பாட்டி மை போட்டு பார்க்கவே ஆரம்பித்து விட்டது. எப்படி யோசிச்சாலும்.. பிடி கிடைக்கவில்லை. தேக்கடிக்கு டூர் போய் விட்டு வந்த அசதி மரண தூக்கத்தை செய்திருந்தது. தூங்கிட்டிருக்கும் போது சக்தி வந்திருக்கிறான். குமார் வந்திருக்கிறான். லட்சுமணன் வந்திருக்கிறான். தாமரை கூட வந்து பார்த்துட்டு போயிருக்கா. அதுக்காக அவுங்கள சந்தேகப் பட முடியுமா. எத்தனை வருஷ நட்பு. நேத்துகூட டூர்ல கூட தான இருந்தாங்க.

பாட்டி பொருமியது போல அப்பிடி வீடு பூந்து தூக்கிட்டு போவாங்களா. பாட்டி கொஞ்சம் பேசாம இரு என அடக்கும் போதே கலங்கிய கண்களோடு நெற்றி சுருக்கிய எனக்கு பேச்சுக்கும் மூச்சுக்கும் இடையே கோபமும்... இயலாமையும் முட்டிக்கொண்டு வந்தது. அவுங்கெல்லாம் என் பிரெண்ட்ஸ் பாட்டி... அப்டி எடுக்க மாட்டாங்க... என்று முனங்கினேன். கை கால் முளைச்சு வெளிய போயிருச்சா.. என்ற பாட்டியின் அங்கலாய்ப்புக்கு என்ன பதில் சொல்வது. இங்கதான் எங்கயாவது சந்துக்குள்ள விழுந்திருக்கும்... என்று பாட்டியிடம் சொல்லியும் சொல்லாமலும் வீடு முழுக்க தேடினேன். தேட தேட தொலைவது தான் வீட்டு சந்துகளின் விதி போல.

ஒருவேளை டூர் போன பஸ்ல விட்ருப்போமோ.. சுருளி பால்ஸ்ல தண்ணிக்குள்ள விளையாடும் போது... இல்லையே... நேத்து காலைல வீடு வரும் போது இருந்துச்சே. இங்கதான கழட்டி வெச்சேன்... யார் மீது சந்தேகப்படுவது என்று கூடத் தெரியவில்லை. கட்டுரைப் போட்டியில் முதல் பரிசாகக் கிடைத்தது. ஆசை ஆசையாய் மினுங்கிக் கொண்டிருக்கும். வெல்வெட் கலரில்... எப்போதும் விழித்த சிமிட்டல்கள் அதற்குப் பேரழகு. நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது.

பாட்டி கருப்பசாமி மேல் சத்தியமாக சொன்னது. உன் சிநேகிதன் சத்தி தான் இந்த வேலையப் பண்ணிருக்கான் என்ற பாட்டியை... பாட்டி என்று கத்தி அடக்கினேன். யாரா இருக்கும்... அப்பிடி திடுதிப்புனு நண்பன் மேல சந்தேகப் பட முடியாது. இன்னும் சொல்லப் போனா... நண்பன் மேல எப்பவுமே சந்தேகம் படக் கூடாது தான. யோசனைக்கு பூனை குட்டிக் கால்கள். எலிக்குட்டி பசி. வேற எங்கயாவது விட்டுட்டேனா... சாப்பிடப் பிடிக்கவில்லை. இருளடைந்த இதயத்தின் டிக் டிக் டிக் சத்தம் இடி போலக் கேட்டது. அழுகை கூட வந்து விட்டது.

மேடைல வெச்சு எல்லாரும் கை தட்ட கிடைச்ச பரிசு. அதைப் போய் தொலைச்சிட்டேனே... எத்தனை துடைத்தாலும் கண்களின் குளத்துக்கு கால்கள் முளைத்துக் கொண்டே தான் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள்... வீதிக்காரர்கள் எல்லாம் வந்து எழவு வீட்டை எட்டிப் பார்ப்பது போல பார்த்தார்கள். சக்தி அப்பிடி எடுப்பானா... ஒருவேளை தாமரை எடுத்து.... இப்பிடி நினைக்கவே பிடிக்கவில்லை. ச்சே நான் தான் எங்கயோ விட்டுட்டேன். வேற யாரு வீட்டுக்கு வந்தா... பாட்டியோட ஒன்னு விட்ட தங்கச்சி... கவுந்தப்பாடி கிழவி வந்துச்சு... அது லவட்டிக்கிட்டு போயிருக்குமோ... இருப்பு கொள்ளவில்லை. அந்த சின்ன வீட்டுக்குள் பெரும் உலகத்தை சுழற்ற முடியவில்லை. மூச்சு முட்டியது. கழுத்தில் துக்கம் வியர்வையாய் கொப்பளித்துக் கொண்டே இருந்தது.
முதுகில் யாராவது ஓங்கி குத்தினால் கூட தேவலை. வாய் வழியே பெரும் அழுகை வீறிட்டு வந்து விடட்டும் என்று கூட திக்கு தெரியாத சிந்தனை என்னை சூழ்ந்திருந்தது.

மூச்சிரைக்க வீட்டுக்குள் ஓடி வந்த குமார் என்னை ஆதாரத்தோடு பார்த்தான். நான் என்ன என்பது போல கண்கள் விரிய... லச்சுமணன் கட்டி இருக்கான்டா... நான் பாத்தேன். உன் வாட்ச் எனக்குத் தெரியாதா. சத்தியமா அவன் கட்டி இருக்கறத பார்த்துட்டு தான் ஓடியாறேன்.. என்றான். பாட்டி கதறியது. சொன்னேன்ல. கூட்டாளிங்க தான் திருடிருப்பானுங்கன்னு.. சரியா போச்சு பாத்தியா... போய் நாலு சாத்து சாத்தி கடிகாரத்தை வாங்கிட்டு வா... பாட்டியின் குரல் வீதியை திரட்டிக் கொண்டிருந்தது. அடுத்த கணம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பெருங்கோபத்தோடு பள்ளி மைதானத்துக்கு அழுத்தினேன்.

போன வேகத்துக்கு அடிச்சு மண்டையை உடைக்கத் தோன்றியது. தூரத்தில் சிதறு கல் விளையாடிக் கொண்டிருந்தான் லச்சுமணன். வேகத்தோடு வேகமாய் நானும் ஒரு கல்லை எடுத்து அவனை நோக்கி வீசி அடித்தேன். சொல் பேச்சு கேட்ட அந்த கல் லச்சுமணன் காதை ஒட்டி விசில் அடித்துக் கொண்டே சென்று அவனுக்கு முன் சற்று தூரத்தில் குவித்து வைத்திருந்த சீட்டுக்கட்டை கலைத்து விட்டு கர்ஜித்தது. வேகமும் வெச்ச குறியும் நண்பனோடது என்று புரிந்த லச்சுமணன் வேகமாய் திரும்பினான். நானும் அவனை நெருங்கி இருந்தேன். இன்னைக்கு லீவுன்னு சொன்னாங்க.. என்று வறண்ட நாவில் வார்த்தைக்கு பிச்சை எடுத்தான். கண்கள் மானங்கெட்டு தரை தாழ்ந்திருந்தது. இடது கை அவன் புறமுதுகில் ஒளிந்திருந்தது.

திட்டி தீர்த்து விட வேண்டும் என்று ஆழமாய் பார்த்தேன். அவன் முகத்தையே உற்றுப் பார்த்தேன். அவனால் என்னைப் பார்க்கவே முடியவில்லை. அவன் கவனம் முழுக்க கையை மறைப்பதிலேயே இருந்தது. என்னென்னவோ உளறினான். சுற்றிலும் அடிக்கும் வெக்கை திக்கு திசை தெரியாமல் திணறிக் கொண்டிருந்தது. கல்லடிபட்ட சீட்டுக் கட்டை போல அவன் சரிவதை உணர முடிந்தது. அவனிடம் பேசவோ கேட்கவோ எனக்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது. என் அருகாமை அவன் இடது கையை அவனிடம் இருந்து வெட்டி எடுத்துக் கொண்டிருந்தது. ஆழமாய் அவனை பார்த்துக் கொண்டே என் பாக்கெட்டில் இருந்து... கடிகாரத்தை பத்திரப்படுத்தி வைக்கும் வெல்வெட் கவரை எடுத்து... அவன் சட்டைப் பாக்கெட்டில் திணித்து விட்டு.... திரும்பி வேகமாய் சைக்கிளை நோக்கி நடந்தேன்.

இதுவரை அதிவேகமாய் அடித்துக் கொண்டிருந்த என் இதயத்தின் டிக் டிக் சத்தம் இயல்பானது போல் இருக்க.... அதே நேரம் அங்கே இன்னொரு இதயத்தின் டிக் டிக் -ல் இடி சத்தம்.

- கவிஜி

Pin It