எவ்வளவுதான் மகளைப் படிக்க வைத்தாலும் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாய்ப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறபொழுதுதான் மனம் நிறைவடைகிறது என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார் ராமநாதன். அதுமட்டுமல்லாமல் வரதட்சினை கேட்பவர்கள் பணத்தின்மீது மட்டுமே கவனமாய் இருப்பார்கள். உறவுகளின் உன்னதத்தை உணர்ந்திருக்க மாட்டார்கள். அதுபோன்ற ஆட்களை அண்டுவது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்றும் எச்சரிக்கை செய்வார். ஊருக்குச் சொன்ன உபதேசம் தற்பொழுது தானே நடைமுறைப் படுத்த வேண்டிய கட்டத்தில் இருப்பதை அவர் உணர்ந்தார்.

சமுதாயத்தில் உயர்ந்த படிப்பு என்று எல்லோராலும் கருதப்பட்ட பிரிவில் அரும்பாடு பட்டு மகளைச் சேர்த்து படிக்க வைத்து முடிந்து விட்டது. ஆறேழு ஆண்டுகள் அல்லலை சகித்து அவதியைச் சுமந்து ஒரு வழியாய் அவர் நினைத்ததை நிதர்சனமாக்கி விட்டார். இனி மகளின் கல்வித் தகுதிக்கேற்ப தகுதியும், நல்ல குணமும் உள்ள மணமகனைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் ராமநாதனுக்கு மிகப் பெரிய கவலையாக இருந்தது.

அலுவலக நண்பர்கள், தொடர்பு விட்டுப்போன பழைய உறவினர்கள், இன்றும் விட்டுக்கொடுக்காது சுக துக்கங்களில் உடன் நிற்கும் நெருங்கிய உறவினர்கள் எல்லோரிடமும் இது பற்றி சொல்லி வைத்தாகிவிட்டது. திருமண தகவல் நிலையங்களிலும் பதிந்தாகிவிட்டது. எதிர்பார்க்கும் இனிய நாள் எப்பொழுது வரும் என்கிற ஏக்கத்தோடு அலைந்து கொண்டிடு இருந்தார் ராமநாதன். விரும்பியபடி மாப்பிள்ளையையோ அல்லது பெண்ணையோ பார்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை இப்போதுதான் ராமநாதன் நேரடியாய் அனுபவித்தார்.

ஓரளவு பரவாயில்லை என்று நினைக்கும் மாப்பிள்ளை தனது மகளை விட குள்ளமாக இருந்து தொலைக்கிறார் அல்லது நிறம் நிம்மதியைத் தரவில்லை. இவைகள் திருப்தியாய்த் தெரிந்தால் ஜாதகம் சாதகமாய் இல்லை. ராமநாதனுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் மாப்பிள்ளை வீட்டார்கள் ஒத்துப்போவதில்லை. இவருடைய முற்போக்குச் சிந்தனைகள் அவர்களின் முன்னே முட்டிப் போடுவதை உணர்ந்து வேதனைப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. முப்பத்தைந்து வயதைத் தாண்டிய, நல்ல கல்வித் தகுதியுள்ள பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரண் தேடி வருவதைப் பார்க்கின்ற பொழுதும், இதைப்போன்றே கன்னிப் பருவத்தைக் கடந்தவர்கள் மணமகன் வேண்டி செய்தித்தாள்களில் விளம்பரம் செய்திருப்பதைப் பார்க்கின்ற பொழுதும் ராமநாதனுக்கு 'பகீர்' என்றிருக்கும்.

தரகர்களை நம்புவது சரியாய் இருக்காது என்று பலர் எச்சரித்திருந்தார்கள். எனவே கூடியவரை தரகர்களைத் தவிர்த்தே வந்தார். உறவினர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் தனக்கு நெருங்கியவர்களை அழைத்துக்கொண்டு போய் கிடைத்த வரன்களை விசாரித்தார். ரகசியமாகவும் பலரிடம் விசாரித்துப் பார்த்தார். இதைப்போலவே திருமணத் தகவல் நிலையத்திலிருந்து வந்தவைகளையும் துருவித் துருவிப் பார்த்து, பத்துப் பதினைந்து பேர்களைப் பட்டியலிட்டார்.

தான் வைத்திருந்த பட்டியலிலுள்ள பலர் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் திருமண தகவல் நிலையத்தில் விபரங்களை பெற்றுக்கொண்டு ஒருவர் ராமநாதனைச் சந்தித்தார். தனது மகனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அது தொடர்பாய் இவரைப் பார்த்து பேசுவதற்காக வந்திருப்பதாகவும் சொன்னார். ராமநாதனும் படிப்பு தொழில் போன்றவைகளை விசாரித்தார். தன்னுடைய மகளின் கல்வித் தகுதிக்கேற்றபடி வரனின் கல்வித் தகுதி ஓரளவு பொருந்தி வருவதாய் உணர்ந்தார். தனக்கு விசாரிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாய்ச் சொல்லி அனுப்பி வைத்தார்.

மறுநாளே மிகவும் சுறுசுறுப்பானார் ராமநாதன். தன்னால் இயன்ற அளவு நேரில் வந்தவர்களைப் பற்றி நிறைய விசாரித்தார். தான் எதையேனும் தவறவிட்டிருக்கக் கூடும் என்பதால் தனக்கு நெருங்கிய உறவினர்களை விட்டும் தீர விசாரித்தார். நல்ல தகவல்களாளவே கிடைத்தது. அண்ணன் தம்பிகளையும் மனைவி மற்றும் மச்சான் போன்றவர்களையும் அழைத்து ஆழ்ந்து ஆலோசனை செய்ததுடன், தன்னுடைய மகளையும் அழைத்து விபரங்களைச் சொல்லி விருப்பத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் ஒப்புதல் கொடுக்கத் தயாரானார்.

மாப்பிள்ளை வீட்டாரின் மனநிலை அறியாமல் தான்பாட்டுக்கும் எதையேனும் சொல்லிவிட்டால் தப்பாக முடிந்து விடுமே. யாரையேனும் அனுப்பி அதனையும் தெரிந்து கொள்ளவேண்டும். தனக்குத் தெரிந்த ஒருவரை இதற்காகத் தெரிவு செய்தார். மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்வீட்டாரிடமிருந்து ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருக்கிறதா என்பதை அறிந்து வர அனுப்பி வைத்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் அனுப்பி வைத்த ஆள் தகவல் தந்தார். தான் சென்று மாப்பிள்ளையின் தகப்பனாரைச் சந்திதித்தாயும், ராமநாதன் சொன்னபடி அவர்களை கலந்து கொண்டதாயும், அதற்கு அவர்கள் "அவுங்க பொண்ணுக்கு அவுங்க விருப்பப்படி செய்யுறதை செய்யட்டும்" என்று சொல்லிவிட்டதாயும் சொன்னார். ராமநாதனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. எதற்கும் தானே நேரிடையாக ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து கொண்டார்.

இரண்டு மணி நேர பஸ் பிரயாணம். பிரயாணம் முழுவதும் தான் நினைத்துக்கொண்டு வரும் காரியத்தை எப்படி துவக்குவது...எப்படிப் பேச்சை கொண்டு செல்வது என மனதுக்குள் ஒத்திகை நடத்திக்கொண்டே சென்றார். காலை எட்டு மணி அளவிற்கு மாப்பிள்ளை வீடு சென்றடைந்தார் ராமநாதன். அழைப்பு மணியைக் கேட்டு மாப்பிள்ளையின் அப்பா கதவைத் திறந்தார்.

"வாங்க... வாங்க... வணக்கம். நான் உங்க ஊருக்கு வரணுமுன்னு இப்பத்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க... உங்களுக்கு ஆயுசு நூருங்க." மாப்பிள்ளையின் அப்பா மகிழ்ச்சியோடு வரவேற்றார். உள்ளே இருந்து வந்த அவருடைய மனைவியும் தன் அனைத்துப் பற்களும் அப்படியே வெளியில் தெரிய நலம் விசாரித்தார். அந்த அம்மாவின் செயல்பாட்டில் நிறைய செயற்கைத் தன்மை கலந்திருப்பதைப் போன்று ராமநாதனுக்கு தோன்றியது.

ராமநாதன் உள்ளே சென்றார். காப்பி தந்தார்கள். வழக்கமான குசல விசாரிப்புக்குப் பின்னர் தான் வந்த காரியம் பற்றி ராமநாதன் ஆரம்பித்தார். "எங்க ஊருக்கு வர நெனச்சதாச் சொன்னீங்களே என்னவிஷயமான்னு சொல்லுங்க."

"ஜாதகப் பொருத்தம் நல்லா இருக்கு. நீங்க இதையெல்லாம் பார்க்கிறதில்லைன்னு கேள்விப்பட்டேன். இருந்தாலும் எங்க மனதிருப்திக்காக பாத்துகிட்டோம். மற்றதையெல்லாம் பேசிகிட்டா பரவாயில்லேன்னு நெனச்சேன்."

"அதுக்காகத்தான் நானும் வந்திருக்கிறேன். நல்லதாப் போச்சு." என்றார் ராமநாதன்.

"முறைப்படி பொண்ணு வீட்டுக்காரங்க மாப்பிள்ளை வீட்டையும், மாப்பிள்ளை தரப்பினர் பொண்ணு வீட்டையும் சொந்தஞ் சோலியோட வந்து பாத்துகிடனுமில்லையா. அதை முடிவு பண்ணிக்கிடனுமுன்னுதான் யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்."

"அதுவெல்லாம் சரிதான். ஆனா அதுக்கு முன்னாடி சில விஷயங்களை பேச வேண்டி இருக்குது."

"என்னன்னு சொல்லுங்க. பேசிக்கிடுவோம்."

"முன்னடியே சீர்செனத்தி பத்தி பேசிகிட்டா நல்லதுன்னு எனக்குத் தோணுது."

"அதையெல்லாம் நீங்க அனுப்பி இருந்த ஆளுக்கிட்ட சொல்லி இருந்தேனே."

"அவர் வந்து சொன்னார். இருந்தாலும் நேரடியா கலந்துகிடுறது நல்லதுன்னு பட்டதுனாலே வந்திருக்கிறேன்."

"நீங்க ஒங்க பொண்ணுக்கு செய்யுறதெச் செய்யுங்க."

பின்னர் வழக்கப்படி செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசி விட்டு ராமநாதன் கிளம்பினார்.

மாப்பிள்ளை வீட்டார் பெண்வீடு பார்த்தாகிவிட்டது. இனி ராமநாதன் தன் உறவினர்களோடு மாப்பிள்ளை வீடு பார்த்தாக வேண்டும். மிக முக்கியமான உறவினர்களை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீடு வந்தடைந்தார். மாப்பிள்ளை வீட்டில் சிற்றுண்டி முடிந்த பின் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர்களில் ஒருவர் ராமநாதனை தனியே அழைத்தார். "மாப்பிள்ளை வீட்டார் என்னென்ன சீர் செய்வீங்க என்கிறதை உறவினர்கள் மத்தியில் வெளியிட விரும்புறாங்க. அதை இப்ப சொல்லிடுங்க." என்றார்.

"அதைப் பத்தி பேச வேண்டியதில்லைங்க. முன்னமே நாங்க பேசி வச்சிருக்கோம்." ராமநாதன் சொன்னார்.

"நீங்க தனியா ஆயிரம் பேசிகிட்டிருக்கலாம். ஆனா இந்த சமயத்துலே தெளிவுபடுத்திகிடுறது நல்லதுன்னு எல்லாரும் விரும்புறாங்க."

"நீங்க கேட்கிற இந்த விஷயம் மாப்பிள்ளையோட அப்பாவுக்குத் தெரியுமா?" ராமநாதன் கேட்டார்.

"இது எப்பேர்ப்பட்ட விஷயம். இதையெல்லாம் எதேச்சையா நாங்களே கேட்டுற முடியுமா? எல்லாருக்கும் இதுலே ஒப்புதல் இல்லாமலில்லை என்பதை மனசுலே வச்சுகிடுங்க."

ராமநாதனுக்கு வியப்பாகவும் இருந்தது, குழப்பமாகவும் இருந்தது. 'நேருக்கு நேர் கேட்டபொழுது மிகவும் பெருந்தன்மையாய் பேசிய மாப்பிள்ளையின் அப்பாவா இதற்கு சம்மதித்திருப்பார்! ஒருசமயம் இப்படி சொல்லச் சொல்வது அவர்கள் ஊர்ப் பழக்கமாக இருக்குமோ? என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். எல்லோர் முன்னிலையில் மாப்பிள்ளையின் அப்பாவை அழைத்தார். தனக்கு அருகாமையில் இருந்த நாற்காலியில் உட்காரச்சொன்னார்.

"பெண் வீட்டிலிருந்து சீர் செனத்தி தொடர்பாய் ஏதும் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கா?" ராமநாதன் கேட்டார்.

"அப்படி ஒண்ணும் இல்லை. ஆனா நீங்க என்ன செய்ய விரும்புறீங்களோ அதை உறவினர்கள் மத்தியில் சொன்னா பெருமையா இருக்கும்." என்றார்.

திடீரென்று இதைப்போன்ற நிலைமை வரும் என்பதை ராமநாதன் எதிர்பார்க்கவில்லை. தற்சமயம் என்ன சொல்வதென்ற தெளிவும் அவருக்கு அப்பொழுது இல்லை. சொன்னபடி குறைவில்லாமல் செய்தாக வேண்டும். நிலைமையை சமாளித்தாக வேண்டும். சற்றுநேரம் யோசித்தார். மனதுக்குள் சில கணக்குகள் போட்டுப் பார்த்த பின் "நாப்பது பவுன் நகையும் ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கிக் கொடுத்திடுறேன். மற்றதெல்லாம் உலக வழமைப்படி செங்சுடலாம்." என்று சொன்னார்.

அங்கிருந்த மாப்பிள்ளையின் உறவினர்களுள் ஒருவர் மெதுவாக ஆரம்பித்தார். "நாப்பது பவுன் எங்கிறது ரொம்ப கொஞ்சம். நூறு பவுனா செஞ்சுடுங்க. இந்த காலத்துலே மோட்டார் சைக்கிள் எங்களுடைய மாப்பிள்ளை தகுதிக்கு மிகவும் சொற்பம். அதுனாலே கார் ஒன்னும் வாங்கி கொடுத்திடுங்க." என்றார்.

அதிர்ந்து போனார் ராமநாதன். மாப்பிள்ளையின் அப்பாவைப் பார்த்தார். அவரும் எதுவும் நடக்காததுபோல் அமர்ந்திருந்தார். அந்த அளவுக்குச் செய்ய ராமநாதனின் பொருளாதாரம் இடம் தர வாய்ப்பில்லை. நன்றாக சம்பாதிக்கும் அளவிற்கு அவரது மகளுக்கு தகுதி இருப்பதை இவர்கள் கவனத்தில் கொண்டதாய்த் தெரியவில்லை. ஏதோ சாதாரணமாகத்தான் நிகழ்வுகள் அமைந்திருப்பதாய் முதலில் நினைத்தவர், கடைசியில்தான் உணர்ந்து கொண்டார் இதெல்லாம் ஒரு ஏற்பாட்டோடுதான் நடக்கிறது என்பதை. ஏதாவது சொல்லி நிலைமையை சமாளித்தாக வேண்டுமே.

"எனக்கு வேண்டியவர்களைக் கலந்து ஆலோசனை செஞ்சுகிட்டு பிறகு சொல்லி அனுப்புறோம்." என கூறிக்கொண்டு கிளம்பினார்.

'காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே’ என்றும், ‘குருவிக்கு ராமேஸ்வரம் குடத்தடி’ எனபதைப்போல் நமக்கு சாத்தியமான இடம் கிடைக்காமலா போய்விடும்? இனி செத்தாலும் இந்த திசைப் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடாது' என்றும் மனதுக்குள் நினைத்துக்கொண்டு, தனது பட்டியலில் உள்ள மற்ற வரன்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்தபடியே அங்கிருந்த தன் உறவினர்களை அழைத்துக் கொண்டு நடையைக் கட்டினார் ராமநாதன்.


- பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It