இரு கைகளாலும் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, தன் இடது தோள்பட்டையிலேயே தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் ராதா. சாய்ந்துகொள்ள ஒரு ஆதரவான மடி கிடைக்காமல் தன் மடியிலேயே தான் சாய்ந்துகொண்டது போலத் தோன்றியது அவளுக்கு. பின்னியிருந்த கருங்கூந்தல் கருநாகம் போல நீண்டு நெளிந்து காற்றுக்கு அசைந்தாடியது.
எவ்வளவு யோசித்தாலும் விடை கிடைக்கவேயில்லை அவளுக்கு. என்னதான் சமாதானம் சொல்லிப் பார்த்தாலும் அரவிந்தன் மீது கோபம் கொள்வதைத் தடுக்க முடியவில்லை.
பெண் என்னும் ஜென்மம் எடுத்தது துயரத்தைச் சுமப்பதற்குத்தானோ என்றுகூட ஒரு கணம் தோன்றியது.
இந்தப் புவியில் தோன்றிய அத்தனை கோடிப் பெண்களுக்கும் வாழ்க்கை ஒரு நாளில் முள்ளாய் மாறித்தான் போகுமா? என்று நினைத்தாள்.
அகிலத்தைக் காக்கும் பெண்கடவுள்களிலிருந்து, இப்புவியினில் வசிக்கும் சாதாரணப் பெண்கள் வரை இந்தத் துயர்மிகும் தருணத்தைக் கடந்து வராதோர் யாருண்டு என்று தன்னையே அவள் கேட்டுக் கொண்டாள். பதில் கிடைக்கவில்லை.
அசோகவனத்தில் சீதை, முனி பத்தினி அகலிகை, அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி, சிலப்பதிகார மாதவி, கண்ணகி மற்றும் இன்றும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு அலுவலகம் சென்று திரும்பும் பெண்கள், வீட்டைத் தன் தோளில் சுமக்கும் எண்ணற்ற இல்லத்தரசிகள் என்று யாருமே இந்தத் துயர முள்ளிடமிருந்து தப்பியவர்கள் இல்லையென்று தோன்றியது.
"ஓராயிரம் கோடி இடர்க்கு உடையேன்
தீராய் ஒரு நாள் வலி - சேவகனே
நாராயணனே தனி நாயகனே!
என்று உயிர் விம்மி விம்மி அழிவாள்
ஒன்று என் உயிர் உண்டு எனின்
உண்டு இடர் யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா"
உலகத்தைக் காக்கும் லோகநாயகியே அசோகவனத்தில் இப்படிப் புலம்பிக்கொண்டுதானே இருந்திருக்கிறாள் என்று கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை வகுப்பெடுத்தது அவளது மனதுக்குள் ஊசியைப் போல வந்து போனது.
உண்மையில் இது அசோகவனமல்ல, துயரவனம். ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்தத் துயரவனத்தில் அமர்ந்து, துயருற்று அரற்றிக் கொண்டுதான் இருக்கிறாள் என்று ராதா நினைத்துக் கொண்டாள்.
பெண்ணாக பூமி தன்னில் பிறந்துவிட்டால்... அடக் கடவுளே! ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது? இன்றுதான் எனக்கு அந்தத் துயரத்தின் நாளா? என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
திருமணமாகி இந்த இரண்டு மாதங்களில், தன் கல்லூரித் தோழி ஸ்வேதாவிடமிருந்து வந்த வாழ்த்துச் செய்திதான் இத்தனைக்கும் காரணமென்று தோன்றியது. அவள் முதுகலைத் தமிழ் இலக்கியம் இவளுடன் படித்தவள்; மிகவும் நெருக்கமான தோழி. விடுதி அறையில் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்துகொண்டவர்கள். திருமணமாகி இப்போது வெளிநாட்டில் வசிக்கிறாள்.
அவள் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, "என்ன ராதா, உன் மாதவன் நலம்தானே? நீ என்றும் அவனை மறந்துவிடவில்லையே?" என்று முடித்திருந்தாள்.
அந்தச் செய்தியைப் பார்த்ததிலிருந்துதான் அரவிந்தனுக்குச் சந்தேகம் முளைத்துவிட்டது. அவள் பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் காலத்திலிருந்தே, நம்மாழ்வாரின் பாசுரங்களின் மீது பித்துக்கொண்டு லயித்து வந்தாள்.
அதனால் தோழிகளெல்லாம் கேலியாக அவளை, "அந்த மாதவனே உனக்கு மணவாளனாக வருவானாக!" என்று ஆசீர்வதிப்பார்கள். அதிலிருந்து அவள் பெயருக்குப் பின்னால் எப்போதும் 'மாதவன்' என்ற பெயரைச் சேர்த்துதான் அவளது தோழிகள் அவளை அழைப்பார்கள். இதையெல்லாம் அரவிந்தனிடம் எடுத்துச் சொன்னாள். அவன் சந்தேகம் சற்றும் குறையவில்லை என்று தெரிந்தது. எப்படி நம்பவைப்பது என்று யோசித்தாள்; இவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று புரியவில்லை.
"மாதவன் என்றதே கொண்டு
என்னை இனி இப்பால் பட்டது
யாதும் உங்களோடு தொடர்பில்லை
என்று என்னுள் புகுந்திருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம்
செந்தாமரைக் கண் குன்றம்
கோதவம் இல் என் கன்னல் கட்டி
எம்மான் என் கோவிந்தனே"
என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை நெக்குருகப் பாடிக் காட்டினாள். அவன் அரைகுறை மனதோடு எழுந்து சென்றான். அதிலிருந்து கேள்விகளும் வேறு வடிவம் எடுத்திருந்தன...
அடுத்த நாளே பத்திரிகை அலுவலகத்திலிருந்து அவளது கைபேசிக்கு அழைப்பு வந்தது. அரவிந்தன்தான் எடுத்துப் பேசினான்.
"சார், நான் மாதவன். 'இலக்கிய உலகம்' பத்திரிகையின் ஆசிரியர் பேசுறேன். மிஸ் ராதாகூட நான் கொஞ்சம் பேச முடியுமா?" என்று கேட்டான்.
அரவிந்தன் கைபேசியை வெறுப்பாக அவளிடம் தந்தான். அவள் அதை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே பத்து நிமிடங்களுக்கும் மேல் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டே இருந்தாள். அதை அவன் ஹாலிலிருந்து பார்த்துக்கொண்டே நின்றான். அவள் பேசி முடித்துவிட்டு அவனிடம் வந்து,
"ஏங்க, என்னோட 'இலக்கிய உலகம்' என்ற பத்திரிகையில எனக்கு உதவி ஆசிரியர் வேலை உறுதியாயிருக்காம். உடனே கிளம்பி வரனுமாம். அதான் பேசுனாங்க. நான் ஏற்கனவே அந்தப் பத்திரிகைக்கு விண்ணப்பம் போட்டிருக்கேன்னு உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல... நீங்க ஆபீஸ் போற வழியில என்னை அங்க டிராப் பண்றீங்களா?" என்று குழந்தையைப் போலக் கேட்டாள்.
அவன், "யார், அந்த மாதவனா உனக்கு வேலை வாங்கித் தந்தான்?" என்று குத்தலாகக் கேட்டான்.
அவள் அமைதியானாள்.
"பிறகு, யாரும் எதுவும் என்கிட்ட மறைக்க முடியாது. நீ இந்த வேலையில சேரப் போறதில்லை," என்றான்.
"ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உங்ககிட்ட இதப்பத்தி பேசி, நீங்களும் சரின்னு சொன்னீங்களே!" என்றாள்.
"கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதவன் விஷயம் எனக்குத் தெரியாதுல்ல? அதனால நான் உன்னை முழுசா நம்பினேன்," என்றான்.
"ஏங்க, மாதவன்ற பேர்ல ஒரு உதவிப் பத்திரிகை ஆசிரியர் பேசுனது ஒரு கோ-இன்சிடென்ட் (Coincidence) தான். அவர் கருப்பா சிவப்பாணுகூட எனக்குத் தெரியாது. தவிர, கடவுளைப் போய் யாராவது சந்தேகப்படுவாங்களா?" என்றாள்.
"நான் ஆபீஸ் முடிந்து ஈவினிங் வரும்போது நீ வீட்ல இருக்கனும். இல்லேன்னா இந்த வீட்ல எப்பவுமே உனக்கு இடமில்லை," என்று உத்தரவிட்டுவிட்டு அவன் அலுவலகம் கிளம்பி விட்டான்.
அவள் இனி என்ன முடிவெடுப்பதென்று பகல் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளது கணவன் மாலை திரும்பியபோது, வீட்டுக் கதவில் அவள் விட்டுச் சென்ற கவர் ஒன்று அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
- தங்கேஸ்