அத்தியாயம் 1

நெருக்கமற்ற வானத்திரள்கள் கலைந்து போய்க்கொண்டிருந்தன. அடர் நிற மேகங்களின் நீட்சி ஒரு பறவையின் அலகாகவும் ஒரு மிருகத்தின் தலையாகவும் முடிவில் சந்தித்துக்கொண்டன. இருளுக்குள் மணி அசைந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. மாடுகளை அவிழ்த்து விட்டுவிடுவார்கள் இந்நேரத்தில். இருள் தொடர்ந்து தனது கழுத்தை அசைத்தபடி புற்களையோ வேறு இலை தழைகளையோ மோந்து மோந்து மேய்ந்து கொண்டிருந்தது. இருளுக்கு மூக்கு நீளம். முனையில் கருப்பு முகடுகள். நடுத்தெருவில் நின்றுகொண்டிருப்பது நாயாகத்தான் இருக்கவேண்டும். நான்கு கால்களையுடையது. நினைவூன்றப்பட்டதிலிருந்து அசைவில்லாமல் நிற்க நாயால் முடிகிறது. பெரிய நிழலில் நின்றுகொண்டிருக்கிறது. நாயும் நிழலாகவேயிருக்கிறது. இது அசைவற்ற நிழல். டூவீலர்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாய்ச்சலாக நாய் நிற்கும் அந்த வீட்டின் மறைவிலிருந்து ஆத்துரோடிற்குப் போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு டூவீலர்காரர்களையும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் முதுகு நிமிர்ந்து உட்கார்வதைப் பார்க்க முடிகிறது.

எப்போது அந்த வெள்ளை வெளிச்சம் வருமென்று மறைவு வீட்டிற்குப் பின்னால் கண்களை மேயவிட வேண்டியிருக்கிறது. தூரத்திலிருந்து வருகிறபோது அகல வாய்திறந்து மூடும் ஹெட்லைட் வெளிச்சங்கள் ஏமாற்றங்களைத் தொடர்ந்து அப்பியபடியேயிருந்தன. ஆப்பிள் தின்றுகொண்டிருந்தேன். அவர்கள் வருவதற்குள் இந்த ஆப்பிளை நான் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் பாதியில் வந்துவிட்டால் ஆப்பிளும் பாதியோடு நின்றுவிடும். இந்த நிலையில் என்னை ஆப்பிளோடு பார்த்தால் என்ன நினைப்பார்கள். குறிப்பாக அவள் என்ன நினைப்பாள். வீட்டில் இப்படியொருவர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறபோது இப்படி ஆப்பிள் தின்பார்களா என்றா?! வேகமாகக் கொறித்து மெல்லத் தொடங்கினேன். கடி வில்லைகள் ஒவ்வொன்றிலிருந்தும் லேசான புளிப்பும் இனிப்புமான சாறு உட்குழிந்த தொண்டைக்குள் இதமாக இறங்கிப் படர்ந்தது. தாகத்திற்கு நீர் அருந்துகிற பதம். மடமடவென்று குடித்தால் தொண்டைக்குள் திரவம் கூட கட்டிகளாக விழுந்து அடைக்கும். எதிலும் சாறு பிழிய அருந்தும் இலகு வேண்டும். குறிப்பாக திரவங்களுக்கு அத்தகைய இலகுவைக் கொடுக்க வேண்டும்.

வெள்ளை வெளிச்சம் அபாரமாக ஒளித்து வீதிக்குள் புகுந்து வந்துகொண்டிருந்தது. நம் வண்டிதான். ஆப்பிள் முடிந்து போயிருந்தது. இனியொரு அபவாதத்திலிருந்து நான் தப்பித்து விட்டேன். சும்மா சொல்லக்கூடாது. காலையில் அலைந்த அலைச்சலுக்கு வயிறு சூடாகி விட்டது. உடல் வெப்ப எரிச்சலை வியர்வைக் கீறல்களாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. உடலைச் சரிசெய்யவேண்டும். வெப்பநிலையை குளிர்விக்கத்தான் ஆப்பிள் எடுத்துக் கொண்டேன். நிதானமாகிவிடும். பால்கனியின் பிடிசுவரைக் குனிந்துபார்த்தேன். ஒரு விதை தூவப்பட்டிருந்தது சுண்ணாம்புக் கீற்றுகளில். தவறிவிழுந்த ஒன்று தனித்துக் கிடக்கிறது. இப்போது அதைக் கூர்ந்து பார்க்க எனக்கு நேரமில்லை.

வண்டி வீட்டின் முன்பு வாசலுக்குக்குக் குறுக்காக வந்து நின்றது. பின்னிருக்கையைப் பார்த்தேன். டாக்டரைக் காணவில்லை. வர்ஷி இருந்தாள். அவள் இருக்கையிலிருந்து இறங்கியபிறகே ஓட்டி வந்தவரைப் பார்த்தேன். இருவருக்குமான இடைவெளியில் புங்கை மரக்கிளைகள் விழுந்து மறைத்திருந்தன. நான் நினைத்தது போலில்லை இந்த டாக்டர். காட்டன் புடவையில் வரலாமென்று நினைத்திருந்தேன். குறைந்தபட்சம் புடவையிலிருப்பாள் மத்திம வயதென்றும் கற்பனை செய்திருந்தேன். தலைமுடியை ஃப்ரீகேராக விட்டுக்கொண்டு வருவாளெடுன்றும் நினைத்திருந்தேன். டாக்டர் கருப்பு நிறக் குர்தியில் பூக்கள் போட்டவராக இறங்கினார். லெக்கின்ஸூடன். முகத்தில் யூஸ்&த்ரோ மாஸ்க். இன்று காலையில்தான் அந்த நீலநிற மெலிதான மாஸ்க்கை யூஸ்&த்ரோவாக அழைப்பார்களென்று தெரிந்தது.

அக்கி மாதிரி வந்துருக்கு என்ன செய்யலானு.. என்னைப் பார்த்ததும் மருந்தக வாசலில் நின்றுகொண்டிருந்தவர் உள்ளேபோய் திரும்பிநின்றிருந்தவர் முகத்தைக் காட்டி,

அது பேரெழுதிட்டு வரனும்ல்ல..

அதுக்கு எங்க போறதுனு தெர்ல.. இப்பலாம் அப்டி எங்க இருக்காங்கனு தெர்ல. வேற மருந்தெதுவும்.

இல்ல.

இந்த நாட்டு மருந்துலாம்.

அதெல்லாம் ஒண்ணும் கெடையாது.

இங்கிலீஷ் மெடிசன் பாக்கலாமா.

ஹ்ஹூம் பேருதான் எழுதிட்டு வருவாங்க.

மூக்குக் கண்ணாடியை மூக்குக்கு இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். கண்களை கண்ணாடிக்கு மேல் உயர்த்தியே பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்ப வேறெதும் பண்ண முடியாதா.

டாக்டர்ட்ட போங்க.

இதத்தான முதல்லயே கேட்டேன் இங்கிலீஷ் மெடிசன்னு. அவரிடம் எதையும் இப்போது விவாதிக்க நேரமில்லை. அவரைக் குற்றம்சொல்லி சுட்டிக்காட்டி திருத்துவதற்கு அவசியமுமில்லை. அவருக்குத் தெரிந்ததை அவர் கூறுகிறார்.

டாக்டர் வாசலில் தயங்கியபடியே நின்றிருந்த மாதிரியிருந்தது. மேலே பார்ப்பாரென்று துரிதமாக வெறித்திருந்தேன். வண்டியைவிட்டு விலகுவதற்கே தயக்கமாகயிருந்தார். வண்டி வாசலில் குறுக்காக நிற்க வர்ஷி டாக்டரிடம் மேல் வீட்டிற்கு வழி சொல்லிவிட்டு ஜாடையாக உந்திக் கொண்டிருந்தாள். வண்டியை ஓரத்தில் நிறுத்த வேண்டுமவளுக்கு. டாக்டர் மாடிப்படிக்கு வந்து விட்டதும் பிடிசுவரை விட்டு விலகி மேலே வருகிறபோது வரவேற்கத் தயாரானேன். அந்தப் படிவரிசை நேராக எங்கள் வீட்டிற்குத் திரும்பி முடிந்து அங்கிருந்து மீண்டும் திரும்பி மேல் வீட்டிற்குப் போகும். எங்கள் வீட்டோடு முடியும் படிவரிசைக்குக் கேட் போடவில்லை. பழைய வயர்கட்டிலை முக்கோணமாக விரித்து நிறுத்தி அடைத்திருந்தோம். முக்கோண ஓரத்தில் கருப்பு படுத்திருக்கும். பிடி உடைந்த இரும்பு அடிகுழாயின் இழுத்து வளைக்கப்பட்ட நான்கு கால்களில் ஒன்றில் கட்டப்பட்டிருக்குமதை இப்போது எழுப்பத் தேவையில்லை. அருகில் போகின்றபோதே அசைவுற்று எழுந்தது. முதுகில் இரண்டு மூன்று இடங்களில் சொட்டைகள். டாக்டர் இதன் முதுகைப் பார்த்தும் எதுவும் சொல்லாமலிருக்க வேண்டும். ஒரு கணம் யோசிக்கத்தான் தோன்றியது. ஒருவேளை இந்த நாயிடமிருந்து?இருக்காது. டாக்டர் ஏறிய நேரத்திற்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். எங்கள் வீட்டிற்கு ஏறும் படிவரிசையில் டாக்டர் துரிதமாக எதிர்பார்த்தேன். அவருக்குத் தயக்கம் இன்னும் விடவில்லை. என்னைப் பார்த்து விட்டார் ஒருவழியாக.

இந்த வீடுதான. ஆங் இந்த வரேங். கருப்பைப் பார்த்து விட்டார். என் பின்னால் தான் மறைவாகயிருந்தது. பார்த்தால் பயப்படக்கூடுமென்று மறைக்கப் பார்த்தேன். தோற்றுவிட்டேன். இப்போது அதன் தோற்றுவாயில் நிற்கிறேன். கழுத்துச் சங்கிலியை இழுத்துப் பிடித்தேன். ஒண்ணுஞ்செய்யாது போங்க... இந்த டாக்டர் சாஃப்ட்டாகயிருக்கிறார். நேராக வீட்டு வாசலில் போய் நின்று விட்டார். அவருக்கு உடன் துணையாள் வேண்டுமென்று நினைக்கிறேன். அவசரமாகக் கருப்பை விட்டுவிட்டு வாங்க இந்தப் பக்கம்தானென்று திரையை ஒதுக்கிவிட்டிருந்த ரூமிற்குள் அழைத்துக் கொண்டு போனேன். போகிறபோது எனக்கு ஏன் இப்படித் தோன்றவேண்டும். என் புட்டத்தின் இரண்டு புறங்களும் மாறி மாறி அசைவதை டாக்டர் பார்த்துக் கொண்டு வருவாரா.

 *****************************

அத்தியாயம் 2

வண்டி.. . ப்ரேக் சரியா புடிக்காது.. பாத்துக்க.. ஸ்லோவாத்தான் போகும். பாத்துப்போ.. பாத்து ஓட்டு.. மேலுடம்பில் சட்டையில்லாமல் எச்சரித்துவிட்டு உள்ளே போனான் தம்பி. பல்லுத் தேய்க்கவில்லை இன்னமும். இப்போதுதான் எழுந்திருந்திருப்பான். வாசல் முகப்பில் தொங்கவிட்டிருந்த முகம்பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தும் பார்க்காமலும் செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டு கிளம்பினேன். படியைவிட்டுக் கீழிறங்கிப் போய்க்கொண்டிருந்தாள் வர்ஷி. அவளிடம் பிக்‌ஷாப்பர் பையையும் ஹெல்மெட்டையும் வண்டிச்சாவியையும் கொடுத்துவிட்டு படிகளில் இறங்கப்போவதற்கு முன் அப்படியே நின்றேன். மேல் வீட்டிற்குப் போகும் படிவரிசையில் சேவலும் கோழியும் அசைவற்று நிற்பதைப் பார்த்ததும் புகைப்படமெடுக்கத் தோன்றியது. உல்லன் வேலைப்பாடாகப் பின்னிய அலைபேசி உறையிலிருந்து ஃபோனை வேகமாக எடுத்தேன். இரண்டும் ஓடிவிடலாமென்ற மென்அச்சம். சேவல் நூற்றுக்கு நூறுசதம் மறத்துப் போயிருந்தது. கோழி சேவலின் உடலுக்குப் பின்னால் தன்னுடலை முழுவதும் மறைத்துக்கொண்டு கழுத்தை மட்டும் முன்னும் பின்னும் சேவலைப் பார்த்தும் சேவலின் கழுத்து ஒருமுறை அசைந்து திரும்பும்போது அதோடு பொருந்திப்போகும்படி அது பார்த்த திசையிலேயே பார்த்தபடியுமிருந்தது. அதன் உடல்தான் சேவலின் நிற்பிலிருந்து வெளியேறவேயில்லை. கோழிக்குப் பக்கமாகயிருந்த சுவரில் வட்டமான துளையொன்று சிதைந்துபோயிருந்தது. அதற்குள் என்ன.. என்பது போலக் கழுத்தை நீட்டி சேவலிடமிருந்து விலகப் பார்த்தும் விலக முடியவில்லை. துளையில் ஈயத்தில் பிடித்த கருப்பைப் போலக் குதப்பியிருந்தது.

வீதியில் பழைய ரோட்டை உடைத்து சமன்படுத்திப் போட்டிருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேற நாட்களாகிவிட்டது. பெயர்த்த ரோட்டின் சமதளம் மொந்தையாக உப்பித் தெரிந்தது. எனக்கு முன்பு வண்டியில் ஏதோ விற்றுக்கொண்டு போனார்கள். ரெக்கார்டபிள் வியாபாரியின் குரல் திரும்பத் திரும்ப வழிவிடாமல் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது. ஹாரனை பலமாக அடித்தேன். அவர்களை முந்திப் போகவேண்டும். ஓரமாகத்தான் போகிறார்கள். போகிற வீதியில் என் வலதுபக்கத்தில் கிளையாகப் போகிற குறுவீதியில் அவர்கள் இறங்கிவிடலாமில்லையா. ஹாரனை இரண்டொருமுறை தொடர்ந்து அடித்தபடி முந்திப்போனேன். வண்டியில் எந்த மாற்றமுமில்லை. பயம். வண்டில ப்ரேக் சரியில்ல.. . கிளம்புவதற்குமுன் கேட்ட வாசகம். திருவாசகமாகப் பின்தொடர்ந்துவந்துவிட்டது.

மெயின்ரோடை நெருங்குவதற்கு முன்பே வண்டியை ஸ்லோவ் பண்ணிக் கொண்டுபோய் நிறுத்தினேன். சாலையைக் கடக்கவேண்டும். நிறுத்தத்தில் நின்றிருந்தவர் அவருக்குப் பின்னால் திரும்பி வாகனங்கள் வருகிறதாயென்று பார்த்தார். அவர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் வேகத்தடையில் ஏறியிறங்குகிற காரையும் ஆட்டோவையும் அதற்கு முன்பு சீறிய டூவீலரையும் கடந்துதான் போகவேண்டும். வேகத்தடை மிக அருகில். ஒருவிதத்தில் வசதி. இன்னொருவிதத்தில் தடையிலிருந்து இறங்கியபிறகுதான் வேகம் பிடிக்கும்.

வாகனங்கள் வருவது தொலைவாகிப்போக ஒரே ஸ்பீடாக வண்டியை அடுத்த ரோடிற்கு வளைத்து நேராக்கிக்கொண்டு போனேன். வெயில் தலையிலிருந்து வியர்க்கத் தொடங்குவது தெரிந்தது. இளம் வெயிலின் ஷோபையை உரித்துவைத்திருந்தாலும் சூடு என்னவோ சுள்ளென்று இறங்குவதாகப்பட்டது. மாஸ்க் போட்டிருக்கிறேன். ஹெல்மெட்டைப் பிடிக்கவில்லை. உள்ளுக்குள் உடைந்து அங்கங்கே சுருங்கிப் போன ஸ்பாஞ்ச் கட்டிகள். வர்ஷியிடம் ஹெல்மெட்டை மடியில்வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு இரண்டொருமுறை லேசாக அவளுக்குக் கேட்கும்படி காலநிலைப் பதிவுகள் குறித்து விசனப்பட்டுக்கொண்டிருந்தேன். அவளும் ஊம் கொட்டிக்கொண்டே வந்தாள். பரவை பாலம். அங்கும் ஒரு வேகத்தடையிருக்கும். இம்முறை வண்டியை தடைக்குக் கொஞ்சம் அருகில் கொண்டுபோய் ஸ்லோவ் பண்ணியதில் வண்டி பிரேக்கை லூஸாகக் கொடுத்து தடையில் ஏற இறங்குகிறபோது லொடலொடவென்று சத்தத்தோடு திணறித் திணறி நின்றுவிட்டது. இருந்த கடைசிச் சொட்டுக் குமிழ்களையும் ஊதி உடைத்துவிட்ட திருப்தியதற்கு.

பெட்ரோல் இல்லையென்றால்தான் இப்படி வேகத்தடை ஏறியிறங்குகிறபோது திணறிப் போய் நின்றுவிடும். மண்டையில் உரைத்தது. பெட்ரோல் இல்லை. வண்டியை அது நிற்கத் தவிக்கும்போதே ஓரங்கட்டிக்கொண்டே போக பரவை பாலத்தையொட்டி வசதியாக வாகனங்களை ஓரங்கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் நின்றுதவியது. ஸ்டேண்ட் போட்டுவிட்டு சுற்றிலும் பார்த்ததில் அங்கே கொஞ்சம் தள்ளி லாரியொன்று நின்றிருந்தது. அது தவிர எங்கு பார்த்தாலும் வெயில்தான். வண்டி நிற்கிற இடத்தில் கண்ணாடிச் சில்லுகள் சிதறியிருந்தன. அது விபத்து பகுதி. நானே இரண்டொருமுறை பார்த்திருக்கிறேன். இது எப்போது நடந்த விபத்தென்று தெரியவில்லை. வெயில்பட்டு ஒவ்வொன்றும் மின்னி அழகாகத் தோன்றின. இதில் கோரமெதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

ஐந்து நிமிடங்களிருக்கலாம். வீட்டிற்கு அழைத்து தம்பியை வரச்சொல்ல வர்ஷி ஃபோனில் தொடர்பு கொண்டாள். ஃபோன் எடுக்கப்படவில்லை. அவள் முகம் கோணுவதிலிருந்து வெறுமனே காதில் ஃபோனை வைத்துக்கொண்டிருப்பதுபோன்ற அவஸ்தை புரிந்தது. பக்கத்தில் எங்கும் நிழலில்லை. பத்துப் பதினைந்தடிகள் தூரத்தில் சாலையோரமாக விழுந்திருக்கும் இரண்டு மரங்களின் நிழல்கள் அடுத்தடுத்து ஒன்றையொன்று பொதிந்தவண்ணம் தெரிந்தன. அவளிடம் சுட்டிக்காட்டிவிட்டு அங்குபோய் நிற்கலாமென்றேன். ஒப்புக்கொண்டு பின்தொடர்ந்தாள். ப்ரதான சாலைவெளியது. நிழலையொட்டி உள்ளொடுங்கித்தான் நிற்க முடியும் . அதன்விளிம்பில் நின்றுகூட எட்டிப் பார்க்கமுடியாது. கீழே குனிந்து பார்த்தேன். சாலையோரப் புல்வெளி. மழைக்குப் புதிதாகத் தழைத்த களைகள். ஒன்றிரண்டு மாஸ்க்குகள் மண்ணுக்குள் புதையுண்ட காட்சிகள். சில விவரம் சொல்லமுடியாத குப்பைகள். எதையும் இப்போது பொருட்படுத்தமுடியாது. மண்ணும் குளிர்ந்திருந்தது. இதற்குள் இரண்டு தடவைகளாவது தலைமுடியிலிருந்து கழன்றபடியிருக்கும் ஹேர்பேண்டை அவிழ்த்து இரண்டு சுத்துகள் போட்டு நிழலில் தலைபாகம் அகல முடிக்கற்றைகள் லூஸாவதைத் தடுக்க ஒழுங்குபடுத்தினேன்.

 *******************************************

அத்தியாயம் 3

சசியிடமிருந்து கடைசிக் குறுஞ்செய்தியைப் பார்த்த கணம் அத்துனை ஆதுரமானது.

லவ் யூ டியர்.

இந்த டியரில் அவன்தான் தெரிகிறான். அவன் மட்டும்தான். பூனை வீடியோ ஒன்றை அனுப்பிவைத்திருந்தான். ஓபன் பண்ணினால் ஓடிக் கொண்டேயிருந்தது. வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே இடையில் ஒரு குறுஞ்செய்தி. சூப்பர்ல. முழுமையாகப் பார்ப்பதற்குள் வந்த ரிசல்ட்டை எப்படி ஏற்றுக்கொள்வது. நீளத்தை ஓடவிட்டுப் பார்க்க முயற்சி செய்தேன். பலன் பெரிதாகயில்லை. பூனையொன்று தன் காதலி பூனையைத் தேடி வளர்ப்பிடம் மாற்றப்பட்ட வீட்டிலிருந்து ஓடிவந்துவிடுகிறது. காதலியும் வாஞ்சையாக வரவேற்கிறாள். பரஸ்பரம் தங்களது உள்ளன்புகளை வெளிப்படுத்தி நிற்க காதலிப் பூனையோடு தங்கி சில நாட்களைக் கழிக்கவிரும்புகிறது. நாட்கள் கழிவதற்குள் பெண் பூனைக்கு காதலனிடம் சின்னதாக ஊடல். ட்ஷ்யூமென்று ஒரு காலால் உதைத்து எட்டித் தள்ளுகிறது. இது அந்தக் காதலனுக்கு பெருத்த அவமானமாக காதலியைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விடுகிறான். இவளுக்காகவா இவ்வளவு தூரம் ஓடிவந்தோமென்கிற எண்ணமும் அதன் பின்னால் ஓடுகிறது. காதலி பூனை இதற்காகவெல்லாமா ஓடுகிறானென்று எண்ணமாகிறது. இடையில் பூனை பயணம் செய்கிற கார்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

 வேர் ஆர் யூ சசி..

சென்னைலதான்.. வீக்கெண்ட் ஊருக்கு வரணும்..

பெரிய இடைவெளி விட்டு ஒரு ரிப்ளை.

 எப்போ நம்ம மீட் பன்றது. எப்ப எனக்கு மீன் சமைச்சுத் தருவீங்க.

 ஒருநா வாங்கெ. நா செஞ்சு தரேனே..

அவனிடம் ஒரு மொழியிருக்கிறது. ஒவ்வொரு சொல்லின் முடிவிலும் உன்னை என்னிடமிருந்து கொஞ்சமேனும் வேறுபடுத்திக் கொள்கிறேனென்கிற மென்னியல்பு. அது செயற்கையாக சிலநேரங்களில் அலங்கரிக்கப்பட்ட சொற்றொடர்களாகத் தோன்றினாலும் அவன் அதுதான். அதோடு ஏற்கத்தான் வேண்டும். தன்னை யாருக்கும் ஒப்புக்கொடுக்க விரும்பாதவன். தனிமையற்றவன். அதோடு உலகம் ஒட்டாத ஊர்சுற்றி.

இந்த நேரத்துலே இன்னும் தூங்காமே. என்ன பன்றீங்க..

தூக்கம் வர்ல சசி. வெறுமை.

என்ன சொல்றீங்கெ உங்களுக்கு வெறுமையா??

ஆமா . ஏன் இருக்கக் கூடாதா.

இவ்ளோ அழகான பொண்ணுக்கு அப்படியென்ன வெறுமை..

ச்சும்மாதான்.

இல்லே. மனங்கள சம்பாதிக்கிற பொண்ணுக்கு என்ன குறை..

அழக வச்சுட்டு என்ன பன்றது சசி.

என்ன இப்டி சொல்லிட்டீங்கெ. இப்போ அப்டியென்ன வெறுமை. ஆரோக்யமான மனநிலையிருக்கிற பொண்ணு.

பதில் உடனே அளிக்கலாமா. இன்றிரவு எப்படிப் பார்த்தாலும் தூக்கம் வருவதற்கான அறிகுறிகள் இம்மியளவும் கண்களில் தெரியவில்லை.

ச்சும்மாதான் சசி. தூங்குங்க. குட் நைட். மொபைல்ல சார்ஜ் வேற இல்ல. லவ் யூ சசி.

முடித்துக்கொண்டேன். உண்மையில் மொபைலில் சார்ஜ் இறங்கி ஐந்து பர்ஸன்டேஜ்களுக்கு வந்து நொந்துகொண்டிருந்தது. அதையும் முற்றிலும் வெறுமையாக்க விரும்பவில்லை. மொபைலை பவர்பேங்கில் கனெக்ட் செய்துவிட்டு அறைக்குள் நடந்ததில் அந்தக் கடைசி குறுஞ்செய்தியின் அழைப்பொலி கேட்கவில்லை.

மீண்டும் படுக்கைக்கு வந்து மொபைலைத் திறந்து பார்த்தால் வாட்சப்பில் டியரோடு வந்துவிட்டுப் போயிருக்கிறான். இலகுவான மனிதன். அவனைக் கூறுபோட்டுத் திட்டினாலும் கூட ஓயமாட்டான். அவனிடம் அலைகளில்லை என்பது வேடிக்கை. இந்த டியர் என்னைப் புதிதாக அணைத்துக்கொள்ளும் வருகையாக கரம்கோர்த்துக்கொண்டு ஆறுதல்சொல்லும் உற்ற தோழமையாகயிருக்கிறது. இப்போது புதிய உறவொன்றை எனக்குள் ஏற்படுத்தியிருந்தான்.

நான் தூங்கப்போவதில்லை. திரைச்சீலையை இழுத்துவிட்டு சன்னல் கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறேன். உடலில் வெப்ப எரிச்சல் பனம்பழத்தில் இருந்து பிரியாமலிருக்கும் நார்களாக வெளியேறி அலைந்துகொண்டிருந்தன. உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் ஏதேதோ இடத்தில் புண்கள் வெடிப்பதற்கான தோற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தலையிலடித்துக் கொண்டேன் சடார் சடாரென்று. என் தலைபலம் உடைந்தாவது இந்த விதியை நான் உடைத்தெறியலாமென்று எண்ணினேனா. அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அவள் மார்புகள் திறந்து கிடக்கின்றன. ஆடையை உடுத்த முடியவில்லையென்று ஒருக்களித்துப படுத்திருக்கிறாள். அவள் மார்பின் நடுவே நீர்க்கட்டிகள். பெரிது பெரிதாகத் தொங்குவதைப் பார்க்க எனக்கு சக்தி போதவில்லை. அழுதேன். கண்ணீர் வெளியேறுவதற்குள் அவளே அழுதுவிட்டாள்.

ஏதாவது வெஷத்தக் கூட வாங்கிக்குடுங்க குடிச்சுட்டு செத்துப் போறேன்.

இதல்லாம் கேக்குறதுக்கா நானிருக்கறது. நான் போயி செத்துப் போறேன். சொல்ற எதையுமே நீ கேக்க மாட்ட. நீ கடைசி வரைக்கும் இப்டியே தான் யார் சொல்றதையும் கேக்கமாட்ட.

அறைக்குள் சூடு உச்சத்தைத் தொட்டு அடிவயிற்றில் ஏறியது.

அந்த டாக்டருக்கு ஃபோன் பண்ணியா.

பண்ணேங்க்கா.. நம்மதான் போனுமாம். அவங்க வரமாட்டாங்களாமே.

சரி இப்ப எப்டி போறது.

ஆட்டோக்கு வேண்ணா ஃபோன் பண்ணவா.

ம்ம் பண்ணு.

என்னால எந்திரிக்கவே முடிலப்பா. நா வர்லப்பா. இப்டியே கெடந்துகூட சாகுறேன். நான் வர்லப்பா.. . அம்மா இப்படித்தான். எந்த நோயாவது வந்து அதன் தீவிரத்தைக் காட்டத் துவங்கினால் செத்துப்போக முடிவெடுத்துவிடுவாள். இருப்பவருக்கு உளவியல் ப்ரச்சனைகள் இல்லாதவருக்கு உடல் ப்ரச்சனைகள். இதை அவளிடமே கூறியிருக்கிறேன். அவளுக்கு எதைப் பற்றிய புரிதலுமில்லை. உடலைப் பொருட்படுத்தாத ஜடம்.

நைட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு வந்தாள் வர்ஷி. அம்மா அழுதேவிட்டாள். வலி பொறுக்கமுடியவில்லையென்று கண்ணீர் உகுக்க இந்த முறை டாக்டர் மீது பாய்ந்தேன். வர்ஷியிடம் அந்த டாக்டர்ட்ட சொல்லு. ரொம்ப முடிலைனு சொல்லு காசு வேணா வாங்கிக்க சொல்லு. ஒரு அவசர ஆத்தரத்துக்கு கூட வரமாட்டாங்களா.. என்ன டாக்டர் இவங்க. சொல்லு.. பேசிப்பாரு. அப்டி அவ வர்லனா அவ நல்லாருக்கமாட்டா. நாசமாப் போய்டுவா. ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு பால்கனிக்கு ஓடினேன். அதற்குள் டாக்டர் வந்துவிடுவதாக ஒத்துக்கொண்டாராம். சரி ஆட்டோலயே போய் கூட்டிட்டு வா. இல்லக்கா பைக்லயே எங்குட வர்றாங்களாம். சரி.. அப்போ ஆட்டோவ திருப்பி அனுப்பிடு.

ஆட்டோக்காரரிடம் சொன்னதற்கு அவர் சும்மா வந்துவிட்டுப் போவதை ஒத்துக்கொள்ளவில்லை.

இவ்ளோ தூரம் வந்துட்டு எப்டி சும்மா போறது ஒரு அம்பதுருவா குடுங்க..

வர்ஷி வந்து ஆட்டோ விவரம் சொல்ல,

சவாரியே போகாம எப்டி காசு தருவாங்க. போ போய் சண்ட போட்டு அனுப்பு.

அவன் தர்ணாவில் இறங்கினாலும் இறங்கிவிடுவான்போல. இவள் வாதம் செல்லவில்லை. அம்பது ரூபாயை எடுத்துக்கொண்டு போனாள்.

மதியம் மல்லாந்து படுத்திருந்தாள். மார்பகக் காம்புகள் கூர்மையற்று விரிந்த நிலையில் முலைகள் உடல் சதைகளோடு சதையாக மலர்ந்து கிடந்தாள். ஆணுக்கும் பெண்ணும் என்ன வேறுபாடிருக்கிறது. இப்போது அம்மாவின் உடல் மார்பகங்களால் ஓர் ஆணின் உடலிலிருந்து வேறுபட்டவளாகத் தெரியவில்லை. பாதி திறந்த மேனியாகத்தான் இரண்டு நாட்களாக நடமாடியும் படுத்தும் கிடக்கிறாள். அவளை மார்பை மறைக்கச் சொல்ல யாருக்கும் உறுத்தவில்லை. அம்மா வெறும் உடலாகயிருந்தாள். மார்பகங்களில் காமமோ மானமோ மறைந்திருக்கவில்லை. சதை. அவள் நல்ல சிவப்பு. சிவந்த உடலில் அக்கிக் கொப்பளங்கள் மார்பகங்களுக்கு நடுவே சடை பிடித்திருந்தன. முதுகிலிருந்து மார்புவரை படர்ந்த அக்கிக் கட்டிகளோடு போராடிக்கொண்டிருக்கிறாள். என் தலையெழுத்து முதலில் குறுனையாகத் தோன்றியது. இப்படிப் பெரிது பெரிதாகப் பார்க்கும்படி செய்துவிட்டாளே. அம்மா.

அம்மா என்னை நினைத்துக்கொண்டிருப்பாள். என் வலி அவளுக்குப் புலப்பட்டிருக்கும். இன்றிரவு வலி குறைந்துவிடுமென்றார் டாக்டர். நான் சபித்த டாக்டர். புண்களுக்கு மேல் தடவ லோஷனும் மாத்திரைகளும் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். நாளை மீண்டும் வலிக்குமென்றார். ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து இருக்கும்வரை வலியிருக்காதென்றார். லோஷன் போட்டுவிட்டிருக்கிறார்களாம். எரிச்சல் குறைந்திருப்பதாகச் சொன்னாளாம்.

 இன்னும் நான் உறங்கவில்லை. அம்மா என் உறக்கத்தை எடுத்துக் கொண்டு விட்டாள். அவள் தூங்கட்டும்.

 ************************************************

அத்தியாயம் 4

பாத்திரம் தோய்க்கும் சிங்க் அருகில் விரிவுவிட்ட சில்வர் குண்டானொன்றை வைத்திருப்பார்கள். உணவுக் கழிவுகளை அதிலிடுவதற்கு. நிரம்பியதும் கொண்டுபோய் கொட்டிவிடுவார்கள். இது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருப்பது. காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். வெம்மை பொறுக்கவில்லை. உடலை அசதியாக்கி ஈரம் பாரித்துக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் நெருப்புப் பந்தொன்றில் காற்றை நிரப்பியதுபோல சுழன்று உருளப்போவதுபோல பாவித்துக்கொண்டிருந்தது. படுக்கையில் அதற்குமேல் படுத்திருந்தால் வெம்மை குப்பென்று உச்சந்தலைக்குப் பரவி உப்பிவிடும்.

பாரா வேறு எழுப்பிவிட்டுக்கொண்டேயிருந்தான். அவனுக்கு என்னவாயிற்று திடீரென்று . நேற்றிலிருந்து என் கால்களையே கட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறான். அவனுக்கு என் அன்பு தேவை. ஒருவேளை கால்களை விட்டுவிட்டு மொத்தமாகக் கட்டியணைத்துக்கொள்ள விரும்பலாம். அவனுக்கு வேண்டியவளின் தந்தை இறந்துவிட்டாராம். இப்போதெல்லாம் மரணங்களைக் கடந்து போகமுடியவில்லையென்றான். கொரனோத் தொற்றுக்கு உயிர்கள் மடிந்துகொண்டிருந்தன. தினமும் காலை மாலை இரவு மதியமென மரணங்களை ஸ்க்ரோல் செய்வதும் நண்பர்களின் தொற்றுகளை உறுதிசெய்வதுமாக முகநூல் கணக்கு ஓடுகிறது. பாராவிற்கு சொல்ல முடியாத வேதனை.

என்னைக் கடத்திக்கொண்டுபோக முயற்சிக்கும் கூட்டத்தினரிடமிருந்து தப்புவிக்க அறைக்குள்ளேயே முடங்கியிருக்கும்படி அவன் மெசேஜ்ஜூகள் ஊக்குவித்தன. சன்னல் வழியே பார்த்தால் கொள்ளையர்களில் ஒருவன் அசடாகச் சிரித்து வழியத் தேடிக்கொண்டிருக்கிறான். பாராவிற்கு என்னைப் பிடித்திருக்கிறது. என்னறைக்கு வருவதாகச் சொல்லி டெக்ஸ்ட் பண்ணியிருந்தான். சொன்னதுபோல வரவும் செய்தான். அவனுக்கும் எனக்கும் பொதுவாக வீட்டில் எல்லோருமிருந்தார்கள். அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாராவிற்கு என்ன வேண்டும். மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்கு இந்த நேரத்தில் மரணங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். மரணமென்பதை சிறிய குமிழியாக உருவகித்திருந்தான். அந்தக் குமிழி எல்லோருக்குள்ளும் ஒருநாள் உடையத்தான் போகிறது. இப்போது அவன் குமிழ்கள்விடத் தொடங்கியிருக்கிறான். அவன் குமிழை அவனே தேடிக்கொள்பவனாக என்னையும் எழுப்புகிறான். அவனுக்கு இந்த நேரத்தில் என் அருகாமை வேண்டும். பாரா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாய்?!.

காலையில் எழுந்ததும் வழக்கமாக அருந்தும் பானத்தைத் தயாரித்து ஆறவைத்துப் பருகியதும் இன்றைக்கு ஏனோ சூடு வெகுவாக ஆறிவிட்டது. பானத்தில் போட்டிருந்த சீரகம் , இஞ்சித் துண்டுகள், வெள்ளைப் பூண்டுகள், கறிவேப்பிலை இலைகள், சாறு பிழியப்பட்ட அரை மூடி எலுமிச்சைத் தோலைக் கொண்டுபோய் கழிவுக் குண்டானில் கொட்டினேன். அது ஏற்கனவே நிரம்பி முட்டியிருந்தது. நான் கொட்டபோய் கறிவேப்பிலைகள் உடலமாக எலுமிச்சை வட்டம் தலையாக அமர்ந்திருக்கிறது. இட்டிலிகளை நின்றவாக்கிலேயே சாப்பிடுகிறபோதுதான் இந்தக் காட்சியைக் கவனித்தேன். மாஜியானின் நாக்கைநீட்டு நாவலில் விண்ணடக்க அத்தியாயத்தில் விண்ணடக்கத்திற்காக உட்காரவைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணைபோலவே தோன்றுகிறது பானக் கழிவுகள். உடல் என்பது இறந்தபின் கழிவுகளாக நீக்கப்படும் உறுப்புகளாலானதா?!இந்த எலுமிச்சைத் தலையில் எந்த அசைவுமில்லை. உடலிலும்.

அம்மா அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள். கிட்டத்தில் போய் பார்த்தால் அவள் கண்ணருகே சிவந்த வீக்கம். ஒருவேளை முகத்திலும் வந்துவிட்டதா?. இல்லை. இது மலம் கழிக்காததால் வந்திருக்கலாம். இரண்டு நாட்களாகப் படுத்தேகிடக்கிறாள். ஒற்றைவிரலால் வீக்கத்தைத் தொட்டுப் பார்த்தேன் உடல் பதமான சூட்டில் கிடந்தது. மார்புக்கு நடுவே சில கட்டிகளிலிருந்து வழிந்தோடிய நீர் உறைந்த தடங்கள் வற்றிப்போயிருந்தன. பெரிய கட்டியொன்று பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அம்மாவின் பக்கத்தில் நான் போவதில்லை. அவள் தூரத்திலிருந்தே சூட்டுக்கு இழுக்கிறாள். என்னுடல் பற்றியெரியும். இன்று தணிந்திருக்கிறாள் கொஞ்சம். சீக்ரம் சரியாய்டுமென்றேன். தூக்கத்தில் ஊம் கொட்டினாள். அவள் இப்போது தூங்குவதே பெரிது. மூச்சுவிட்டால் முதுகுப்புறம் பிடித்திருக்கிற அக்கிகள் வலிப்பதாகச் சொன்னாள். மார்புக் காம்பு வீங்கியதைப் போலத் தெரிய உற்றுப் பார்த்தேன். வீக்கம் எதுவுமில்லை.

தண்ணீர்ப்பழ கீற்றுகளைச் சாப்பிட்டபடியே காலையில் அவளறைக்குப் போனபோது கதவருகே நின்றுவிட்டேன். என்னால் தண்ணீர்ப்பழங்களை அவளைப் பார்த்துக்கொண்டு சாப்பிட முடியாது. துண்டு துண்டாக நறுக்கப்பட்ட கீற்றுகளில் ஒன்றை ஃபோர்க் ஸ்பூனால் குத்தியெடுத்து வாயில் வைத்தால் கட்டியைச் சுவைப்பதுபோலிருந்தது. அம்மாவையும் அவள் மார்பையும் பார்க்காமலே சுவரைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தேன். அவளுக்கான துண்டுகளை அனுப்பிவைப்பதாகச் சொல்லிவிட்டு அறைமுகப்பிலிருந்து அகன்றேன்.

மாலை 4. 36 மணியாகிவிட்டது. சுர வெயிலென்று சொல்வார்கள். மழை வருகிற தினத்தில் லேசாகப் புளிப்புத் தட்டுவதுபோல ஈரப்பதத்தில் வெயில் உச்சியைப் பிளக்கும். இன்றைக்கும் அதேவெய்யில்தான். கிளிக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கலர்க் கோழிக்குஞ்சுகள் ஒன்றாக மிய்மிய்மியூ மிய்மியூவென்று ஆளைத் தேடிக் கொண்டிருந்தன. என்னைக் கண்டதும் அவைகளுக்குப் பழக்கப்பட்ட கத்துதல் வந்துவிடுகிறது. இனி கவலையில்லை யென்பதை வெறும் வார்த்தைகளற்ற உச்சரிப்புகளால் அவைகளால் தெரிவிக்கமுடிகிறது. கூண்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் தானியக் கிண்ணத்தில் ஒன்று இறங்கி விட்டது. பொடித்த அரிசிகளைத் தள்ளிவிட்டு ஒவ்வொன்றும் தரையில் கிளைத்துவிட்டுத் தேடியெடுக்கின்றன அவற்றிற்கான தானியங்களை. காய்ந்த துணிகளை ஒவ்வொன்றாக உயரத்திலிருந்து உருவியெடுக்க வெண்மை பூத்த மேகக் குழைவுக்குள் கருகிய மேகமொன்று சிதையாக எரிந்து கொண்டிருக்கிறது. இது என்ன குறியீடு. எல்லா மேகங்களையும் எல்லாத் திசைகளிலும் காணத் தோன்றியது. மேகங்கள் எனக்கு வலது புறத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. அவை வெண்ணைய்க் கட்டிகளாக திண்மையுற்றிருந்தன. இன்னும் சில மேகங்கள் கருகிக் காற்றில் பறந்து கொண்டிருந்தன. இதற்குப் பெயர்தான் விண்ணடக்கமா. கருகிய சிதையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த பெரிய மேகக் குழைவின் கீழ் சில மேகங்கள் கரைந்தோடிக் கொண்டிருந்தன. முதன்முதலாகக் கானல்நீரைப் பார்த்த உணர்வு. நீரோடுகிற வரிகள் கண்ணை மறைக்கின்றன. இது கானல்நீர்தான்.

நேற்றிரவு தெற்கு வானில் இரண்டு நட்சத்திரங்கள் நேர்கோடாக கொஞ்சம் சாய்ந்தும் சற்று தள்ளி மூன்று நட்சத்திரங்கள் முக்கோண வடிவிலும் காட்சியளித்தன. என்ன சொல்ல வருகின்றது. எனக்குள் வான சாஸ்த்திரத்தை யாரோ நிர்மாணித்திருக்கிறார். அவரின் கண்களால் பார்ப்பது போலிருந்தது. வானத்தைவிட்டு நேற்றிரவு விலகிப் போனதைப் போலவே உருவிய துணிகளைச் சுருட்டிக்கொண்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினேன்.

***************************************

அத்தியாயம் 5

பின்னால் திரும்பிப் பார்த்தேன். மஞ்சளும் இளஞ்சிவப்பும் கலந்த பூக்கள் பூத்திருந்தன. குருனையிதழ்கள் அவைகளுக்கு. இவைதான் இங்கு இழுத்துக்கொண்டு வந்திருக்கவேண்டும். முகத்தை ஏறுமுகமாகவே வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. வீட்டிலிருந்து தம்பி வந்து கொண்டிருக்கிறான். அவன் வந்து கொண்டிருக்கிறான். மேற்குப் பக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்தோம். பத்து ஷேர் ஆட்டோக்களிருக்கும். ஒவ்வொருவராக நின்று நின்று விளாங்குடியா, காளவாசலா , பெரியாராயென்று கேட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு பதில் வேண்டிய இடத்தில்தான் இப்போது நிற்கிறோம். எதிரே சாலையின் அந்தப்பக்கமாக நெல்வயல். நெல்மணிகளைத் தூவிக்கொண்டிருந்தார்கள். தலையில் நூல்துண்டைச் சுற்றியபடி விசிறியடித்துக் கொண்டிருக்குமவரின் கையில் விரிகிற நெல்மணிகளைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். வயலுக்கு அடுத்து வீடுகள் தென்பட்டன. ஊர் இருப்பதாகத் தோன்றியது. வர்ஷியிடம் அரைமனதாக அந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி என்ன ஊரென்றேன். அவளுக்குத் தெரியவில்லை. பிறகுதான் ஒரு விஷயம் சொன்னேன். கைல நீ ஹெல்மெட் வச்சுருக்க அப்டியிருந்தும் ஆட்டோவான்னு கேக்குறான் பாரு. ஹ்ம்ம் என்றவள் வாய்க்குள்ளேயே சிரித்தாள். வயலையடுத்த ஊர் என்னவாகயிருக்கும். கிழக்குப் பக்கமாகப் போனால் கொஞ்சத்தில் செக் போஸ்ட் வரும். ஆனால் யாரோ ஒருவர் வந்தார். வந்தவர் "பெட்ரோல் இல்லயாப்பா.. . போம்போதே பாத்தேன்.. வாங்கிட்டு வரவாப்பா.. அவர் பெயர் சொல்லாத அந்த பெட்ரோல் பங்க் பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு வந்துவிடும். வண்டியை அதுவரை கொண்டு சென்று விடலாமென்கிற நம்பிக்கையோடுதான் புறப்பட்டது. இப்போது வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது.

இல்ல வீட்லர்ந்து வருவாங்க சார். ரொம்ப தேங்க்ஸ் சார்.

பாத்தேன்பா அதான் போய்ட்டு திரும்பி வரேன். சரி ஒரு அர லிட்டர் பெட்ரோல் வாங்கிக் குடுத்துட்லாம்னு ..

இல்லைங் சார் வந்துட்ருக்காங்க .. . தேங்க்யூ சார்.

அவருக்கு மனதேயில்லை வண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தவழியே போவதற்கு. வெளிர் நீலத்தில் சட்டையணிந்திருந்தார். நல்ல மனிதர். எதிர்பாரா உதவியாக வந்தவர்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றதில் உடலிலிருந்து எனர்ஜி கசிவதும் நலிவதுமாகயிருந்தோம். எங்களிருவரையும் கூட இப்போது யாராவது தாங்கிப் பிடிக்கவேண்டும். தம்பி வருவது தெரிந்தது. வர்ஷி முன்னால் நடந்து போனாள். அவளுக்குப் பின்னால் உக்கிரத்தைக் குறைத்துக்கொண்டே அடிமேல் அடியாக நிதானித்தேன். நிழலடிகளை மிதித்துப் போவது சமரசமாகயிருந்தது.

வண்டியிலிருந்து கொஞ்சம் பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி டேங்க்கில் ஊற்றினோம். அவனும் எங்கள் பின்னால் வருவதாகச் சொல்லி தொடர்ந்தான். வண்டி மூச்சு முட்டுவதுபோல நகரத் தொடங்கியது. மொத்த மூச்சையும் டேங்க்கிற்குள் ஊதிவைத்திருக்கிறது போலும். சரியாக செக் போஸ்ட்டைக் கடந்து விஸ்த்தாரா அப்பார்ட்மெண்ட்டிற்கு எதிராக வேகத்டையில் ஏறி இறங்கும்போது ஓரங்கட்டியது. இம்முறை நிழல்கள் அடர்ந்த மரங்களினடிக்குப் போனது ஒன்றுதான் ஆறுதல். மற்றபடி இதென்ன சோதனை?. மரத்தடியில் மாஸ்க்குகள் ஸ்டேண்டோடு நின்றுகொண்டிருந்தான் அவற்றை விற்பவன். தம்பி எங்களிடம் சொல்லிவிட்டு பெட்ரோல் பங்கிற்கு விரைந்தான். சரி மாஸ்க் வாங்கவேண்டுமென்று நினைத்தது. இங்கேயே வாங்கிவிடலாம். சீட்டுக்கடியில் பிக்‌ஷாப்பருக்குள் வைக்கப்பட்ட ஹேண்ட் பேக்கிலிருந்து அம்பது எடுத்தேன். வர்ஷியிடம் சொல்லிவிட்டு ஸ்டேண்டிற்கு நடந்தேன். மாஸ்க் வாங்கவந்த ஒருவனிடம் சில்லரையில்லையென்று வாங்கிய அம்பதைத் திருப்பிக்கொடுத்துக்கொண்டிருந்தான். மாஸ்க் வாங்கியவனுக்கு அப்போது முப்பது ரூபாய் மீதி கொடுக்கவேண்டும். விற்பவன் வயதில் சிறியவனாகத் தோற்றமளித்தான். நான் தம்பியென்றே அழைப்பேன். இந்தாப்பா நீயே வச்சுக்க .. ஏங்கிட்டயும் சேஞ்ச் இல்ல.. பர்சை மூடிக்கொண்டே பேசினான். தம்பி மாஸ்க்குகளை எடுக்கப்போனான். வாங்கியவனோ மாஸ்க் இல்லப்பா காச எடுத்துக்க. இவன் தயங்கினான். வச்சுக்கப்பா என்றான். ஒரே தாவாக அவனுக்காக டூவீலரில் அதுவரை காத்துக்கொண்டிருந்தவனின் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டான்.

மாஸ்க் தம்பி என் முகத்தை அரைகுறையாகவே பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு மாஸ்க்குகளை வாங்கிக்கொண்டு அம்பதைக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். அவனிடம் பேரம்பேசத் தோன்றவில்லை. அவனுக்கும் என்னைச் சமாளிக்கவேண்டும். அதற்காக அதிகம் பேசாதவனாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருந்தான். இவனிடம் பேசிப் பிரயோசனமில்லை.

விஸ்த்தாராவைப் பார்த்தபடி நிற்கக் கொஞ்சநேரம் கிடைத்தது. தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் இந்த வழியே வந்தால் நம்மைப் பார்ப்பாரா பார்க்காததைப்போலக் கடந்து விடுவாரா. டூவீலர்கள் உள்ளிருந்து வந்தபடியேயிருந்தன. எல்லோர் முகங்களும் முக்கால்வாசி மூடப்பட்டு மறைக்கப் பட்டிருந்தது. தம்பி வந்து விட்டான்.

***************************************************

அத்தியாயம் 6

மூக்கை கண்ணாடியில் பதித்து முகத்தையும் கண்ணாடியில் புதைத்துப் பார்க்கவேண்டியிருந்தது. சன்சீட்டில் உட்கார்ந்திருக்கும் மைனாவின் குரல் கேட்டு சன்னல் கதவைத் திறக்கவில்லை. பனி சூழ்ந்த வெளியாகத் தெரிந்த மைனாவின் காலநிலையோடு தொலைவில் மலைத்தொடரும் பனிமூட்டத்தில் ஆழ்ந்திருந்தது. முகத்தை இப்போது நான் எடுக்கப்போவதில்லை. கதவைத் திறந்தால் எல்லாம் வெளிச்சமாகிவிடும். மைனாவின் கால் தன் பாதவிரல்களால் ஒற்றைக்கால் நடனமுயற்சியை மேற்கொள்வதாகயிருந்தது. யாரையோ அழைத்துவிட்டது. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டும். தரிகினதத்தோம் போட்டுக்கொண்டிருக்கிறது. கண்ணாடியை விலக்கித் திறந்தேன். மைனாவைச் சுற்றி வெயில் பாய்ச்சிக் கொண்டிருந்தது பகல். ஆட்டமெல்லாம் முடிந்து சட்டென்று பறந்துபோக கீழே இன்னொரு சன் சீட்டில் உடன் துணைக்கு வந்து சத்தமில்லாமல் அமர்ந்திருந்த மைனாவும் பறந்துபோனது. இருவருக்குள்ளும் இடைவெளி குறுகியது.

அம்மாவிற்கு நுங்கு உரித்துக்கொடுக்கச் சொல்லியிருந்தேன். நுங்குத் தோலை உரித்தவள் பீசு பீசாக அவற்றைப் ப்ளாஸ்டிக் முறத்திலேயே போட்டு வைத்திருந்தாள். ப்ளாஸ்டிக் முறம் டஸ்ட்பின்னை மூடியிருக்கும். மறுநாள் காலையில்தான் கவனித்தேன். எல்லாம் உலரத் தொடங்கியிருந்தன. ஒவ்வொன்றும் ஒரு புண்ணாக அதன் தோலாகத் தெரிந்தன. அம்மாவின் பழுத்த புண்கள் இப்படித்தான் உலர்ந்து கொண்டிருக்கும். எல்லாச் சிதைவுகளையும் குப்பைத் தொட்டியில் தட்டினேன். முக்கால்வாசி உதிர்ந்தன. உதிராதவை ஈரம் பிடித்து முறத்திலேயே ஒட்டிக் கொண்டிருந்தன. பலமாகத் தட்டினேன். முடிந்தவரை உதிர மீதியை குப்பைத்தொட்டியை மூடியபடியே எடுத்துச் சென்றேன். பால்கனி வெயிலில் வைத்தால் ஈரம் வற்றி மீதியுள்ள புண்கள் காய்ந்துவிடும். குப்பைத்தொட்டியில் தள்ளிவிட்டு பிசுபிசுப்பாகயிருக்கும் தூசுகளையகற்றி கழுவி வைக்க வேண்டும். முறமும் குப்பைத்தொட்டியும் சேர்த்தே தூய்மைப்படுத்தப்பட வேண்டும். வெயில் பட்டால் கிருமிகள் அழியும்.

அந்திவெளிச்சம் கூடுதலாகயிருந்தது. டாக்டர் வந்தாள். இம்முறை அவரை வாசலிலிருந்தே வரவேற்க முடியவில்லை. பேச்சுக்குரல்கேட்டு அறையைவிட்டு வெளியேறினேன். அம்மாவை நலம் விசாரித்துக்கொண்டிருந்தாள். எடுத்துவந்த ஊசிமருந்தின் மொழமொழப்பான கண்ணாடித் தலையை உடைத்துத் தரச் சொன்னாள் இன்றும். ஊசியேற்றியபிறகு சிரிஞ்சையும் அது எடுக்கப்பட்ட கவரையும் கையில் திணித்தாள். குப்பைப் பையில் வைத்துவிட்டு மீண்டும் அங்கேயே வந்தேன். டாக்டர் பொட்டு வைக்கவில்லை. அல்லது அவர் கிறித்தவராக இருக்கக்கூடும். இரு புருவங்களின் மத்தி பொட்டு வைக்காமலும் இயல்பாகப் பொருந்திப் போயிருந்தது. கண்ணோடு கண் பேசுகிறாள். மூக்குவரை மாஸ்க். அவள் பேச்சிலும் செயலிலும் கவனிப்பிலும் விசாரிப்பிலும் எதார்த்தம் மிஞ்சியிருந்தது. இன்று அடர் ரோஸ் நிறக் குர்தியும் ப்ளூகலர் பட்டியாலா பேண்ட்டும் அணிந்திருந்தாள். என்னவோ சில கணங்கள் அவளைப் பார்க்கத் தோன்றியது அப்படியே. பிறகு கிளம்பி விட்டாள். இன்றைக்கு ஃபீஸ் குறைத்துச் சொன்னாள். ஏனோ?!.

புண்கள் சூம்பிப் போயிருந்தன. இனியின்னும் அவை குணமடைந்து ஒடுங்கிவிடும். குணமடைந்து விடுவாள். டாக்டர் வந்துபோனபிறகு புகைநிற மேகப்பொதிவிலிருந்து பனிநிறத்தில் பிரிந்து கசிந்து பிரிந்துபோகிறது மேகப்பொதி. அம்மாவின் கட்டிகள் மேலும் தணிகின்றன.

இரவில் மூன்று சப்பாத்திகளுக்குப் பிறகு பசி. அணில் பசி. ஆம்லேட் சாப்பிடலாமென்று ஆசை. ஏற்கனவே போட்டுக் கொண்டிருந்தவர்களின் வீட்டிலிருந்து உருக்கும் வாசனை. வீட்டிலிருப்பவர்களிடம் போட்டுத் தரச் சொல்லி ஒரு விள்ளல் விண்டெடுக்க அம்மாவின் புண்ணாக வலுக்குகிறது. பசி புண்ணறியாது. முதல் விள்ளலுக்குப் பிறகு தேற்றிக் கொண்டேன் என்னை.

தம்ளர் நீர் பிடிக்கவில்லை. இந்த நாட்களில் வீட்டில் சுத்தமில்லை. என்னவோ அருவருப்புத் தட்ட அறையிலிருக்கும் வாட்டர்பாட்டிலைத் தேடினேன். மூடியைத் திறந்து குடித்தால் அம்மாவின் புண். முதல் வாய்க்குப் பிறகு தயங்கினேன். பின் சமாதானமானேன்.

அம்மா குழந்தை போலயிருக்கிறாள் இன்னமும். வலிக்குதுப்பா என்கிறாள். வலியைப் பொறுத்துக்கொள்ளச் சொன்னேன். வலியை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வலிக்குதுப்பா என்கிறாள். வலியை என்னால் மட்டும் எப்படிப் பொறுக்கமுடியும். இரண்டு நாட்களில் சுத்தமாகச் சரியாகி விடுமென்றேன். பொறுத்துக் கொண்டாளென்று நினைக்கிறேன்.

குளியலறையில் புதிதாக சின்னச் சின்னதாக கருத்துத் தென்படுகிற தழும்புகளின் பேட்சை இதற்கு முன்பு கண்டதேயில்லை. திரும்பத் திரும்ப குளியலறைக்குப் போகிறேன். தழும்புகளைப் பார்க்கிறேன். அம்மாவின் புண்கள் உதிர்ந்தபிறகு தழும்புகள் இப்படித்தான் தோன்றும்.

அம்மாவிற்கு மாதுளை ஜூஸை அடித்துக்கொண்டு வந்தேன். தம்ளரில் வாங்கி முதல் வாய்க்கு ஆத்திரப்பட்டவள் வெதையா இருக்குப்பாயென்றாள். மிக்ஸியிலிருந்து ஊற்றும் போதே நினைத்தேன் வடிகட்டலாமென்று. என் கண்களுக்கு பழச் சதைகளின் கூழ்மமே அடர்த்தியாகத் தெரிந்தது. அம்மா விதைகளைக் கண்டறிந்தாள். தண்ணீர் வடிகட்டும் வடிகட்டியில் ஊற்றி ஸ்பூனால் கூழ்மத்தை அழுத்த விதைகள் புண்களின் வேர்களாகத் தோன்றுகின்றன.

அம்மாவின் திறந்த முலைகளில் பாலுறிஞ்சிக்கொண்டிருக்கின்றன அக்கிக் கொப்புளங்கள். அம்மாவிடமிருந்து வருகின்றன கொப்புளங்கள் ஒன்றோடொன்று மோதும் கசகசப்பு.

நானே என் சப்பாத்திகளை தயாரித்துக் கொள்ள முன்வந்து விட்டேன். இரவு மூன்று சப்பாத்திகள். மூன்றையும் சுட்டு முடிக்கப் போகிற நேரத்தில் மூன்றாவதில் டப்பென்று வெடிக்கிறது ஓரிடத்தில். வெடித்த துளையைத் தேடுகிறேன். முதன்முதலாக வெடிக்கப் போகிற கொப்புளமது.

அம்மாவிலிருந்து நான் விழப் போவதில்லை.

 ******************************************

அத்தியாயம் 7

கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு வளாகத்திற்குள் நுழையும் முன் பையைக் கொடுத்து கட்டி வாங்கிக் கொண்டோம். மறக்காமல் ஆட்டோமேட்டிக் சானிட்டைஷர் மிஷினுக்குக் கீழே உள்ளங்கையை நீட்டி திரவத்தை வாங்கி மற்ற உள்ளங்கையிலும் தேய்த்துக் கொண்டேன். இன்னொரு முறை உள்ளங்கை நீட்டி வாங்கியதில் மணிக்கட்டுவரை அப்ளை செய்துவிட்டு நுழைந்தேன். அம்மாவிற்கு வெண்ணை வாங்க வேண்டும். யுட்யூபிள் அக்கிக் கட்டிகள் குணமாக ஊமத்தை இலையை அரைத்து வெண்ணெய் கலந்து பூசி வந்தால் குணமாகுமென்றிருந்தது. ஒன்றிற்கு இரண்டு முறை செக் பண்ணிவிட்டேன். இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்தும் இந்த மருந்து ஆமோதிக்கப் பட்டிருந்தது. பழங்கள் வாங்கும் பகுதியிலிருக்கும் ஃபிரிட்ஜில்தான் எப்போதும் வெண்ணெய் பாக்கெட்டுகளும் பன்னீர் பாக்கெட்டுகளும் பேபிகார்ன் பாக்கெட்டுகளும் போட்டு வைத்திருப்பார்கள். ஆப்பிள் மாதுளைகளை எடைபோட்டு லேபிள் ஒட்டுபவரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பழத்தை அது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் வரிசையில் தேட ஒவ்வொன்றும் அளவில் எடையில் கூடியதாக தேர்வுசெய்ய சிரமமாகயிருந்தது. நான் தேடிக் கொண்டிருப்பது மீடியம் சைஸில். அப்படிக் கிடைத்த முதல் பழத்தில் லேசான பழுப்புத் தழும்புகள் கண்ணில் பட்டுவிட அப்படியே வைத்துவிட்டு எல்லாப் பழங்களையும் தூக்கித் திருப்பிவிட்டுப் பார்த்துவிட்டேன். முதல் பழத்தைப் போலவே இன்னும் சில பழங்களில் பழுப்பு நிற தழும்புகள். அழுக்கு நிறங்களிலும் அவை தோன்றின. அதற்கு முதல் பழமே பரவாயில்லை. எடை போட்டதில் ஐந்துகிலோவிற்கு அருகில் வந்து ஒட்டப்பட்டிருந்தது லேபிள்.

இந்த வெண்ணெய்லாம் எங்கருக்கு..

ந்தா அங்க பாருங்க.

அந்த வெண்ணெ நாட்டு மருந்துக்கு யூஸ்பண்லாமா.

தலையை பலமாக அசைத்து மறுத்து விட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கென்னவோ உள்மனதில் அப்படியொரு வகையும் இருக்குமென்றே தோன்றியது. இருந்தாலும் அவர் சொன்னதிற்கு பிறகு அவரின் மறுப்பு உள்ளேபோய் வேலை செய்யத் தொடங்கியது. டவுனுக்குதான் போவனுமென்றார். டவுனுக்கு இனி எப்படி போக.. அம்மாவிற்கு வலியின் தீவிரம் அதிகமாகியிருந்தது. புலம்பிக் கொண்டே பழங்களை பில்லிங்கிற்குக் கொண்டு போனால் சரியாக நாங்கள் போய் நிற்கவும் கம்ப்யூட்டரில் பில் வரவில்லை. சரிதான். பேஸ்கட்டைத் தூக்கி மேலே கம்ப்யூட்டருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு வெண்ணெயைத் தேட ஓடினேன். அந்த எடையாளர் பார்க்காமலிருக்க வேண்டும். தேவையில்லாமல் அறிவுரை வழங்கக்கூடும். கொஞ்சம் திருட்டுத்தனம் மிகுந்திருந்தது. ஃபிரிட்ஜைத் திறந்தால் அமுல் பட்டர் என்றிருந்தது. தெரிந்தோ தெரியாமலோ அன்சால்ட்டட் பாக்கெட்டிருப்பது தெரிய அது சரியாக வருமென்றே தோன்றியது. எடுத்துக் கொண்டு பில்லிங்கிற்கு ஓடினேன். மீண்டும். அங்கு வேலை ஓடவில்லை.

சூப்பர்வைஸர் கம்ப்யூட்டரை ப்ரோக்ராம் செய்து கொண்டிருந்தார். வெயிலில் பயணித்து வந்ததில் தாகம். எனர்ஜியும் சுத்தமாகயில்லை. அடுத்த ஃபிரிட்ஜிற்கு ஓடினேன். கூல்ட்ரிங்க்ஸ் வகையறாக்கள், சமையலுக்குத் தேவையான வாசனைப் பொருட்கள் , ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் சில நாட்டு மூலிகைகள் கிடைக்கும் பகுதிக்குப் போகிற வழியிலிருக்கும். மாஸா ஒரு லிட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு பில்லிங்கிற்கு வந்தால் கம்ப்யூட்டருக்கு வெறுமனே நின்றே கால்கள் வலித்துவிடும். இன்னும் ரெடியாகவில்லை. பக்கத்து பில்லிங்கில்போய் நின்றேன். பில்லிங்கை முடித்துக்கொண்டு வளாக வாசல்படிகள் ஒன்றில் அமர்ந்து மாஸா பாட்டிலைத் திறக்கலாமென்றால் பாட்டில் முழுக்க வெளிப்புறமாக மண். தூசிகள் மண்ணாக அப்பிக் கொண்டிருந்தது. துடைக்க எதுவுமில்லை. ஸ்டோலின் நுனியால் துடைத்து விட்டுத் திறந்தேன். முடி வாய்க்குள் மிதந்து நீந்தியது. வேறு வழியில்லை குடித்துக் கொண்டேயிருந்தேன். முதல் துளி மோவாயிலிருந்து வழிந்து எரிச்சலூட்டியது. வர்ஷியிடம் நீட்டினேன். அவள் வாங்கிக்குடித்துவிட்டு என்னிடமே நீட்டினாள். மூடியை எடுத்து மூடப்போனால் பாட்டிலின் வெளிப்புறத்தில் எதுவோ ஈரமாக வழுக்குவது போலிருந்தது.

செத்த ஈ.

எப்படி வந்ததென்று யோசிப்பதற்குள் விரலில் பட்ட அருவருப்பு உதறியது. கூலிங் போய்க்கொண்டிருக்கிற ஈரமும் சேர ஒப்பவேயில்லை. கிளம்பினோம்.

இளநீர் வாங்கவேண்டுமென்று வர்ஷியிடம் வரும்போதே சொல்லியிருந்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்க்க ஏ. ஆர். சிக்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன். விலையை விசாரித்து வரச் சொன்னேன். அம்பது அறுபது நாப்பதென்றாள். செவ்விளனீர் வேண்டும். விலை அம்பதாம். நாற்பது தானிருக்கும். இப்போது இந்த ப்ரேக் சரியாகப் பிடிக்காத வண்டியை வைத்துக்கொண்டு அந்தக் கிழவனிடம் பேரம் பேச முடியாது. வேறு கடை பார்த்துக் கொள்ளலாமென்றால் ஒன்றும் தோதில்லை. ஃபாத்திமா காலேஜிற்கு எதிர்த்ததுபோல நுங்கு சீவிக் கொண்டிருந்தவரைக் கடந்து போக முடியவில்லை. வர்ஷியை இறங்கிப் போய் வாங்கி வரச் சொல்லிவிட்டு வண்டியில் அப்படியே உட்கார்ந்திருந்தேன். முதலிலேயே கடைக்குப் பக்கத்தில் நின்றிருக்கலாம். மரநிழல். கொஞ்சம் தள்ளிப் போய் நின்றது வண்டி. வெயில் பட்டையைக் கிளப்பியது. மழை வெய்யிலேதான். காட்டம் குறையாமல் சூடு காய்கிறது. அப்படியே அக்கி வைத்தியம் குறித்துக் கேட்கச் சொல்ல நுங்குவிற்பவரின் மனைவி தெரியாதென்று விட்டது. வண்டியை ஸ்டார்ட் செய்து வர்ஷிக்காக காத்திருந்தபோது நுங்குக்காரர், அக்கிக் கட்டினே மளிக கடைல விப்பாங்கப்பா வாங்கி ஒரசிப்போடுங்க. செம்மண் கலர்ல இருக்கும். ப்ரேக்கை சரியாகப் பிடித்துக் கொண்டே திரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தேன். தலையை முறையாக அசைக்கத் தெருந்திருக்கிறதெனக்கு. அவர் சந்தேகம்தான் என்ன. எனக்கு வந்திருப்பதாக நினைத்துக் கொண்டார். அவர் பார்வை நானாகத் திரும்பும்வரை அகலவேயில்லை.

 ***************************************************************

அத்தியாயம் 8

இந்த நேரத்தில் காலண்டர் பேப்பரில் மடித்துவைக்கப்பட்ட விபூதி குங்குமக் கலப்பில் கீற்றெடுத்துப் பூசினேன். கண்ணீரும் நடுக்கமும் விரல்களில் மட்டுமல்ல உதடுகளிலும் விரவின. எதார்த்தமாகத்தான் பார்த்தேன். பீரோ மீது கைகளை இரண்டு புறமும் நீட்டி மல்லாந்து படுத்துக் கிடக்கும் பெரிய டெடிபியரை. அதன் மார்பில் குப்புறப்படுத்து ஒருபக்க கன்னம் தோயக் கிடக்கிறது மஞ்சள் நிற குட்டி டெடிபியர். அம்மாதான் இந்த பெரிய டெடியை அதன் முழுநீளக் கண்ணாடிக் கவர் கிழிந்து இனி ஒட்டாதென்கிற நிலையில் உருவிப்போட்டபிறகு பழைய போர்வையொன்றை எடுத்துச் சுற்றி இரண்டு பீரோக்களும் சேர்ந்தமாதிரியிருக்கும் மேற்புறத்தில் படுக்கவைத்தாள். அப்போது நான் கூடச் சொல்லிச் சொல்லி ரசித்தேன். சிலாகித்தேன். இப்போது இதென்னவோ குறியீடு.

காலையில் அம்மாவால் எழுந்து நடக்க முடிந்திருந்தது. சிறுநீர் கழிக்கவும் பல்லுத் தேய்க்கவும் அறையிலிருக்கும் அட்டாச்டு பாத்ரூமிற்கு வந்துவிட்டுப் போனாள். சுடுநீர் வைக்கவில்லை. கேட்டேன். வேண்டாமென்றாள். அவள் பின்னாடியேபோய், சாப்ட ஏதாவது வேணுமா... மார்பை மறைத்திருந்த துண்டை விலக்கி சரியாய்ருச்சாப்பாயென்றாள். சரியாகி விட்டதென்றேன். அவளால் மார்பில் தொங்கும் நீர்க்கட்டிகளை சுமக்க முடியவில்லை.

மதியம் மருந்திடுகிறபோது வர்ஷி சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. கட்டிகள் கருப்பாகத் தொடங்கிவிட்டால் குணமாகி விடுமாம். டாக்டர் சொல்லிவிட்டுப்போனாராம். சரிதான் வாடத் தொடங்கிவிட்டன.

பால்கனியில் அமர்ந்திருந்தபோதுதான் அது தெரிந்தது. கழுவிவிட்டால் நீர் போகிற துளைக்கருகே பழுப்பு நிறத் தழும்புகள் தரையில் அடை பிடித்திருந்தன. இல்லை இனி இதைப் பார்த்தால் எனக்கு வேறெதுவும் தோன்றக்கூடாது. மாதுளை ஜூஸில் இன்று பால் நுரைத்துவிட்டதில் சாறு போக பழக்கூழ்மத்தை வேகமாக எளிதாகக் கொட்டிவிட்டுக் கழுவ முடிந்தது. வேறு சிந்தனைகள் எழவில்லை.

குளியலறையில் தென்பட்ட கருப்புநிறத் தழும்புகளோடான பேட்ச் சாதாரண புகையாக மாறி நிறம் மாறுகிறது. இரண்டு நாட்களாக மலம் கழிக்காதவள் மலம் கழித்தாள். குப்பையைக் கிளைத்து இரை பொறுக்கும் கோழிக்குஞ்சுகள் கதவிற்குப் பின்னால் மூலையில் கொத்தாக ஒன்றோடொன்று முட்டி மோதி நிற்கின்றன. இப்படித்தானே புண்கள்.. இல்லை அதுபற்றிய எண்ணம் இனி தேவையில்லை.

குளியலறையைக் கழுவ லைசாலை வாளியில் ஊற்ற நுரைக் குமிழ்கள் நீருக்கடியில் வெள்ளை நிழல்களாக ஒளிர்கின்றன. அருவருப்பாக எதுவும் தோன்றவில்லை.

வொர்க் ஃப்ரம் கம்ப்யூட்டர் முன்பமரப் போடப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் ச்சேரை இழுத்து இழுத்துத் தரையில் விழுந்த ப்ளாஸ்டிக் இழுப்புகள் திட்டுத்திட்டாக காயங்களோ புண்களின் தழும்புகளோ தோன்றவில்லை.

கொசுவத்திச் சுருளை கையில் பிடித்துக் கொண்டிருந்தேன் காற்றாட சாம்பல் துண்டு முகிழ்த்ததும் அம்மாவிற்கு இனி ஒன்றுமில்லையென துண்டை விரல் நுனியால் தட்ட விரிவுவிடுகிறது கங்கிலிருந்து. கணநேர திரும்பிப்பார்த்தலில் சாம்பலுதிர்ந்து விட்டது.

- புலமி

Pin It