலையாகவும்,

 ‘தானமிட்ட காமத்தில்
 வாங்கிய புளிப்பு
 வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு
பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு
சலித்த காமத்தில்
இறப்பின் ருசி’

எனும் கவிதையில் பொது அகநிலையையும் உணர்ந்து ருசித்தேன்.

“இடிபஸ் சிக்கலை, ஃப்ராய்ட்,லக்கான் இருவர் நிலையிலும் பார்க்கும் பொழுது, ஒன்றுக்கொன்று வேறானது. ஃப்ராய்ட், இடிபஸ் சிக்கலை, உடற்சார்/ புனைசார் இடிபஸ் சிக்கலாகப் பார்க்கிறார்.இதிலிருந்து, லக்கானின் இடிபஸ் சிக்கல்வேறுபட்டது. லக்கானியத்தில் இடிபஸ் சிக்கல் என்பது ‘மொழி நிகழ்வு’ மட்டுமே.மொழிதான் இடிபஸ் சிக்கலை வரைகிறது. இடிபஸ் புராணத்தில் இடிபஸ் மன்னன் தன் தாயை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கையில், உண்மையறிந்து தன் கண்களைக் குருடாக்கிச் சுய தண்டிப்பு செய்து கொண்டதற்குக் காரணம், ’தாய்’ என்கிற சொல்லேயன்றி எண்ணம் அல்ல என்று லக்கானிய மொழியில் கூற வாய்ப்பு உள்ளது”. (அறிமுகமும் நெறிமுகமும்)

 அந்தப் பின்புலத்தில், ’நாம்’ என்னும் வசுமித்ரவின் இந்தக்கவிதையை வாசிப்போம்.

 ‘பூனைகளை மயக்கிப் புணரும்
 வித்தைகள் இவ்விடம் கற்றுத்தரப்படும்
 விளம்பரங்கண்டு
 ஆவலோடு நெருங்கி அமரும் எலிகளோடு
 முதல் உரையைத் தொடர்கிறீர்கள்
 பெண்ணெலிகள்
 உங்கள்
 மனைவியைக் களவொழுக்கம்
 செய்யச் சமயம் பார்க்கையில்
 நஞ்சூறும் விழிகளால்
 பொறியொன்றைத் திறந்து காட்டுகிறீர்கள் 

 அழுத்தி பிடிக்கப்பட்ட
 யோனியின் சதை கண்டு
 எலிகள் நாவை உள்ளிழுத்துக் கொள்கின்றன
 சவுக்கின் சொடுக்கை
 முதன் முறையாக
 மனைவியின் மேனி முழுவதும் பிரதியெடுக்கையில்
 அதிகாரங்கொண்ட இரு
 பெண்களின் கையில்
 உங்கள் குறி
 பிடுங்கி எறியப்படுகிறது.
 ஒருத்தி உங்கள் தாய்’

இதில் தாய் என்பது வெறும் சொல்லா? அல்லது எண்ணமா? என்பது கவனத்திற்குரியது. மொழியென்றால் அது வெறும் சொல் மட்டுமே. கவிதையெனில் அது எண்ணம். இந்த சூட்சமத்தைக் கைவரப்பெற்றவனே உண்மையான கலைஞன், கவிஞன், கலாரசிகன். வசுமித்ர அப்படியொரு கவிஞர். அவர் படைப்புலகின் கவனத்தைப் பரவலாகப் பெறவேண்டும்.

அவராகவே வாழ முயற்சித்துள்ள சாட்சியாக இவ்விரு படைப்புகளும் இருக்கின்றன.
 
அவருக்கு என் வாழ்த்துகள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
உதவிய நூல்: “ஃப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும்”, ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

- தமிழச்சி தங்கபாண்டியன்

Pin It