"பதட்டமில்லாமெ சந்திக்கறதுங்கறது ரொம்பவும் அபூர்வமா போச்சு. ஆறு மாசமாத்தா நாம சந்திக்கிறப்போ பதட்டமில்லாம இருக்கப் பழகியிருக்கோம். இப்போ மறுபடியும் பதட்டத்துக்கிடையில சந்திக்க வேண்டியிருக்கு"
மோகன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்த கோமதி புன்னகைத்தாள். அவளின் முகம் பகல் வேளையில் தூங்கி எழுந்தவள் போல் உப்பலாக இருந்தது. அன்றைய இரவுத் தூக்கம் சற்றே தாமதமானது தான். எழுந்திருக்கும் போதே சற்று தாமதமாகி விட்டது. மோகன் வரக்கூடும் என்ற அவசரத்தில் குளித்துவிட்டு உட்கார்ந்திருந்தாள்.
"முந்தியெல்லா மீட் பண்றப்போ எவ்வளவு பதட்டமா இருக்கும். ஒருத்தர் பதட்டம் இன்னொருத்தருக்கு சேந்துட்ட மாதிரி இருக்கும். அதுவும் எந்தத் தொந்தரவும் இல்லாத பப்ளிக் கார்டனா இந்தாக் கூட என்னமோ டென்சன் வந்துரும். பிர்லா மந்திர்ன்னா கேட்கவே வேண்டும். பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில அடபட்டு மூச்சுத் திணறுற மாதிரி இருக்கும். டேங்ட் பண்ட் பரவாயில்லெ. ஆனா டேங்ட் பண்ட்ல அடபடற கழிவு காரணமா மூக்கைத் தொளைக்கிற காத்துதா இச்சைப்படுத்தும்"
கோமதி அவனின் சட்டை நிறம் பிடித்திருப்பதாய் சொன்னாள். மஞ்சளின் மீது அவனுக்கு அதிகமான ஈடுபாடு என்பது போல் மஞ்சள் தோய்ந்த சட்டைகளைத் தான் அதிகம் பயன்படுத்துவான். மஞ்சள் மீது சிவப்பு பொட்டுகள் இறைந்து கிடந்தன.
"சாயங்காலத்தில மீட் பண்ணலாமுன்னு நீங்க சொன்னா போதும் எனக்கு டென்சனாயிரும். காலையிலிருந்து போட்ட சட்டை வேர்வை நாத்தத்தில் கவிச்சி வாசம் மாதிரி வீசும். வேற சட்டை ஆபீசில எங்க இருக்கப் போகுது. இருக்கறதை போட்டிட்டு வரணும். நீங்க இருக்கற வேலையில ஜம்முன்னுதா இருப்பீங்க."
"எனக்கும் வேர்வை நாத்தம்ன்னு இருக்கும். ஆனா சகிச்சுகிட்டு இருப்பேன். அதையெல்லா மீறி சந்திக்கிக்கறதுங்கறது பெரிய விஷயம் இல்லையா இருக்கவே இருக்கு ஹைதராபாத் சென்ட். எதையாவது போட்டுக்கலா. எங்க ஆபீஸ்ல நயா முனிசான்று ஒரு பொண்ணு ஓல்டு சிட்டியில இருக்கறா. அவ ஆபீஸ் ட்ராயர்லியே சென்ட் பாட்டல் வெச்சுக்கவா. அதில கொஞ்சம் வாங்கி தெளிச்சுக்கவேன்"
"எங்க ஆப்பீஸ்ல இருக்கற முஸ்லீம் ஸ்டாப் கூட ஆபீஸ்ல சென்ட் போட்டுக்கு வாங்க. கண்ல என்னமோ கருப்பா மை போட்டுக்குவாங்க. ஆமா உங்க ஆபீஸ் எப்பிடியிருக்கு"
"யாருக்குத் தெரியும். கர்ப்பியூவெல்லா முடிஞ்ச பொறகுதா கவனிக்கணும். கர்ப்பியூவில ஆபீஸ் போற தைரியம் எதுவுமில்லை. உங்களக்கு ரொம்பதா தைரியம். எங்க வீட்டுக்கே என்னைப் பாக்க வந்திட்டீங்க."
"ஆமா... ஒரு வாரம் ஆச்சில்லெ... தாங்க முடியலே. பாக்காமெ இருக்க முடியலே. இன்னிக்கு கர்ப்பியூ ரிலேக்சேசன் ரெண்டு மணி நேரம். ஆட்டோ புடுச்சுட்ட ஒடியாந்துட்டேன். அதில நாப்பது நிமிஷம் போயாச்சு. இனி மேல ஆபீஸ் வேற போகணும்."
"இந்தக் கர்ப்பியூவில் ஆபீஸ் போகணுமா."
"வா... வான்னு பாஸ் சத்தம் போடறார். நேத்து காலையில ரெண்டு மணி நேரம் ரிலேக்சேசன் இருந்ததுதில்லையா. பதினோரு மணிக்கு ஆபீஸ் போறேன். அடுச்சு புடுச்சு ஒரு பஸ்ஸை புடுச்சேன். அது செகந்திராபாத்ல இருந்து அபிட்ஸ் போறதுக்கு ஒன்றரை மணி நேரம் ஆயிருச்சு. ரொம்ப கூட்டம். கர்ப்பியூ டைம் முடியறதுக்குள்ள எல்லாரும் எங்கையோ போயி அடஞ்சிர்லாமுன்னு ஓடறமாதிரி அவ்வளவு கூட்டம். பதினோரு மணிக்கு ஆபீஸ் போனா பாஸ் என்ன லேட்டுன்னார். சிரிச்சுட்டேன். இது வேறொரு நாளா இருந்து நான் சிரிச்சிருந்தா என்ன நடந்திருக்கும். இந்த கர்ப்பியூ நேரத்திலயும் லேட்டுன்னு கேட்கறாரேன்னு சிரிப்பு வந்துச்சு. உங்க வீட்டுக்கு வந்து உங்களப் பாக்கறது தயக்கமாத்தா இருந்துச்சு. உங்க வீட்லயும் போன் இல்லே. வேற என்ன பண்றது. எங்க வீட்ல இருக்கற போன்ல பொம்பளெ குரல் கேட்டா பதட்டமாயிருவாரு எங்கண்ணன். என்னமோ ஏதோன்னு அதிர்ந்திருவாரு."
நகரம் ஒரு வாரமாய் பதட்டமாயிருந்தது. டிசம்பர் வந்தாலே பதட்டம் வந்து விடும் நகருக்கு. கலவரம், கத்திக்குத்து என்று செய்தி இருந்து கொண்டேயிருக்கும். கர்ப்பியூ வந்துவிடும்.. கலவரம் வந்து விடும்.அதெல்லாம் எப்போது முடியும் . எப்போது சாதாரண நிலை வரும் என்று ஏங்கித் தவிப்பார்கள் இரட்டை நகர மக்கள். மக்களில் அவனும் அவளும் சேர்த்தி..
"ரம்ஜான், மொஹரம், விநாயகர் சதுர்த்தின்னு எது வந்தாலும் இப்பிடி சிட்டி களோபரம் ஆயிருது. களேபரம் பண்ணிர்ராங்க. வழக்கமா செக்கந்திராபாத் ஷேப்பா இருக்குமுன்னு நம்பிக்கை. அதுவும் இந்த தரம் தகர்ந்து போச்சு. போரண்ட் கிரௌண்ட் பக்கம் எங்கியோ ஒரு குண்டு வெடிச்சுது. பில்லியன் ரைடர் ஒருத்தரை மொலாளியில கழுத்தறுத்துட்டாங்கன்னு செய்தி. ரெண்டு நாளாத்தா கர்ப்பியூ காலையில ரெண்டு மணி நேரமும், சாயங்காலம் ஒரு மணி நேரமுமா ரிலேக்சேசன் இருக்கு."
"ஏதோ ஒரு வகை பிசாசு இந்த சிட்டியைப் புடுச்சு ஆட்டுது. இனி இந்தப் பிசாசு எல்லா ஊருக்கும் போகும். எல்லார்த்துக்கும் பிரச்சினையா இருக்கும் ."
"உங்க பில்டர் காபிக்கு தேங்க்ஸ், கெளபறேன்"
"எங்கப்பா இப்பதா வெளிய போனார். அது கூட சௌகரியமா இருந்துச்சு. செரி எப்போ பாக்கலாம்."
"யாருக்குத் தெரியும். கர்ப்பியூ போகணும். சிட்டி நார்மல் ஆகணும் அப்பதா சந்திக்க முடியும். ஆபீஸ் போகணும். அது வேறெ..." ..கோமதியின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரைப் பார்த்தான். வெவ்வேறு வயதுப் பெண்களின் மங்கலான கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களாய் அந்த காலண்டரின் தேதியைத் தவிர்த்த இடங்களால் நிறைந்திருந்தது. தெலுங்கு எழுத்து பூச்சி பூச்சியாய் நெளிந்து கொண்டிருந்தது.
"அவங்கெல்லா யாரு... பூச்சி பூச்சியான எழுத்துக்களுக்கு மத்தியில பெண்கள் முகங்கள்"
"எல்லாமே தெலுங்கானாப் போராட்டத்தில இருந்த பெண்கள்"
மோகனுக்கு சிரிப்பு வந்தது. மனோகர் தியேட்டரைக் கடந்து கோமதி வீட்டைத் தேடி ரெஜிமெண்டல் பஜார் நுழைந்த போது வீதி முக்கில் இருந்தவன் கையில் ஒரு ஆல்பம் இருந்தது. குறுந்தாடியும், தொப்பியும் போட்ட ஒருவன் கையில் ஆல்பம் விரிந்திருந்தது. பல பெண்களின் புகைப்படங்கள் அதிலிருந்தன. அதென்ன திருமணமாகாத பெண்களின் புகைப்படங்களா? திரைப்படத்திற்கு வாய்ப்பு தேடும் பெண்களின் முகங்களா? ஆல்பத்தை அவன் கையில் வைத்துக் கொண்டு விரித்துக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தந்தது.
கோமதி தன்னருகில் கிடந்த வாரப்பத்திரிகைகளில் சிலவற்றை எடுத்து அவனிடம் தந்தாள். "பழைய வாரப் பத்திரிகைகளை ஒரு வரி படிச்சர்ரன். அதுதா பொழுது போகுது."
"டி.வி. ஒண்ணு வாங்கிர்ரது."
"வாங்கணும். கலர்ல, பெருசா ஒண்ணு வாங்கிர்லாமுன்னு எண்ணம். தள்ளிட்டே போகுது." பக்கத்து வீட்டிலிருந்து கூச்சலாய் சப்தம் கிளம்பி அடங்கியது. சட்டென பயம் அடைந்தவன் போல அவளைப் பார்த்தான்.
"வேற ஒண்ணுமில்ல. சந்தோசக் கூச்சல் வாடகைக்கு டெக் எடத்துட்டு வந்து டி.வி.யில தமிழ்ப்படம் போட்டு பாக்கறாங்க. வீடியோ கடையில டெக் வாடகைக்குக் கெடைக்க மாட்டீங்குது. நானும் அப்பப்போ அங்க போயி உக்காந்துக்குவன். ஏதாச்சும் தமிழ்ப்படம் இருக்கும். பாதி பாதியா அறுந்து ஓடும். சர்ர்ன்னு புள்ளி புள்ளியா டி.வி.யில வரும். சகிச்சுட்டு பாத்திட்டிருப்பம். கர்ப்பியூ வேற. பொழுது போகணும்ன்னியா. வெளிய எங்கயும் போக முடியாது. மோண்டா மார்க்கெட்டுக்கு கூட காய்கறி வாங்க அவசர அவசரமா போயிட்டு வர வேண்டியிருக்கு. கர்ப்பியூ ரிலேக்சேசன் டைம்ல எத்தனை வேலை பாக்கறது."
"செரி டெக் போட்ட என்ன படம் நேத்து பாத்தீங்க."
"கமலஹாசன் மதன காமராசன். மோசமான பிரிண்ட்."
"எப்பிடியோ பொழுது போனா சரி. ரோட்ல நடமாட முடியலே.
ஏதோவொரு மூலையில கத்திக்குத்து, களேபரம்ன்னு இருந்துட்டே இருக்கு. உயிரைக் கையில புடுச்சுட்டு சில பேர் நடமாடறாங்க. இங்க. டி.வி.யில உங்க பொழுது போடுது"
"வேற என்ன பண்றது. சீக்கிரம் நெலமை செரியாயிரும்."
செகண்ட் பஜார் வீதி முக்கைக் கடக்கும் போது கோமதி முகம் தென்பட்டது. கையசைத்து விடை சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். ஆனால் வீதியில் நின்று கொண்டு ஓர் ஆணுக்கு கையசைத்து விடை கொடுப்பது சாதாரண காரியம் இல்லை என்றும் பட்டது.
மோண்டா மார்க்கெட் வீதி நெரிசலாக இருந்தது. பெண்களின் புகைப்பட ஆல்பத்தை வைத்திருந்தவன் கண்ணில்பட்டான். ஆல்பத்தை விரித்து வைத்திருந்தான். பெரும்பாலும் கறுப்பு வெள்ளைப்படங்கள். அபூர்வமாகத் தென்பட்ட சில வர்ணப் படங்களும் வெளிறியிருந்தன. அவன் பக்கத்தில் நின்றிருந்தவனின் தோற்றம் மிகவும் வயதானவனாகக் காட்டிக் கொண்டிருந்த. அவனின் கையில் சில வெள்ளை மாத்திரைகளைக் கொண்ட சிறு சிறு புட்டிகள் இருந்தன. மோகன் அவனருகில் சென்று நின்று ஆல்பத்தைப் பார்த்தான்.
"இந்த ஆல்பத்தில இருக்கற பொம்பளைகெல்லா எவ்வளவு அழகா இருக்காங்க. ஆனா இவங்ககிட்டப் போனா வர்ர வியாதிக்குதா இந்த வெள்ளை மருந்து. பத்து ரூபாதா. எல்லாம் செரியாயிரும்." தெலுங்கிலும், உருதுவிலும் மாறி மாறி சொன்னாள். திகிலடைந்தவன் மோகன் விரைசலாய் நடக்க ஆரம்பித்தான். நெரிசலில் வேகமாய் நடப்பது சிரமமாக இருந்தது. அவன் குரல் உருதுவில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.
மோண்டா மார்க்கெட் மேனன் கடைக்கு முன் பெருத்த கூட்டம் இருந்தது. மேனன் கடையில் திரைப்பட கேசட்டுகள், விசிடி படங்கள் வாடகைக்கு கிடைக்கும். முந்நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தால் ஒரு விசிடி. வாடகை நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய். இப்போது அட்வான்ஸ்சும், வாடகையும் அதிகமாகியிருக்கும். இருப்பவர்கள் ஆளுக்கொரு விசிடி படம் பெற்றால், கர்ப்பியூ தளர்வு நேரம் முடிந்துவிடும். அவ்வளவு நெரிசல் வரிசை கர்ப்பியூ என்று வந்தால் வீதி வெளிச்சோடி விடும். மாலையில் ஐந்து மணி முதல் ஒரு மணிநேரம் மறுபடியும் விலக்கு. கர்ப்பியூ பயத்தைப் போக்க அருமருந்து விநியோகித்துக் கொண்டிருப்பதாக மோகன் நினைத்தான். மெல்லியதாகப் புன்னகைத்துக் கொண்டான்.
சார்மினார் செல்லும் பேருந்து பெருத்தக் கூட்டத்துடன் நிதானமாய் வந்து கொண்டிருந்தது. உள் இருக்கைகளில் ஆண்களே இருந்தனர். ஒரு பெண் கூட இல்லை.
பெண்கள் எல்லோரும் வீட்டில் டி.வி. டெக்கின் முன் அடைக்கலமாகியிருப்பதாக நினைத்தான். கோமதியும் கூடத்தான் அப்படித்தான் என்று சொல்லிக் கொண்டான்
- சுப்ரபாரதிமணியன்