நேரம்: 13 நிமிடங்கள் 

 

மூலக் கதை

மாபோசா

 

திரைக்கதை

மதியழகன் சுப்பையா 

 

                                                   காட்சி-1

பனிமூட்டமான இரவு. மன்னு வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது அறை அமைதியால் நிரம்பி இருக்கிறது. சில ஒலிகள் மட்டும் மிக கூர்மையாக கேட்கிறது. உதாரணமாக கடிகாரத்தின் சத்தம். குழாயிலிருந்து சொட்டும் நீர்த்துளி சத்தம். கூறைமின் விசிரி சுற்றும் சத்தம். அவனது அறையிலிருக்கும் ஒவ்வொரு பொருளும் சலனமின்றி இருக்கிறது. மன்னு படுக்கையின் ஒரு பக்கமாக படுத்திருக்கிறான். பளபளப்பான காகிதம் கொண்ட ஒரு பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்கிறான். ( Fashion magazine).படுக்கை அறையின் மத்தியில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அவன் பக்கங்களைப் புரட்டுகிறான். ஆனால் எந்தப் பக்கத்தையும் கவனித்ததாக இல்லை. கூறை மின்விசிரி மெதுவாக சுற்றிக் கொண்டிருக்கிறது.அவன் எழுந்திருக்கிறான். உட்காருகிறான். தலையைப் பிடித்துக் கொள்கிறான். தண்ணீர் குடிக்கிறான். கழிப்பறைக்குப் போகிறான்.( camera follows him from back ) கதவு மூடப் படுகிறது.( camera still on the  toilet door.)கழிப்பறையில் ஃபிளஸ் செய்யும் சத்தம். (Low angle shot. Camera receives & follows himKnee shot.) அவன் மேல்சட்டை அணிந்து கொள்கிறான். ஸ்வெட்டர் அணிகிறான். வெளியில் போகிறான். கதவை மூடி பூட்டுகிறான்.


                                                  Cut to....

காட்சி-2

மன்னு சாலையில் இறங்குகிறான். சாலை அவனது அறையைப் போலவே அமைதியாக இருக்கிறது. சில வாகனங்கள் அவ்வப்போது அமைதியைக் கிழித்துக் கொண்டு போகின்றன. மனித நடமாட்டம் கண்ணுக்கெட்டும் தூரம் வரை இல்லை. இரவு காட்சியைப் பார்த்தபடி மன்னு நடக்கிறான். அவனது கண்கள் எதையோ தேடிக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்த்த எதையோ கண்டபடி நிற்கிறான். ஒரு சேலை உடுத்திய பெண் நிற்கிறாள். அவள் அதிகபடியான மேக்கப் பூசியிருக்கிறாள். கையில் ஒரு சிறிய பர்ஸ் வைத்திருக்கிறாள். அவள் மன்னுவைப் பார்க்கிறாள். மன்னு கொஞ்சம் தயங்கி நிற்கிறான். அங்குமிங்கும் பார்க்கிறான். பின் அவளை நோக்கி நடக்கிறான். அவள் அவனைப் பார்த்து ஒரு நீண்ட புன்னகை செய்கிறாள். ( shoulder shot )
                                                                         

                                         Cut to....

 

காட்சி-3

அந்தப் பெண் ஒரு அடுக்குமாடியின் படிகளில் ஏறுகிறாள். மன்னு அந்தப் பெண்ணை பின் தொடர்கிறான்.( பின் பக்கக் காட்சி) அங்கு ஒழுங்கான வெளிச்சமில்லை. ஆங்காங்கே சில குண்டு மின் பல்புகள் எரிந்து கொண்டிருக்கிறது. மஞ்சள் நிற மங்கலான பல்பு வெளிச்சம் அவளைப் பின் தொடர்ந்து போக பெரிதாய் உதவுவதில்லை. அவன் அப்பெண்ணின் சேலையைத் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறான். அவள் நான்காவது தளத்தில் நின்று கொள்கிறாள். ஒரு குறிப்பிட்ட கதவை பிடித்து நிற்கிறாள். மெதுவாய் திரும்பி அவனிடம் கேட்கிறாள்.

அம்ரிதா

அப்படின்னா, நீங்க காலையில வரைக்கும் இருப்பீங்களா?

மன்னு

ஆமாம், அப்படித்தான் பேசியிருக்கோம்!?

அம்ரிதா

சரி, சரி! நான் சும்மாதான் கேட்டேன். ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, இதோ நான் வந்திட்டேன்.

மன்னு

சரி..

அவள் மன்னுவை கதவருகே விட்டுப் போகிறாள். வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. அவள் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. மன்னு கவனித்துக் கேட்கிறான். கதவுக்குப் பின்னால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்க காதுகளைக் கூர்மையாக்கி கவனிக்கிறான். ஆனால் அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. தீடீரென அப்பெண் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் வெளியே வருகிறாள். அவள் அவனைப் பார்த்து புன்னகைக்கிறாள். உள்ளே போகிறாள். மன்னு அவளைத் தொடர்கிறான்.

காட்சி-4

அம்ரிதா அவனுக்குப் படுக்கையைக் காட்டுகிறாள்.

 

 அம்ரிதா

சரி, நீங்க உட்காருங்க...

அம்ரிதா கவனமாக மெழுகுவர்த்தியை வைக்கிறாள். அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறாள். அவன் தனது ஸ்வெட்டரை கழற்றுகிறான். (Camera zooms on the candle opposite and fadeச் out. Fades in from the melted candle. அம்ரிதா தனது தலைமுடியை சரி செய்கிறாள். அவள் மற்றொரு மெழுகுவர்த்தியை கொழுத்துகிறாள். முன்னால் இருந்த மெழுகுவர்த்திக்கு அருகில் வைக்கிறாள். கால்களை விரித்தபடி மன்னு படுக்கையில் உட்கார்ந்திருக்கிறான். அவனது உடல் வியர்த்திருக்கிறது. கைக்குட்டையால் தனது வியர்வையைத் துடைத்தபடி அவன் பேசுகிறான்.

மன்னு

உன் பெயர் என்ன?

அம்ரிதா

அம்ரிதா!!என் தோழிங்க சில பேர் ‘அம்மி’ன்னு கூப்பிடுவாங்க சிலபேர் ‘ரிதா’ன்னு கூப்பிடுவாங்க. ஆனா யாருமே என்னை என் முழுப் பெயர ‘அம்ரிதா’ன்னு சொல்லிக் கூப்பிடுறதில்ல.

மன்னு

அம்ரிதாங்கறது உன் சொந்தப் பெயரா? தொழிலுக்காக வேற எதாவது பெயர் வச்சுக்கலியா?

அம்ரிதா

இல்லை. இங்க யாரும் பெயர் கேட்கவா வாராங்க. வர்ரவங்க அவங்களுக்குப் பிடிச்ச நடிகைங்க பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாங்க இல்ல அவங்க காதலி பெயரைச் சொல்லி கூப்பிடுவாங்க. நான் என் பெயரையே மறந்துக்கிட்டிருந்தேன். நீங்க ஞாபகப் படுத்திட்டீங்க. 

மன்னு

நீ, இங்க எவ்வளவு நாளா இருக்க?           

அம்ரிதா

ஆறு மாசமா...ஜனவரி 15க்கு இங்க வந்தேன்.

மன்னு

இதுக்கு முன்னாடி எங்க இருந்த?

அம்ரிதா

பாண்டுப்ல. வீட்டுக்கு சொந்தக்காரன் ரொம்ப தொல்லை பண்ணினான், அதான் இங்க வந்துட்டேன்.

மன்னு

எந்தமாதிரி தொந்தரவு பண்ணினான்?

அம்ரிதா அவனை ஆழமாகப் பார்க்கிறாள். பின் தொடர்கிறாள்.

அம்ரிதா

ஒரு பெண்ணுக்கு ஆண்பிள என்ன மாதிரியான தொந்தரவு கொடுக்க முடியும். .... என்னால சமாளிக்க முடியல.. கிளம்பிட்டேன்.

திடீரென, அறையின் இருட்டான பகுதியிலிருந்து ஒரு சத்தம் கேட்கிறது. யாரோ நாற்காளியிலிருந்து விழுவது போன்ற சத்தம். மன்னு மெதுவாக நிமிர்ந்து உட்கார்கிறான். அறையை கூர்ந்து ஒரு சுற்றுப் பார்க்கிறான். எதுவும் தென்படவில்லை. அம்ரிதா அவனது கவனத்தை திருப்புகிறாள். அவன் கேட்கிறான்.

மன்னு

இது என்ன சத்தம்?

  

அம்ரிதா

ஹோ, அது ஒன்னுமில்ல...ரொம்ப சின்ன வீடு. பிளைவுட் பார்டிஷன். அதனால பக்கத்து வீட்டில உள்ள சத்தம் எப்பவும் இங்க வந்துடும்... நீங்க ரெஸ்ட் எடுங்க..

மன்னு தனது சட்டையை மாட்டிக் கொண்டு மீண்டும் படுக்கையில் உட்கார்கிறான்.

மன்னு

நீ, அந்த ஆளுகிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்த, அங்கயே வசதியா இருந்திருக்கலாமில்லையா.

அம்ரிதா

ஆமா, ஆனா அவன் நல்ல மனுஷன் இல்ல.

மன்னு

நீ கூட நல்லவன், கெட்டவன் பார்ப்பியா?

அம்ரிதா

ஏன் பார்க்கக் கூடாது...? பசிக்குதுங்கிறதுக்காக எதையும் சாப்பிட முடியாது இல்லையா? சாப்பாட்டத்தான சாப்பிடனும்?

மன்னுவுக்கு முகம் மாறுகிறது. அவளது பதில் அவனை குத்துகிறது.

மன்னு

விபரமாத்தான் இருக்க... சரி...... உன்னுடைய முதல் ‘காதலன்’ யாரு? சொல்ல முடியுமா?

அம்ரிதா

ஒருத்தன் இருந்தான்...அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்... இப்ப எதுக்கு.

அம்ரிதா நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.

மன்னு

இங்க வர்ற யாரும் பேச மாட்டாங்கன்னு  தெரியும். எனக்கு பேசுறது பிடிக்கும். சொல்லு.... தயங்காம சொல்லு..

அம்ரிதா

ம்ம்ம்ம்ம்.... நான் அப்ப ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தேன்.. அவன் தினமும் என் பின்னாலயே வருவான்.

மன்னு

நான் அந்தமாதிரி ரோமியோக்களைப் பத்திக் கேட்கல..

அம்ரிதா

அப்படின்னா..., நீங்க யாரைப் பத்தி கேட்கிறீங்க.

அம்ரிதா அவனை அமைதியாகப் பார்க்கிறாள்.

மன்னு

நீ, முதல் முதலா யார் கூட இருந்த....? ஒரு பிரண்டுன்னு நினைச்சு எங்கிட்ட சொல்லு..

அம்ரிதா

என் புருஷன் கூட. ( சற்று நேரத்திற்கு அவள் அமைதியாக இருக்கிறாள். ஓரிடத்தில் நிலைகுத்திப் பார்த்தபடி தொடர்கிறாள்) அவரு ரொம்ப நல்லவரு.

மன்னு

இப்ப உன் புருஷன் எங்கிருக்காரு? உன்ன விட்டுட்டு ஓடிட்டானா? இல்ல விவாகரத்து ஆயிட்டா?

அம்ரிதா

அவரு போய்ட்டாரு... சொல்ல முடியாத திசையில.. திரும்ப முடியாது தூரத்துக்குப் போய்ட்டாரு.

மன்னு

ஓ... அப்படியா! சரி.... கல்யாணத்துக்கு முன்ன எதாவது அனுபவம் இல்லையா?

அம்ரிதா

என்னமாதிரியான அனுபவம்?

மன்னு

நீங்களெல்லாம் ரொம்ம விபரமானவங்க. நீ பொய் சொல்றன்னு நல்ல தெரியுது. பயப்படாத. சொல்லு.

அம்ரிதா

நான் ஒன்னும் பொய் சொல்லல. என்னை நம்புங்க.

மன்னு

நல்ல பொய் சொல்ற. உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. உன் மனசுல இருக்கிறத சொல்லிடு. ம்ம்ம்ம் சொல்லு.

அம்ரிதா

இல்லைங்க... அப்படியெதுவும் இல்ல. அப்படியிருந்தா கண்டிப்பா சொல்லுவேன்.

மன்னு

உனக்குத் தெரியுமா, நான் ஒரு சைக்யாரிஸ்ட்.

அம்ரிதா

அப்படின்னா என்ன?

மன்னு

அப்படின்னா... மந்திரவாதி. நான் உன்ன ஹிப்னாடிஸ் அதாவது வசியம் பண்ணி தூங்க வச்சிடுவேன் அப்புறம் நீயே உன் கதைய சொல்றபடி செஞ்சிடுவேன்.

அம்ரிதா கொஞ்சம் பயந்து விடுகிறாள்.

அம்ரிதா

என் தூரத்து சொந்தக்கார அக்காவுக்கு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அப்ப நான் ரொம்ப சின்னவளா இருந்தேன். எனக்கு ஒரு மாமா இருந்தாரு. அவரு ரொம்ப சிரிச்சி பேசினாரு. மிட்டாய் வாங்கிக் கொடுத்தாரு. ராத்திரி எல்லாரும் மண்டபத்திலேயே தூங்கிட்டாங்க. எதோ வேலையின்னு கூப்பிட்டாரு.. நான் சுதாரிக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு.

மன்னு

இவ்வளவுதானா? அதுக்கப்புறம் யாரோட?

திடீரென ஒரு பெரிய சத்தம் அறையின் அடுத்தப் பக்கத்திலிருந்து வந்ததது. யாரோ கீழே விழுவது போலவும் சுவர்களில் கைகளை தடவிக் கொண்டிருப்பது போலவும் சத்தம் கேட்டது.

காட்சி-5

மன்னு மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டு பயத்துடனும் ஆர்வத்துடனும் தேடுகிறான். அம்ரிதாவின் குரல் யாரையோ ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.

அம்ரிதா

ஒன்னுமில்லடா கண்ணா, அம்மா சொல்றேன்ல, ஒன்னுமில்லடா. ஒன்னுமில்லடா என் செல்லம்!

மன்னு மெதுவாக நடந்து படுக்கையருகே வருகிறான். ஒரு திரையை விலக்குகிறான். அம்ரிதா ஒரு சிறுவனை அனைத்தபடி அமர்ந்திருக்கிறாள். அந்தச் சிறுவன் நடுங்கியபடி மன்னுவைப் பார்க்கிறான். அவனுக்கு அருகில் துணிகள் பரப்பப் பட்ட ஒரு நாற்காலி இருக்கிறது. சிறுவன் அம்ரிதாவை இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறான். அழத் துவங்குகிறான்.

பையன்

அம்மா, என் மேல தப்பு இல்ல. நான் ஒன்னும் பண்ணலம்மா... நான் தூங்கிட்டேன்ம்மா... என்ன திட்டாதம்மா... நான் வேணுமுன்னு பண்ணல.. என்ன மன்னிச்சிடும்மா... அம்மா.... அம்மா...

அம்ரிதா சிறுவனின் தலையில் தடவியபடி அனைத்துக் கொள்கிறாள். மெதுவாக நிமிரிந்து மன்னுவைப் பார்க்கிறாள்.

மன்னு

இந்த பையன் எங்க இருந்தான்? யாருடைய பிள்ளை? எதுக்கு அழுதுக்கிட்டிருக்கான்?

அம்ரிதா

என் மகன் தான். என்னோட யாரும் இல்லனா இந்தப் படுகையிலேயே படுத்துக்குவான். யாராவது ஒன்னுரெண்டு மணி நேரத்துக்கு வந்தாங்கன்னா இவன் இந்த நாற்காலியில உட்கார்ந்துதான் தூங்குவான். இன்னைக்கு நீங்க இரவு முழுசும் இருக்கரதால அவனால ரொம்ப நேரம் உட்கார்ந்துக்கிட்டே தூங்க முடியல. புள்ளைக்கு கை கால்யெல்லாம் மரத்துப் போச்சு.தூக்கத்துலேயே விழுந்துட்டான்.

அம்ரிதா அழுகிறாள், பையனும் அழுகிறான். மன்னு இருவரையும் பார்த்தபடி அமைதியாக இருக்கிறான்.

மன்னு

அவனை இந்த படுக்கையில படுக்க போடுமா.

அம்ரிதா

இல்ல, வேண்டாம். அவன் இங்கயே சமாளிச்சிக்கிடுவான். நீங்க உட்காருங்க, நான் ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்.

மன்னு

இல்ல, அவனை இங்க கொண்டு வாங்க. அவன் இங்க தூங்கட்டும்.

சிறுவனை படுக்கையில் படுக்க வைக்கிறாள் அம்ரிதா. அவன் சவுகரியமாகப் படுத்துக் கொள்கிறான். பையனின் கழுத்து வரைக்கும் அம்ரிதா போர்வையால் மூடி விடுகிறாள். மன்னு படுக்கையில் ஒரு மூலையில் உட்கார்கிறான். 

மன்னு

ஸ்கூல் போறானா?

அம்ரிதா

ஆமாம்... ஐந்தாவதுல படிக்கிறான்.

மன்னு

அப்படியா... நீயும் படுத்துக்க?

அம்ரிதா

ஆனா....

மன்னு

நான் வீட்டுக்குப் போய் படுத்துக்குவேன்.ம்ம்ம்ம்... என்ன மன்னிச்சிடு.

அம்ரிதா

அய்யோ... அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.

மன்னு தனது பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறான். அதில் பேசியதை விட அதிகமாய் பணமிருப்பதைக் கண்டு பார்வையால் கேள்வி கேட்கிறாள். மன்னு புன்னகைக்கிறான் கிளம்புகிறான்.

அம்ரிதா

(புன்னகையுடன்)டீ குடிக்கிறீங்களா?

மன்னு புன்னகைத்தபடி சரி என்ற பாவனையில் தலையை அசைக்கிறான். படுக்கையில் அமர்ந்தபடி பையன் அயர்ந்து தூங்குவதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். காட்சி பையன் மேல் உறைகிறது.


                                      Fade out....

Pin It