கடவுளின் பூமிக்கு அவனது அனுமதியில்லாமல் வந்து விட்டோம். எத்தனை துரிதமாக அந்த இடத்தை விட்டுத் திரும்புகிறோமோ அத்தனைக்கு நல்லது என்று நினைத்தார்கள். தலைவனின் அந்த உத்தரவுக்காக காத்திருந்தார்கள். குழுக்களின் கூட்டம் ஓரிடத்தில் குழுமியது. சின்ன பனிப்பாறையின் மீது தலைவன் தாவி ஏறி நின்றான். தனது கைகளை அசைத்தபடியும், உயர்த்தியபடியும் முழங்கினான். அவன் குரல் வெகுதூரத்தில் இருந்த வெவ்வேறு பனிப் பாறைகளில் மோதி எதிரொலிப்பாக எழுந்தபடி இருந்தது.

'என்னருமை மக்களே.... நாம் நமது மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரிந்து வந்து பல மாதங்கள் கழிந்து விட்டது. நீங்கள் எல்லோரும் இத்தனைக் காலமும் கொண்ட துயர், ஓர் சரித்திர நிகழ்வு. நமது இனத்திற்காகவும், நம் மஹா குருவின் சொல்லிற்காகவும் உங்களை நீங்கள் துச்சமாக கருதிய இந்த வீரப்பயணத்தைப் பற்றி, நம் சமூகம் அது உள்ளளவும் பேசும். உங்களில் சிலர் இந்த பணியால் உயிர் நீத்தீர்கள். அவர்களை இந்த பனிப்பூமிக்கே அளித்தோம். நம் வழிநடத்திகள் தங்களின் பிரமாண்டப் பிழைக்காக, தங்களை சுய தியாகத்திற்கு உட்படுத்திக் கொண்டார்கள். அவர்களையும் இந்த பனிப் பூமிக்கே அள்ளித்தந்தோம். இத்தனைக்கும் பிறகே, நாம் திரும்புகின்றோம். இது நம் தோல்வியல்ல, அடுத்த வெற்றியின் முன்னுரை. இதை கடவுளின் பூமி என்றது சரியே. இங்கே நாம் நம் மஹா குருவின் சொல்படிதான் பிரவேசித்திருக்கிறேம். இந்த பிரவேசம் பாவமுமாகாது. நாம் யார்? கடவுளின் மக்கள்!! நம்மை கடவுள் தண்டிக்க மாட்டார். பயம் வேண்டாம், குருவை வணங்கி உத்தரவு பிரப்பிக்கிறேன் திரும்புங்கள்" என்றான். படை மக்கள் அத்தனைபேர்களும் மகிழ்ச்சியில் குதுகலித்து கும்மாளமிட்டார்கள்.

தலைவனின் புகழை அந்த குழுக்கள் தொடர்ந்து முழங்கின. தலைவன் மகிழ்ந்து புன்னகைப் பூத்தவாறு, தன் குழுவினரைப் பார்த்து இரு கரங்களையும் உயர்த்தி வேக வேகமாக அசைத்தான். குழுக்களிடமிருந்து ஆராவாரம் எழுந்தது. அவனது தலைக்கு மேலே சின்னப் பனிப்பாறை நொடித்தது. அவன் நின்ற முகட்டில் இருந்து கீழே குதித்தான். அந்த சின்ன பனிப்பாறையும் நழுவி உருண்டு வந்து அவன் மீது விழுந்தது. தலைவனிடமிருந்து எழுந்தடங்கிய ஓலம் மஹா குருவின் நாம உச்சரிப்பாக இருந்தது. குழுக்களின் சப்தநாடிகள் அத்தனையும் ஓய்ந்துபோய், மீண்டும் உயிர்பெற்றுக் கதறினார்கள்.

அந்த சின்ன பனிப்பாறையை உடைத்து நொறுக்கி அப்புறப்படுத்தும்போது திடுமென வேகம்கூடிய சூறைக்காற்றாய் வீசிய பனிப் புயல் அவர்களை இயங்கவிடாமல், தலைவனின்மேல் பனி படர்ந்து மூடிக்கொண்டே இருந்தது. தலைவனிடமிருந்து எந்த அசைவுமில்லை. படையினரின் இடைவிடாத பணிக்கிடையே தலைவனை அசைத்துத் திருப்பியபோது, அவனிடம் சுவாசம் இல்லை. குழுக்கள் மீண்டும் கதறின. பனியின்சூறை அதற்குமேல் கதறியது. தலைவனை அப்படியே கீழேவைத்து கனத்த இதயத்துடன் கண்களில் நீர்வழிய அவன் புகழ் பாடினார்கள். 'தலைவா உங்களையும் இந்த பனிப் பிரதேசத்திற்கே தந்து விட்டோம்' யென ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுது புலம்பியபடியே விரைவாக திரும்பத் துவங்கினார்கள்.

பனியின் சூறையை தாக்குப் பிடித்தபடி, அந்த குழுவில் வந்த ஒருவன் , தலைவனின் உடலருகே தேம்பிய நிலையில் வற்றாத கண் ணீரோடு நின்றுகொண்டே இருந்தான். திரும்பிக்கொண்டிருந்த குழுவில் சிலர் அதைக் காணவும், 'லூரி ! வா வந்துவிடு, பனியின் சூறை இன்னும் கூடிவிடும், இந்த இடம்விட்டுப் போய்விடலாம்' என்று அழைத்தனர். லூரி வரவில்லை. லூரி தலைவனின் இஷ்டமான சேவகன்; குறிப்பறிந்து நடப்பவன்; அவனது அழைப்புக்காகவே என்னேரமும் சிங்காரிந்துக் கொண்டு இருப்பவன். லூரியின் அருகில் போய் சிலர் அவனை இழுத்துப் பார்த்தனர். அவன் வருவதாக இல்லை.

'கருத்து தெரிந்த பருவத்திலிருந்தே தலைவனின் கரம் பட்டுப் பூரித்த உடம்பு.. இனி யாரோடு போய் ஒண்டுவது.. ஒப்புமா இந்த உடல்? தலைவனின் நினைவே இனி வாழப் போதுமென்றால்கூட கேட்குமா இந்த உடல்? தலைவனோடு இப்பவும் இணைந்து விடுவதுதான் சரி. நான் அவனுடையவன், காலத்திற்கும்!' என தனக்குள் புலம்பி ஓர் முடிவுக்கு வந்தவனாக, லூரி அவர்களின் கரங்களை உதறிவிட்டு, விடு விடுவெனபோய் தலைவன்மேல் படிந்திருந்த பனியோடு இறுகக் கட்டிப்பிடித்து நெருக்கமாக படுத்துக் கொண்டான். அவனை இழுத்து வரச் சென்றவர்கள் செய்வதறியாது திரும்பினர்.

ஆறு மாத காலம் பகலாகவும், ஆறு மாத காலம் இரவாகவும் நீளும் வடதுருவத்துக் கால அமைப்பையும், தொடர்ந்து இறங்கும் பனிப்பொழிவின் அடர்த்தியான பிரதிபலிப்பால் அங்கே சூரியக் காட்சி ஏழாகத் தெரிவதையும் கஸீமோவ் விவரிக்கிறார். பகலின் நீண்ட காலப்பொழுது முடிந்து, திடுமென ஒரு நாள் இருள் நீளத் தொடங்கிவிடுகிறது. விடியாத அந்த இருளில் திரும்பிக் கொண்டிருந்த குழுக்கள் சிக்கிக் கொள்ள, அவர்களிடையே கூச்சலும் குழப்பமும் எழுந்தது. அவர்கள் அரண்டு தலைதெறிக்க திரும்ப துவங்கினர் என்றும், திசை பிடிபடாமல் பலவாறு சிதறவும் தொடங்கினார்கள் என்கிறார் கஸிமோவ்.

கீமில் இருந்து புறப்பட்ட கிழமையிலிருந்து சரியாக ஓர் ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட அதே இளவேனிற் கால மூல நட்சத்திர உதயத்தன்று சிலகுழுக்கள் திரும்பி வந்தனர். அப்படி திரும்பி வந்ததை கடவுளின் சித்தமாகவே கருதினார்கள். சிலகுழுக்கள் மட்டுமே திரும்பி வந்தனர் என்றாலும்,அந்த குழுக்களில்கூட வெகு சிலர்தான் திரும்பியிருந்தனர். பெரும்பாலான குழுக்கள் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. தலைவனுடைய இழப்பை, திரும்பிய ஒருசிலர் உறுதி செய்தனர்.

பெரும் இழப்பால் மிரண்டு போனது அந்த சமூகம்.

கிளி மூக்கு, பெருத்த இடை, அதிக உயரமற்ற, பல மனித தடயங்கள் வட துருவத்தில் இன்றைக்கும் காணக் கிடைக்கிறது. இன்னும் சில பருமனான , தேஜஸ் கொண்ட உடல்கள் பனிப் பாறைகளின் இடுக்கில் அப்படியே செங்குத்தாக சொருகிக் கொண்ட நிலையிலும் கண்டெடுக்கப் படுகிறது. ஆய்வாளர்களின் கணிப்புப்படி அந்த உடல்கள் அந்த பேராசை மனிதர்களுடையதுதான் என்கிறார் கஸிமோவ். அந்த மக்களின் இந்த தோல்விக்குப் பிறகு, கீம் சிதையுண்டுபோன காட்சியையும் நம் கண்முன் நிறுத்துகிறார் அவர்.

அது கடவுளின் பூமி. அதனால்தான் அங்கே கால் பதித்த தம் மக்களில் பலரும் திரும்பவேயில்லை என்பதான உணர்வு கீம் நகர வாசிகளுக்கு இருந்தாலும், அந்த பேரிழப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கு பார்த்தாலும் ஓலம். குனிந்து, உட்கார்ந்த நிலையில் தங்களது நீண்ட தலைமுடியை விரித்துப்போட்டு ஆடியபடியேயான பெண்களின் குமுறல் மஹா சோகம். மாண்டு விட்ட தலைவனின் வாசஸ்தலத்திற்கு முன்னாலும், மஹா குருவின் ஆஸ்ரம வாயிலிலும் பெருத்த ஜனத்திரள். அழுகை, ஓலம், குழப்பம் அவர்களுக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை.

கீம் நகரத்தின் ஓலங்களை அறிய வந்தாள் தலைவி. தனது இருப்பிட வாயிலில்கூடி தேம்பி அழும் குடிமக்களின் சோகத்தையும் கண்ணுற்றாள் அவள். எந்த சலனமுமற்று தீர்மானமான சில நடவடிக்கையில் இறங்கினாள். தனது பாதுகாப்புபணியில் இருந்த அடிமை ஒருவனை உடனடியாக தலைவனாக அறிவித்தாள். அதனை அங்கீகரிக்க வேண்டி மஹா குருவுக்கு தகவல் அனுப்பினாள். தகவல் கொண்டு சென்றவன் தொங்கிய முகத்தோடு திரும்பினான். குரு மறுத்துவிட்டார் என்ற செய்தியில் தலைவி எந்த வாட்டமும் கொள்ளவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினாள். எல்லாம் நொடிகளில் நடந்தேறிக் கொண்டிருந்தது.

வடதுருவ பேரெல்லையை தங்களது காலடிக்கும் கீழ் கொண்டுவர தலைவன் தனது குழுக்களோடு புறப்பட்டபோது, தலைவியும், தனது மனைவியுமானவளுக்கு அவள் விரும்பிய வண்ணம் மிகுந்த சிரத்தையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு சென்றிருந்தான். ஒன்பது அடிமைகளைக் கொண்டு, 'நவ ரீதியிலான செயல்திறன்'கொண்ட பாதுகாப்பான ஏற்பாடு அது.'பார்சிய' மலைக் குன்றொன்றில் செழிப்போடு ஆண்ட ஒரு கூட்டத்தார்மீது, சில ஆண்டுகளுக்கு முன்பு தலைவன் தன் குழுக்களோடு, படையெடுத்து அங்கு அவர்களை வாகைசூடி, அவர்களின் களஞ்சியங்களை சூறையாடி வந்தபோது, அங்கே ஆண்ட வம்சத்தினர் சிலரை அடிமைகளாக சிறைப் பிடித்து வந்திருந்தான். அவர்களில் நம்பகமும், திடகாத்திரமும் கொண்ட ஒன்பது பேர்களை தேர்வு செய்து அமைக்கப்பட்டதுதான் தலைவிக்கானபாதுகாப்பு ஏற்பாடு.

தனது பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்ட அவர்களின் செயல்பாடுகளை இந்த ஓர் ஆண்டுகளாக அருகில் வைத்துப் பார்த்தவள் தலைவி. எந்தவொரு அடிமையும் சோடை என்று சொல்ல முடியாது. அவர்கள், தனது விழிச் சுட்டும் திசையில் பாயக்கூடியவர்கள் என்பதைக் கண்டும் இருக்கின்றாள். தனது விரல் சொடுக்கிற்காக விழவும் எழவும் அவர்கள் எப்போதும் காத்துக்கிடப்பவர்கள் என்பதில் பெருமை இருந்தது அவளுக்கு. இவர்களில் விதூர் என்ற அடிமை இன்னும் கெட்டி. மகா தனங்கள் புடைக்க, உறுதியான செயல்திறன் பொருந்தியவன். தலைவியின் மெய்க்காப்பாளனாய், அவளை தன் பார்வையின் வட்டத்திற்குள்ளேயே வைத்துப் பேணுபவன்.

தலைவன் வடதுருவம் புறப்பட்டுச் சென்ற மூன்றாம் நாளே தலைவி விதூரை அடையாளம் கண்டுகொண்டாள். அவனது புஜமும் அந்த மார்பும் அதன் திடமும், பத்திரத்திற்கேற்ற அம்சங்களென நினைத்தாள். அந்த அடிமையை அருகில் அழைத்து நெருக்கத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கும் தருவாய்களில், அவனது மூக்கின் கூர்மை தன்னை குத்திக் கிழித்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கெழும். அவனது வளமான அடர்ந்த மீசை படபடப்பைத் தரும். அவனது விரிந்த கண்களும் மலர்ந்த முகமும் அந்த அச்சத்தை தூரத்தள்ளும். வழியும் முடிக் கற்றைகளில் புரளும் அவனது இளமை அவளுக்கு திகட்டாத காட்சி. ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் திகட்டல் இல்லை. இன்றைக்கும் கூட, தலைவன் மாண்ட செய்தி கேட்டவுடன் அவள் ஆறுதல் தேடியது விதூரின் மார்பில்தான்.

தலைவியின் இரகசியத் தகவல் கிடைத்ததும் குருவின் ஏகாந்த சிஷ்யன் நிமிர்ந்து உட்கார்ந்தான். குருவுக்குப் பிறகு அந்த ஸ்தானத்தில் அமரக்கூடியவன் அவன்தான். தனது தனி அறையில் அவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். உடம்பில் நிஷ்டையின் கவசங்கள் கழல , இளமையின் பாய்ச்சல் கூடுவதை உணர்ந்தான். மேனியில் இலேசாக சூடு பரவிக் கொண்டிருந்தது. வெளியில் எட்டிப் பார்த்தான். ஆசிரமத்தின் வாயிலில் அழுது புலம்பும் மக்கள். மூலஸ்தான அமர்வின் தடுப்பிற்குள் மஹாகுரு அடைந்துக் கிடந்தார். தனது இருக்கைக்குள் தலையை உள்ளிழுத்துக் கொண்டு கதவைத் தாழிட்டான். இப்பொழுது அவனது மூடிய கண்களுக்குள் தலைவி தரிசனமானாள்.

அவளது புஷ்டியான மார்பிலிருந்து அவனால் கண்களை நகர்த்த முடியவில்லை. அவளது அகண்ட முகமும், தடிப்பேரிய உதடுகளும் அவனை நெருக்கத்தில் அழைத்தது. மங்கோலிய சாயல் கொண்ட அழகும், மழலை ஈழாத செவ்வாழை உடம்பின் மழமழப்பும் என்னை தழுவிப்பார் என்றது. இனி நீதான் என்னை ஆசீர்வதிக்கப் போகிறாய், இனி நீதான் அந்த அதிர்ஷ்டக்காரன் என்றது அவளின் வசீகரம். அவனது மூடிய விழிக்குள் பட்டாம் பூச்சிகள் பூத்துப் பறந்தன.

கண்களைத் திறந்து மீண்டும் இறுக மூடினான். குருவிடம் ஆசீர்வாதம் வாங்க அதோ தலைவி வருகின்றாள். பல்லக்கில் இருந்து வெள்ளாடை கோலமாக குளியலான மேனிக்கு வருகின்றாள். தரையில் நீர் சொட்டுகிறது. அவளது வனப்பின் பூரிப்பு நடையின் நளினத்தில் அசைந்து காட்டுகிறது. பல்லக்குத் தூக்கி வந்தவர்களிடம் வாட்டமே காணோம். தலைவி அவர்களை கடந்துபோகும் நாழியில், பின்னால் கொள்ளும் தரிசனம் ஒன்றே போதும் அவர்களுக்கு. ஆசிக்காக தலைவி வரும் செய்தி அறிந்த போதே, குரு குளித்து முழுகி புத்தாடை கொண்டு விட்டார். நாழியாக ஆக அவரிடம் பரபரப்பு கூடிக் கொண்டிருக்கிறது. அவர்பூசிக் கொண்டிருக்கிற புணுகின் வாடை என்னை சித்ரவதை செய்கிறது.

குருவின் மூலஸ்தான அமர்வுக்குள் தலைவி நுழைந்தவுடன் கதவு தாழிடப்படுகிறது. குருவுக்கான காணிக்கை, சேமநல விசாரிப்பு களுக்குப் பிறகு, குரு ஆயத்தமாகிவிடுகிறார். ஆசி வழங்கும் தருணம் அது. பார் பார் என்கிறது நிசப்தங்களின் கிரீச். இரு கரங்களை அவள் தலைமீது வைத்துத்தொடங்கும் அவரது ஆசி எப்போதும் அவளின் பிருஷ்ட முகடுகளில்தான் முற்றுப் பெற்றும். இரண்டு மணித்துளிகளுக்கு குறையாத ஆசி அது. அந்த நேரத்தில்தான். நான் எத்தனை முறை துடிதுடித்து எத்தனை முறை இறந்திருக்கிறேன்!

குருவிடம் இதோ விடைபெற்று புறப்பட ஆயத்தம் ஆகிவிட்டாள். அவள் நடையின் வருகையை என் உணர்வுகள் அறியும். இப்பொழுதும் அது என்னை நிமிட்டி உணர்த்துகின்றது. என்னிடமும் ஆசியென்கிற சம்பிரதாயமுகமாக, தட்டாது என்னைக் கண்டுவிட்டே செல்பவள் அவள். இதோ வந்தபடி இருக்கிறாள். நான் மன உந்தலின் விளிம்புக்கே வந்து விடுகிறேன். அருகே மிக நெருக்கமாக வந்தாயிற்று. நான் கைகளை உயர்த்த, அவள் சிரிக்கின்றாள். எப்போதும் இப்படித்தான். நான் கைகளை உயர்த்தும் போதெல்லாம் சிரிக்கின்றாள். அந்த சிரிப்பு அடங்குவதற்குள் தனது வலதுகரத்தால் என் மோவாயை இலேசாகப்பிடித்து உயர்த்தி நெற்றியில் முத்தமிடுகிறாள். கண்களை மூடி முத்தத்தின் உஷ்ணத்தை உள்வாங்குவதற்குள் அதோ அவள் போகின்றாள். போய் விட்டாள். மறைந்தே விடுகிறது அவள் பிம்பம்.

இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் நெற்றியில் ஒற்றை முத்தத்தோடு ஓய்வதாம்? எனக்கு விமோசனம்தான் எப்பொழுது? என்றைக்கு என் அந்தஸ்து உயரும்? தலைவியை நான் ஆசிர்வதிப்பதுதான் என்றைக்கு? இங்கே வருகின்ற போதெல்லாம் என்னை எழுப்பி விட்டு விட்டுப் போகின்ற அவள்தான், இன்றைக்கு சமிக்ஞையும் காட்டியிருக்கிறாள். சந்தர்ப்பத்தை நழுவ விடுவேனயென்ன? இனி நானே அவளை ஆசிர்வதிப்பவன். அவள் மேனியின் எல்லாமுகடுகளின் மீதும் என் ஆசீர்வாதங்கள் வஞ்சனையின்றிப் பெருகும். வெளியில் புலம்பலின் ஓலம் கூடிக்கேட்டது. சாரத் துவாரங்களின் வழியே பார்த்தான். கூட்டம் பெருகித் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதான் சமயம் என்றது உள்மனது. கண்களை மூடி வெற்றிக்காகப் பிரார்த்தித்தான். கடவுளின் அனுக்கிரகம் கிடைத்து விட்டதற்கான மகிழ்ச்சி அவன் வீறு கொண்ட நடையில் தெரிந்தது. மூல ஸ்தானத்தின் தடுப்பை விலக்கினான். குரு நிஷ்டையில் இருந்தார். பாதம் பணிந்தான். கண் விழித்தார் குரு.

'எங்கே தலைவி?'
'வருவார்'
'எப்பொழுது?'
'வருவார். வெளியே சோகத்தால் குமுறி அழும் கூட்டம் கூடிக்கொண்டிருக்கிறது குருவே.. அதனால்தான் என்னவோ நம் தலைவியின் வருகை தாமதமாகிக் கொண்டிருக்கிறது'
'மனித உயிர்கள் சதம் கிடையாது, சாவின் யதார்த்தம் இந்த மக்களுக்கு விளங்குவதில்லை!'
'குருவே எனக்கு பயமாக இருக்கிறது!'
'பயப்படாதே!'
'என் அச்சம் போகனும், ஆசிர்வதியுங்கள்!'
'என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு. தலைவியிடம் இருந்து ஏதேனும் தகவல் உண்டா?'
'உண்டு'
'முன்னமே அதை தருவதற்கென்ன?
'அதற்குத்தான் உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கினேன்'
'எங்கே அது?'
'இதோ'. பீடத்திலிருந்த உறைவாளை உறுவி குருவின் மார்பு மையத்தில் வைத்தான். தன் முழு பலத்தையும் பிரயோகித்தான்.

'மாபாவி' என்றெரு சப்தம் துடித்தடங்கியது.

'மன்னிக்கனும் குருவே, சாவின் யதார்த்தம் உங்களுக்கும் விளங்கவில்லையே!' மாபாவியாம்!... ஹும்.. தலைவிக்கு நீர் ஆசி வழங்கும் தருணமெல்லாம், என் மனம் சபிக்கும் வார்த்தையல்லவா அது!

மூலஸ்தானத்தின் தடுப்பை குருவின் மிடுக்கோடு மெள்ளச் சாத்தினான். நடையிலும் அவரது நளினம் வந்துவிட்டதாக தனக்குள் நினைத்தான். வளாகத்தில் தானியம் பொறுக்கிக் கொண்டிருந்த அந்தப் புறாவை அன்போடு பற்றியெடுத்து, அதன் காலில் வெற்றியை அனுப்பினான். செய்தி கிடை த்த நாழியில் பல்லக்கு புறப்பட ஆயத்தமாகிவிடும். மனதில் துள்ளல் குதியாட்டம் போட்டது. கைகளை சேர்த்து முகமருகே கொண்டுசென்று விரித்து அவைகளில் முத்தமிட்டான். ஆசி வழங்கப்போகின்ற கைகள்! ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்தான். எதிரே , சோகம் கப்பிய முகத்தோடு நின்றுகொண்டிருந்தது மக்கள் கூட்டம். அவர்களை கண்ட நாழிக்கு விம்மினான், கண்ணீர் பெருக்கெடுக்க அழுது புலம்பினான். தலைவனை இழந்த மக்களுக்கு அது ஆறுதலாக இருந்தது. நாழியாக ஆக அவனது விம்மலும், அழுகையும், புலம்பலும் கூடியது. அந்த காட்சி அங்கே கூடியிருந்தவர்களுக்கு பிடிபடாத ஏதோவொரு தினுசில் நகர்ந்தது.

அவன் அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து கரங்களை உயர்த்தினான். 'அமைதி அமைதி'யென்று கூறிவிட்டு, 'உங்களின் சோகத்தை பொறுக்க முடியாமல், நமது மஹா குரு தனது மேலான உயிரை மாய்த்துக்கொண்டார்!' என அறிவித்தபடி மீண்டும் தேம்பி அழத்துவங்கினான். மக்களுக்கு அந்த செய்தி பேரிடியாக இருந்தது. அழுது புலம்பினர்கள். ஏதோ ஒரு சாபம் நம்மை ஆட்டிப் படைப்பதாக அரற்றினார்கள். மஹாகுருவையும் அவர்கள் இழந்த செய்தி நகரில் தீயாகப் பரவியது. அவன் திரும்பவும் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். தலைவியின் நினைவில் பெருமூச்சு விட்டான். பல்லக்கு ஆசிரமத்தின் வாசலில் வந்து நின்றது. கதறிய மக்களை பார்த்து தலைவி மூன்று முறை மேலும் கீழுமாக தலையசைத்து விட்டு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள். விதூர் அவளுக்கு முன் சென்றான்.

இரத்த வெள்ளத்தில் மஹாகுரு அலங்கோலமாகக் கிடந்தார். சாகும் தறுவாயில் உயிரைக் காத்துக்கொள்ள அவர் மிகுந்த பிரயாசைப் பட்டிருக்க வேண்டும். குத்தப்பட்ட வாள் பிடுங்கிய நிலையில் கிடந்தது. வாளைப் பிடுங்கி உயிர் வாழ யத்தனித்திருப்பார். கை, கால்களில் ஏகப்பட்ட சிராய்ப்புகள். அஷ்ட கோணத்தில் குரு கிடப்பதை தலைவி கண்மலர விஸ்தீரணமாக கவனித்தாள். அவள் மனம் தன் காலத்தின் அடர்ந்த கிளைகளில் தாவிக்கொண்டிருந்தது.

(தொடரும்)

- தாஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It